Wednesday, November 23, 2016

அன்பு என்பது யாதெனின்....

அன்பு என்பது யாதெனின்....

மனதில் எவ்வளவு வலி கவலை இருந்தாலும் அதை மறைத்து சிரிப்பையும் சந்தோஷத்தையும் மட்டுமே பரப்புவது...

கெட் லாஸ்ட் என வள் என்று விழுந்தாலும் ஒரு 2 நிமிஷம் வாடிய முகத்தோடு இருந்து விட்டு பின்னே ரோஷமே இல்லாமல் போய் "ஏதாவது ப்ராப்ளமா .... நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா.." என்று கேட்டு இன்னும் வாங்கிக்கட்டி கொள்வது...

உடம்பு சரி இல்லன்னா "ஒண்ணும் இல்ல.... தைரியமா இருக்கணும் ...சரியா போயிடும்...... மருந்து சாப்பிட்டு நல்லா தூங்கணும்..." ன்னு சொல்லிட்டு அவர்கள் தூங்கிய பின் கவலை பட்டு இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை பீவர் இருக்கான்னு தொட்டு பார்த்து கொண்டு நைட் புல்லா தூக்கம் வராம புரள்றது....

சும்மா உரிமை இருக்குங்கறதுக்காக நைநைங்காம கொஞ்சம் ப்ரீயா இருக்க விடறது...

நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியூரில் இருந்து  "நாளைக்கு ஈவினிங் வீட்டுக்கு வரேன் ..." ன்னு சொன்னதை கேட்டு  லாஜிக்கே இலலாமல் அந்த நிமிடத்தில் இருந்தே ரோடில் எந்த வண்டி ஆட்டோ சத்தம் கேட்டாலும் மனசு பரபரப்பது  ..

ரொம்ம்ம்ப பிடிச்ச ரொம்ம்ம்ப நாளா பாக்கணும்னு நினைச்சு இருக்கற படத்தை அதிசயமா டீவில பாக்கும்போது போன் வந்தா உடனே டீவியை நிறுத்திட்டு ஆசையா பேசறது ...

மனதுக்கு பிடித்த தேடி அலைந்து வாங்கிய எந்த பொருளாய் இருந்தாலும் "ஹேய்ய் நல்லா இருக்கே .." என்று சொல்வதை கேட்ட நிமிடமே "இந்தா வச்சுக்கோ.." என்று தூக்கி கொடுப்பது.. (ஆனா "நல்லா இருக்கு நீ பண்றது.... உனக்கு பிடிச்சு வாங்கி இருக்க.... தூக்கி கொடுக்கற ... எங்க வாங்கினன்னு சொல்லு .... வேணும்னா நானே வாங்கிக்கறேன்... " அப்படி சொல்றது தான் அவங்க அன்பு ..)

முக்கியமா நாலு கிலோ பேபி பொட்டேட்டோ வாங்கி ப்ரை பண்ணாலும் அதுல நாலு பீஸ் கூட நம்ம வாயில போடாம அவங்களுக்கு ரொம்ம்ம்ப பிடிக்கும்ன்னு அப்ப்ப்ப்படியே எடுத்து வெக்கறது தான் அன்பிலேயே சிறந்த பேரன்பு...  (ஹிஹி வாட் டு டு ...நாம சீரியஸா மெசேஜ் சொல்லலாம்னு எழுத ஆரம்பிச்சாலும் கடைசியில லைட்டர் மொமெண்ட்டா தான முடிக்க வருது...) !!!

Saturday, November 19, 2016

Happy Men's day !!!

இன்னைக்கு சர்வதேச ஆண்கள் தினமாம் .... ஏதாவது சொல்ல வேண்டாமா...

பிறக்கும்போதே ரெஸ்பான்சிபிலிட்டிஸோடவே பிறக்கும் மண்ணின் மைந்தர்கள்...  பின்ன என்னங்க "பையனா ..... கொடுத்து வெச்சவங்க சார்.. வாழ்த்துக்கள்.." அப்படின்னு குடும்பத்தை தாங்கவே ஜனித்த திருமலை நாயக்கர் மகால் தூண்கள் .... அப்போது இருந்தே அவர்கள் மேல எதிர்பார்ப்புகள் கூட ஆரம்பித்துவிடும்.... ஆனா ஆணா பிறந்ததுக்கு தான் அவங்க செய்யற தியாகம் படற பாடு இருக்கே ...

கூலா இருந்தா "பியூச்சர் பத்தி ஏதாவது அக்கறை இருக்கா பாரு ... " ன்னு மண்டகப்படி... எல்லாத்துக்கும் சீரியஸா இருந்தா "சரியான சிடுமூஞ்சி.." சின்சியரா இருந்தா "அய்யோ அது ஒரு அம்மாஞ்சி ..." ... அலப்பறை விட்டு சுத்தினா "சரியான தறுதலை.." இப்படி கேப்பே விடாம ரோட் பிளாக் பண்ணிடுவோம்...

அட ஒரு காமெடிக்கு கெக்கே பிக்கேன்னு சிரிக்க முடியுதா...  ஒரு கஷ்டம் ஏமாற்றம்னா வாய் விட்டு அழ முடியுதா... ஏதாவது ஸ்ட்ரெஸ்ன்னா நான்ஸ்டாப்ப்பா புலம்ப முடியுதா... . இதுல எதை செஞ்சாலும் "என்ன இது பொண்ணு மாறி அழுதுக்கிட்டு , சிரிச்சுக்கிட்டு , புலம்பிக்கிட்டு ..." ன்னு சொல்லிடும் இந்த சொ கால்டு 'ஆணாதிக்க??' சமுதாயம் ... so அப்படியே கெத்து மெயின்டெய்ன் பண்ண வேண்டி இருக்கு...

கெத்தா இருந்தா "ச்செ ரொமான்டிக்கா இல்ல" ன்னு மேட்டுக்குடில வர்ற கவுண்டமணி ரேஞ்சுக்கு பாக்க வேண்டியது .... ரொம்ம்மன்டிக்கா இருந்தா "சரியான வழிசல் ..." ன்னு முத்திரை குத்த வேண்டியது ... அட அது கூட பரவால்ல எல்ல்லா ஆண்களுமே பயங்கர இன்டலிஜென்ட்டா இன்டலெக்சுவலா தில்லா இருக்க முடியுமா ... still according to our social setup such an image is an absolute necessity to gain respect as a man...

குடும்பத்து  விஷயங்கள்ல தலையிட்டா "என்னது இது பொண்ணு மாதிரி வம்பு ..." ங்க வேண்டியது ... எதுக்குடா வீண் வம்புல தலைய கொடுத்து மாட்டிக்கணும்னு தலையிடாம இருந்தா "வீட்ல என்ன நடக்குதுன்னு அக்கறை இருக்கா ... தன்னோட விஷயம் நடந்தா சரின்னு விட்டேத்தியா இருக்கறது .." ங்க வேண்டியது ...

அட காரியர்ல கூட ப்ரொபஷனல் தான் மதிக்கப்படுது... வேற ஒரு பீல்டுல இன்ட்ரெஸ்ட் இருக்கற அதை காரியரா சூஸ் பண்ற எல்லா ஆண்களுக்குமா ஈசியா கல்யாணத்துக்கு பொண்ணு கிடைச்சிடுது....

பிரெண்ட்லியான அப்பாவா இருந்தா மொளகா அரைக்கறது ... ஸ்ட்ரிக்டான அப்பான்னா கடுகடுன்னு இருக்காருன்னு ஒதுங்கி ஓடறது....

இப்படி சொல்லிகிட்டேஏஏஏ போலாம் ...

இருந்தாலும் இத்தனை சமூதாய கட்டுகளுக்குள்ள எப்பவுமே 'ஆண்' என்கிற கம்பீரத்தை வெளிக்காட்டி நம்ம குடும்பங்களை தாங்கற ஸ்டராங் பேஸ்மெண்ட்டா  தன் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் இயங்கும் ஆண்களுக்கு இன்றைய நாளில் ஒரு சல்யூட்...

ஆனா ஒண்ணு "ஹேய்ய்   சூப்பரா இருக்குடி" ன்னு கைல வழியற ஐஸ்கிரீமை கூட விடாம நக்கி ஒரு குச்சி ஐஸ ரசனையோட சாப்பிடத்தான் முடியுதா அவங்களால !!

Very importantly... இந்த ரைட்டப் கண்டிப்பா மத்தவங்கள குறிப்பா குடும்பத்துல இருக்கறவங்க உணர்வுகளை மதிக்காம டாஸ்மாக் ட்ரக் அது இதுன்னு விழுந்து உழன்றுகிட்டு இருக்கும் ஜென்மங்களுக்கானதல்ல ....

This is only for all the 'Real' Gentlemen around us !!

Sunday, November 13, 2016

ஒரு யூத் ஸ்டோரி...

ஆபிஸ் பஸ்சில் ஒரு ஒரு வாரமாக எல்லாருடைய கவனமும் புதியதாய் அஷோக் பில்லரில் ஏறும் அவள் மேல்தான்..  போன வாரம் 3 நாட்கள் லீவ் எடுத்துட்டு ஊருக்கு ஒரு வேலையாய் போய்விட்டு வியாழன் அன்று பஸ்சில் ஏறியதும் எப்போதும் பின்னாடி ஸீட்டில் உட்காரும் அரவிந்த் முன் ஸீட்டில் இருந்தான் ... என்னை பார்த்து உற்சாகமாய் கையசைத்து அவன் பக்கத்து ஸீட்டை காட்டினான்... "என்னடா இங்க உட்கார்ந்து இருக்க.... " என்று நான் கேட்டதுக்கு நமட்டு சிரிப்பு சிரித்து "வெயிட் டில் அஷோக் பில்லர்" அப்படினான் ... அஷோக் பில்லரில் அவள் ஏறியதும் எனக்கு அவன் மாற்றத்தின் காரணம் சொல்லாமலேயே  புரிந்து விட்டது.....

"புதுசா வந்துருக்கற ஹெச் ஆர் டா.. எப்படி ..." என்று கேட்டவனை பார்த்து "சரிடா சரிடா நடத்து..." ன்னு சிரிச்சேன்.. "எங்ங்ங்க.... கொஞ்சம் திரும்பி பாரு ... பஸ் புல்லா எவனும் 3 நாளா வெளிய வேடிக்கை பாக்கறது இல்ல... மொபைல நோண்டறது இல்ல... பொதுவா ஹெச் ஆர் னா நல்லா பேசுவாங்க இல்ல... ஆனா அவ யாரையும் பார்த்து ஒரு சிரிப்பு கூட சிரிக்கறது இல்ல.. அப்பறம் தான் தெரிஞ்சுது பைனான்ஸ் டிபார்ட்மெண்ட்ன்னு .... நான் கூட  டீசெண்டா கொஞ்சம் சிரிச்சு ஒரு ஹலோன்னேன்... ரியாக்ஷனே இல்ல..... இதுல நடத்துங்கற...." என்றான்.

"சரிடா ... புதிசா சேரும்போது அப்படித் தான் இருப்பாங்க .... பிரெண்ட்லியா genuine ஆ இருடா "ன்னு சொல்லிட்டு நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பிச்சேன் ....

ஒரு 10 நாள் இருக்கும் .... அன்றைக்கு பஸ்சில் ஏறியவளை எதேச்சையாக பார்த்தேன் .... மெல்லியதாய் ஒரு சிரிப்பு  சிரிச்சா .... நானும் பதிலுக்கு சிரித்து வைத்தேன்... ஒரு செகண்ட் பஸ்சே (ட்ரைவர் உட்பட) என்னையே பார்த்தது ...
அவ்வளவுதான் அரவிந்த் ஒரு முறை முறைத்தான் ... "டேய்ய்.. என்னடா நடக்குது.... உனக்கே இது நியாயமா படுதா.... இதெல்லாம் சரி இல்ல ..." என்றவனை பார்த்து "ஹேய்ய் நான் என்ன பண்ணேன்... சிரிச்சா ஒரு கர்டெசிக்கு நானும் சிரிச்சேன்... ஏண்டா இப்படி ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கீங்க.. கொஞ்சம் மெச்சூர்டா இருடா.. அதனால தான் அவ உங்களை எல்லாம் மைண்ட் பண்றதில்லை ..." என்றேன் .. "நீ பேசுவடா ... உனக்கு என்ன " என்று சொல்லிட்டு திரும்பி கொண்டவனை பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது ...

இப்படியே ஒரு ஒரு மாசம் போனபோது..... ஒரு 10 நாட்கள் பிராஜெக்ட் விஷயமா பெங்களூரு போய்ட்டு அன்னைக்கு தான் பஸ்சில் வந்தேன் ... என்னை பார்த்ததும் அர்விந்த் "அப்ப்பா நல்லவனே ... உன்னால எனக்கு ஒரே ஒரு நல்லதுதான்டா நடந்தது .... நீ 10 நாளா பஸ்ல வராம இருந்தாலும் இருந்த ... அந்த அஷோக் பில்லர் 2 நாள் முன்னாடி  திடீர்னு என்கிட்டே வந்து பேசினாடா....ஹாய்... எங்க உங்க பிரெண்டை ரொம்ப நாளா பாக்கமுடியலையே.... ரிசைன் பண்ணிட்டாரான்னு அக்கறையோட கேக்கறா ... இல்லனதும் ஒரு நிம்மதியோட போனா ... உனக்கு என்னடா .... மச்சம் தான் " ன்னு வயித்தெரிச்சலோட சொன்னான்..

அஷோக் பில்லரில் அவள் ஏறியதும் நான் இருக்கும் ஸீட்டை தான் பார்த்தாள் .... அடுத்த செகண்ட் அவள் முகத்தில் தோன்றிய ஒரு பீலிங் சட்டென்று எனக்குள் ஒரு மணி அடித்தது....

என்னை பார்த்து சிரித்துவிட்டு ஏதோ கேட்க வந்தவளை பேப்பர் படிப்பவன் போல நாசூக்காய் அவாய்ட் செய்தேன் .... முகம் வாடி உட்கார்ந்தவளை பார்க்க எனக்கே கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது ...

வழக்கமாய் அஷோக் பில்லரில் அவள் இறங்கி போனதும் வடபழனியில் இறங்கும் நான், அன்றைக்கு சாயங்காலம்  கிண்டியில் இறங்க போனதை ஆச்சர்யமாக அவள் பார்ப்பது  தெரிந்தது...

கிண்டியில் இறங்கியதும் "அப்ப்பா ... " என்று பஸ் ஸ்டாப்பில் என் மனைவியோடு காத்து கொண்டிருந்த என் ரெண்டரை வயது மகள் என்னிடம் தாவியதை அவள் ஷாக்கோட பார்த்தது தெரிந்ததும் கொஞ்சம் நிம்மதியா இருந்தது ....

"இது என்னங்க உலக அதிசயமா ஆபிஸ்    இருக்கற வீக் டேல சினிமா போறோம் ... கிண்டி வந்துருன்னு திடீர்னு 4 மணிக்கு போன் பண்ணி சொல்றீங்க ...ஒண்ணும் புரியல .." என்ற மனைவியை பார்த்து "ச்சும்மா ஒரு சர்ப்ரைஸ்" என்று சிரித்தேன்... இவளுக்கு புரியாது ஆனால் அவளுக்கு புரிந்திருக்கும்...

பின்ன என்னங்க சந்தனத்தின் குணம் நிறைந்த santoor soap ன்னா பொண்ணுங்க மட்டும் தானா... நானும் சந்தனத்தின் குணம் நிறைந்த mysore sandal தாங்க !!!

Friday, November 11, 2016

சிம்பிளா ஒரு கல்யாணம் !!!

ஊர்ல எவ்வளவோ  விதமா கல்யாணங்கள் பண்ணறாங்க... 3 நாள் கல்யாணம் , 5 நாள் fair and lovely கல்யாணம், மெஹந்தி, பாராத் , ரிஸப்ஷன்னு மிக்ஸ்ட் ஸ்டைல், பணத்தை மூட்டைல வெச்சுருக்கறவங்க கப்பல்ல , பிளைட்ல,  விட்டா மார்ஸ்ல கூட பண்ணறாங்க... அதுல buffet , அதுகூட ஐஸ் கிரீம் ஸ்டால் , பீடா ஸ்டால் , மெஹந்தி ஸ்டால், வளையல் ஸ்டால் , பாஸ்ட் புட் ஸ்டால் ன்னு ஒரு திருவிழா சந்தை ரேன்ஜ்க்கு பண்றாங்க.... இதெல்லாம் ஒரு சந்தோஷம்னாலும் சில சமயம் தோணும் இதுக்கு பதிலா அந்த பணத்தை அந்த பொண்ணு பேர்ல டெபாசிட் பண்ணா எவ்வளவு யூஸ்புல்லா இருக்கும்ன்னு .. இருந்தாலும் நம்ம சமூக கலாச்சார கட்டமைப்புல அதை எல்லாம் ஒரு ஆளா மாத்த முடியாது ....

ஆனா கிட்டதட்ட ரெண்டு decades க்கு மேல ஒருத்தர் இந்த கல்யாணம் சம்பந்தமா எவ்வளவு புரட்சிகரமான மெஸேஜஸ் குடுத்துட்டு இருக்கார் ... அதையும் youthful ன்னு ரசிச்சு ரசிச்சு பாக்கறோம்..

ஒண்ணா ரொம்ப துடுக்கா துறுதுறுன்னு இருக்கற பொண்ணு... அவளை "ஹேய்ய் நீ அழகா இல்ல... உன்னை லவ் பண்ணலை... ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பயமாருக்கு " ன்னு ரொமான்டிக்கா ப்ரபோஸ் பண்ணும் ஸ்மார்ட் ஹீரோ.. அவங்களுக்கு ஜஸ்ட் ஒரு கார்டன் இல்லனா ஷிபான் முகூர்த்த ஸாரி , இன்டர்வியூக்கு போற மாதிரி பீட்டர் இங்க்லேண்ட் பார்மல் முகூர்த்த பேண்ட் ஷர்ட்ல கோயில்ல ச்சும்மா கொஞ்சூண்டு அர்ச்சனைக்கு யூஸ் பண்ற அளவுல பூவை வச்சு ஆசீர்வாதம் பண்ணி (கல்யாண சாப்பாடு கூட இல்லாம) கல்யாணம் பண்ணி வைக்க நாலே நாலு பிரெண்ட்ஸ்.....

இல்லேன்னா அந்த 4 பிரெண்ட்ஸ் கூட வேண்டாம்ன்னு குட்டியூண்டு டிரெயின் டிக்கெட்டை பொண்ணுக்கு மட்டும் அனுப்பி ஊருக்கு ஹோல்டாலோட வரவெச்சு கல்யாணம் பண்ணிக்கற ஹீரோ

அதுவும் இல்லையா யாருமே ஆதரவு இல்லாத வாழக்கை இழந்த விதவையை  ச்சும்மா ஒரு குங்குமத்தை நெத்தில வெச்சும் , மீள முடியாத நரகத்திலே சிக்கி இருக்கும் சின்ன பெண்ணை கோயில்ல கண்ணை மூடி வேண்டிட்டு இருக்கும் போது சர்ப்ரைஸா  டக்குனு ஷேக் ஹாண்ட்ஸ் கொடுக்கற மாதிரி தாலி கட்டியும் கல்யாணம் பண்ணிக்கற "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை" ன்னு பயங்கர கெத்தா ஊரை காப்பாத்தற ஹீரோ....

வேற யாருங்க நம்ம மணிரத்னம் சார் தான் .... எனக்கு தெரிஞ்சு கல்யாண மண்டபத்துல கல்யாணம் நடக்கற மாதிரி அவர் எடுத்த ரெண்டு படம் "இதய கோவில்", "மௌன ராகம் " தான் ... அதிலயும் இதய கோவில்ல தான் மண்டபத்தை முழுசா காட்டுவார்... மௌன ராகத்துல நாதஸ்வர சவுண்டை பேக்ரவுண்ட்ல கொடுத்துட்டு 2 நிமிட்ஸ்ல சிம்பிளா முடிச்சிருவார்...

ஆனா இதைப்படிக்கற பெரியவங்க பெற்றோர்கள்லாம் "நீ சொல்ற இந்த புரட்சி கல்யாணத்துல எல்லாம் அட்லீஸ்ட் ஹீரோ ஹீரோயினோட பேரன்ட்ஸ்இ ருந்தாங்களான்னு " கேட்டு என்னை அடிக்க வராதீங்க.. நான் சொன்னது சிம்பிளா கல்யாணம் பண்ற aspect அ மட்டும் தான் ...

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதை அடுத்து டீவில ஒருத்தர் "இந்த வாரம் நடக்க இருக்கும் கல்யாணங்களெல்லாம் எவ்வளவு பாதிக்கப்படும் தெரியுமா" ன்னு சொல்லிட்டு இருக்கும் போது வாஸ்தவம்  தானனு யோசிச்சு சும்மா தோணினத எழுதிட்டேன்... மற்றபடி மணி சார் அவர் பையனுக்கு ராஜா முத்தையா ஹால்ல கல்யாணம் பண்ணினார்னா என்னை எதுவும் சொல்லாதீங்க.. கேக்காதீங்க ... ஏன்னா நான்தான் சொல்லிட்டேனே ... நம்ம கட்டமைப்புல இதெல்லாம் மாத்த முடியாததுன்னு... மணி சார் நீங்களும் கோவிச்சுக்காதீங்க !!

Monday, November 7, 2016

ஒரு குட்ட்ட்டி கதை...

கோயிலில் கூட்டத்தில் ரெஸ்ட்லெஸ் ஆக இருந்த குழந்தையிடம் "கண்ணா கொஞ்ச நேரம்  சமத்தா வேண்டிக்கோயேன்... காட்க்கு தேங்க் பண்ணேன்..."

ஒரு வழியா கூட்டத்தை சமாளித்து வெளிய வந்த உடனே முதல் கேள்வி "நீ என்னம்மா வேண்டிக்கிட்ட ?"

என்னவோ ஆசைகளே இல்லாம, இருக்கறதுல திருப்தி அடையும் பெரிய்ய்ய செல்ப்லெஸ் மனசு இருக்கறவ நான்னு ஒரு நினைப்பு ப்ளஸ் மிதப்பு... பெரிய இவளாட்டம் "கடவுளுக்கு தெரியாதாடா நமக்கு என்ன தரணும்னு.. அம்மா எப்பவுமே எனக்குன்னு எதுவுமே கேட்க மாட்டேன்... நன்றி தான் சொல்லுவேன்.. என் குழந்தை நல்லா படிச்சி நல்ல ஆரோக்கியத்தோட லைஃப்ல நல்லா இருக்கணும் அப்படின்னு தான் வேண்டிப்பேன்.. " என்றேன் ..

"ஏம்மா ஒண்ணுமே கேட்க மாட்டேன்னு சொல்லிட்டு இவ்வளவு கேக்கறியே.. காட்க்கு தெரியாதா மா எனக்கும் எல்லாம் தர்றதுக்கு.... என்னையும் நல்லா பாத்துக்க .... " அப்படின்னு ஒரு பதில் வருது....

சுரீர் ன்னு உறைச்சுது தெய்வத்திடம் பரிபூர்ண சரணாகதின்னா என்னன்னு ..

பிரணவ மந்திரம் ஓதின குட்டி முருகன் மாதிரி தெரிஞ்சா என் குழந்தை !!

Friday, November 4, 2016

நண்பேன்டா!!!

மாவடுவால் அமைந்த நட்பு  (yes you read it right... not a typo)

மலேரியா, டைபாய்டு, ஜாண்டிஸ் கூட பரவால்ல ஆனா காலேஜ் ஹாஸ்டல் போன புதுசுல வந்த ஹோம் சிக் இருக்கே ஐய்யய்யயோ ... ஒரு சுபயோக சுபதினத்தில் காலேஜ் அட்மிஷன் முடிஞ்சு ஹாஸ்டல் ரூம்க்கு போய் லக்கேஜ் எல்லாம் வெச்சுட்டு இரும்பு கேட்க்கு இந்த பக்கம் நின்னுட்டு புன்னகை மன்னன் கமல் ரேஞ்சுக்கு அழுகையோட கலந்த ஒரு சிரிப்பு சிரிச்சிட்டே அப்பா அம்மா உடன்பிறப்பு தாத்தா பாட்டி மற்றும் உறவினர்களுக்கெல்லாம் டாட்டா சொல்லும் போது மனசை கடிக்கற அந்த கொசுனால வரும் சிக்னெஸ் ..

ஒரு 10 நாள் இது வீட்ல சீவின தலைமுடின்னு அதை கலைச்சு மறுபடி சீவாம , இது வீட்ல தேய்ச்ச பல்லுன்னு அதை தேக்காம.. வெயிட் வெயிட் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துறாதீங்க இப்படி எல்லாம் இருக்க நினைச்சு பட் நம்மளை சுத்தி இருக்கற இந்த சமூக நலனை முன்னிட்டு ஒழுங்கா செஞ்சிட்டு காலேஜ் போய் அழுதிட்டு வருவேன்.. காலைல ஹாஸ்டல் பாத்ரூம் க்யூல பக்கட் போடறதுல இருந்து ஈவினிங் மெஸ்ல வாயில பிஸ்கட்ட போடற வரைக்கும் எல்லாமே பழக்கமே இல்லாத புது புது விஷயம் (நாம தான் ஈவினிங் பசில தாம்பாளத்த முழுங்கற ஆளாச்சே)....

நாக்கு எல்லாம் செத்து போச்சு...  தினம் காலைல இட்லியோட அதே சேம் சாம்பார் , மத்தியானம் ஒரே டைப் சாம்பார் ரசம் (ஓர்ர்ர்ரெ அயிட்டம் தான் ... மேல எடுத்தா ரசம் கீழ சாம்பார் ... Point to be noted தப்பி தவறி கூட கரண்டியை வச்சு கலந்துறக்கூடாது ... அப்பறம் இப்படி multiple ஆ இல்லாம ஒரே டிஷ் ஆயிடும் ) கூடவே ஒண்ணு காராமணி இல்லனா காலிபிளவர்... காலிபிளவர் மட்டும் டேஸ்ட் ஓகேவா இருக்கும் ஆனா அத்தனை பேருக்கும் பண்ணும்போது அதை வெந்நீர்ல கொதிக்க வெச்சு சைவமா சமைச்சுருப்பாங்களா இல்லை புழுவோட அசைவமான்னு டவுட்லயே அதுவும் தொண்டைல இறங்காது.... சாயங்காலம் காலேஜ்ல இருந்து லைன்ல மயிலம்மாவோட z கிரேட் செக்யூரிட்டில (ராகிங்கை அவாய்டு பண்ணவாம்.. மயிலம்மாக்கு 65 வயசு இருக்கும்.. நம்ம மைக்கேல் மதன காமராஜ் பாட்டி மாதிரி பல்டியெல்லாம் அடிப்பாங்களா அப்படின்னெல்லாம் எனக்கு தெரியாது ... இருந்தாலும் அவங்ககிட்ட ஏதோ ஒரு திறமை இருந்ததால அவங்கதான் பாடிகார்ட் ... But a sweet person she was... ) ஹாஸ்டல் வந்து, அதோட லாபில (பெருசா ஏர்போர்ட் லாபி ரேஞ்சுக்கு நினைச்சுக்க வேணாம் .. ஒரு பெரிய ஸ்டீல் காட் போட்டு இருக்கும் வார்டன் உட்கார்ந்து ரோல் கால் எடுக்க) இருக்கற லெட்டர்ஸ்ல நமக்கு ஏதாவது லெட்டர் இருக்கான்னு (டெயிலி யாரால தான் லெட்டர் போட முடியும்) செக் பண்ணி இல்லைனதும் ஹோம் சிக்ல தொண்டை அடைக்க சரி டீ குடிச்சு சரி பண்ணலாம்ன்னு போனா தொண்டைல டீ இறங்கும் போதே கண்ணுல தண்ணி கொட்டும் ...

இப்படியே போய்ட்டு இருந்தப்போ தான் ஒரு நாள் காலேஜ்க்கு  போற க்யூல  என்னை மாதிரியே கண்ணீரும் கம்பலையுமா அவங்களை பார்த்தேன் ...என் ரூமுக்கு நேர் கீழ் ரூம்... ஆஹா இவங்களும் நம்ம இனம் தான் போலன்னு போய் பேச ஆரம்பிச்சேன் ... இருந்தாலும் வேற வேற ரூமாச்சே எப்படி போய் ஒட்டிக்கறது என்னை பத்தி என்ன நினைப்பாங்கன்னு தயக்கமா  இருக்கும் ...

ஒரு நாள் லன்ச் டைம்ல மெஸ்க்கு  சேர்ந்து போறதுக்காக அவங்க ரூம்க்கு போய் இருந்தேன் .... வீட்டுல இருந்து மாவடு ஊறுகாய் கொண்டு வந்துருந்தா  ஒருத்தி ... அது அந்த 10 நாள்லயே காலியாகி ஓர்ர்ர்ரெ ஒரு குட்டி மாங்காய் மட்டும் அந்த பாட்டில்ல இருந்தது ... அதை எடுத்து ஒண்ணே ஒண்ணு தானனு பாட்டிலோட தட்டுல கவுத்தா இன்னொருத்தி.... அந்த மாங்கா டேக்கா குடுத்துட்டு தட்டுல விழாம எங்கயோ தரைல போய் விழுந்தது... போகட்டும்ங்கறாங்க ரெண்டு பேரும் .. அய்யய்யயோ வீட்டுல சீவின தலைங்கறதுக்காகவே  தலைய 2 நாள் சென்டிமெண்டா கலைஞ்சுராம பாத்துக்கிட்ட நானா வீட்டுல இருந்து கொண்டு வந்த மாங்காயை விடுவேன் ... ச்செ தரையில விழுந்தாத்தான் என்ன.. இவங்க வேற போனா போகட்டுங்கறாங்க ... நாம ஏதாவது சொன்னா கேவலமா நினைச்சுப்பாங்களேன்னு நினைச்சுகிட்டே அதை பாத்திட்டு நிமிரறேன் .... மூணாவதா அந்த ரூம்ல இருந்த ஒருத்தி அதையே பாத்துட்டு இருக்கா .... நான் அவள பாக்கறது தெரிஞ்சதும் என்னை பார்த்தாளே ஒரு பார்வை .. அந்த நொடி அந்த இணைபிரியாத உயிர் நட்பு எங்களுக்குள்ள பிறந்த நொடி.... நண்பேன்டா....

இப்பவும் எப்போ சந்திச்சாலும் மாவடு கதைய மட்டும் மறக்காம பேசி விழுந்து விழுந்து சிரிக்கறோம் ... இன்னும்  சிரிப்போம்..

ஆனா அந்த குட்டி  மாவடு என்ன ஆச்சுன்னு மட்டும் சொல்லமாட்டேனே !!!

Tuesday, October 25, 2016

நான் செய்த ரசகுல்லா !!!

தீபாவளிக்கு ஸ்வீட் பண்ணனும் ... என்ன பண்ணலாம்னு வீட்ல கேட்டேன் ... உடனே "உனக்கு எதுக்குமா வீணா (போன) கஷ்டம் ... பேசாம வெளில வாங்கிக்கலாம்..." அப்படின்னு இம்மீடியட் ரெஸ்பான்ஸ் வருது... ஏன்னு சொல்றேன் ...

போன வருஷம் தீபாவளிக்கு வித்தியாசமா ட்ரை பண்ணனும்ன்னு ரசகுல்லா பண்ணலாம்ன்னு ஏதோ ஒரு நல்ல ராகு காலத்துல முடிவு எடுத்தேன் ....

உடனே போய் கூகிள்ல ரசகுல்லா ரெசிபி தேடி (நிறைய அலசி ஆராய்ஞ்சி தேடணும் இல்லனா குப்தா ஸ்வீட்ஸ் ரசகுல்லா மாதிரி வராதே) லிஸ்ட் போட்டேன் .... கிளம்பி போய் ஒரு 4 லிட்டர் (ஒரு 1 லிட்டர்ல ஆரம்பிக்க மாட்டேன் ... அவ்வளவு செல்ப் கான்பிடன்ஸ் ) புல் கிரீம் பால் , 2 கிலோ வெண்ணெய் (பின்ன பிரெஷ் நெய்யில  பொரிச்சா தானே பிரமாதமா இருக்கும் ), 4 படி சர்க்கரை , 40 ஸாரி 4 எலுமிச்சம்பழம் (4 எல்லாம் தேவையே இல்ல... இருந்தாலும் ஸ்பேர்க்கு ) ரோஸ் எசென்ஸ் (ஹ்ம்ம்க்கும் அது ஒண்ணு தான் குறைச்சல் ) 1 படி மைதா மாவு, கிளீன் மஸ்லின் துணி ஒரு 4 மீட்டர் (பின்ன பால்ல  லெமன பிழிஞ்சி அப்பறம் திரிஞ்சு போன பாலை மூட்டை கட்டி பிழிய வேணாமா) எல்லாம் வாங்கிட்டு வந்து உற்ச்சாகமா ஆரம்பிச்சேன் ...

முதல்ல அந்த துணிய துவைச்சு (அவ்வளவு சுத்தம் ) அப்பறம் அத்தனை பாலையும் அண்டால காய்ச்சி  லெமன பிழிஞ்சி துணில மூட்டை கட்டி பிழிஞ்சிட்டு வெளில பிளேட்ல ஸ்ப்ரெட் பண்ணா ஆஹா என்ன ஒரு லுக் அண்ட் பீல் ... அப்பறம் அதுல மைதா மாவை சேர்த்து நல்லா தேய்ச்சா சூப்பர் மாவு  ரெடி ஆச்சு ... போடு உடனே இலுப்ப சட்டிய ஊத்து அதுல 1 லிட்டர் நெய்ய .... நல்லா காம்பஸ் வச்சு ரவுண்டு போட்டு அந்த ரௌண்ட்ல மாவை உருட்டி நெய்யில பொறிச்சி , பேரலெல்லா இன்னொரு பர்னர்ல பண்ண சர்க்கரை பாகுல அதை போட்டு in addition ஒரு 2  சொட்டு ரோஸ் எசென்ஸையும் அதுல விட்டு, ஒரு 1 மணி நேரம் கழிச்சு அதை பிரிட்ஜல வச்சேன்... (இத்தனையும்  பண்ணப்போ ஒரு பீஸ் கூட டேஸ்ட் பாக்கலை ... wanted to taste it chilled )...அப்பறம் 1 மணி நேரம் கழிச்சு அதை எடுத்து கிண்ணத்துல  போட்டு ஆர்வமா ஒரு ஸ்பூனால மெதுதுவா (ரொம்ம்ம்ம்ப சாப்ட் இல்லயா அதனால ) கட் பண்ண ட்ரை பண்ணா அந்த உருண்டை எகிறி போய் டீவிய உடைச்சிருச்சு.... என் மனசும் அப்படியே சுக்கு நூறா உடைஞ்சிருச்சு.....

என்னடா ப்ராபளம் நம்ம டச்  எதுவும் குடுக்காம ஒழுங்கா ரெசிபியை தானே பாலோ பண்ணோம்ன்னு அனலைஸ் பண்ணா "ஆஆஆஆ பிழிஞ்சு எடுத்த பன்னீர்ல ஒரு டம்பளர் இல்ல ஜஸ்ட் பைண்டிங்க்காக ஒரு டேபிள் ஸ்பூன் மைதா மாவு தான் போடணும் யாராவது சொல்லக் கூடாதா ..."

அப்பறம் வேற என்ன பண்றது .... எல்லாரும் தீபாவளிக்கு அணுகுண்டு வெடிப்பாங்க... நாங்க ரசகுண்டை தூக்கி போட்டு தூக்கி போட்டு வெடிச்சோம் (no pollution green deepavali) .... அப்பவே நம்ம மோடிஜி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பத்தி சொல்லி இருந்தா அவருக்காவது பார்சல் அனுப்பி இருப்பேன் ... It is absolutely a non nuclear weapon you know !!!

Sunday, October 16, 2016

ஹரித்வார் ...

எங்கே போனாலும் அழுக்கு துணி மூட்டையை திருப்பி வீட்டிற்கு கொண்டு வருவது எனக்கு ஒத்துவராத விஷயம் .... அந்த ஊர்ல துணி காயற அளவு வெயில்னா நானே வாஷ் பண்ணிடுவேன்... இல்லனா தங்கி இருக்கும் ஹோட்டல்ல லாண்ட்ரி கொடுத்துருவேன்... ஹரித்வார்ல வெயிலும் இல்ல லாண்ட்ரியும் வெளிய தான் கொடுக்கணும்னு ஹோட்டல்ல சொல்லிட்டாங்க .... வெளிய தேடினா நிறைய இருக்குன்னு ஏதோ ஒண்ணுல கொடுத்துட்டு வந்துட்டார்....

சாயங்காலம் திருப்பி வாங்கப்போனவர் "காலைல கடைல இருந்த பையன் இல்ல... ஆனா அந்த பில்டிங்ல இருந்த இன்னொரு பையன் உங்க பண்டல் வெளியவே இருந்தா எடுத்துக்கோங்க அப்பறம் வந்து பணம் கொடுங்கன்னு சொன்னான் ..வெளியவே இருந்தது.. அதனால கொண்டு வந்துட்டேன்... திரும்ப 8 மணிக்கு போகணும்" அப்படினாரு .... சரி நாமளும் கம்பெனிக்கு போலாமேன்னு போனா திரும்ப கடைல யாருமே இல்ல... சுத்தி முத்தி பாத்திட்டு இருந்தப்போ கொஞ்ச தூரத்துல பைக் மேல நீட்டா அயர்ன் பண்ண பேண்ட், டக் இன் பண்ண புல் ஸ்லீவ் ன்னு ரெமண்ட்ஸ் மாடல் மாறி உட்கார்ந்து இருந்த ஒரு பையன் வேகமா வந்தான்...  எங்கடா துணி பண்டல்ல காணோம் பே பண்ணாம எடுத்திட்டு போய்ட்டோம்ன்னு நினைச்சானோ என்னவோ முழிச்சான் .... உடனே இவர் "நாங்க பணம் கொடுக்காம போய்டுவோம்ன்னு நினைச்சிட்டியா ... மேல இருந்த பையன் சொன்னதால தான் எடுத்திட்டு போனேன்" னு  அவன்கிட்ட  நடந்ததை சொல்லி பணத்தை தந்தார்....  முதல்ல முழிச்சவன் அப்பறம் சிரிச்சிகிட்டே இட்ஸ் ஓகே சார் அப்படின்னு பணத்தை வாங்கிக்கிட்டான்.... யெஸ் அவன்தான் லாண்டரிவாலா வாம்...  அப்பறம் சொல்றான் "மேரி கவர்ன்மென்ட் ஜாப் ஹே சாப்... யே லாண்டரி தோ பார்ட் டைம்.. சுபே அவுர் ஷாம் கர்தா ஹூன்" .... அட government job ல இருக்கானாம்.... ஆபீஸ் க்கு போறதுக்கு முன்னாடியும் வந்த அப்பறமும்   லாண்டரில வேலை பண்ணுவானாம்.....

துணிய வாங்கிட்டு இவரோட அங்க இருந்த ஒரு டீ ஷாப் போனா அங்க காலைல இருந்த டீ மாஸ்டர் இல்ல (காலைலயும் அங்க தான் டீ குடிச்சோம் ) .. இப்போ புல் ஸ்லீவ மடக்கி விட்டுட்டு பராத்தா தேச்சிட்டு இருந்தான் இன்னொரு பீட்டர் இங்க்லாண்ட் மாடல் ... உடனே என் வாய் சும்மா இல்லாம இது பார்ட் டைம் ஜாப்பா ன்னு கேட்டுட்டேன்... ஆமாங்கறான் ....

அசந்து போய் ஹோட்டலுக்கு வந்து "நாளைக்கு மார்னிங் 6 o கிளாக் டிரெயின்... செக்கவுட் பண்றோம்... காலைல 5 மணிக்கு இங்க ஆட்டோலாம்  கிடைக்குமா....இல்ல இப்போவே ஓலா புக் பண்ணிக்கவா"  (ஓலா ஹரித்வார்லயும் இருக்கு ... infact அங்க இருந்து ரிஷிகேஷ்க்கு ஸ்பெஷல் பேக்கேஜ் இருக்கு olaல) அப்படின்னு இவர் கேட்டா ஹோட்டல் மானேஜர் சொல்றார் "நீங்க புக் லாம் பண்ண வேண்டாம் .... புல் டைம் ஆட்டோ ஓட்டறவன் காலைல வரமாட்டான்.... ஆனா டே டைம்ல ஆபிஸ்  போய்ட்டு நைட் டைம்ல ஆட்டோ ஓட்டறவங்க நிறைய பேர் இருக்காங்க .... காலைல 4 மணில  இருந்தே நிறைய வண்டி கிடைக்கும் " ன்னு ....

வாட் அ ஊருய்யா... அதான் பேரு ஹரித்வார் போல...
உழைப்பாளிகள் !!

Saturday, October 15, 2016

முகவரி...

ரொம்ம்ம்ம்ப நாளுக்கு அப்பறம் இன்னைக்கு டீவில ஒரு படம் பார்க்கிறேன் ... அதுவும் 'முகவரி' படம்ங்கறதால.... சில விஷயங்கள் நிறைய நினைவுகளை அதுக்குள்ள புதைச்சு வச்சிருக்கும்... இது ஒரு அற்புதமான படம் மட்டும் இல்ல எனக்கு இது நிறைய நினைவுகளை பொதிஞ்சு வெச்சுருக்கும் படம் ....

காலேஜ் கட் அடிச்சிட்டு பார்த்த முதலும் கடைசியுமான படம் (காலேஜ் கட் அடிச்ச அனுபவமும் வேணும்னு நாங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ப்ராஜெக்ட் டைம்ல ஒரு மத்தியானம் போனது) .... படத்துல விரல்ல பிரஸ் டர்ன் புல்ன்னு ப்ரபோசலே செம்ம ரொமான்டிக்கா , போன்ல டயலாகே இல்லாமல் ம்யூசிக்கலா, அழகான அன்பே உருவான ஹீரோ பாமிலி கலகலப்பான ஹீரோயின் பாமிலின்னு கவிதையா, கடைசில யதார்த்தம்னாலும் பிரிவுல ன்னு முடிஞ்ச படத்தை பார்த்துட்டு ஒரே பீலிங்க்ல வெளிய வந்தா வெளிய ட்ரிஸ்லிங்... அந்த gloomy eveningla எமோஷனல் ஆகி  ரோட்ல நடக்கும் போதே என் அருமை தோழி தோள்ல சாஞ்சி கண்ணீர் விட்டது...
அன்னைக்கு என்னை பார்க்க என் ஹாஸ்டலுக்கு அப்பா வர என் ரூம் மேட் நான் படம் பார்க்க போனது தெரியாமல் ஏதோ ப்ராஜெக்ட் வொர்க்காக நான் லேப்ல இருக்கறதா சொல்ல அப்பா சரி படிக்கற புள்ளைய தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு திரும்ப கிளம்பியது... அப்படி கிளம்பிய அப்பாவை நான் படம் பார்த்திட்டு திரும்பி வரும்போது ரோட்ல கீழ பராக்கு பார்த்துக்கிட்டே இந்த மாதிரி ஒரு பேண்ட் ஒரு நடை கைல ஒரு  பேகை எங்கயோ பார்த்து இருக்கோமேன்னு நிமிர்ந்து பார்த்து நீ ஏதோ லேப்ல ப்ராஜெக்ட் வொர்க் பண்ணிட்டு இருந்த போல இருக்கேன்னு நமட்டு சிரிப்போட கேட்ட அப்பாவை பார்த்து அப்பான்னு செல்லமா சிணுங்கிகிட்டே வழிஞ்சது... அவரோட ரெஸ்டாரண்ட் போய் சாப்பிட்டது.... அப்பறம் ரூம்க்கு வந்து என்னதான் யதார்த்தம்னாலும் அன்பான  குடும்பத்துக்காக லட்சியத்தை ஒத்தி போடற ஹீரோ, அவ்வளவு சப்போர்ட்டிவா, அண்டர்ஸ்டாண்டிங் ஆன செல்ப்லெஸ் ஹீரோயின மட்டும் எப்படி லட்சியத்துக்காக விட்டுடலாம் பாவம் தான அவ அப்படின்னு ஆர்க்யூ பண்ணது...

அந்த ஒரு நாளை இத்தனை வருடங்கள் கழித்து இன்று மீண்டும் வாழ்ந்து விட்டேன்...  முகவரி பிரிண்ட் கொஞ்சம் மங்கலாய் இருந்தது ... அந்த படத்தின் முடிவை பற்றிய என் கருத்து மட்டும் இன்னும் அப்படியே... Perhaps that is what is wonderful about this movie !!!

Thursday, October 13, 2016

நானும் என் ஹிந்தியும் !!!

ஹிந்திங்கறதே எனக்கு கொஞ்சம் தகராறு .... பின்ன நான் என்ன பிரவீன் ராஷ்ட்ரபாஷாலாம் படிச்சேனா என்ன ... ஏதோ நாலாங்கிளாஸ் அஞ்சாங்கிளாஸ்ல சுத்தமா ஹிந்தி தெரியாம அதுல க்ராமர் மட்டும் படிச்சிட்டு அத வெச்சிட்டே  அலப்பறை விட்டுட்டு சுத்திட்டு இருந்தேன் ..... என்னோட அறியாமை எப்போ வெளிய வந்துதுன்னா எங்க அபார்ட்மெண்ட்ல ஒரு ஹிந்தி செக்யூரிட்டி  வந்தப்போ தான் .... அதிலயும் அபார்ட்மெண்ட் மெயின்டெனன்ஸ் இன்சார்ஜ் எங்க பிளாட் டர்ன் போது .... இவர் இருக்கும் போது தப்பிச்சிருவேன் (இவருக்கும் அவ்வளவெல்லாம் ஹிந்தி வராது பட் இவர் இருக்கும் போது டீலிங்லாம் பார்த்துப்பார் சொ மீ எஸ்கேப் )... இவர் ஆபீஸ் போன டைம்ல ஏதாவது சொல்ல வேண்டி வந்தா மாட்டுவேன் or rather அவன் எங்கிட்ட மாட்டுவான்.... நான் என்ன சொல்றேன்னு புரியறத்துக்கே அவனுக்கு அரை மணி நேரம் ஆகும்... அதுக்காக அவன் சொல்றதெல்லாம் எனக்கு புரியாதுன்னு நினைச்சுக்க வேண்டாம் ... பேசத்தான் தகராறே ஒழிய இந்த ஷாரூக்கின் பாஜிகர் , அனில் கபூரோட கிஷன் கன்னையா, சல்மான் கானோட மேனே பியார் கியா முக்கியமா  ராமானந்த சாகர் எடுத்த ராமாயணம் எல்லாம் பார்த்து ஹிந்தி புரியறதுல எனக்கு ஒண்ணும் கஷ்டமே இல்ல.. செக்யூரிட்டிக்கு எனக்கு பேசத்தெரியாம புரியறது மட்டும் ஆச்சர்யமா இருக்கும் போல ... சில சமயம் நான் பேசற ஹிந்திய  கேட்டுட்டு அடக்க முடியாம நக்கலா சிரிப்பான்...

இது ஒரு பக்கம்னா பொண்ணுக்கு பேசிக் ஹிந்தி லெட்டர்ஸ் சொல்லித்தரேன் பேர்வழின்னு ஹிந்தில எ ஏ தான் ஐ இல்லன்னு சொல்லிட்டேன்.... ஒரு 6 மாசம் நான் பிராக்டீஸ் கொடுத்து அப்பறம் அவ எதிர்காலத்தை நினைச்சு ஹிந்தி கிளாசில சேர்த்துட்டேன்... ஹிந்தி கிளாசில சேர்ந்த புதுசுல அவங்க டீச்சர் எ ஐ ன்னு சொல்லித்தராங்க ... இவ "Miss my mother has told there is no ஐ in hindi... this is ஏ..." அப்படின்னு அவங்களுக்கே சொல்லித்தரா...  முதல் நாளாச்சேன்னு வெளிய வெயிட் பண்ணிட்டு இருந்த நான் அவ டீச்சரை பாக்காமலேயே நழுவிட்டேன்... பின்ன மானம் போச்சே..

இப்படி இருக்க இந்த ஹிந்திய நம்பி நாங்க கிளம்பி வாரணாசி  ஹரிதுவார்ன்னு  தைரியமா போனோம்... அது என்னவோ என்ன மாயமோ தெரில.. அங்க போய் சுத்தி ஒரே இந்தி மயம்ன உடனே திருவிளையாடல்ல விறகு வெட்டி ங்கீயேன்னு ஆரம்பிச்சு திடீர்ன்னு  "பாட்டும் நானே ..." ன்னு பொளந்து கட்டற மாதிரி அங்க போனவுடனே எந்த காலத்துலயோ நான் படிச்ச ஹிந்தி கங்கா பிரவாகம் மாதிரி அப்படியே பீறிட்டு வருது ... ஹிஹி... விடுவேனா எப்பவும் ஒழுங்கா இவர் பின்னாடி போறவ ஏதாவது வழி கேக்கணும்னாலோ இல்லை விலை கேக்கணும்னாலோ "ஹரே பதிஜி ஆப் டைரியேனா ...மெய்ன் பூச்க்கே பதாத்திஹூன் ..." அப்படின்னு கிளாசில முதல் பெஞ்ச் ஸ்டுடன்ட் மாதிரி பாஞ்சிட்டு போனேன் ... ஏற்கனவே "அம்மா சொன்னா ... அம்மா சொல்லுவா... " ன்னு என் புராணம் பாடற பொண்ணு (மத்தவங்க கிட்ட மட்டும் தான் ... எங்கிட்ட பேசும்போது இல்ல ) கேக்கவா வேணும் .... அப்படியே என்னோட ஹிந்திய கேட்டு "அம்மா சூப்பரா பேசற மா " அப்படின்னு அசந்துட்டா ... எனக்கு ஒரே பெருமை தாங்கல ...

நிற்க ஹரித்வார்ல காலைல 6.30 மணிக்கு  கங்கால ஸ்நானம் பண்ண  சுறுசுறுப்பா கிளம்பினோம்... நிறைய இடத்தில குளிக்கறாங்க... நாங்களும் ஏதோ ஒரு படித்துறைக்கு போனோம் ... பட் மெயின் படித்துறை (ஹரி கி பவுரி ன்னு அந்த இடத்தை சொல்றாங்க ... ) எங்க இருக்குன்னு யாரையாவது  கேக்கணும்னு இவர் சொல்லிட்டு இருக்கார்.. நான் உடனே "நான் கேக்கறேன்... நானு நானு ..." ன்னு அங்க இருந்த ஒருத்தர் கிட்ட "பையா.... ஹமே கங்கா சே (நாந்தான் சொன்னேனே அரைகுறை க்ராமர் ) பாத் கர்னா ஹே .. கைஸே ஜானா ஹே ..." ன்னு கேக்கறேன் .... அந்த ஆளு உடனே "ஹரே பாத் கரியே தோ ... ஹே ஹமாரி கங்கா  மைய்யா ஹே ... ஆப் மன் கோல் கே ஜித்னே சாஹியே உத்னே பாத் கரியே ..." அப்டிங்கறாரு .... உடனே அவர் கூட இருந்த வைப் சிரிக்கறாங்க.... என் அருமை கணவர் என்ன பாத்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்... நான் bath ன்னு இங்கிலிஷ்ல கேட்டா அவர் ஹிந்தில பாத் (பேசறது) ன்னு நினைச்சுக்கிட்டு எங்க வேணா மனசு விட்டு பேசுங்கன்னு சொல்றார்.... இதுக்கு மேல ஊருக்கு திரும்ப வரைக்கும் நான் ஹிந்தில பேசி இருப்பேனா என்ன !!

Sunday, October 9, 2016

வாரணாசி !!

வாரணாசிக்கு போய் புண்ணியம் சேர்த்துக்கலாம்னு பிளான் பண்ணி அரேஞ்ச்மென்ட்ஸ் பண்ணும் போதே டீவில  பாக்கற பக்தி மணம் கமழும் கங்கா நதியின் படித்துறைகள் (வாரணாசியில் அதை காட் ன்னு சொல்றாங்க பொருள் விளக்க உபயம் அங்க இருக்கற boatman),  ஒளிமயமான கங்கா ஆரத்தி, பக்திமயமான காவியுடை ஸ்வாமிகள் அப்பறம் இது எதுக்குமே சம்மந்தம் இல்லாம நம்ம ராஞ்சனா இந்தி படம் அதுல வர்ற காசி தெருக்கள், கொஞ்சமே கொஞ்சம் மனசு ஓரத்துல காசிக்கு போற அளவு வயசாயிடுச்சான்னு ஒரு பீலிங்ன்னு ஒரு மாதிரி கலவையா வாரணாசி ஏர்போர்ட் போய் இறங்கியாச்சு...

அங்க இருந்து வாரணாசி  டௌன்க்கு கார்ல போகும்போது (கிட்டத்தட்ட 25 kms) அந்த வழியெல்லாம் பார்த்தா மனசுல நினைச்சு இருந்த கலகல காசியான்னு ஸ்லைட்டா டவுட்  வந்திருச்சு... அவ்வளவு காலி ரோட் ...   அப்பறம் டௌன்க்குள்ள நுழைஞ்ச உடனே டவுட் கிளியர் என்ன கலகல காசி இல்ல கசகச காசி.... இங்க ரோட்டில வண்டி ஒட்டாம நடக்கறவங்களுக்கு நடுவுல ஓட்டறாங்க ..  டிராபிக் ரூல்ஸ்னா ஸ்பெல்லிங் கூட தெரியாதுன்னு தோணுது.... நான் நினைச்ச மாதிரி ஒரே மணம் கமழுது  ஆனா பக்தி மணம் இல்ல பான்பராக் மணம்...

நம்ம காசி தலைவர் ரிஷப வாகனன் தான் ஆனா அதுக்காக காசி நகரத் தெருவில் எல்லாம் 4 அடிக்கு ஒரு ரிஷபர்.. அந்த இர்ரெகுலர் அட்ராஷியஸ்  ட்ராபிக்கு நடுவிலும் என்னவோ மராத்தான் ஓடும் ரிஷபர்கள் (வேற எங்கயும் இவ்வளவு வேகமா ஓடற,  படித்துறையில் படி ஏறும் மாடுகளை நான் பார்த்ததில்லை.... அப்படி எங்க வேகமா போகுமோ... சிவபெருமானை பார்க்க அதுகள் கைலாசம் போகுமோ இல்லயோ  ரோட்டில நடக்கும் போது நாம கொஞ்சம் கவனமா இல்லனா நாம கண்டிப்பா சாணி மேல தான் லேண்ட் ஆவோம்ன்னு சொல்ல வந்தேன் வேற ஒண்ணும் இல்ல .. ம்ம்ம் )

கோவில் போற வழியெல்லாம் ஒரே பண்டிட்ஸ் அஸிஸ்டண்ட்ஸ் மயம்.... பண்டிட்ஸ் அங்க அங்க உட்கார்ந்து ஏதோ பிரார்த்தனை சங்கல்பம்ன்னு பண்றாங்க ... பக்கத்துல ஒரு பெரிய துணிக்கு அடியில ஒன்லி 500 ரூபாய் நோட்ஸ் (this is not to hurt any body's religious beliefs all i meant is the commercialisation behind all rituals)...
கோயில்ல நாமளே காசி விஸ்வநாதருக்கு  அபிஷேகம் பண்ணலாம்.... இதுவரைக்கும் அது மாதிரி இல்லாம இங்க அபிஷேகம் பண்ணப்போ இதுதான காசியின் மஹிமைன்னு தோணிச்சு...

நாங்க தங்கி இருந்த இடத்துல கங்கால எதிர் கரையில கிளீனா இருக்கும் பட் அங்க குளிச்சா புண்ணியம் இல்ல கோவில் இருக்கற பக்கம் தான் புண்ணியம்ன்னு சொன்னாங்க ...நேரா பரவசத்தோடு கங்கால புண்ணிய ஸ்நானம் பண்ண எல்லாம் ரெடியா கங்கா மாதாவை பார்க்க போனோம் .... போய் போட்ல காலை வெச்சிட்டு நிமிர்ந்தா போட் பக்கத்தில ஒரு செத்து போன கன்னுக்குட்டி மிதக்குது.... அப்பவே என்னமோ மாறி ஆய்டுச்சு .... அப்பறம் boatman ஒவ்வொரு காட் உம் என்ன என்னன்னு சொல்லி கூட்டிட்டு போனார் .... அதுல ரெண்டு காட்ல கடைசி மரியாதைக்கு நிறைய பேர் (?) படிக்கட்ல காத்திருந்ததை பார்க்க மனசெல்லாம் ஒரே morbid பீலிங்.... ஆனா தேங்க்ஸ் டு கங்கா மா ஆரத்தி கொஞ்சம் மூட் மாறிச்சு... ஸ்டில் அதுவரை நேரில்  இல்லாம டிவில  கங்கை கரையில் கோவிலை பார்த்த போது இருந்த லேசான பீலிங் இல்லாம கனமா தான் இருந்தது ... அதை விட புண்ணியமே உருவான பவித்ரமான கங்கா மா இப்படி நம்ம மன அழுக்குகளை மட்டும் இல்லாம எல்லாத்தையும் சுமந்து கலங்கி ஓடறதை பார்க்க கஷ்டமா இருந்த்து ... ஒரு புண்ணிய ஸ்தலத்துல இந்த மாதிரி இருப்பதெல்லாம் ஒரு பக்கம் சகஜம்ன்னு இருந்தாலும் நம்ம ஆழ்ந்த நம்பிக்கைகளை தாங்கிய இந்த ஸ்தலத்தில் புண்ணியம் மட்டும் சேர்க்க நினைக்காமல் தூய்மையா வெச்சுக்கறதும் நம்ம கடமைதானே ன்னு இங்க வர்ற ஒவ்வொருத்தருக்கும் தோணும்னு தோணுது ....

ஆனா இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ... போட்ல திருப்பி வரும்போது அந்த boatman "இது ராமர் சீதையை குகன் போட்ல கூட்டிட்டு வரும்போது  அவர்களை சிவ பார்வதி தர்சனம் பண்ணிய ஸ்தலம்.... அதனால குகன் வம்சத்துல வந்த boatman அவங்க கையால உங்களுக்கு கங்கா ஜலத்தை தெளிச்சா உங்களுக்கு புண்ணியம் (????!!!) ... குகனுக்கு உங்களால முடிஞ்ச தக்ஷிணை குடுங்க...." அப்படின்னு சொல்லி அவரோட அசிஸ்டண்ட் ஒரு பையனை பார்க்க , அவன் போட்ல இருந்து எட்டி கீழ ஓடிட்டு இருந்த கங்கா நீரை கைல எடுத்து எங்க மேல தெளிச்சு பாவத்தை போக்கினதை மட்டும் என்னவோ என்னால ஜீரணச்சிக்கவே முடில ...
அவன் வாய் நிறைய பான் !!!

Note:
With due respects to all our deep beliefs this is written just out of my thoughts on how our beliefs are being used for day to day living and earning....  It is not to hurt anyone's beliefs 🙏

Friday, October 7, 2016

வாட் அ நவராத்திரி தட் வாஸ் !!

எனக்கு நினைவு தெரிந்த நவராத்திரிகளில் "எங்காத்துல கொலு வெச்சுருக்கோம் மாமி ... வெத்தலை பாக்கு வாங்கிக்க வாங்கோ ..." அப்படின்னு குங்கும சிமிழை நீட்டி சிமிழ் மாதிரி இருக்கற குட்டி வாயால கூப்பிடும் குழந்தைகள் (ஆனா அப்போ மட்டும் அதுகளுக்கு நீளமா தலை முடி இருக்கும் எல்லாம் சவுரி உபயம் .... அதுல ராக்கொடிய வச்சு தாழம்பூ தெச்சுன்னு பண்றதுக்கு அதுகளுக்கு ரசனையான பாட்டிகள் இருப்பாங்க ...)

"அடடே குழந்தை என்ன சமத்தா கூப்பிடறது ..." அப்படின்னு மெச்சிக்கிட்டே "மாலுக்குட்டி எங்க அழகா ஒரு பாட்டு பாடேன் " தவறாம சொல்லும் மாமிகள் (அங்க கூடத்துலே பார்த்தா பெருசா விரிச்சு இருக்கும் ஜமக்காளம் மேல ஆல்ரெடி ஜுகல்பந்தி பண்ண தோதா 7 8 பாவாடை சட்டை சவுரிகள் பலமா கச்சேரியை ஆரம்பிச்சிருக்கும் )...

அத்தனை டிக்கட்டும் வெட்கப்படாம சுருதி சுத்தமா (?!!!) பாடறதையும் பொறுமையா கேட்கும் மாமி வீட்டு மாமாக்கள் , தாத்தாக்கள்...

கொலு கடைசீ படிக்கட்டுல வெச்சிருக்கற குட்டியூண்டு பீங்கான் டீ கப் செட் , மர சோப்பு (அதோட காலி ஒலை பெட்டியும் தவறாம அது பக்கத்துலயே இருக்கும்) , மாக்கல் செட் (அதுல மாத்திரை சைஸ்ல பணியாரம்  செய்ய இருக்கும் பணியார தட்டு, இட்டிலி செய்ய காலி மாத்திரை ஸ்ட்ரிப் தவறாம இருக்கும்) , துக்கினியூண்டு பிரிட்ஜ், பீரோ, ஆங் மிக்ஸி (பிளாஸ்டிக்ல ) இது எல்லாத்தையும் நைஸா போய் போய் தொட்டு பார்க்கும் பாவாடை அக்காக்களோட வந்த வாண்டு நிஜார்கள் பிராக் பாப்பாக்கள் ....

இது எல்லாத்தயும் விட கொடுக்கும் தாம்பூலத்துல  வெத்தலை பாக்கு பழம் இதோட ஒரு பேப்பர் பொட்டலம்... அந்த பொட்டலத்துல இருக்கும் சுண்டலை  ஆசை ஆசையாக, பொட்டுக்கடலை மாவை பப் பப் ன்னு அள்ளி சாப்பிடும் குழந்தைகள் ....

வாட் அ நவராத்திரி தட் வாஸ் .... I want a time machine please !!!

Thursday, September 29, 2016

சாப்பிடுவதும் ஒரு கலைதான் !!!

சமைப்பது ஒரு கலைனா  (நான் சமைக்கறத சொல்லல... இன் ஜெனரல்) ரசனையோடு சாப்பிடுவதும் ஒரு கலைதான்...  சமைப்பதில் எக்ஸ்பர்ட்டோ இல்லயோ முன்னொரு காலத்துல நான் சாப்பிடுவதில் பயங்கர எக்ஸ்பர்ட்...

ஸ்கூல்ல இருந்து வரும்போதே இன்னைக்கு என்ன மெனுன்னே யோசிச்சிட்டு வர்ற ஆள் ... எங்களுக்கு பாட்டு சொல்லித்தர பாட்டு மாமி பாவம் ஹால்ல வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க .... "மாமி ரொம்ம்ப பசிக்கறது ... ஒரு டூ நிமிட்ஸ் பிளீஸ்..." ன்னு சொல்லி அசுர வேகத்துல ஒரு தாம்பாளம் நிறைய இடியாப்பத்தை உள்ளே தள்ளுவேன் (ஒரு படத்துல நடு ராத்திரி ராதிகா "மாமா இருந்த கொஞ்சுண்டு மாவுல இட்லி பண்ணிருக்கேன் ... எழுந்துருங்க மாமா " அப்படின்னு ஒரு தாம்பாளத்த ரஜினியை எழுப்பி காட்டுவாளே அதே தாம்பாளம் தான்).... தோசை , இட்லி எல்லாம் டஜன் கணக்கு தான் ... பூரி கேக்கவே வேணாம்  "என்னடி ஹோட்டல் சர்வர் நிறைய பேருக்கு அடுக்கிட்டு வரத நீ உன் ஒருத்தி பிளேட்ல அடுக்கிட்டு வர்ற..." அப்படின்னு என் உடன்பிறப்பு கேலி பண்ணாலும் அசராம ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டவ...

காலேஜ் ஹாஸ்டல் ... இருந்தாலும் சாயங்காலம் தாம்பாளத்தை முழுங்கிய வயறு சும்மா இருக்குமா... முதல் வருஷம் பல்லை கடிச்சிட்டு ஓட்டிட்டேன் (ஏன்னா வெளிய நாட் அல்லோவ்ட் ... இல்லனா ஆரம்பிச்சுருக்க மாட்டேனா ).... அடுத்த வருஷம் பாத்தேன் ... முதல்ல தனியா ஹோட்டல் போக தயக்கமா இருந்தது .... அப்பறம் கவலையே படாம தனியா போக ஆரம்பிச்சேன் ... அதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சது நம்ம நட்புக்களும் நம்மள மாதிரித்தான்னு... கோவை சாய்பாபா காலனி அன்னபூர்ணால என் சைக்கிளை பார்த்தாலே வரிசையா ஒரு சாம்பார் வடை , மசால் தோசை அண்ட் பில்டர் காஃபி டேபிளுக்கு வந்துரும்... அங்க போய் 15 வருஷமாச்சு.... பட் இப்போ போனாலும் மறக்காம அதே ஐட்டம்ஸ் டேபிளுக்கு வந்துரும்னு நினைக்கறேன் அந்த அளவு ரெகுலர் ஈட்டர் ஐ மீன் விசிட்டர் ஹிஹி...

இன்னொரு முக்கியமான விஷயம் என்னதான் வித விதமா சமைச்சாலும் ஒரு ப்ராப்பர் காம்பினேஷன் இல்லனா ரசிச்சு சாப்பிட முடியுமா .... பார் எக்ஸாம்பில் டொமட்டோ ரைஸ் அண்ட் புடலங்கா கூட்டு ன்னா எப்படி இருக்கும் .... சொ சாப்பிடறதையும் அழகான காம்பினேஷன்ல சாப்பிடறது ஒரு ரசனை.... இது வரைக்கும் என் மனதில் நீங்கா இடம் பெற்ற நான் கற்ற கேட்ட பார்த்த படித்த சில எவர்க்ரீன் காம்பினேஷன்ஸும் இருக்கு...

பாலிகா அங்கிள் கற்றுத் தந்த சூடான போளியை அதுக்கு மேலே நல்லா ஒரு குழிக்கரண்டி நெய் (ஒரு போளிக்கு தான் ஒரு கரண்டி) ஊத்தி சாப்பிடுவது....  என் கசின் (அத்தை பொண்ணு) சூப்பரா இருக்கும்ன்னு சொல்லிக் கேட்ட மழை நாட்களில் நல்ல சூடான  ரசத்துக்கு எலுமிச்சம்பழ ஊறுகாய் (அவ ஒரு ஸ்பூன் ஊறுகாய் ன்னு தான் சொன்னா நான் என் நாக்குக்கு தகுந்தா மாறி ஒரு பாட்டில் ன்னு  மாத்திக்கிட்டேன்)... வெளிய டிராவல் பண்ணும் போது என் நாக்கை நாற்பது முழம் வளர்த்த அம்மா தந்த நல்லா மிளகாய்ப்பொடி தடவிய இட்லி (கவனிக்கவும் மிளகாய்ப் பொடிக்கு தொட்டுக்க இட்லி என்ற ப்ரபோஷன் நாட் அதர்வேய்ஸ்), சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (இப்போ நினைத்தாலும் ஜலம் வர்றது கண்ணுல இல்ல நாக்குல).. 1980's இல் ஏதோ ஒரு மாதத்தில் வந்த மங்கையர் மலர் புக்கில், டயட்டிங் (??) பற்றிய ஒரு காமெடி கதையில் படித்த ஜாங்கிரிய  சூடா பால் ஊத்தி சாப்பிடணும், குலாப்ஜாமூனை நல்லா ஐஸ்க்ரீம் சேர்த்து சாப்பிடணும்... அந்த கதைய படிச்சதிலிருந்து இப்போ வரைக்கும் குலாப்ஜாமூனும் ஐஸ்க்ரீமும் ஒண்ணா கிடைச்சா நான் மிஸ் பண்ணதே இல்ல  வாட் அ டிவைன் டேஸ்ட் .... என் நாக்கு நல்லா கேட்ட பட்டர் நான் வித் மலாய் கோப்தா (கவனிக்கவும் பட்டர்ர்ர்ர் நான்), எந்த சூப்பா இருந்தாலும் அது மேல ஒரு 4 ஸ்பூன் பட்டர்ர்ர்ர், காரட் ஹல்வா வித் உருளைக்கிழங்கு போண்டா (யெஸ் யெஸ் அது இல்லாமயா ... பில்டர் காஃபி )...

இப்படியெல்லாம் ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டுட்டு ( ஆனா அப்போ இப்படி சாப்பிட்டும் 50 கேஜி தாஜ்மஹாலா தான் இருந்தேன் ... நம்பாதவங்களுக்கு போட்டோ ப்ரூப் இருக்கு) இப்போ கேரட்டை வெறுமனே அரைச்சு , கம்பு மாவை கரைச்சு, ஓட்ஸை குடிச்சு (ஏன்னு கேக்கறீங்களா... எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான் பிகாஸ் மை பாமிலி அ ஸ்வீட் பாமிலி) என்னைக்காவது  இதையெல்லாம் நினைச்சிட்டே "ச்சை... எப்படி இருந்த நான் இப்படி ஆக வேண்டியதாயிடுச்சே ..." ன்னு நொந்து, மெய் மறந்து, டயட் தவம் கலைந்து சில பல காம்பினேஷன்ஸை எல்லாம் நல்லா சாப்பிட்டுட்டு, "அய்யயோ இது என்ன சொல்ல போறதோ" ன்னு மனசு கேக்காம நேரா போய் பாத்தா "யக்கா.... உனக்கு இந்த காம்பினேஷன் பிடிச்சு நீ ரசிச்சு சாப்பிட்டதெல்லாம்  சரி... இப்போ சுகர் அண்ட் பிளட் பிரெஷர் , கொலஸ்ட்ரால் அண்ட் லிவர் fat ன்னு இன்னும் சில காம்பினேஷனுக்கு எல்லாம் சீக்கிரமே உன்னை ரொம்ப பிடிச்சு போய்டுமே... beware... Prevention is better than cure" அப்படின்னு சொல்ற வெயிங் மெஷின் மட்டும் கடுப்பேத்துது மை லார்ட் ...

இதனால் சகலமானவர்க்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால்
"இளமையில் உண் " !!!!

Sunday, September 25, 2016

கடவுளுக்கும் சில சமயம் கண் தெரிவதில்லை....

"டேய்ய் குமார் .....  வேணான்டா.... ஜட்ஜ் மாமா கிட்ட மாட்டின அவ்வளவுதான்.... நல்லா வாங்குவ .... சொன்னா கேளுடா ...." என்று கத்திய என்னை அலட்சியமாக பார்த்த குமார் அந்த வீட்டு கம்பௌண்ட் தாண்டி உள்ளே குதித்தான்..... மெதுவா நடந்து வீட்டு காலிங் பெல்லை விடாமல் அமுக்கி அலற விட்டு சர்ர்ன்னு வேகமா அவங்க வீட்டு மாமரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டான் ...

அந்த அக்ரஹாரத்துல நான் , குமார்,  சீனி , ரவி, சர்குணம்ன்னு பெரிய கேங் ... எல்லாரும் அங்க இருந்த பாய்ஸ் ஹை ஸ்கூல்ல ஏழாவது, எட்டாவதுன்னு படிச்சிட்டு இருந்தோம்... பெரிய  கம்பௌண்ட் வெச்ச அந்த கடைசீ  வீட்டுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி
ஜட்ஜ் மாமா குடி வந்ததுல இருந்து இதே வேலை ... அவர் வீட்ல அவரும் மாமியும் தான் .... அந்த மாமா பாத்தாலே டெர்ரரா இருப்பார் (கவுரவம் சிவாஜி மாதிரி)... ஆனா மாமி பார்க்கவே சாந்தமா மஹாலக்ஷ்மி மாறி இருப்பாங்க ... என்ன கொஞ்சம் சிரிச்சா இன்னும் அழகா இருப்பங்களேன்னு தோணற அளவுக்கு முகத்தில எந்த உணர்ச்சியும் இருக்காது... வீடு விட்டா சிவன் கோவில்ன்னு ரொம்ப அமைதியா இருப்பாங்க .... எங்க தெரு மத்த மாமிகளாம் "அவ ஆத்துக்காரர் பெர்ர்ரிய ஜட்ஜோன்னோ .... அதான் கர்வம் ..." அப்படின்னு பேசிப்பாங்க...

ஜட்ஜ் மாமா குடி வந்த உடனே வாசல்ல "தயவு செய்து காலிங் பெல்லை அடிக்காதீர்கள்" ன்னு ஒரு போர்ட் தான் மாட்டப்பட்டது ... ஒரு தடவை அவங்க வீட்டு மாமரத்துல இருந்த மாங்காயை பறிச்சுக்கலாமான்னு கேக்கறதுக்காக குமார் தெரியாம காலிங் பெல் அடிச்சிட்டான்... ரொம்ப நேரமா கதவு திறக்கலைனதும்  திரும்ப அடிச்சான் .... கொஞ்ச நேரத்துல கதவை திறந்த ஜட்ஜ் மாமா குமார் காதை பிடிச்சு திருகி "ஏன்டா பெல் அடிக்க வேண்டாம்னு தான் தெளிவா போர்ட் போட்டுருக்கே... அறிவு இல்ல ...  ஏன்டா இப்படி உயிரை வாங்கறீங்க... " அப்படின்னு ரொம்ப கடுமையா  திட்டிட்டார்... குமார் ரோஷக்காரன்.. "அது என்னடா ஏதோ கவனம் இல்லாம பெல் அடிச்சிட்டேன்.... அதுக்கு போய் இப்படி காதை எல்லாம் திருகி கன்னா பின்னான்னு திட்டறார்... அது சரி அடிக்க தானே காலிங் பெல் ... அடிக்க கூடாதுன்னா அதை கழட்டி வெக்க வேண்டியது தானே ..."  அப்படின்னு பொருமி தள்ளிட்டான்...

அதுல இருந்து வேணும்னே அந்த வீட்டை தாண்டி போகும்போதெல்லாம் எங்க குரூப்ல எவனாவது போய் அந்த பெல்லை அடிச்சிட்டு ஒளிஞ்சுக்குவான் ... கொஞ்ச நேரத்துல அந்த மாமா வெளிய வந்து கத்துவார்.. எங்க தொல்லை தாங்க முடியாம எங்க வீட்லலாம் வந்து கத்திட்டு போவார் ... எங்க கணக்கு வாத்தியார் நரசிம்மமூர்த்தி கிட்ட கூட சொல்லிப் பாத்துட்டார்... அவர்னா எங்களுக்கு ஒரு பயம் ... ஆனா இந்த விஷயத்தில குமார் ரொம்ப உறுதியா இருந்தான் ... ஒரு கட்டத்துல எங்க தொல்லை தாங்காம அந்த பெல்லை கழட்டணும்னு முடிவு பண்ணார்... அந்த காலிங் பெல் அவங்க வீட்டு முற்றத்துக்கு மேல உயரமா வெச்சுருந்தாங்க ... அதை கழட்ட ஆள் தேடினார்ன்னு கேள்விப்பட்டு "அவர் அதை கழட்டறதுக்குள்ள ஒரு வழி பண்ணனும்டா..." ன்னு சொல்லி வேணும்ன்னே தினமும் போய் அடிக்க ஆரம்பிச்சான்...

அன்னைக்கும்  அப்படி அடிச்சிட்டு தான் மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டான்.. கொஞ்ச நேரத்துல ஜட்ஜ் மாமா வீட்ல இருந்து அவரோட குமாஸ்தா வேகமா வெளிய ஓடி வந்தார் ... வெளிய போய்ட்டு திரும்பி வந்தப்போ "இப்படி அடிக்கடி வந்தா அப்பறம் சீரியஸ் ஆய்டும்.... ஏன் இப்படி நடக்குது ..." ன்னு சொல்லிட்டே கூடவே ராமானுஜம் டாக்டர் வரார்.... எங்களுக்கு ஒண்ணும் புரியல.... கொஞ்ச நேரத்துல அந்த மாமிய தூக்கிட்டு ஹாஸ்பிட்டல்க்கு போனாங்க... என்னன்னு புரியலைனாலும் கொஞ்ச நாளைக்கு அந்த காலிங் பெல்லை அடிக்காம இருந்தோம்... ஒரு வாரம் கழிச்சு அந்த மாமி ஆளே பாதியா போய் திரும்ப வீட்டுக்கு வந்தாங்க ...

அப்பறம் 2 நாள்ல அவங்க வீட்டை காலி பண்ண சாமான்லாம் வண்டில ஏத்திட்டு இருந்தாங்க ... அதை பாத்த குமார் "பாத்தியாடா ... வீட்டையே காலி பண்ணிட்டு ஓடறார்..." அப்படின்னு சிரிச்சான்.... எங்களை பாத்த அந்த குமாஸ்தா நேரா வந்து "ஏன்பா சின்ன பசங்களா இருக்கீங்க ... எவ்வளவு சொன்னாலும் கேக்காம பெல்லை அடிச்சு அடிச்சு பாவம் இப்படி வீட்டையே காலி பண்ண வெச்சுட்டிங்களே ... பாவம் அந்த மாமி பரம சாது ... ஸ்கூல் போன அவங்க குழந்தை ரோட்டில அடிப்பட்டு இறந்துடுச்சுன்னு அவங்க வீட்டு காலிங் பெல்லை அடிச்சு தான் சொல்லி இருக்காங்க ... அதுல இருந்து பெல்லை யாராவது  அடிச்சாலே மாமிக்கு பிட்ஸ் வந்துரும் ... இங்க குடி வந்ததுல இருந்து அடிக்கடி பிட்ஸ் வந்து ரொம்ப சீரியஸா போயிடுச்சு ... அதான் வீட்டையே காலி பண்ணறாங்க ... போங்கப்பா உங்கள எல்லாம் நல்ல பசங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன் ..." என்றாரே பார்க்கணும்..
மளுக்கென்று உள்ளே ஏதோ உடைய கண்ணில் வழிந்த கண்ணீரோடு அங்கிருந்து வீட்டு வாசலில் இருந்த
மாமியை பார்த்தோம் ... அழும் எங்களை ஒண்ணும் புரியாமல் பார்த்த மாமி நாங்கள் பார்த்த அவ்வளவு நாட்களில் முதல் முறையா மென்மையா சிரித்தார் ...

கடவுளுக்கும் சில சமயம் கண் தெரிவதில்லை...

Wednesday, September 21, 2016

தன்னம்பிக்கை மனிதர்கள் !

ஒன்பது வயசு இருக்கும் போது நாலு வீடுகள் இருந்த ஒரு காம்பௌண்ட்ல குடி இருந்தோம்... எங்க வீடு மெயின் ... பின்னாடி வரிசையா வேற முணு போர்ஷன்... நான் , பின்னாடி முதல் வீட்டு அபி, ரெண்டாவது வீட்டு மஞ்சு முணு பேரும் தான் ஸ்கூல் போற நேரம் தவிர எப்பவும் ஒண்ணா விளையாடிட்டு  இருப்போம் .... விளையாட்டு னா இந்த ஓடி பிடிச்சி , கண்ணாமூச்சி, செங்கல் அடுப்பு வச்சு சமைக்கறோம் பேர்வழின்னு துவரம் பருப்புக்கு பதிலா கடலை பருப்பை வேகவைக்க படாதபாடு பட்ட சமையல் விளையாட்டு , பிசினெஸ் , கேரம் இதெல்லாம் மட்டும் இல்ல... எங்க காம்பௌண்ட் உள்ள இருந்த கொய்யா மரத்தில ஏறுறது , அதுல இருந்து சன்ஷேட்க்கு தாவறது , மாடிப்படி சுவர்ல சறுக்கறதுன்னு பல வீர விளையாட்டுகளும் அடக்கம்...... பல நாள் இந்த மாதிரி விளையாட்டுல அடிபட்டுருமோங்கற பயத்துல அம்மா கையால தான் அடிபட்டுக்கிட்டு இருக்கேன் .... கடைசீ போர்ஷன் ஹரி அண்ணா மட்டும் நாங்க விளையாடுற இந்த வீர விளையாட்டை எல்லாம் சிரிச்சிகிட்டே வேடிக்கை பார்த்திட்டு இருப்பான்...
ரொம்ப சாதுவா அமைதியா அதே சமயம் ரொம்ப disciplined ஆ இருக்கற பையன் ... அவன் அம்மா ஒரு டீச்சரா இருந்ததும் காரணமா இருக்கலாம்... காலைல அஞ்சு மணிக்கே  எழுந்துருவான்.... ஆறாங் கிளாஸ் படிக்கும் போது அவ்வளவு சீக்கிரமா  எழுந்து தினமும் என்னதான் படிப்பானோ .... ஆனா படிப்புல மட்டும் இல்லாம பயங்கர ஜெனரல் நாலேஜ் ... அவன் நோட் எல்லாம் அவ்வளவு கிளீனா  இருக்கும் ... கையெழுத்து கண்ணுல ஒத்திக்கலாம் போல இருக்கும் ... அவ்வளவு கிராஃப்ட் வொர்க் பண்ணுவான்.. நாலாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்த எனக்கு ஹரி அண்ணா அப்படினாலே ஒரு மரியாதை..... ஆனால் அவனை பார்த்து அபிக்கு எப்பவும் பொறாமை.... "அவனே அப்படி படிக்கறான்.... உனக்கென்ன நல்லாதானே இருக்க... அப்பறம் என்ன ..." ன்னு அவனை கம்பேர் பண்ணி அவ அம்மா அவளை எப்பவும் திட்டறதும் காரணமா இருக்கலாம்....

இப்படி இருக்க ஒரு நாள் அபி ஒரு பக்கம் உசுப்பேத்த (அவ தெளிவு.. ஏற மாட்டா என்னை ஏத்தி விட்டு நான் அடிவாங்கும் போது ஓடிருவா ) நான் நல்லா வழுக்கற  கொய்யா மரத்தில எப்படியோ ஏறிட்டேன்... சன் ஷேட் உயரத்துக்கு போயிட்டேன் .... அப்போ வெளிய இருந்து வீட்டுக்கு வந்துட்டு இருந்த ஹரி அண்ணா "ஹேய் கீழ விழுந்துற போற .. ஏன் இப்படி ஆபத்தான விளையாட்டு எல்லாம் விளையாடறீங்க  " அப்படினான்... உடனே அபி வெடுக்குன்னு "ஏன் உன்னால இது எல்லாம் செய்ய முடிலயேன்னு பொறாமையா.."  அப்படின்னு கேட்டா .... அப்படி கேட்ட உடனே ஹரி அண்ணா முகம் அப்படியே சுண்டி போச்சு ... நான் அதுவரைக்கும் அவனை அப்படி பார்த்ததில்லை..  ஆனா ஒரு நிமிஷம் தான் .. அதுக்குள்ள டக்குனு மெல்லிசா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு போய்ட்டான்...
ஒண்ணும் சொல்லாம போன அவனை பார்த்து எனக்கே ரொம்ப கஷ்டமா போச்சு .... "ஏன் அபி இப்படி பேசற .. இப்படி பேசறது தப்பு இல்லயா ..." அப்படின்னு கேட்ட என்னை "அட போப்பா அவனுக்கு தான் ரொம்ப இன்டெலிஜெண்ட்ன்னு ப்ரவுட்... அவனால நான் எவ்வளவு திட்டு வாங்கறேன் தெரியுமா " ன்னு சொன்னா ...
அந்த வருஷம் நவராத்திரி வந்தது... ஹரி அண்ணா வீட்ல  எப்பவுமே பெருசா கொலு வெப்பாங்க... அந்த வருஷமும் பெருசா வெச்சிருந்தாங்க... டீச்சர் "இந்த வருஷம் எங்காத்து ஹரி ஸ்பெஷலா ஒரு தனி கொலு வெச்சிருக்கான் .... நீங்க வந்து பாருங்க..." அப்படின்னு சொன்ன உடனே ஆர்வத்துல போனோம் ... அடேங்கப்பா ஒரு மலை அதுக்கு கீழ காடு அனிமல்ஸ் குளம் அப்பறம் பேனால பவுண்டன் ரெயில்வே ட்ராக் pulley மாறி ஏதோ எல்லாம் வெச்சிருந்தான்..
எங்கயோ ஒரு பைப்பை ஓபன் பண்ணினா பேனா பவுண்டன்ல இருந்து தண்ணி வருது.... அப்பறம் கீ கொடுத்தா டிரெயின் ஒடி வருது... அதுல மனுஷன் மாறி ஒரு பொம்மை டிரெயின் எஞ்சின்ல அதை ஓட்டற டிரைவர் மாறி உட்காந்து வருது .... ரொம்ப யோசிச்சு ஏதோ பண்ணி இருந்தான் .... அடுத்த கொலுவுல ஏரோபிளேன் ஹெலிகாப்டர் லாம் பண்ண போறேன்னு சொல்லிட்டு அபியை பாத்து பெருமையா ஒரு சிரிப்பு  சிரிச்சான் ... அவளுக்கு முகமே சரி இல்ல... அப்ப தான் நான் அந்த பொம்மைய கவனிச்சேன்... அதுக்கு ஒரு கையை காணோம்.... எனக்கு ஹரி அண்ணாவோட அந்த confidence பிடிச்சி இருந்தது .... ஆமா அவனுக்கு போலியோனால வலது கை ரொம்ப குட்டியா இருக்கும் ...

தன்னம்பிக்கை மனிதர்கள் !!!!

Saturday, September 17, 2016

அப்படி என்ன இடம்...

மாமாவிற்கு கல்யாணம் ஆகி கொஞ்ச நாளே ஆகி இருந்தது .... லீவுக்கு மாமா வீட்டில் .... அன்னைக்கு காலைல எழுந்த உடனே அம்மா சொன்னது "அத்தையோட பாமிலி பிரெண்ட் ஒரு மாமி .... நீ கூட கல்யாணத்துல பாத்தியே ... அவங்க வீட்டுக்கு நம்ம எல்லாரையும் கூப்பிட்டு இருக்காங்க .... மாமாக்கு ஆபிஸ் ... அதனால அத்தை சித்தி பாட்டி நாம மட்டும் அவங்க வீட்டுக்கு இன்னைக்கு போறோம் ... அது கொஞ்சம் தூரம் ரெண்டு பஸ் மாறி போகணும்... அதுவும் இல்லாம முக்கியமா சாயங்காலம் 5 மணிக்குள்ள அங்க இருந்து ரிட்டர்ன் ஆய்டணுமாம் .... இருட்டினா safe இல்லயாம்.. அதனால ஒழுங்கா சீக்கிரம் கிளம்பணும் ... சரியா "... உடனே ஒரே ஆர்வம் ..... அப்படி என்ன இடம் .... கூடவே ஒரு பயம் ... 5 மணிக்கு மேல லேட் ஆச்சுன்னா என்ன பண்றதுன்னு...

மத்தியானம் கிளம்பினோம்... முதல்ல ஒரு பஸ்ல ஏறி ஏதோ இடத்துக்கு போனோம் ... அந்த இடம் அந்த ஊர்ல நான் பாத்த மத்த இடங்கள் மாறித்தான் இருந்தது .... இன்னொரு வண்டில (பஸ்ஸா ஆட்டோவா ன்னு சரியா ஞாபகம் இல்ல) ஏறினோம்..... கொஞ்ச நேரத்துல பாத்தா  ரோட்க்கு ரெண்டு பக்கமும் பச்ச பசேல்ன்னு ஏதோ கிராமம் மாறி வருது.... கொஞ்ச தூரத்தில செம்மண் ... அப்பறம் பாத்தா அழகா வரிசையா தனி தனி கம்பௌண்ட் வெச்ச வீடுகள் .... ஒவ்வொரு வீட்டிலும் மரங்கள்..... வீட்டுக்கு முன்னாடி கோலம்.... ஏதோ அழகான காலனி மாறி இருக்கு....  ஆன போற வழில ஆள் நடமாட்டம் அவ்வளவா இல்ல... எல்லாரும் மத்தியானம் வீட்ல இல்ல இருப்பாங்கன்னு அப்போ புரில...அவங்க வீட்டுக்கு போனப்போ 4 மணி ஆய்டுச்சு .. போன உடனே லெமன் சேவை , தேங்காய் சேவை ..... நல்லா சாப்பிட்டு ஆன்னு பராக்கு பாத்திட்டு கிளம்பலாமான்னு கேட்ட உடனே சட்டுனு அவங்க வீட்டு கடிகாரத்தை பாக்கறேன்... ஆஆ மணி 5.15 ..... அவ்வளவுதான் அய்யயோ 5 மணிக்கு மேல ஆச்சுனா safe இல்லயே... வர்ற வழில எல்லாம் யாருமே இல்லயே... இப்படி பயந்துகிட்டே திரும்பி வர்ற வழியெல்லாம் யோசிச்சிகிட்டே வரேன் ... ஆனா அப்ப கூட அந்த சாயங்கால நேரத்துல அந்த காத்து, அந்த வயல்வெளி அழகை எல்லாம் ரசிக்கணும்னு தோணுது பட் சீக்கிரம் வீட்டுக்கு போய் சேரணுமேன்னு ஒரே கவலை (எனக்கு தான்)... எப்படியோ படக்படக்ன்னு அடிச்சிக்கற நெஞ்சோட ஒரு வழியா 7 மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு....

ஆனா ஒண்ணு ஒரே ஒரு தடவை பார்த்த அந்த இடமும், அந்த வீடுகளும் 27 வருஷங்கள் கழிச்சும் மனச விட்டு போகவே இல்ல (பாருங்க சாப்பிட்ட சேவை வரைக்கும் ஞாபகம் இருக்கு)... இப்போ திரும்பவும் அங்கயே போனாலும் அதை எல்லாம் கண்டு பிடிக்க முடியுமா இல்ல அது எல்லாம் இருக்குமான்னே தெரில .... அப்படி என்ன இடம்னா கேக்கறீங்க...  

இடம்: தாம்பரம்
வருடம்: 1989
கிளம்பிய  இடம் : மாம்பலம்

Sunday, September 11, 2016

பசுமை நிறைந்த நினைவுகளே....

அரட்டைனா அரட்டை அப்படி ஒரு அரட்டை... எப்போன்னு கேக்கறீங்களா.. நான் காலேஜ் ஹாஸ்டல்ல இருந்தப்போ  தான் .... இப்போவே இவ்வளவு பேசறியே அப்ப என்னவோ காலேஜ் படிக்கும் போது மட்டும் தான் அரட்டை அடிச்ச மாதிரி கதை விடற... ஏன் அதுக்கு முன்ன அதுக்கு பின்ன நீ அரட்டையே அடிச்சதில்லையான்னு தானே கேக்கறீங்க... அதெப்படி சும்மா இருந்து இருப்பேன் ... நான் நான்ஸ்டாப்பா  அரட்டை அடிப்பேன் தான் பட் எல்லார்கிட்டயும் இல்ல... அது மனசு செட் ஆகணும்.....மனசு செட் ஆனாலும் மணிக்கணக்கா அரட்டை அடிக்க வாய்ப்பும் இருக்கணும்...  ரெண்டுமே அமைஞ்சது  காலேஜ் ஹாஸ்டல் லைஃப் தான் ....

ஏன் இப்படி சொல்றேன்னா +1 வந்தப்போ ஒரு கிளோஸஸ்ட் பிரெண்ட் கிடைச்சா... ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வந்து டெலிபோன்ல கன்டின்யூ பண்ணுவோம்... அப்போல்லாம் நோ மொபைல் ....போனும் பேங்க் மேனேஜர்க்காக அப்பாக்கு பாங்க் தந்தது.... அப்படி என்ன அரட்டை அதான் ஸ்கூல்லயே பேசிக்கறீங்க இல்லன்னு  திட்டு வாங்கிக்கிட்டே எந்த அளவு டெலிபோன்ல பேசுவேனா ஒரு தடவை யாரோ எங்க வீட்டுக்கு போன் பண்ணி "இது 23814 ங்களா" ன்னு கேக்கறாங்க .... அதான் எங்க நம்பர்.... நான் உடனே "இல்ல இது .... " அப்படின்னு என் பிரெண்ட் வீட்டு நம்பரை சொல்லி வீட்ல நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன்... இப்படி மணிக்கணக்கா பேச நினைச்சதை எல்லாம் ஒரு கால் மணி அரை மணி ன்னு கெரகம் புடிச்ச  ஸாரி கிரஹாம்பெல் கண்டுபிடிச்ச டெலிபோன்ல பேசறது ரொம்ப சேலஞ்சிங் டாஸ்கா இருந்தது ....

அப்பறம் தான் காலேஜ்க்கு ஹாஸ்டல் போனேன் .... இனிஷியலா இந்த ஹோம் சிக் ஹோம் புட் சிக் ன்னு அழுகைல போய்டுச்சு ... அப்பறம் தான் மாட்டினா ஒரு அப்பாவி பிரெண்ட் ... ஏன் அப்பாவின்னு சொல்றேன் .... ஏதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருந்ததால ரூம் மட்டும் வேற வேற .... பட் அவ தூங்கற நேரத்தைக்கூட நாந்தான் முடிவு பண்ணுவேன்... என்னல்லாம் அட்டூழியம் பண்ணுவேன்னா என்னை சைக்கிள்ல டபிள்ஸ் ஏத்திட்டு கஷ்டப்பட்டு மிதிச்சிட்டு போவா நான் அவ பின்னாடி ஹாய்யா உட்கார்ந்து அவ காதை கடிச்சிட்டே போவேன் ... அசைன்மென்டை சீக்கிரம் எழுதி குடு நான் காப்பி அடிக்கணும்னு சொல்லி பக்கத்துலயே உட்காந்து அவ கஷ்டப்பட்டு எழுத நான் இஷ்டத்துக்கு பேசிட்டு இருப்பேன்.. அவ என் பேச்சை கேட்டுக்கிட்டே எழுதி முடிக்கணும்.... இதுல ஒரு தடவை நான்ஸ்டாப்பா நான் "காதல் மன்னன் " படத்தை பேக்ரவுண்ட் ம்யூசிக் பாட்டு வசனம் சகிதம் 3 மணி நேரம் கதை சொல்லிட்டே ஒரு முக்கியமான மண்டைய பிச்சுக்கற அசைன்மெண்டை அவளை எழுத வச்சு அப்பறம் நான் ஈஸியா காப்பி அடிச்சிட்டேன்... அந்த ரூம்ல மூணு பிரெண்ட்ஸ்.... எல்லாரையும் என்டர்டெயின் பண்ணிட்டு அவங்க டயர்டு ஆகி தூங்கினதும்  இந்த அப்பாவிய மட்டும் டார்கெட் பண்ணி அவ காட்ல உக்காந்து "குட் நைட் டா.. " ன்னு ஆரம்பிச்சு நைட் 2 3 வரைக்கும் விடாம மூச்சு முட்ட பேசிட்டு மனசே இல்லாம என் ரூம்க்கு வந்து என் ரூம்ல இருந்த இன்னொரு அப்பாவியை தூங்க விடாம அரட்டை அடிப்பேன்.... இது மட்டும் இல்லாம ஊருக்கு பஸ்ல ட்ரெயின்லன்னு  எதுல போனாலும் நான் ஸ்டாப் நான்சென்ஸ் (நான் தான் ..)
இதுல ஒரே கம்பெனில காம்பஸ் செலக்க்ஷன் ஆயிட்டோம்... பாவம் அவ... பட் அவன் வேலைல ஜாயின் பண்ண கூப்பிட ரொம்ப லேட் பண்ணான்.... அந்த கேப்ல 2  3 தடவை நானும் அவளும் டிரெயின்ல பெங்களூர் போனோம் சில இன்டெர்வியூக்காக ... டிரெயின்ல என் பர்த் அ  விட்டுட்டு அவளோட டாப் பர்த்ல உட்கார்ந்து தூங்க விடாம பேசி அடுத்த நாள் இண்டெர்வியூல நல்லா தூங்கினேன்.... கடைசில ஒண்ணா வேலைல சேர போனா என்னோட லக் என் ஸ்கூல் பிரெண்டும் அதே நாள் அதே கம்பெனில ஜாயின் பண்றா... பயங்கர குஷியா எல்லாரும் சேர்ந்து ஒரு வீட்ல இருந்தோம்... நான் பேசி பேசி சாகடிக்கறது அந்த ஆண்டவனுக்கே பொறுக்கலை.. எனக்கு மட்டும்  ட்ரைனிங் முடிஞ்சி போஸ்டிங் சென்னைல ...

சென்னை வந்து ரொம்ப நாள் பேச ஆள் இல்லாம புது முகங்களோட ஒரு ஹாஸ்டல்ல இருந்து தனிமை  துயர்ல பைத்தியமே பிடிச்சிடுச்சு ....  அப்படியே கொஞ்ச நாள் போனப்போ ஒரு வீக் எண்ட் நான் பெங்களுர் போக முடிவு பண்ணேன்.. அங்க போய் என் பிரெண்ட்ஸை எல்லாம் பாத்ததும் சந்தோஷம் துக்கம் எல்லாம் சேர்ந்து தொண்டையை அடிக்குது.... அன்னைக்கு நைட் எல்லாரும் ஒண்ணா படுத்து இருக்கோம் ....  முதல் நாள் டிரெயின் அலுப்பு பகல்ல பெங்களுர் சுத்தின அலுப்புன்னு அலுப்புல என் கண்ணு அப்படியேஏஏ தூக்கத்துல சொருகுது... இந்த அப்பாவி என்னை மெதுவா சுரண்டி "ஏன் ஒண்ணுமே பேச மாட்டேங்கற.... பேசு சாரு...." ங்கறா .... ஒருத்தர்கிட்ட மனசு செட் ஆகறதுனா என்னன்னு இப்போ புரிஞ்சி இருக்குமே !!!

பின் குறிப்பு:
இப்போ போன மாசம் அவ யூ எஸ் ல இருந்து இங்க ஒரு மாசம் வந்து இருந்தா .... கடைசில அவ கிளம்ப ஒரு 2 நாள் இருந்தப்போ என் பொண்ணு ஸ்கூல் போய் இருந்தப்போ அவசரமா போய் ஒரு 1 ஹவர் அரட்டை அடிச்சிட்டு வந்தேன் .... என்னவோ பேசின மாறியே இல்ல.... so அவ கிளம்பும் போது வேகமா ஏர்போர்ட் போய் கரெக்ட்டா அவ கேட்ல நுழைய அவளுக்கு முன்னாடி ரெண்டு பேர் இருக்கும் போது அவளை பாத்து நல்லா (???) 2 நிமிஷம்  பேசிட்டு திரும்ப கார்ல வரும்போது FM ல  "வானும் மண்ணும் கட்டி கொண்டதே ..." ன்னு காதல் மன்னன் பட பாட்டு ஓடுது ... அப்படியே என் நினைவுகளும் !!!!!!

Wednesday, September 7, 2016

நெவர்...

ரொம்ப நாளைக்கு அப்பறம் போன வாரம் பெசன்ட் நகர் பீச் விசிட் .... ரெண்டு நாளா சென்னையை வறுத்தெடுத்த வெயிலா இல்லை சண்டே ங்கறதாலயான்னு தெரில பீச்ல நல்ல கூட்டம் .... செருப்பை கார்லயே கழட்டிட்டு வெறும் காலோட பேவ்மெண்ட்ல இருந்து கடல் வரைக்கும் மணல்லயே நடந்தோம்..... காரணம் ஒண்ணு எல்லாருமே அலையில காலை நனைக்கனும்னா இந்த செருப்பை காவல் காக்கற வேலை இல்ல.. ரெண்டு காலை நனைச்சிட்டு மணலை leg pack போட்டுக்கிட்டு செருப்பையும் போட்டுட்டு திரும்ப வரும்போது அந்த மணலை எல்லாம் பிரபுதேவா மாறி காலை உதறி டான்ஸ் ஆடிட்டே உதிர்க்கணும் இல்லேன்னா கார்  பீச்சா மாறிடும் அபாயம்.... முணு மணல்ல வாக்கிங் போனா சட்டுனு நாலு கிலோ வெயிட் குறைஞ்சிடும்னு முன்ன யாரோ ஒரு ஞானி சொன்னதா ஞாபகம் ...

போய் அப்பா பொண்ணை அலையில விளையாட அனுப்பிட்டு ஆன்னு கடலை பராக்கு பாத்துட்டு உட்காந்தாச்சு... இப்படி இருக்கும்போது உடனே இளையராஜா மியூசிக் பாக்ஸா மாறிடறது என்னோட வழக்கம்... அங்க நாம யாரோதான ... யாருக்கு நம்மள தெரியும்கற தைரியத்துல வாயாலேயே வயலின் வீணை புல்லங்குழல் இப்படி சகல விதமான வாத்தியங்களையும் வாசிச்சு பாட்டும் பாடுவேன்... so வழக்கப்படி  ராதிகாவா மாறி காலால தாளம் போட்டுட்டே "கண்ணன் வந்து பாடுகின்றான் .." ன்னு  பீலோட ஆரம்பிச்சேன்... பக்கத்தில ஒரு காலேஜ் கேர்ள்...  ஒரு க்ரூப்பா வந்து இருப்பாங்க போல இருக்கு... ஒரு பெரிய செருப்பு கடையவே காவல் காத்துட்டு இருந்தா .... நான் முதல் பாட்ட பாடி முடிச்சதுமே என்னை திரும்பி பாத்தா .... ஆஹா நமக்கு ஒரு ரசிகை போல ... அவளை ஏமாத்த வேண்டாமே ன்னு உற்சாகமா அடுத்து அர்விந்த்ஸ்வாமியா மாறி "எல்லோரும் சொல்லும் பாட்டு ...." ன்னு கிட்டரோட (அட வாயால தான் பா) கருத்து சொல்ல ஆரம்பிச்சேன் ... உடனே அவ எழுந்து போய் அலையில விளையாடிட்டு இருந்த அவ பிரெண்ட்ஸ் கிட்ட என்னை காமிச்சு ஏதோ சொன்னா ..... உடனே அவங்க இன்னும் கொஞ்ச நேரம்ன்னு சைகை காட்டின மாறி இருந்தது ... ஆஹா நம்ம ரசிகை அவ பிரெண்ட்ஸும் என் கான மழையில நனையட்டும்னு கூப்படறா போல இருக்குன்னு பயங்கர குஷி எனக்கு... இப்போ திரும்பி வந்து உட்கார்ந்த அவளுக்காக ஸ்பெஷலா ஒண்ணு பாடுவோம்னு எனக்கு பிடிச்ச (எனக்கு மட்டும் பிடிச்சா போறுமான்னு தான கேக்கறீங்க... புரியுது...) "குச் நா கஹோ ..." வ ஆரம்பிச்சேன் ... பின்ன எனக்கு ஹிந்தியும் வரும்னு ரசிகைக்கு காட்ட வேணாமா....  அவ பேக்ல இருந்து மொபைல எடுத்தா... ஆஹா ஆஹா என் பாட்டை பிரெண்ட்ஸ்க்காக ரெகார்ட் வேற பண்ணிக்க போறாளான்னு எனக்கு பெருமை தாங்கல ... உடனே வாய்ஸ் கிளாரிட்டிக்காக வால்யூமை கூட்டினேன்.... உடனே அவ பேக்ல தீவிரமா எதையோ தேடி அப்பான்னு பெருமூச்சோடு ஒண்ண எடுத்து மொபைல்ல  சொருகி காதுல மாட்டிக்கிட்டா.... வேற ஒண்ணும் இல்ல  ... earphones ....ஹிஹி ...

இதுக்கெல்லாம் அசந்து பீச்ல பாடறத நிறுத்துவேனா என்ன ... Never !!

Friday, September 2, 2016

அது அப்படித்தான்....

"ஹேய் இன்னைக்கு ஆபீஸ்ல ஒரு இன்டரெஸ்டிங்கான விஷயம் நடந்தது ..."

"ஒரு நிமிஷம் இருங்க கேஸ் ஆப் பண்ணிட்டு வந்துறேன் ..ம்ம்.. இப்போ சொல்லுங்க ...."

"இன்னைக்கு மார்னிங் காபி பிரேக்குக்கு for a change cafeteria போலாம்ன்னு போய் இருந்தோம்..."

"வெயிட்... நீங்க காபி ப்ரேக்குக்கு எல்லாம் போவீங்களா ... நான் வர்க் பண்ணிட்டு இருந்தப்போ ஆஃபிஸ்ல கரெக்ட்டா டைமை மேனேஜ் பண்ணா சீக்கிரமா வந்துறலாம் ... இந்த காபி டீ ன்னு போனா அதுலயே டைம் வேஸ்ட் ன்னு அட்வைஸ் பண்ணுவீங்களே ..."

"இல்லமா எப்பவாவது போவோம் ... அங்க தண்ணி குடிக்கலாம்னு போனா அங்க ரொம்ப நாளைக்கு அப்பறம் கிருஷ்ணாவ பாத்தேன் ..."

"ஹேய் ஒரு நிமிஷம் .... தண்ணின்னு சொன்ன உடனே ஞாபகம் வருது ... வாட்டர் கேன்க்கு சொல்லணும்.... ஒரு போன் பண்ணிடறேன்.... அப்பறம் மறந்துருவேன்... ம்ம்ம்ம்.. இப்போ சொல்லுங்க ..."

"எங்க விட்டேன் ..."

"வாட்டர் ... கிருஷ்ணா..."

"ஓகே ... உடனே புதுசா ஏதாவது பேடண்ட் பண்ணலாமான்னு ஒரு பேச்சு வந்தது ..."

"ஆமா ... போன தடவை பேடண்ட் அப்ரூவ் ஆனதுக்கே நீங்க ப்ராமிஸ் பண்ண மாறி இன்னும் ட்ரீட் தரலை... நைஸா மறந்துட்டீங்க... நானும் மறந்துட்டேன் ... இந்த வீக் போலாமா ..."

"சரி சரி போலாம் ... இப்போ விஷயத்தை கேளு..."

"கேட்டுட்டு தான இருக்கேன் ... நீங்க தான் விஷயத்தை சொல்லாம ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க... சீக்கிரம் சொல்லுங்க ... எனக்கு பாத்திரம் தேய்க்கணும் ... கிச்சனை கிளீன் பண்ணணும்..."

"சரி நீ வேலையெல்லாம் முடிச்சிட்டு வா... சொல்றேன் ..."

"அதான ... முன்ன எல்லாம் ஆஃபிஸ் விட்டு வீட்டுக்கு வந்தா அந்த நாளை பத்தி நிறைய சொல்வீங்க.. இப்போ எல்லாம் என்கிட்ட பேசக்கூட உங்களுக்கு நேரம் இல்லை ... "

"ஙே! "

"அம்மா... அம்மா... listening skill னா என்னமா ..."

"நான் சொல்றேன் வாடா ... அம்மாக்கு தெரியாத விஷயத்தை  கேட்டா  அவ எப்படி சொல்லுவா....." நமட்டு சிரிப்புடன் !!

என்னத்த  சொல்ல....

Men are from mars ... Women are from venus...

Tuesday, August 30, 2016

Who am i ?

நேத்து தூக்கம் வரலைன்னு புரண்டுட்டே இருந்தா என் பொண்ணு.... சரின்னு Who am i விளையாட  ஆரம்பிச்சோம்... ஒரு பெர்சனாலிட்டிய  நினைச்சிக்கணும்.... இன்னொருத்தர் ஆமா  இல்லை ன்னு சிங்கிள் வோர்ட் ஆன்சர்ஸ் இருக்கற கேள்விகளை கேட்டு அந்த yes or no வ வச்சு கண்டுப்பிடிக்கற அதே சேம் ஒல்ட் கேம்...
நான் கலிலியோவை  நினைச்சுக்கிட்டேன்...  என் பொண்ணு  செலிபிரிட்டியா , ஆணா பெண்ணா, இருக்காரா போய்ட்டாரா, இந்தியனா நான்-இந்தியனா இப்படி கேள்வியா கேட்டா .... சைன்டிஸ்ட்ன்னு கேட்ட உடனே யெஸ் ன்னு சொன்னேன் ...
"ஹே  கண்டுப்பிடிச்சிட்டேன்.. ஆப்பிள் பாத்து சொன்னாரே நியூட்டன்? "
"நோ"
உடனே அவ அப்பா ஹெல்ப் பண்ண வந்து "ஐன்ஸ்டீன்?"
"நோ "
"அப்பா லெட் மீ ட்ரை ..." ஓகேன்னு போயிட்டார்....
"மேரி கியூரி?"
"நோ "
"அவங்க ஹஸ்பண்ட் பேர் என்னமா ஏதோ பியர்ன்னு வருமே.."
"பியரி கியூரி..ஆனா நோ அவர் இல்லை.."

இப்போ செம்ம ஸ்பீடா "i know ... is he அகஸ்டஸ் குளோப் ... இல்லைன்னா வெருக்கா சால்ட்... or வயலட் பெரிகார்ட் ...இல்ல மைக் டீவ்..."

"ஆஹா இந்த பேரெல்லாம் எங்கயோ கேட்ட மாறியே இருக்கே ... ஆனா இவங்கெல்லாம் என்ன கண்டுப்பிடிச்சாங்கன்னு நமக்கே தெரியாதே.... ஆனா பரவாலயே இவளுக்கு இவ்வளவு பேர தெரியுதே..." அப்படின்னு திரு திருன்னு முழிச்சிக்கிட்டே அவ திருப்பி கேக்கறதுக்கு முன்னாடி ஜகா  வாங்கிடலாம்னு முடிவு பண்ணி "இவங்கள்ள யாரும் இல்லடா.... கலிலியோ ..." அப்படின்னு சொன்னேன் ..

உடனே அவ "சரி நான் சொன்னவங்க எல்லாம் யாருன்னு  உனக்கு தெரியுமா  மா..." அப்படின்னா...

அய்யயோ மாட்டினேன்னு நினைச்சுக்கிட்டு "இந்த பேரெல்லாம் எங்கயோ கேட்ட மாறித்தான் இருக்கு... ஆனா என்ன பண்ணாங்கன்னு மறந்துட்டேன் கண்ணா  (ம்ம்க்கும்  என்னவோ தெரிஞ்சு மறந்த மாறி ஒரு பில்டப் )..."
"அய்யோ அம்மா இவங்க எல்லாம் சைன்டிஸ்ட்டே இல்ல... roald dahl எழுதின charlie and the chocolate factory ல வர்ற காரக்டர்ஸ் .... கிக்கிக்கீ ...." அப்படின்னு சிரிக்கிறா...

அட ராமா ... நம்மள அசடு வழிய வச்சு மானத்தை வாங்கறதுல என்ன ஒரு சந்தோஷம் .... "ரொம்ம்ப நல்லா வருவடி..." அப்படின்னு சொல்லி தூக்கம் வருதுன்னு திரும்பி படுத்து எஸ்கேப்  ஆயிட்டேன் !!!

Friday, August 26, 2016

தற்பெருமை..

சில வருஷங்களுக்கு முன்னால நான் ஒரு ஐடி கம்பனில வேலை செஞ்சிட்டு இருந்தப்போ நடந்தது..அங்க இந்த ஹவுஸ் கீப்பிங் வேலைகளுக்கு எல்லாம் காண்ட்ராக்ட் பேசிஸ்ல அவுட்சோர்ஸிங் பண்ணி இருப்பாங்க... அதுல வேலைக்கு வர்ற பெண்கள் அடிக்கடி மாறிக்கிட்டே இருப்பாங்க ... எரிஞ்சி எரிஞ்சி விழற சூப்பர்வைஸர் ஒருத்தர் இருப்பார் .... ஒரு பெண் புதுசா எங்க ப்ளோர் ரெஸ்ட் ரூமுக்கு வர ஆரம்பிச்சாங்க ... பாக்கவே ரொம்ப பொறுமையா அமைதியா இருப்பாங்க .... மத்தியான வேளையில ரெஸ்ட் ரூமுக்கு போனா, அங்க ஒரு பத்து நிமிஷம் ரெஸ்டுக்காக உட்காந்து  இருக்கறவங்க டக்குனு எழுந்து நின்னுடுவாங்க... எனக்கு ரொம்ப கஷ்டமா போய்டும்... ஒரு நாள் நானே "ஏன் எழுந்துக்கறீங்க... உட்கார்ந்துக்கோங்க.. " அப்படின்னு சொல்லியும் "இல்ல மேடம் பரவால்ல ..." அப்படின்னு நின்னுக்கிட்டே இருந்தாங்க .... அதுல இருந்து நான் முடிஞ்ச வரைக்கும் அந்த டைம்ல ரெஸ்ட் ரூம் போறதை அவாய்டு பண்ணிடுவேன்... கொஞ்சம் நேரம் கழிச்சு போவேன் .... ஒரு நாள் நான் போனப்போ அவங்க அங்க மூலைல உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தாங்க ... என்னை பார்த்ததும் டக்குனு டிபன் பாக்ஸ  மூடிட்டு எழுந்துட்டாங்க... எனக்கு என்னவோ ரொம்ப பாவமா இருந்தது .... "ஏன்க்கா இப்படி பாத்தாலே எழுந்துக்கறீங்க... நாங்க வந்தா என்ன.... நீங்க உங்க வேலைய முடிச்சிட்டு தான உட்கார்ந்து இருக்கீங்க... அது சரி இங்க போய் ஏன் சாப்பிடறீங்க... வேற எங்கயாவது சாப்பிடலாம் இல்ல ... " அப்படின்னு கேட்டேன் ... நான் அவங்கள அக்கா ன்னு கூப்பிட்ட உடனே அவங்க முகத்துல வந்தது பாருங்க ஒரு சந்தோஷம்... "இல்ல மேடம் சூப்பர்வைஸர் திட்டுவாரு.. ரொம்ப பசி காலைல சாப்பிடல...அதான் ..." அப்படின்னு சொன்னவங்க முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் ... "சரி நான் வயசுல ரொம்ப சின்னவ மேடம்ன்னு எல்லாம் கூப்பிடவேணாம் ... " அப்படின்னு சொன்னதுக்கு "அய்யோ பரவாலீங்கமா ..." அப்படினாங்க .... அதுல இருந்து டெயிலி என்னை எங்க பாத்தாலும் "குட் மார்னிங்மா ... சாப்டீங்களா... " அப்படின்னு தவறாம கேப்பாங்க....நானும் "குட் மார்னிங் க்கா ..." அப்படின்னு  சொல்லிட்டு சிரிச்சுட்டு வந்துருவேன்...  "பரவால்ல இப்படி அவங்க மனசு சந்தோஷப்படற மாறி பெருந்தன்மையா நடந்துக்கறேனே... நாம எவ்வளவு சிம்பிள் ஹம்பில் " அப்படி அப்படின்னு மனசுக்குள்ள என்னை பத்தி தற்பெருமையா நினைச்சுப்பேன்....  நம்ப வடிவமைப்பு தான் அப்படிப்பட்டதாச்சே...

அப்பறம் நான் கான்சிவ் ஆகி கொஞ்ச மாசம் ஆன்சைட்ல இருந்தேன் .... எட்டாவது மாசம் திரும்ப இந்த ஆபீஸ்க்கு வந்தேன் ... வேற பிளாக் வேற ப்ளோர் .... ஒரு பத்து நாள் கழிச்சு கஃபேடேரியாக்கு போய்ட்டு இருந்தப்போ "அம்மா.. அம்மா நில்லுங்கம்மா... எங்க போய்ட்டிங்க .... ரொம்ப நாளா உங்களை பார்க்கவே முடிலயே ..." ன்னு கேட்டுக்கிட்டே பின்னாடி இருந்து ஓடி வந்தாங்க அந்த அக்கா ... என் வயித்த பாத்திட்டு "ஏன் தாயி நிறைமாசமா இருந்துக்கிட்டு ஏன் இப்படி கஷ்டப்படற .... உன்னை பாத்தாலே எனக்கு பாவமா இருக்கு.... லீவ் எடுத்துக்கிட்டு போலாம்ல .." அப்படின்னு வாஞ்சையோடு கேட்டாங்க ... "நான் ரெண்டு நாள் முன்னாடி தூரத்துல இருந்து பாத்தேன் ... கூப்பிடறத்துக்குள்ள போய்ட்ட..  இந்தா இது எங்க வூட்டுல பூத்த பூ வெச்சிக்க...." ன்னு  பூ வேற தந்தாங்க .... அப்பவும் as usual i was feeling very proud about how i touched her heart with my simplicity, smile blah blah ...

அப்பறம் என் பொண்ணு பிறந்து நிறைய நாள் லீவ் எடுத்திட்டு ஜாயின் பண்ணி ஒரு மாசத்துலயே வேற கம்பெனில ஜாப் கிடைச்சு இங்க ரிசைன் பண்ணிட்டேன்... பைனல் வீக்ல நோ ட்யூஸ் எல்லாம் வாங்க சுத்திக்கிட்டே இருந்தப்போ அந்த அக்காவை எதேச்சையா பாத்தேன் .. "நான் ரிசைன் பண்ணிட்டேன்க்கா .." என்றதும் "என்னையெல்லாம் மறந்துராதமா ..." அப்படின்னு நெகிழ்ச்சியோடு சொன்னார்கள் ....

கொஞ்ச வருஷம் கழிச்சு எங்கேயோ ஏதோ பேசிட்டு இருக்கும் போது, யாரா  இருந்தாலும் எப்படி மரியாதையா நடத்தணும் அப்படின்னு என் பிரதாபத்தை அளந்துட்டு இருந்தப்போ தான் சட்னு தோணிச்சு "அது சரி இவ்வளவு பேசறோமே இது வரைக்கும் அந்த அக்கா பேரையாவது என்னன்னு கேட்டு இருக்கோமா" ன்னு ....

ம்ஹ்ம் என் மனசு விரிய வேண்டியதும், நான் வளர வேண்டியதும்  இன்னும் நிறைய  நிறைய !!!

Tuesday, August 23, 2016

மன்னிக்க முடியாதவை .....

"டேய் பெரிய மனுஷா வா வா... இப்போ தான் வழி தெரிஞ்சுதா... எவ்வளவு நாள் ஆச்சு நீ வீட்டுக்கு வந்து..ஏண்டா வேலைக்கு மெட்ராஸ்  போய்ட்டா எங்களை எல்லாம் மறந்திடுவியா... லீவ்ல ஊருக்கு வந்தா கூட பாக்க முடியறது இல்ல..." ஜெயா அக்கா உற்சாகமாய் என்னை வரவேற்றாள்... ஆனால் எப்பவும் போல இல்லாம நறுக்குன்னு  அவகிட்ட ஏதோ கேக்க வந்திருந்த என்னாலதான் அதை இயல்பா ஏத்துக்க முடியல... பேருக்கு சிரிச்சு வெச்சேன்...

ஜெயா எனக்கு பெரியப்பா பொண்ணு... 8 வயசு பெரியவ .... அப்பாவோட சேர்த்து நாலு பசங்க ரெண்டு பொண்ணுங்கன்னு தஞ்சாவூர்ல எங்க தாத்தா குடும்பம் பெரிய குடும்பம்.... ஒரே தெருவுல அடுத்தடுத்த வீடு..... பெரிய அத்தை மட்டும் அடுத்த தெரு .... நாங்க எல்லாருமே ஒண்ணா வளர்ந்தவங்க தான் .... நான் +2 முடிச்சிட்டு காலேஜ் சேர்ந்ததுல இருந்து இப்போ வேலை பார்க்கறது வரைக்கும் சென்னையில... ஆரம்பத்துல ஊருக்கு வந்தா எல்லாரையுமே பார்த்திட்டு தான் திரும்புவேன்.... இப்போ ஒரு 3 வருஷமா  அதுவும் குறைஞ்சு போச்சு ....

ஜெயாக்கா முன்னைக்கு இப்போ கொஞ்சம் பூசின மாறி அழகா இருந்தா.... பின்ன கண்ணன் மாமாவோட வாழறவ வேற எப்படியும் இருக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்.... கண்ணன் மாமா ... சின்ன வயசுல இருந்தே அவரை பார்த்து பார்த்து பிரமிச்சு ஹீரோவா நினைச்சு வளர்ந்தவன் நான்... அப்படி ஒரு அழகான அமைதியான இனிமையான நிறைய விஷயம் தெரிஞ்ச பல திறமைகள் இருந்த ஒரு மனுஷன்... என்னோட பெரியம்மாவோட அண்ணன் பையன் ... அதாவது ஜெயாக்காவோட மாமா பையன்.... அடுத்த தெருவில் அத்தை வீட்டுக்கு பக்கத்து வீடு தான் அவங்க வீடு.... நான் அத்தை வீட்டுக்கு போனா அவங்க வீட்டை விட கண்ணன் மாமா வீட்ல தான் அதிகமா இருப்பேன்... அப்போ நான் ஏழாவது .. அவர் காலேஜ்ல பி.ஜி படிச்சிட்டு இருந்தார்... சூப்பரா பாடுவார்.... அதைவிட அருமையா புல்லாங்குழல் வாசிப்பார்.... அவர் வாசிக்க ஆரம்பிச்சா ஆன்னு கேட்டுகிட்டு இருப்பேன்... "என்னடா இப்படி பாக்கற" அப்படின்னு செல்லமா தலைல தட்டுவார்.... என்னவோ கோட்டையை பிடிச்சிட்ட மாறி எனக்கு தலைகால் புரியாது... ஏன்னா அவர் வாய திறந்து பேசறதே அதிசயம்...

ஜெயாக்காவை கேக்கவே வேண்டாம் ... அவரை பாத்தாலே வெக்கப்படுவா... அவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பண்ணி வெக்கணும்னு சின்ன வயசுல இருந்தே எல்லாரும் பேசிக்குவாங்க... ஆனா எனக்கு என்னவோ அது எப்பவுமே அவ்வளவா பிடிச்சது இல்ல.... கண்ணன் மாமாக்கு, எப்பவும் ஏதாவது வம்பு பேசிக்கிட்டு முணுக்குனா அழுதுட்டு சுமாரா படிச்சி டிகிரி வாங்கணுமேங்கறதுக்காக காலேஜ் போயிட்டு வர ஜெயாக்கா பொருத்தமே இல்லைன்னு எனக்கு தோணும்... வெளிய சொல்லவா முடியும்... எல்லாரும் டின் கட்டிருவாங்க... கண்ணன் மாமாவை மட்டும் ஒரு தடவை வாயை அடக்க முடியாம கேட்டுட்டேன் "மாமா உங்களுக்கு ஜெயாக்காவை கல்யாணம் பண்ணிக்க ஓகே வா..." ன்னு....கொஞ்ச நேரம் ஒண்ணுமே  பேசாம என்னை பார்த்தவர் "இப்போ எதுக்குடா அதை கேக்கற... எதுவும் நம்ம கைல இல்ல...போடா போய் படி..." அப்படின்னு அவர் சொன்னப்போ அந்த வயசுல எனக்கு புரிஞ்சது அவருக்கும் அதுல அவ்வளவா இஷ்டம் இல்லைன்னு...

இப்படி இருக்கும் போதுதான் நான் எட்டாவது படிக்கும் போது கண்ணன் மாமா வீட்டு பக்கத்து வீட்டுக்கு ஒரு வாத்தியார் குடி வந்தார்.... அவர் பையன் ரகு என்னோட கிளாஸ்ல சேர்ந்தான்... ஒரே நாள்ல பிரெண்ட் ஆயிட்டான்.... அடுத்த சனிக்கிழமை அவன் வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தான்... நான் வழக்கம் போல கண்ணன் மாமா வீட்டுக்கு போயிட்டு அப்படியே அவன் வீட்டுக்கும் போனேன்.... உள்ள ஊஞ்சல்ல ரொம்ப அழகா ஒருத்தங்க உட்காந்து பூ கட்டிட்டு இருந்தாங்க.... "டேய் இவங்க என் அக்கா அகிலா டா.... உங்க அக்கா ஜெயா வோட கிளாஸ் தான் காலேஜ்ல.." அப்படினான்.... என்னை பார்த்து அழகா சிரிச்ச சிரிப்பிலேயே எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சு... வீட்ல இருந்த நிறைய அழகு பொருட்கள் எல்லாத்தையும் காமிச்சு "இது எல்லாமே எங்கக்கா பண்ணதுதான்டா.... சூப்பரா பாடுவாங்க ... ஸ்கூல்ல படிக்கும் போது எல்லாம் எங்கக்கா தான் பிரேயர் " அப்படின்னு ரகு சொன்னான்... அது என்னவோ எனக்கு அகிலாக்காவை ரொம்ப பிடிச்சு இருந்தாலும் அவன் பீத்திக்கிட்டவுடனே நானும் உடனே என் பங்குக்கு "டேய்ய் எங்க கண்ணன் மாமாவும் சூப்பரா பாடுவார்... என்னமா புல்லாங்குழல் வாசிப்பார் தெரியுமா.... உங்க பக்கத்து வீடு தான் ... " அப்படினேன்... வாழ்க்கைல சில சமயம் பல பெரிய விஷயங்கள் நடக்க எப்படியோ நமக்கு தெரியாமலே நாம ஒரு காரணமாயிடுவோம்... அன்னைக்கு நான் ஏன் அப்படி சொன்னேன்னு இப்போ வரைக்கும் பல தடவை நினைச்சு இருக்கேன்...
அடுத்த நாள் கண்ணன் மாமா வீட்டுக்கு போனப்போ "மாமா அடுத்த வீட்ல இருக்கறது என் பிரெண்ட் தான்... அவங்க அக்கா அவ்வளவு அழகா இருக்காங்க... சூப்பரா பாடறாங்க தெரியுமா... அவ்வளவு கிராஃப்ட் ஒர்க் பண்ணி இருக்காங்க..." அப்படின்னு அவங்க புராணத்தையே பாடினேன்... "டேய் நிறுத்துடா அப்போ அங்க போய் பேச வேண்டியது தான... இங்க வந்து வந்ததுல இருந்து அவங்கள பத்தியே புராணம் பாடிட்டு இருக்க.." அப்படின்னு சிரிச்சிகிட்டே அவர் கிண்டல் பண்ணார்...

அதுல இருந்து எப்போ கண்ணன் மாமா வீட்டுக்கு போனாலும் தவறாம ரகு  வீட்டுக்கு போய்டுவேன்.... போறது மட்டும் இல்ல ... அங்க போய் கண்ணன் மாமா புராணம் பாடறதும் இங்க வந்து அகிலாக்கா பத்தி சிலாகிச்சு பேசறதும்னு இதையே பண்ணிட்டு இருந்தேன்... அந்த வயசுல இது எந்த மாறி விளைவுகள் உண்டு பண்ணும்னு எனக்கு அவ்வளவா புரியலை... கொஞ்ச நாள் கழிச்சு கண்ணன் மாமா "அது சரி இவ்வளவு பேசறியே ஒரு நாளாவது உன் பிரெண்ட் அவங்க அக்கா இவங்களை எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கியா..." அப்படின்னு சிரிச்சிகிட்டே கேட்டார்.... உடனே நான் "மொட்டை மாடிக்கு வாங்க மாமா.." ன்னு சொல்லிட்டு ரகுவை அகிலா அக்காவை மாடிக்கு கூட்டிட்டு வர சொன்னேன்....

அதுக்கு அப்பறம் என்ன நடந்து இருக்கும்னு நான் சொல்லவே வேணாம்... கண்ணன் மாமாவும் அகிலா அக்காவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சுட்டாங்க.... எனக்கும் ரகுவுக்கும் ரொம்ப சந்தோஷம்.... ஆனா ரகுவோட அப்பா பயங்கர கோபக்காரர்... "டேய் எங்கப்பாக்கு மட்டும் தெரிஞ்சுது அவ்வளவுதான்... என்ன ஆனாலும் இவங்க ரெண்டு பேருக்கும் தான்  கல்யாணம் நடக்கணும்னு எனக்காக வேண்டிக்கோடா.." அப்படின்னு அவன் சொல்வான்.... நான் உடனே "உனக்காக என்னடா எனக்காகவே வேண்டிக்கறேன்.." அப்படின்னு சொல்வேன்... ஆனா இந்த ஜெயாக்கா மட்டும் ஒரு நாள் என்னை கேட்டா "டேய்ய் என்னடா நீ எந்நேரமும் அங்கேயே குடி இருக்க ... என்ன நடக்குது " அப்படின்னு... நான் உடனே "என்னக்கா நடக்குது.... நான் ரகுவோட படிக்க போறேன் .." அப்படின்னு சமாளிச்சிட்டேன்...ஆனா உள்ளுக்குள்ள என்னவோ ஒரு சந்தோஷம்.. கண்ணன் மாமாக்கு அகிலாக்கா தான் பொருத்தம் அப்படின்னு மனசுக்குள்ள சொல்லி சிரிச்சிக்கிட்டேன்...

இப்படியே எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்தது... திடீர்னு ஒரு நாள் ஸ்கூல் முடிஞ்சு ரகு வீட்டுக்கு அவனோட போனேன்... அவங்க அம்மா என்னை பாத்ததும் முறைச்சிட்டு "டேய் ரகு உள்ள வாடா.." அப்படின்னு உள்ள போய்ட்டாங்க ... அகிலா அக்காவை அன்னைக்கு பாக்கவே முடில... மறுநாள் ரகு ஸ்கூல்க்கு வரலை... எனக்கு என்னவோ போல இருந்தது... ஸ்கூல் முடியறதுக்காகவே காத்திருந்து அவன் வீட்டுக்கு ஓடினேன்... அவன் வீட்டில் பெரிய பூட்டு தொங்கியது... அடுத்த ஒரு வாரத்தில் அவன் அப்பா அம்மா மட்டும் வந்து ஸ்கூலிலே அவன் டீஸீ வாங்கினாங்க... அடுத்த நாள் சனிக்கிழமை... நான் அவங்க என்ன திட்டினாலும் பரவால்ல  எப்படியாவது ரகு பத்தி கேட்டுடணும்னு அவன் வீடுக்கு போனா வீடே காலியா இருந்தது .... ரொம்ப ஷாக் ஆயிட்டேன்... வீட்டுக்கு பின்னாடி காலி பண்ணப்போ தேவை இல்லாததை போட்டு வெச்சுருந்தாங்க.... அந்த குப்பைல முறிச்சு போட்ட கண்ணன் மாமாவோட புல்லாங்குழல் இருந்தது ... அகிலா அக்காக்கு கொடுத்து இருந்தார் ....  எனக்கு என்னவோ புரிஞ்சது போல இருந்தது .... மனசு கேக்காம அதை எடுத்துட்டு கண்ணன் மாமாவை பாக்கலாம்ன்னு போனேன் .... அது வரைக்கும் கண்ணன் மாமாவை அப்படி நான் பாத்ததே இல்ல.. கண்ணெல்லாம் கலங்கி போய் பாக்கவே ரொம்ப பரிதாபமா இருந்தார் ... இதுல முறிச்சு போட்ட புல்லாங்குழலை கொடுத்து அவரை இன்னும் கஷ்டப்படுத்த மனசு வராம அதை எடுத்திட்டு வந்து பத்திரமா வெச்சுக்கிட்டேன்...

அதுக்கு அப்பறம் என்னவோ கண்ணன் மாமாவை பாக்கவே கஷ்டப்பட்டுக்கிட்டு  அவர் வீட்டுக்கு போறதையே  அவாய்டு பண்ணேன்... என்னவோ சொல்லத் தெரியாத ஒரு குற்ற உணர்வு.... +2 முடிச்சு வெளியூர்ல காலேஜ் சேர்ந்த உடனே சொல்லிக்கறதுக்காக அவர் வீட்டுக்கு  போயிருந்தேன்.... ரொம்ப இளைச்சு இருந்தார் .... "ஏண்டா என்னை  எல்லாம் மறந்துட்டியா.... " அப்படின்னு கேட்ட உடனே என்னவோ சொல்லி சமாளிச்சிட்டு வெளியூர் காலேஜ்ல சேர்ந்ததை சொன்னேன் .... "நல்லா படிடா.... " அப்படினார். அவர் ஒரு 5 6 வருஷமா  கல்யாணமே பண்ணிக்கலை... யாருக்கும் என்ன காரணம்னே புரியல.... ஜெயாக்கா மட்டும் கட்டினா இவரைத்தான் கட்டுவேன்னு பிடிவாதமா இருந்தா ... அப்பறம் சினிமால வர்ற மாதிரி கண்ணன் மாமாவோட அம்மாக்கு ஹார்ட் அட்டாக்  வந்து அதையே காரணமா காட்டி அப்பறம் ஜெயாக்காவை கட்டி வெச்சாங்க .... அந்த கல்யாணத்துக்கு மட்டும் நான் போகலை...
அதுக்கு அப்பறம் ஒரு தடவை அவங்களை பார்க்க போனேன் ... ஜெயாக்கா ரொம்ப சந்தோஷமா இருந்தா ..... கண்ணன் மாமா முன்ன விட ரொம்ப அமைதியா இருந்தார் ... அவரையே பார்த்தது புரிந்து தனியே இருந்தப்போ "என்னடா பண்றது... எதுதான் நம்ம கைல இருக்கு... மனசுல என்ன கஷ்டம் இருந்தாலும் கல்யாணம் ஆன அப்பறம் நம்மளை நம்பி  வந்தவங்களை கஷ்டப்படுத்த கூடாது ... ஜெயா என்ன பண்ணுவா என் விதி அப்படி இருந்தா ..." என்றார் .

இது எல்லாம் நடந்து 6 வருஷம் ஆய்டுச்சு .... போன மாசம் சைதாபேட்டைல இருந்து எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஏதோ வேலையா போய்ட்டு இருந்தப்போ பக்கத்தில வந்து உட்கார்ந்தவனை எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சிட்டே இருக்கேன் .... அவனும் அதே நிலைமையில தான் இருந்தான்... ரகு.... ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியலை..... "டேய் எப்படிடா இருக்க... ஏண்டா திடீர்ன்னு எங்க போயிட்டீங்க.... அக்கா எப்படி இருக்காங்க ..." நான் கேட்டதுக்கு "அப்பாக்கு அக்கா விஷயம் தெரிஞ்சு எங்க சொந்த ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டாருடா.... அக்கா எவ்வளவு கெஞ்சியும் டிகிரிய கூட முடிக்க விடல... எங்க தூரத்து சொந்தத்துலயே சுமாரா ஒரு மாப்பிள்ளையை பாத்து ஒரே மாசத்துல கல்யாணம் பண்ணி வெச்சிட்டாரு .... பாவம் டா என் அக்கா .... எப்படி எப்படியோ எல்லாம் இருக்க வேண்டியவ ஏதோ வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்கா ..." என்றான் ..
"கண்ணன் மாமாவும் அப்படிதான்டா ரொம்ப நாள் கல்யாணமே பண்ணிக்காம இருந்தார் .... ஆனா ஜெயாக்கா அவருக்காகவே காத்திருந்து எப்படியோ கல்யாணம் முடிஞ்சிருச்சு" ன்னு சொன்ன என்னை பார்த்து "பின்ன விட்ருவாங்களா .... அன்னைக்கு காலேஜ்ல இருந்து என் அக்காவோடவே எங்க வீட்டுக்கு வந்து எங்க அம்மாகிட்ட வத்தி வெச்சதே உங்க ஜெயாக்கா தானே " என்றதும் இடி விழுந்த மாதிரி இருந்தது ... ஏதோ சும்மா பொழுது போக வம்படிப்பாள் மற்றபடி மோசமானவளில்லை என்று நினைத்து இருந்த ஜெயா வா இப்படி ஒருவர் வாழ்க்கையை கெடுக்கும் அளவு போனாள் .... நினைக்கும் போதே மனம் கசந்தது..... இப்படிப்பட்டவளுக்கா கண்ணன் மாமா..... மனசு பொறுக்காமல் அவளை நறுக்கென்று நாலு வார்த்தை கேக்க தான் அவள் வீட்டுக்கு வந்து இருக்கேன் ....

"டேய்ய்ய் என்ன யோசனை.. சரி நல்ல நேரத்துல தான் வந்து இருக்க.. இன்னைக்கு எங்க கல்யாண நாள் .. நீதான் கல்யாணத்துக்கே வரலையே... சாயங்காலம் மாமா வந்ததும் எல்லாரும் கோவில் போய்ட்டு ஹோட்டல் போறோம் ... நீயும் மறக்காம 5 மணிக்கு இங்க வீட்டுக்கு வந்துடு.... சேர்ந்து போலாம் ..." ன்னு அவ சொன்ன உடனே சட்டென்று ஒன்று தோன்றியது.... அவளிடம் சாதாரணமா பேசிட்டு வீட்டிக்கு வந்தேன் .... அவ கல்யாண நாளுக்கான கிப்ட்டை பேக் பண்ணிட்டு சாயங்காலம் போனேன் ...

"ஹேய்ய்ய் இது என்னடா கிப்ட் எல்லாம் ..." என்று சொன்னாலும் ஆர்வமாக வாங்கிக்கொண்டாள்.... "அக்கா .. இது ஸ்பெஷல் கிப்ட் உனக்கு மட்டும் தான் ... தனியா இருக்கும் போது தான் பிரிக்கணும் .." என்று சொல்லிவிட்டு கிளம்பினேன் ...

"எதனாலன்னு இவ்வளவு நாள் புரியாம இருந்தது .... நீதான்னு இப்போதான் தெரிஞ்சுது.. கவலைப்படாத மாமா கிட்ட சொல்லமாட்டேன்.... சொன்னாலும் அவர் நல்ல மனசுக்கு உன்னை மன்னிச்சிடுவார்..... உன்னோட கல்யாண நாளுக்கு என்னோட கிப்ட் இதோ உன்னால முறிஞ்சு போன புல்லாங்குழல்... முறிஞ்சு போன குழல்ல என்னைக்குமே உன்னால இசையை கேக்க முடியாது ..." என்ற என் லெட்டரோடு அந்த புல்லாங்குழலை பார்க்கும் போது அவள் முகம் போகும் போக்கை  நினைத்துப் பார்த்தேன்.... இதுக்கு எல்லாம் அவள் அசருவாளான்னு தெரியல... இனி என்னைக்குமே என்னால் அவளை   மன்னிக்க முடியும்ன்னு தோணல... இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அவளை தண்டித்த ஒரு அமைதி என் மனதில் !!!

Thursday, August 18, 2016

ஊஞ்சல்...

இந்த ஊஞ்சலை பிடிக்காதவங்க யாராவது உண்டா .... அப்படி இருந்தா என்னை பொறுத்தவரை அவங்க தனி பிறவி .... சரி எவ்வளவு பேருக்கு ஊஞ்சல் பிடிக்குதுங்கறது இப்போ முக்கியம் இல்லை... நான் சொல்லப் போறது எனக்கு எவ்வளவு பிடிக்குங்கறதை பத்தி தான் ...

7 வயசானாலும் வீட்ல ஏதாவது குட்டி பாப்பா இருந்தா அது தூங்கற நேரம் போக மீதி இருக்கற நேரத்துல ப்ரீயா இருக்கும் அதோட தூளில ஹாய்யா ரெண்டு பக்கமும் காலை தொங்க போட்டுக்கிட்டு பின்னாடி தூளி புடவைக்குள்ள சாஞ்சிகிட்டு முன்னாடி அந்த புடவைய சேர்த்து பிடிச்சிட்டு ஊஞ்சல் மாறி இல்லைனாலும் ஏதோ சுமாரா ஒரு ஸ்விங்கிங் எபெக்ட்டோட (டீ குழந்தை தூளி அறுந்துட போகுது... அறுந்த வாலு ன்னு கோரஸா திட்டு வாங்கிட்டு தான் ) ஆடின அந்த நாட்கள்லயே என்னோட ஊஞ்சல் ஆசை ஆரம்பிச்சுடுச்சு.... அப்போ எல்லாம் வாடகை வீடு ...ஊஞ்சல் கொக்கியே இருக்காது அப்பறம் தான ஊஞ்சலை மாட்டி ஆடறது... தாத்தா பாட்டி வீட்டிக்கு ஊருக்கு போனா ஊஞ்சல் பலகை இருக்கும்.... ஆனா சமையலறையில இருக்கும்... அதுக்கு மேல அடுக்கு அண்டா அடுப்பு எல்லாம் இருக்கும் ....

அப்பறம் போர்த் படிக்கும் போது பாம்பே போனோம் .... அங்க இருந்த ஒரு தமிழ் பேசற மலையாளி கடைல அப்போலாம் மாசத்துக்கு ஒரு தடவை மட்டுமே வர்ற கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா
தமிழ் புக்ஸ் கிடைக்கும் ... ஒரு அண்ணா சைக்கிள்ல முன்னாடி ஹாண்டில் பார்ல ஒரு காக்கி பைய்ய மாட்டி அதுல புக்ஸ்  கொண்டு வந்து ஸ்டைலா  கிரௌண்ட் ப்ளோர் பால்கனி கிரில்ல சொருகிட்டு போவாரு (எங்க வீடு கிரௌண்ட் ப்ளோர் ).... அந்த மாசத்துக்கு  ஒரு தடவை வர்ற புக்ஸ்காக நான் தினமும் சாயங்காலம் அந்த பால்கனில காக்கி பை மாட்டின சைக்கிள் தரிசனத்துக்காக கடும் தவம் பண்ணுவேன்... முணு புக்கும் வந்த அப்பறமும் அடுத்த மாச புக் வந்துடுச்சான்னு அடுத்த மாசம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அந்த அண்ணாவை தினமும் நச்சரிப்பேன்.... பலநாள் என்னை பார்த்ததும் நைசா சைக்கிளை திருப்பிட்டு தப்பிச்சு ஓடிருவார்.... சரி டாபிக் ஊஞ்சல் தான இது என்ன வேற கதை சொல்றேன் let me get back to track.. அப்போ தினம் நிக்கறோமே போர் அடிக்குதேன்னு உத்திரத்தை பார்த்து யோசிச்சப்போ உள்ள தூங்கிட்டு இருந்த ஊஞ்சல் ஆசை மறுபடியும் வெளிய வந்தது ... நாம தான் ரூம் போட்டு யோசிக்கற ஐடியா மணியாச்சே .... உடனே எடுத்தேன் துணி காயப்போடற கயிறை ... ஹாலுக்கும் பால்கனிக்கும் நடுவே இருந்த ஜன்னல் கம்பிக்கும் பால்கனி க்ரில்லுக்கும் கட்டினேன் ஒரு ஊஞ்சல் ... சீட் ஒரு பிஞ்சு போன தலைகாணி (நல்ல தலைகாணி எடுத்துட்டு திட்டு வாங்கினதால தான் பிஞ்சது )... அங்க இருந்த 2 வருஷமும் இந்த பால்கனி ஊஞ்சல் தான்... வெயிட் தாங்கிச்சான்னு  கேக்காதீங்க அப்போ 11 வயசு தான் so தாங்கிச்சு... அதுல உக்காந்துக்கிட்டே இருக்கற  ரெண்டு முணு புக்ஸை (லீவ்னா பழய புஸ்தக கடைல வாங்கின டிங்கில் சம்பக் ) படிக்கறதுல அப்படி ஒரு பெருமை ஆனந்தம் ....

அப்பறம் ஊர் பக்கம் வந்துட்டோம் ... உத்தரத்திலயும் இல்ல பால்கனிலயும் ஆப்ஷன் இல்ல... அடுத்து ஒரு 2 வருஷம் கழிச்சு வேற ஊருக்கு ட்ரான்ஸ்பார் ஆச்சு... முன்னாடி போய் வீடு பார்த்துட்டு வந்த அப்பா "வீடு நல்லா இருக்கு.. வீட்டுக்கு பின்னாடி காம்பௌண்ட்க்கு உள்ளேயே  நிறைய இடம் இருக்கு... துணி துவைக்கற கல்லு , வேப்ப மரம் எல்லாம் இருக்கு... " அப்படினாரு பாருங்க ..... எனக்கு வேப்ப மரம் மட்டும் தான் மனசுக்குள்ள ச்சக்குன்னு நுழைஞ்சுது..... பின்ன பதினாறு வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி மரத்துல ஊஞ்சல் கட்டி "செந்தூரப்பூவே... செந்தூரப்பூவே.. " ன்னு பாட்டெல்லாம் பாட ஆரம்பிச்சுட்டேன்.. ராத்திரி 8 மணிக்கு அந்த வீட்டுக்குள்ள முதல் முதலா நுழைஞ்சதும் ரொம்ம்ப வேகமா பின்பக்க கதவை திறந்து பாத்தா செம்ம்ம்ம்ம பல்பு ... நட்டு வச்சு கொஞ்ச காலமே ஆன ஒரு 6 அடி பச்ச குழந்தை வேப்ப மரம் .... அதுல பேருக்கு ஒரு கிளை... அப்பவும் மனசு உடையாம நாம தான் குட்டியா இருக்கோமே ட்ரை பண்ணலாம்ன்னு ஒரு கயிறை கட்டி உட்கார்ந்தேனோ இல்லயோ அந்த கிளையே உடைஞ்சு பத்தாததற்கு மரமே  தயவு செஞ்சி என்ன விட்டுடுன்னு கால்ல விழுந்து வணங்கிடுச்சு... அவ்வளவு தான் அப்போதைக்கு ஊஞ்சல் ஆசையை கழட்டி அந்த வேப்ப மரத்துலயே மாட்டிட்டேன்.....
அதுக்கு அப்பறம் 3 வருஷம் கழிச்சு இன்னொரு ட்ரான்ஸ்பார்... அங்க எனக்கு கிடைச்ச க்ளோஸ் பிரெண்ட் வீட்டுக்கு முதல் முதலா போனப்போ அடா அடா அடா நல்ல பெரிய ஊஞ்சல் ... அதுல உட்கார்ந்து உலகளந்த  பெருமாள் மாறி தரையில ஒரு கால் விட்டத்தில் ஒரு கால்ன்னு அவ வீட்டோட ஹைட்ட  அளந்ததுல எங்கயோ வேப்ப மரத்துல மாட்டி இருந்த ஊஞ்சல் ஆசை திரும்ப  என் முதுகுல தொத்திக்கிச்சு .... அப்போ  இருந்த வீட்ல பால்கனி க்ரில் இல்ல ஆனா ஜாலி வொர்க்... சொ சேம் டெக்னிக் ஜன்னல் டு ஜாலி வொர்க் கயறு வித் பிஞ்சு போன தலைகாணி (இன்னுமா அந்த பிஞ்சு போனதை தூக்கி போடல ன்னு கேக்காதீங்க .... உள்ளயே அடக்கி வெச்சிருந்த  ஊஞ்சல் ஆசைக்காகவே அந்த தலைகாணியை  ப்ரீசர்வ் செஞ்சு வெச்சிருந்தேன்...)
இந்த தடவை ஒரே 1947 லவ்  ஸ்டோரி மனிஷா கொய்ராலா தான் ... அதுல ஆடிக்கிட்டே "குச் நா கஹோ குச் பீ நா கஹோ ..." அப்பறம் "பியார் ஹுவா சுப்புகே சே ..." இதெல்லாம் பாடி பாடி எங்கம்மாவை கலவரப்படுத்தினேன்...
இப்படியே 2 வருஷமா ஊஞ்சலாடிட்டு அப்பறம் காலேஜ் ஹாஸ்டல் போய்ட்டேன் ... அங்கேயும் வராண்டா ஜாலி வொர்க் தான் ஆனா ஊஞ்சல் கட்டினா வழிய அடைச்சிக்கும்.... பிரியா ஆட முடியாது யாராவது வந்துகிட்டே இருப்பாங்க வழி விடணும் அப்டிங்கறதால ஊஞ்சலுக்கு no for 4 long years....

அப்பறம் வீடு வாங்கும்போது  பில்டர்கிட்ட சொல்லி ஸ்பெஷலா பெரிய ஊஞ்சல் கொக்கி போட்டு பரம்பரை ஊஞ்சலை (அதான் தாத்தா வீட்ல அடுப்பு அண்டா இருந்ததே  அதேதான்) என் கையால (அப்பாவும் சேர்ந்து தான் அவருக்கும் ஊஞ்சல் ஆசை இருந்து இருக்கும் போல ) வார்னிஷ் அடிச்சு மாட்டினா அது ஸ்லைடிங் ஊஞ்சலாருக்கு... பின்ன ரெண்டு கொக்கியும் வேற வேற ஹைட்ல இருந்தா .... ஸ்டில் அதிலயும் சறுக்கிக்கிட்டே ஒரு 3 மாசம் தான் ஆடி இருப்பேன் அதுக்குள்ள கல்யாணம் ஆய்டுச்சு ....

கல்யாணத்துக்கு  முன்னாடியே வீட்ல ஊஞ்சல் ஹுக் இருக்கானு கேட்டேனே... ஓ இருக்கேன்னு சொன்னாரே... வந்து பாத்தா ரெண்டு fan ஹுக் தான் இருக்கு... இதுவா அதுன்னு கேட்டா ஆமா பாஸ்கட் ஊஞ்சல் மாட்டலாமே அப்படிங்கறார் .... சரி அதையாவது  வாங்கலாம்னு யோசிக்கறத்துக்குள்ள ஆஃபிஸ் ட்ராவல குறைக்க கொஞ்ச வருஷம் வாடகை வீட்டுக்கு போய்ட்டோம் ... அந்த வீட்ல என் பொண்ணுக்கு 3 வயசானப்போ அவ கேட்டான்னு இந்த பாஸ்கட் ஊஞ்சலை வாங்கினோம்... வாங்கி முதல் நாள் அதை மாட்டி  உட்கார்ந்தார் இவர் ... தமால்ன்னு ஒரு சத்தம் .... ஊஞ்சல் மாட்டி இருந்த ஹுக்கே விட்டத்துல இருந்து கழண்டு வந்திடுச்சு... அது சீலிங் போட்டப்பறம் போட்ட ஹூக்காம்.. அப்பறம் வேற ஹுக்ல மாட்டினாலும் என் வெயிட்க்கு பயந்தே அதுல உட்கார பயம் ... உட்காரவே பயம்னா எங்க ஆடறது ....

இப்போ திரும்ப எங்க வீட்டுக்கு வந்து அந்த ஊஞ்சலை இவர் முன்னாடி சொன்ன ஸ்ட்ராங் ஹுக்ல மாட்டியாச்சு... பக்கத்துலயே அப்போ மாறி ஒரு மாசம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாம வாங்கற நிறைய புக்ஸ் மேகசின்ஸ் .... ஆனா அது என்னவோ உள்ள இருந்த செந்தூரப்பூவே ஸ்ரீதேவியும் குச் நா கஹோ மனிஷா கொய்ராலாவையும் மட்டும் தேடி தேடி பாக்கறேன்.... ம்ஹும்ம்ம் அவங்கள மட்டும் காணவே காணோம் !!!!!

Tuesday, August 16, 2016

வர மறுத்த மனசு ...

துணி ஹாங்கர் கர்சீப் பெட் ஸ்ப்ரெட்
பேஸ்ட் ஹேர் ஆயில் ஷாம்பு சோப்
பிரஷ் சீப்பு ஹேர் கிளிப்ஸ் செப்டீ பின்
மொபைல் சார்ஜர் லேப்டாப் பென்ட்ரைவ்
சர்டிபிகேட்ஸ் முக்கியமான பேப்பர்ஸ் டிக்கட்ஸ்
பர்ஸ் டைரி அவசரத்துக்கு மருந்து மாத்திரை
சாம்பார் பொடி ரச பொடி பருப்பு பொடி
எக்ஸெட்ரா எக்ஸெட்ரா
பேக்கிங்கை எல்லாம் எடுத்து ஒன்றாக வைத்து
மனதிற்குள் செக் செய்து கொண்டே இருக்கிறேன்
ஏதோ ஓன்று குறைந்தது போலவே
எத்தனை யோசித்தும் என்னவென்று தெரியவில்லை
மறக்காம எல்லாத்தையும் எடுத்துகிட்டியா
கண்ணீரை மறைத்து அம்மா கேட்கும் வரை !!!

Friday, August 12, 2016

மறக்க முடியாதவை

என்னோட ஸ்கூல்ல மணின்னு ஒரு பையன் படிச்சான்.... ரொம்ப சாந்தமான, ஒரளவு நல்லா படிக்கற, நாலு வருஷம் ஒரே ஸ்கூல் யுனிபார்மை கிழியாம போட்டுக்கிட்டு, மத்தவங்க கொண்டு வர்ற டிசைன் டிசைனான பேகுகளை கண்ணில ஏக்கத்தோடு பார்த்துட்டே தோளில் ஜோல்னா பையோட வரும் ஒரு குருக்களோட பையன் ... எப்பவும் அவன் வீட்டிலிருந்து 25 நிமிஷம் நடந்தே ஸ்கூலுக்கு வர்றவன் எப்போவாவது அவன் அப்பா எதாவது வைதீக விஷயங்களுக்காக ஸ்கூல் இருக்கும் ஏரியா பக்கம் வந்தார்னா அவர் கூட சைக்கிள் ரிக்ஷால வந்து இறங்குவான்..... அப்போல்லாம் ஸ்கூலுக்கு நிறைய பேர் ஆட்டோல வருவாங்க... அவங்களை எல்லாம் பாத்து மணிக்கும் ஒரு நாளாவது ஆட்டோல ஸ்கூலுக்கு வரணும்னு அவ்வளவு ஆசை .... "எங்க அப்பா எப்பவும் ரிக்ஷால  தான் வருவார் .... ஆட்டோன்னு கேட்டா சார்ஜ் அதிகம் அதுவும் இல்லாம ரிக்ஷாகாராளாம் பாவம் டா ... சவாரியை நம்பித்தானே அவா இருக்கா ... நாம அதுல போலைனா பாவம் தானே அப்படீன்னு சொல்லுவாருடா " என்பான்... ஆமாம் அவன் அப்பாவை பாத்தாலே யாருக்கும் ரொம்ப பிடித்து விடும் ... எப்பவும் சிரிச்ச முகம் ... அந்த ரிக்ஷா ஓட்டுபவரை கூட அவ்வளவு மரியாதையாய் நடத்துவார்... ஒரு நாள் மணி ஸ்கூலுக்கு வரலை... அசெம்பிளில ஒரு அனௌன்ஸ்மாண்ட் "நம்ம ஸ்கூல்ல செவன்த் c ல படிக்கும் மணியின் தந்தை நேற்று இரவு இறந்து விட்டார் ... அவருக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்" அப்படின்னு ... பயங்கரமா ஷாக் ஆயிட்டோம்.. அவரை அதற்கு முன்னாடி நாள் தான் பார்த்தோம்.. அதிசயமா ஆட்டோல வந்து மணியை இறக்கிவிட்டார்... அப்ப கூட நல்லாதான்  இருந்தார்.. நாங்க எல்லாம் கூட ரொம்ப சந்தோஷமா இருந்த மணியை கேட்டோம் "என்னடா ஆட்டோல ஸ்கூலுக்கு வரணும்ங்கற உன் நீண்ட நாள் ஆசை நிறைவேறிடுச்சா" ன்னு .... "ஆமாடா என்னவோ இன்னைக்கு அப்பா ரொம்ப நாளா கேட்டுண்டே இருக்கியேடா வா ஆட்டோல ஸ்கூல்ல விடறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்தார் டா..." எனறான்... எங்க கிளாஸ்ல எல்லாரும் மணி வீட்டுக்கு போனோம்... அவன் அம்மா , அக்கா, தம்பி இவங்களை எல்லாம் கண்கொண்டு பார்க்கவே முடியல.. "என்னடா எப்படிடா ஆச்சு" ன்னு பசங்க கேட்டாங்க... "நேத்து காலைல என்னை ஸ்கூல்ல இறக்கி விட்டப்போ ஆட்டோ கம்பில தலையை சைடுல நல்லா இடிச்சுக்கிட்டார்.. அப்பறம் ஒண்ணும் வலி இல்லைன்னு டாக்டர் கிட்ட எல்லாம் போல ... நைட் திடீர்ன்னு காதுல பிளட் வந்தது....  ஒரு மாறி தலை எல்லாம் சுத்துதுன்னு  சொல்லிட்டே கீழ விழுந்து இறந்துட்டாருடா " ன்னு கதறி கொண்டு சொன்ன அவனை பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது ... அதற்கு அப்பறம் ஆட்டோவில் போவது அவனுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் விஷயமாக இருந்து இருக்குமா என்று இன்று வரைக்கும் என் மனசுல ஒரு கேள்வி இருக்கு !!!

Tuesday, August 9, 2016

Bag போய் ball வந்தது டும்டும்டும்டும் !!!

5 வருஷத்துக்கு முன்ன நான் வொர்க் பண்ணிட்டு இருந்தப்போ ஒரு நியூ இயருக்கு ஆஃபீசில எல்லாருக்கும் பீன் பேக் தந்தாங்க.. . அந்த பேக் வந்த கொஞ்ச நாள் நாங்க சாமான் செட்டோட குடும்ப சமேதரா அது மேலயே குடித்தனம் பண்ணதுல பாவம் அதுவும் எவ்வளவு தான் குடும்ப பாரத்தை தாங்கும்...
ஒரு நாள் தூசு தட்டறேன்னு அது மேல ஒரு துணிய வச்சு தட்டினேனோ இல்லையோ உடனே ஏதோ ஒரு இடத்தில் விரிசல் விட்டு டப்பென்று ஒரு கொத்து தெர்மோகோல் பீன்ஸ் தெறித்து , வீடெல்லாம் பறந்து , என் 2 வயசு பொண்ணு (அப்போ) மெய்மறந்து , அவ மூக்குக்குள்ள ஒரு பீன் மாட்டி, பதட்டத்துல நான் தும்ம சொன்னது புரியாம அவ மாத்தி புரிஞ்சுட்டு பிராணாயாமம் மாறி அதை உள்ள்ள்ள இழுத்து , டாக்டர்கிட்ட ஒடி, அவர் கொறடு மாறி ஒண்ண வச்சு மூக்குல நொண்டி எடுத்து அப்ப்ப்பப்ப்பா... அதுக்கப்பறம்  உடனே அதை எடுத்துட்டு ஒரு டெய்லர் கிட்ட போனா அவர் பீன் எல்லாம் காலி பண்ணித் தாங்கமா ங்கறார் ... மறுபடியுமா அய்யயோ ன்னு எப்படியோ அவரை சமாதானப்படுத்தி அப்படியே தெச்சு தாங்க ன்னா  அவர் முறைச்சுகிட்டே தையல் போட ட்ரை பண்ணார்... தையல் எல்லாம் நல்லாதான் போட்டார் ஆனா போட்டுட்டு பாத்தா இந்திரலோகம் செட் போட்ட மாறி அவர் கடையெல்லாம் தெர்மாகோல் பீன்ஸ் மயம் .... அந்த பீன்ஸ் புகை மண்டலத்துல டக்குன்னு காச அவர் கைல திணிச்சிட்டு அவர் வாயில இருந்த பீன்ஸ் அ க்ளியர் பண்ணிட்டு அர்ச்சனை பண்றதுக்கு முன்னால அப்படியே விட்டேன் ஜுட் ... அதுக்கு அப்பறம் அந்த பீன் பேக் only for kids ... பெரியவங்க எல்லாம்  (வேற யாரு நானும் என் பிராணநாதரும் தான் ) ஸ்ட்ரிக்ட்லி நோ .... ஆனா ஓட்டைன்னு ஒண்ண ஒரு தடவை பாத்த குழந்தையும் எதையும் நோண்டும் அதன் கையும் சும்மா இருக்குமா... அந்த தையல் போட்ட இடத்தை கையாலயும் இன்னும் பல இடங்களை பேனா பென்சில் ன்னு எல்லா ஆயுதங்களையும் பிரயோகம் பண்ணி எல்லா பீன்ஸ் உம் தவணை முறையில வெளியேறி கன்னா பின்னான்னு டயட் இருந்த டீனேஜ் பொண்ணு மாறி zero சைஸ் ஆனது பீன் பேக் ...
ரொம்ம்ப நல்லதா போச்சுன்னு அதை ஒரு பெரிய, நான் கட்டாமலேயே பழசான புது புடவையில் மூட்டை கட்டி பரண் மேல போட்டேன் (அதுக்குள்ள வேலைய ரிசைன் பண்ணிட்டதால அந்த bean bag ஏதோ பெரிரிரிய on job award ரேஞ்சுக்கு ஒரு feeling ..so தூக்கி போட மனசு வரலை )... ஒரு ஒரு மாசம் கழிச்சு வெளிய போன அப்பாவும் பொண்ணும் திரும்பி வரும்போது கைல  ஒரு பெரிய மூட்டை .... கேட்டா பீன் பேகுக்கு ரீபில் பண்ண தெர்மகோல் பீன்ஸ் ஆம் .... அட கடவுளே இவங்க ரெண்டு பேரும் பண்ற அக்கப்போர்  தாங்க முடிலயேன்னு நொந்துக்கிட்டே சரி அட்லீஸ்ட் இந்த தடவை உஷாரா  fill பண்றதுக்கு முன்னாடி தெச்சிடணும்னு அதே டெய்லர் கிட்ட போய் காளி மாறி  முறைச்ச அவருகிட்ட காலி பேகை காட்டி சாந்தப்படுத்தி தெச்சு ரீபில் பண்ணி யூஸ் பண்ண ஆரம்பிச்சோம்... பட் ஆல்ரெடி  வீக் பாடியா இருந்த அது ரொம்ப நாள் தாக்கு பிடிக்கலை.... அப்போதான் வசமா மாட்டினேன்.... full capacity பீன்ஸ் ஒட இருந்த அதை வீட்ல பரண் மேலயும் போட முடில (நாம தான் வீட்ல பரணை மட்டும் எப்பவும் முழுசா ரொப்பி இருப்போமே இதுல பீன் பேகுக்கு எல்லாம் ஏது இடம்)... அதுல உட்காரவும் முடில (இந்திரலோகம் எபெக்ட் ).... எப்பவும் விஜிலென்ஸ் மோட்ல வீட்ல வேற யாரும் மெய்மறந்து அதுல உட்காராம பாத்துக்கற டூட்டி வேற ..... ஊர்ல எல்லா வீட்லயும் பீன் பேக்ல உக்காருவாங்க ... எங்க வீட்ல தான் இருக்கற சோபா சேர் டேபிள் இப்படி எல்லாத்து மேலயும் பீன் பேக் சிம்மாசனம் போட்டுட்டு உக்காந்து இருக்கும் (எவ்வளவு அவாய்ட் பண்ணியும் சில சமயம் அந்த எக்சர்சைஸ் பண்ற சைக்கிள் மேலயும் தான் )... ஒரு 2 வருஷம் பாத்தேன் ... ஒரு ரெண்டு வாரம் முன்னாடி தான் சென்டிமென்ட்ஸ் எல்லாம் மூட்டை கட்டி அந்த பீன் பேகை டிஸ்போஸ் பண்ண போய் அதை ஆர்வமாய் பாத்த அபார்ட்மெண்ட் செக்யூரிட்டிக்கு அதை பத்தின்ன முழு கதையும் இன்ன பிற முன்னெச்சரிக்கை report, disclaimer எல்லாம் கொடுத்து அப்பவும் அவன் இன்டரஸ்ட்டட் ன்னு கன்பார்ம் பண்ணிக்கிட்டு  அவனுக்கு கொடுத்தேன் (no return accepted ன்னு condition வேற )... சரி புதுசா  பீன் பேக் வாங்கலாமான்னு கேட்டவரை தயவு செஞ்சு அது மட்டும் வேணாம்னேன்.. அப்பறம் என்னவோ ஹாலே பிரீயான மாறி ஒரு நல்ல பீலிங்...

பொறுக்காதே.... இப்போ நேத்து ராத்திரி என்னருமை கணவர் "இன்னும் ரெண்டு நாள்ல ஒரு பெரிய பார்சல் வரும்.... என்னடான்னு முழிச்சிட்டு வாங்காம விட்டுடாத... நான் தான் ஆர்டர் பண்ணி இருக்கேன்" அப்படினார்... அப்படி என்ன ஆர்டர் பண்ணார் ன்னு கேட்டா இதோ இங்க போட்டோ போட்டு இருக்கேனே அந்த மெகா சைஸ் எக்சர்சைஸ் பாலாம்... அட தேவுடா இதுக்கு எந்த டெய்லரை பாக்கறது அப்படின்னு நொந்துக்கிட்ட என் மைண்ட்   வாய்ஸ் கேட்டு இருக்கும் போல ... "கவலைப்படாத இது air அடிக்கறது தான் ... so சுருட்டி பரண்ல வெக்க முடியும் " ன்னு நமட்டு சிரிப்போட சொல்றார் !!!

Monday, August 8, 2016

அது என்ன மாயமோ
ஞாபக ஊற்றுக்கு மட்டும்
எப்போதும் வறட்சி ஏற்படுவதில்லை
ஆனால் வெள்ளம் மட்டும் தவறாமல் !!!

Tuesday, August 2, 2016

என்னுயிர் தோழி ....

நானும் மதுவும் ஸ்கூல் போன காலத்திலிருந்தே பிரெண்ட்ஸ்... ஸ்கூல் முடித்து காலேஜில் பி.எட் படித்ததும் ஒன்றாகத்தான்.... நான் வாயை திறக்கவே யோசித்தால் அவள் வாயை மூடவே யோசிப்பாள்.... நான் ஹம்ம்ம் என்றாலே பயந்து அழுதால் அவள் இடியே விழுந்தாலும் சிரித்து கொண்டிருப்பாள்.... ஒரளவு வசதி உள்ள குடும்பம் என்னுடையது... ஒரு ஏழை குமாஸ்த்தாவின் மூன்றாவது  பெண்  மது.... நான் பயங்கர சென்டிமென்ட் .... ஒரு நாள் பச்சை கலர் ட்ரெஸ்ஸில் போய் அன்று கிளாஸ் டெஸ்டில் நல்ல மார்க் வாங்கி விட்டு அன்றில் இருந்து காலேஜ் முடிக்கும் வரைக்கும் எந்த டெஸ்ட் எக்ஸாமாக இருந்தாலும் தவறாமல் பச்சை கலர் ட்ரஸில் போனவள்... இதற்காகவே ஆல் ஷேட்ஸ் ஒப் கிரீனில் ட்ரஸ் வாங்கி வைத்திருப்பேன்.. பத்தாவது படிக்கும் போது அப்பா ஒரு ஹீரோ pen வாங்கித்  தந்தார்... அதில எழுதி நல்ல மார்க் வந்ததால அதுக்கு அப்பறம் வந்த எல்லா எக்ஸாம் அப்ளிகேஷன் எல்லாத்துக்கும் அந்த ஹீரோ pen தான் .... இவ்வளவு ஏன் ஒத்தை பின்னலில் போன ஒரு சின்ன காம்படீஷனில் கான்ஸோலேஷன் ப்ரைஸ் வாங்கியதால் அதுக்கு அப்பறம் எப்பவும் ஒத்தை பின்னல்... "என்னடி இது இப்படி இருக்க... இவ்வளவு எல்லாம் சென்டிமென்ட்ஸ் பாத்தா அப்பறம் ரொம்ப கஷ்டம்டி.... இப்ப நான் கூட இருக்கும் போது ஏதாவது அதிர்ஷ்டம் வந்தா அப்பறம் என்னை கட்டிகிட்டே சுத்துவியா ..." ன்னு கிண்டலா கேப்பா மது.... காலேஜ் முடிச்சதும் வேலை தேடி ஒன்றாக சுத்தினோம் ...  மது அளவிற்கு எனக்கு வேலைக்கு போகும் அவசியம் இல்லை தான் ... இருந்தாலும் வேலைக்கு போணும்ன்னு ஒரு ஆசை .... இருக்கும் எல்லா classified காலமையும் அலசி அப்ளிக்கேஷன் போடுவோம்...  ஒரு வருஷம் தேடி எனக்கு ஒரு பிரைவேட் ஸ்கூலில் வேலை கிடைத்தது.... அதில் சேர்ந்த பிறகு மதுவை பார்ப்பது கொஞ்சம் குறைந்தது.... அவளும்  அவள் அம்மாவிற்கு உடம்பு முடியாமல் போனதால் அதிலேயே கவனம் போய் விட்டது.... நடுவே பார்க்கும் போதெல்லாம் "எனக்கு ஒரு வேலை கிடைச்சா ரொம்ப உதவியா இருக்கும் ... ஏதாவது vacancy தெரிய வந்தா கட்டாயம் சொல்லுடி.... அம்மாவை விட்டுட்டு வேலைக்கு எப்படி போவேன்னு நினைச்சு சொல்லாம விட்டுடாத.... அது எல்லாம் மேனேஜ் பண்ணிக்கலாம்.... பட் ஒரு வருமானம் வந்தா நல்லது ..." அப்படின்னு சொல்லுவாள்.... அன்னிக்கு எங்க காலேஜ் HODய கடைவீதில பாத்தேன்... என்னை பாத்த உடனே வேகமா வந்தாங்க .... "நானே மதுவையோ உன்னையோ காண்டாக்ட் பண்ணணும்னு இருந்தேன்மா... நல்லா இருக்கியா..." என்றார்...  நான் நல்லா இருக்கேன்னு சொன்னதும் அது ஒண்ணும் இல்லமா பக்கத்து ஊர் government high ஸ்கூல் பிரின்சிபால் என்னோட மாமா தான் ... அந்த ஸ்கூல்ல   ஒரு லீவ் வேகன்ஸீ வருது... என் மாமா "ஏம்மா உன்னோட ஸ்டுடண்ட்ஸ் யாராவது இருக்காங்களா.... அட்வெர்டைஸ்மண்ட் கொடுக்கணும்... பட் அதுக்கு முன்னாடி தெரிஞ்ச நல்லா டீச் பண்ணக்கூடிய டீச்சர் இருந்தா அவங்களையே அப்பாய்ண்ட் பண்ணலாம்... லீவ் வெகன்ஸீ னாலும் உள்ள வந்துட்டா நல்ல டீச்சர்ன்னா பர்மனண்ட் பண்ணிடலாம் அது ப்ராபளம் இல்ல... ஏன்னா இப்போ லீவில போகப்போற டீச்சர் அவ்வளவு சரி இல்ல ..." அப்படின்னு சொல்லிட்டு இருந்தார் ..... நான் மதுவையோ உன்னையோ தான் நினைச்சேன்..... மதுவை கேட்டுட்டு அவளால முடிலனா உன்னை கேட்கலாம்னு நினைச்சேன் ... நீங்க ரெண்டு பேரும் எங்கயாவது வேலைக்கு போறீங்களா என்றார் ... goverment வேலை என்றதும் ஒரு செகண்ட் யோசித்து நான் வேலைக்கு போவதை சொல்ல வேண்டாம்ன்னு முடிவு எடுத்தேன்... "மேம் மதுவோட அம்மாக்கு  ரொம்ப உடம்பு சரி இல்ல... அதனால அவளுக்கு வேலைக்கு போற ஐடியாவே இல்ல... நான் வேணா அப்ளை பண்ணவா " என்று கேட்டேன் .... "ஒ யெஸ் தாராளமா... நீ ஒரு அப்ளிகேஷனை எழுதி என்கிட்டே கொடு.. நான் பாத்துக்கறேன்..." என்றார் ... அப்ளிகேஷனை கொடுத்து ஒரு மாசம் கழித்து ஆர்டர் வந்தது ... இதற்கு நடுவில் ஒரு தடவை மதுவை ரோடில் பார்த்து ஆர்வமாக பேச வந்த அவளை ஏதோ அவசர வேலையாக போவது போல காட்டிக்கொண்டு நைசாக அவொய்ட் செய்து நழுவி  வந்து விட்டேன் ...  மறுநாள் வேலையில் சேர்வதற்காக பாக்கிங் செய்து கொண்டிருந்த போது மது வந்திருப்பதாக அம்மா சொன்னாள் .... ஒரு நிமிடம் தடுமாறி பின்ன போய் "வாடி என்ன அதிசயம்... இவ்வளவு நாளா ஆளையே காணோம்" என்றேன் .... ஒரு செகண்ட் என்னையே பார்த்தவள் "ஹேய்ய் நேத்து நம்ம HODய எதேச்சையா பாத்தேன் ... அவங்க தான் நீ நாளைக்கு வேலைக்கு சேர போற விஷயத்தையே சொன்னாங்க .... ஏண்டி என்கிட்ட எல்லாம் சொல்ல மாட்டியா.... சொன்னா நான் சந்தோஷ பட மாட்டேனா... " என்றாள் .... ஒரு நிமிடம் பக் என்று இருந்தது என் குட்டு HODயிடம் வெளிப்பட்டு விட்டதோ என்று .... அப்போது கூட மதுவிற்கு  செய்த துரோகம் உறுத்தவில்லை... HOD க்கு தெரிந்து இந்த வேலை போய் விடுமோ என்ற பயம் தான்..... "என்னடி இப்படி முழிக்கிற... உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு தெரியுமா " என்று சொன்ன அவளை புரியாமல் பார்த்தேன் ... "ஞாபகம் இருக்கா நம்ம காலேஜ் பைனல் எக்ஸாம் முடிஞ்ச அன்னைக்கு உன்னோட ராசியான ஹீரோ பேனாவை  காணலைன்னு பிழிய பிழிய எழுதியே.... போன மாசம் ஒரு நாள் நான் என்னோட பழைய திங்க்ஸை கிளீன் பண்ணிட்டு இருந்தப்போ என்னோட பேக்ல அந்த பேனா இருந்தது .... உன்னோட பேக்ல போடறதுக்கு பதிலா என் பேக்ல போட்டுருக்க... நானும் காலேஜ் முடிஞ்சதும் அந்த பையை யூஸ் பண்ணாம என்னோட ஷெல்ப்பில வெச்சிருந்து இருக்கேன் ... அந்த பேனா கிடைச்சதும் அதை உன் கைல கொடுத்தா நீ எவ்வளவு சந்தோஷ படுவேன்னு நினைச்சேன் ... உனக்கு அடுத்த மாசம் பர்த்டே வருதே அப்போ அதை கொடுத்து சந்தோஷப் படுத்தலாம்னு நினைச்சிட்டு இருந்தேன் ... ஆனா அதுக்குள்ள நீ வேலையில சேர போறன்னு தெரிஞ்ச உடனே இப்போவே உனக்கு பிளசன்ட் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு தான் வந்தேன் ... இந்தா உன்னோட ராசியான பேனாவில் கையெழுத்து போட்டு வேலையில் சேரு ... அங்க போய் என்னை மறந்துராத ... கண்டிப்பா போன் பண்ணு ..." என்றாள் .. நான் உள்ளே சுக்கு நூறாய் நொறுங்கி கண்ணில் நீர் வழிய நிற்பதை கண்டு "ஹேய்ய் அசடு.... நீ என் பிரெண்ட் டீ ... சந்தோஷமா போய் ஜாயின் பண்ணு.. " என்று என்னை கட்டி அணைத்து விட்டு கிளம்பினாள்..  அவள் போய் எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேனோ  "என்னடி இன்னும் பேக்கிங்கை முடிக்காம அப்படியே உட்கார்ந்து இருக்க... காலைல சீக்கிரம் கிளம்பணும் ... சட்புட்ன்னு முடிச்சிட்டு சாப்பிட வா... " என்ற அம்மாவின் குரல் என்னை உலுக்கியது....
சட்டென்று எழுந்து ஒரு பேப்பரை எடுத்து என்னுடைய ராசியான ஹீரோ பேனாவினால்  வேகமாக எழுத ஆரம்பித்தேன் "டியர் மேம் ஒரு நல்ல டீச்சர் என்ற தகுதியை நான் இழந்து விட்டதால் இந்த  வேலையில் என்னால் சேர முடியாது... என்னை மன்னித்து விடுங்கள்.... முடிந்தால் இந்த வேலையை மதுக்கு வாங்கித்தாங்க..."  !

Thursday, July 28, 2016

Elliptical trainerம் நானும் ...

இந்த orbitrek Elliptical trainer அப்படின்னு டெலி ஷாப்பிங் ல வருமே அந்த மாறி trainer தான் பட் இது bsa make .... கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்துனால ரெண்டு முணு சர்ஜரின்னு மானாவாரியா பன்ச்சர் ஒட்டி டிங்கரிங் பண்ணதுல திடீர்ன்னு பாத்தா டபிள் த சைஸ் ஆ மாறி இருந்தேன் .... அப்போ தான் இந்த  elliptical trainer பத்தி பார்த்தேன் ... உடனே என்னருமை கணவர் என்னையும் தக்கை மாறி இருந்த அந்த பைபர் பாடி சைக்கிளையும் பாத்துட்டு (அது என் வெயிட்டை தாங்காதுன்னு நினைச்சாரோ என்னவோ யாம் அறியோம் பராபரமே ) "இந்த டெலி ஷாப்பிங் ப்ரொடக்ட் எல்லாம் வேண்டாம் ... நம்ம bsa hercules லேயே இப்போ elliptical cycle வந்து இருக்கு.. இங்கேயே பாக்டரி இருக்கறதால எதாவது சர்வீஸ் இல்லை  பார்ட்ஸ் மாத்தணும்னா (?? லைட்டா டௌட்டா இருந்தது தெளிவாயிடுச்சு ) உடனே வந்து சர்வீஸ் பண்ணிடுவாங்க ... so அதை வாங்கி தரேன் " அப்படின்னு உடனே வாங்கித் தந்துட்டார்... அவ்ளோதான் போட்டேன் ஒரு சார்ட் ... ஒரே டயட்டிங்... பின்ன 15 மினிட்ஸ் before food 15 மினிட்ஸ் after food ன்னு முணு வேளை மாத்திரை மாறி cycling ..... ஒரு வேளை பண்றதுக்குள்ளயே முழி பிதுங்கிடுச்சு.... ஆனாலும் வாய் சவடால் விட்டு வாங்கிட்டோமேன்னு கஷ்டப்பட்டு ஒரு ஒரு மாசம் ஓட்டினேன் .... அப்பறம் நியூரோலஜிஸ்ட் விசிட் இருந்தது .... ஆபத்பாந்தவன் மாறி டாக்டர் "exercise பண்ணலாம்மா பட் கஷ்டமா இருந்தா இந்த back strain பண்றது மட்டும் கொஞ்ச நாளைக்கு வேண்டாம் " அப்படினாரு பாருங்க இது தான் சாக்குன்னு கொஞ்ச நாள்ன்னு அவர் சொன்னதை கொஞ்ச வருஷமா சின்சியரா பாலோ பண்ணிட்டேன்.. ஆனாலும் அந்த cycle மேல டவல் துப்பட்டா இது எல்லாமே போடாம தான் மெயின்டென் பண்ணேன் ....
அப்பறம் இந்த "36 வயதினிலே " படம் வந்தாலும் வந்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிரிரிரிய மாற்றம் வந்தது ... அதுல அதுவரைக்கும்  இல்லாத அளவு ஸ்லிம்மான ஜோவை பார்த்து அசந்து இம்ப்ரெஸ்சாகி நானும் வெயிட்டை குறைச்சிட்டு தான் மறுவேலைன்னு முடிவு எடுத்து bsa வ தூசி தட்டினேன் .... ஒரு ரெண்டு நாள் நல்லா தான் இருந்தது .... அப்பறம் என்னவோ செக்கு இழுக்கற மாடு மாறி அந்த ஹாண்டில பிடிச்சு இழுத்து  பெடலை மிதி மிதின்னு மிதிச்சாலும் ரொம்ம்ம்ப மெதுவா தான் ஓடுது... உடனே extra effort போட்டு மிதிச்சதுல ஒரு மாசத்துல சுத்தமா இடுப்பை அசைக்க முடியாத அளவு back pain .... அப்பவும் இது எல்லாம் எக்சர்சைஸ் பண்ணும் போது சகஜமப்பான்னு விடாம இன்னும் 2 நாள் பண்ணினேனோ முடிஞ்சது... உடனே ஓடு ரெகுலரா போற ஆர்த்தோ சர்ஜன் .... அவர் என்னை பார்த்த உடனே சொல்லிட்டார் இது severe lower back strain ன்னு .. உடனே நான் கேட்ட முதல் கேள்வி "டாக்டர் இந்த elliptical சைக்கிள  இனி எப்போ மறுபடியும் எக்சர்சைஸ் ஆரம்பிக்கலாம்..." உடனே என்னை ஒரு லுக் விட்டாரே பாக்கணும்...ஒரு குண்டை தூக்கி போட்டார்.. சில பேருக்கு elliptical trainer ஒர்கவுட் ஆகாதுன்னு... அய்யயோ சாய்ராம் அன்னை ஐயப்பான்னு ஒருத்தர் விடாம வேண்டிக்கிட்டேன் .... ஒரு 10 நாள் பிசியோதெரபி பண்ணுங்க அப்பறம் பார்ப்போம்னு வயத்துல பாலை வார்த்தார்.... இந்த cycle free கேப்ல சர்வீஸ் சென்டர்க்கு கால போட்டு ரிப்பேர்க்கு ஆள் அனுப்பினாங்க... அந்த பையன் என்னையும் சைக்கிளையும் பார்த்துட்டு "இதுக்கு ஒரு மாக்ஸிமம் வெயிட் லிமிட் இருக்கு ...யார் மேடம் யூஸ் பண்றாங்க " அப்படிங்கறான் .... முறைச்சிகிட்டே நான் தான்னு சொன்னேன் ... செக் பண்ணிட்டு "மேடம் front ல இருக்கற flywheel புஷ் போய்டுச்சு.... மாத்தணும்" ன்னு சொல்லிட்டு மாத்திட்டு போய்ட்டான்... ஒரு 10 நாள் பல்லை கடிச்சிட்டு அப்பறம் எடுத்தேன் வண்டிய ஐ மீன் சைக்கிள .... ஒரு வாரம் போச்சு .... பொறி பறக்க எக்ஸர்சைஸ் பண்ணேன்.. ஆமா ஒரு வாரத்தில சைக்கிளல ஒரு பயங்கர வெல்டிங் சத்தம்  உண்மையாவே  பொறி பறந்து ... பண்ணி முடிச்சிட்டு கீழ பாத்த ஒரே அலுமினியம் துகள்.... போச்சுடா ... திரும்ப கூப்பிடு சர்வீஸ் .... இந்த தடவையும் அதே ஆளு... "நான் தான் இதுல வெயிட் லிமிட் இருக்குன்னு சொன்னேனே மேடம் ... முன்ன புஷ் போய் இருந்தப்ப நீங்க யுஸ் பண்ணி இருந்தீங்க இல்ல.. அப்போ flywheel லையும் கொஞ்சம் உடைஞ்சு போச்சு .." அப்படின்னு சொல்லி இன்னும் 1 வீக் எடுத்து அதையும் புதுசா மாத்தி கொடுத்தான்... சரி ஒரு குறிக்கோளை  எடுத்தா இப்படி இடைஞ்சல் வர்றது எல்லாம் சாதனையாளர்களுக்கு சகஜம்ன்னு என்னோட வெயிட் லாஸ் எய்ம்மை இன்னும் vigorous ஆ தொடர்ந்தேன் ... ஒரு 8 மாசம் போச்சு ... ஏதோ மாற்றம் வந்த மாறி தான் இருந்தது .... இதுக்கு நடுவுல  ஸ்விம்மிங் போறேன்னு 3 அடில floating மட்டும் கத்துக்கிட்டு , aerobics போறேன்னு உடம்பெல்லாம் சுளுக்கிட்டு இப்படி பல முயற்சிகள்... கொஞ்ச நாள் முன்னாடி "ஹே நீங்க நல்லா எளச்சு இருக்கீங்களே " அப்படின்னு கேட்ட சில பேர் (அவங்க எல்லாம் கண்ணுல பவர் கிளாஸ் போட்டு இருந்ததை சொல்ல மாட்டேனே...) என்னோட டார்கெட்டை நோக்கி தான் போய்ட்டு இருக்கேன்னு எனக்கு புரிய வெச்சாங்க...
இப்படி எல்லாமே எனக்கு  சாதகமா போயிட்டு இருந்தப்போ தான் 2 வாரம் முன்னாடி இங்க அதிசயமா பெய்ஞ்ச மழைல அந்த இடி விழுந்தது... அதாவது நான் படிக்கட்டுல விழுந்தேன்... வலது கால் ankle coconut bun மாறி வீங்கிடுச்சு... உடனே இருக்கவே இருக்காரு என்னோட ஆஸ்தான ஆர்த்தோ சர்ஜன்... போன உடனே என் கால பாத்திட்டு "இவ்வளவு வீங்கி இருக்கே ...  either fracture or ligament tear.... ஒரு x-ray எடுத்திட்டு தான் முடிவு பண்ணணும் crepe bandage ஆ இல்லை plaster of paris ஆன்னு " அப்படிங்கறார் ... உடனே நான் என்ன கேட்டு இருப்பேன்னு உங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியும் "எப்போ எக்சர்சைஸ் ஆரம்பிக்கலாம் " .... ஆனா அதுக்கு அவர் என்ன பதில் சொன்னார்ங்கறது தான் இங்க ஹைலைட் ..
"x-ray வே வேணாம் ... உங்களுக்கு மாவு கட்டு தான் சரி" 

Monday, July 25, 2016

என் அன்பு ஸ்ரீராமபிரான் ஏன் இப்படி தன்னையே வருத்தி கொள்கிறார்... என்னால் தாங்க முடியவில்லையே .... ஒரு முறை என் தாய் சீதாமாதாவை பிரிந்து ஜீவனே இல்லாது காடு திரிந்து  கடல் தாண்டி தவியாய் தவித்தாரே .. அதையே என்னால் சகித்து கொள்ள முடியவில்லையே .... சீத்தம்மாவை கண்டேன் என்று சொன்னால் அந்த கண்டேன் என்ற ஒரு சொல் கேட்க ஆகும் அந்த ஒரு நொடி தவிப்பை கூட அவருக்கு தர வேண்டாம் என்று தானே "கண்டேன் சீதையை" என்று சொன்னேன் .... என் தாய் தீயிலேயே குளித்த  போது அதற்கு இணையான வெப்பத்தில் அவர் நெஞ்சு வெந்தது எனக்கு தெரியாது என்று நினைத்தாரோ .... என்ன நினைத்து அதை செய்தாரோ அதற்கு அர்த்தமே இல்லாது போய்விட்டதே .... எங்கே என் சீதாமாதா .... கர்ப்பிணியான அவளையும், அவளோடு சேர்த்து தன் ஜீவனையும் எதற்கோ எங்கோ அனுப்பி விட்டு என் ப்ரபோ என்ன செய்ய எத்தனித்து இருக்கிறார்.. அனுமனால் துயரம் தாங்க முடியவில்லை .... நேரே அவன் உயிருக்கு உயிரான பிரபுவிடம் சென்றான்.. "பிரபோ .... இது என்ன விதி ... எதற்காக யாருக்காக இந்த முடிவு... மாதா இல்லாத நீங்கள் இங்கே என்ன செய்ய போகிறீர்கள்... இந்த முறை நான் உங்கள் உத்தரவிற்கோ சீத்தம்மாவின் அனுமதிக்கோ காத்திருக்க போவதில்லை... இப்போதே போய் சீதாமாதாவை இங்கே அழைத்து வரப்போகிறேன்... " என்றான்.
"பிரிய அனுமன்... க்ஷத்ரிய குலத்தில் பிறந்து நாடாளும் மன்னனாக எனக்கு இருப்பது சில முக்கியமான கடமைகள்.... என் ஒருவனின் உணர்வுகளுக்கு மட்டும் மதிப்பளித்து வாழ நான் கொடுத்து வைக்கவில்லை... இதுதான் என் விதி..." என்றான் ராமன்.
"இல்லை பிரபோ நான் இருக்கும் வரை நீங்கள் இப்படி துயரத்தில் தவிப்பதை என்னால் அனுமதிக்க முடியாது ... உங்களையும் சீதாமாதாவையும் சேர்த்து வைக்காமல் என் பிறவி முழுமை அடையாது..." என்று கூறிவிட்டு எங்கே அங்கேயே இன்னும் ஒரு நொடி நின்றாலும் ராமன் அவனை தடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் வெளியே வந்தான்.
"அயோத்திய மக்களே...உங்களுக்காகவே தன் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் என் ப்ரபோவின் அருமை என்றாவது உங்களுக்கு தெரிந்து இருக்கிறதா..  தன் பிள்ளைகளை போல் உங்களை எண்ணும் அவரின் துயரை போக்க வேண்டும் என்று அவர் மேல் உண்மையான அன்புடன் நீங்கள் யாராவது நினைத்து இருக்கிறீர்களா... கர்ப்பிணியான மனைவியை விரட்டி விட்டான் என்று என் பிரபுவிற்கு யுகம் யுகமாய் நிலைத்து நிற்க போகும்  அவப்பேரை தான் அவருக்கு தர போகிறீர்களா... இப்போதே என்னோடு சேர்ந்து வாருங்கள் .... போய் சீதாமாதாவை அழைத்து வருவோம் ... நீங்கள் அழைத்து வந்தால் ராமபிரான் ஏற்றுக்கொள்வார்...." என்று அழைத்து பார்த்தான்...மானிடர்கள் அல்லவா... யாரும் மசியவில்லை ....
ராமருடைய துயரை கண்டு செய்வதறியாது தவித்து "ஸ்ரீ ராம பிரபோ... ஸ்ரீ ராம பிரபோ" என்று அனுமனின் மனம் துவங்கிய அரற்றல்  யுகங்கள் கடந்து இன்னும் தொடர்வதாகவே எனக்கு தோன்றுகிறது !!!

Note:
ஸ்ரீராமர் மீது அளவற்ற பக்தியும் அன்பும் வைத்திருக்கும் அனுமன் ஸ்வாமியின் பார்வையில் ஒரு சிறிய முயற்சியே இது... யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கமில்லை... நானே ஒரு ardent devotee of Lord Hanuman.