Tuesday, August 30, 2016

Who am i ?

நேத்து தூக்கம் வரலைன்னு புரண்டுட்டே இருந்தா என் பொண்ணு.... சரின்னு Who am i விளையாட  ஆரம்பிச்சோம்... ஒரு பெர்சனாலிட்டிய  நினைச்சிக்கணும்.... இன்னொருத்தர் ஆமா  இல்லை ன்னு சிங்கிள் வோர்ட் ஆன்சர்ஸ் இருக்கற கேள்விகளை கேட்டு அந்த yes or no வ வச்சு கண்டுப்பிடிக்கற அதே சேம் ஒல்ட் கேம்...
நான் கலிலியோவை  நினைச்சுக்கிட்டேன்...  என் பொண்ணு  செலிபிரிட்டியா , ஆணா பெண்ணா, இருக்காரா போய்ட்டாரா, இந்தியனா நான்-இந்தியனா இப்படி கேள்வியா கேட்டா .... சைன்டிஸ்ட்ன்னு கேட்ட உடனே யெஸ் ன்னு சொன்னேன் ...
"ஹே  கண்டுப்பிடிச்சிட்டேன்.. ஆப்பிள் பாத்து சொன்னாரே நியூட்டன்? "
"நோ"
உடனே அவ அப்பா ஹெல்ப் பண்ண வந்து "ஐன்ஸ்டீன்?"
"நோ "
"அப்பா லெட் மீ ட்ரை ..." ஓகேன்னு போயிட்டார்....
"மேரி கியூரி?"
"நோ "
"அவங்க ஹஸ்பண்ட் பேர் என்னமா ஏதோ பியர்ன்னு வருமே.."
"பியரி கியூரி..ஆனா நோ அவர் இல்லை.."

இப்போ செம்ம ஸ்பீடா "i know ... is he அகஸ்டஸ் குளோப் ... இல்லைன்னா வெருக்கா சால்ட்... or வயலட் பெரிகார்ட் ...இல்ல மைக் டீவ்..."

"ஆஹா இந்த பேரெல்லாம் எங்கயோ கேட்ட மாறியே இருக்கே ... ஆனா இவங்கெல்லாம் என்ன கண்டுப்பிடிச்சாங்கன்னு நமக்கே தெரியாதே.... ஆனா பரவாலயே இவளுக்கு இவ்வளவு பேர தெரியுதே..." அப்படின்னு திரு திருன்னு முழிச்சிக்கிட்டே அவ திருப்பி கேக்கறதுக்கு முன்னாடி ஜகா  வாங்கிடலாம்னு முடிவு பண்ணி "இவங்கள்ள யாரும் இல்லடா.... கலிலியோ ..." அப்படின்னு சொன்னேன் ..

உடனே அவ "சரி நான் சொன்னவங்க எல்லாம் யாருன்னு  உனக்கு தெரியுமா  மா..." அப்படின்னா...

அய்யயோ மாட்டினேன்னு நினைச்சுக்கிட்டு "இந்த பேரெல்லாம் எங்கயோ கேட்ட மாறித்தான் இருக்கு... ஆனா என்ன பண்ணாங்கன்னு மறந்துட்டேன் கண்ணா  (ம்ம்க்கும்  என்னவோ தெரிஞ்சு மறந்த மாறி ஒரு பில்டப் )..."
"அய்யோ அம்மா இவங்க எல்லாம் சைன்டிஸ்ட்டே இல்ல... roald dahl எழுதின charlie and the chocolate factory ல வர்ற காரக்டர்ஸ் .... கிக்கிக்கீ ...." அப்படின்னு சிரிக்கிறா...

அட ராமா ... நம்மள அசடு வழிய வச்சு மானத்தை வாங்கறதுல என்ன ஒரு சந்தோஷம் .... "ரொம்ம்ப நல்லா வருவடி..." அப்படின்னு சொல்லி தூக்கம் வருதுன்னு திரும்பி படுத்து எஸ்கேப்  ஆயிட்டேன் !!!

Friday, August 26, 2016

தற்பெருமை..

சில வருஷங்களுக்கு முன்னால நான் ஒரு ஐடி கம்பனில வேலை செஞ்சிட்டு இருந்தப்போ நடந்தது..அங்க இந்த ஹவுஸ் கீப்பிங் வேலைகளுக்கு எல்லாம் காண்ட்ராக்ட் பேசிஸ்ல அவுட்சோர்ஸிங் பண்ணி இருப்பாங்க... அதுல வேலைக்கு வர்ற பெண்கள் அடிக்கடி மாறிக்கிட்டே இருப்பாங்க ... எரிஞ்சி எரிஞ்சி விழற சூப்பர்வைஸர் ஒருத்தர் இருப்பார் .... ஒரு பெண் புதுசா எங்க ப்ளோர் ரெஸ்ட் ரூமுக்கு வர ஆரம்பிச்சாங்க ... பாக்கவே ரொம்ப பொறுமையா அமைதியா இருப்பாங்க .... மத்தியான வேளையில ரெஸ்ட் ரூமுக்கு போனா, அங்க ஒரு பத்து நிமிஷம் ரெஸ்டுக்காக உட்காந்து  இருக்கறவங்க டக்குனு எழுந்து நின்னுடுவாங்க... எனக்கு ரொம்ப கஷ்டமா போய்டும்... ஒரு நாள் நானே "ஏன் எழுந்துக்கறீங்க... உட்கார்ந்துக்கோங்க.. " அப்படின்னு சொல்லியும் "இல்ல மேடம் பரவால்ல ..." அப்படின்னு நின்னுக்கிட்டே இருந்தாங்க .... அதுல இருந்து நான் முடிஞ்ச வரைக்கும் அந்த டைம்ல ரெஸ்ட் ரூம் போறதை அவாய்டு பண்ணிடுவேன்... கொஞ்சம் நேரம் கழிச்சு போவேன் .... ஒரு நாள் நான் போனப்போ அவங்க அங்க மூலைல உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தாங்க ... என்னை பார்த்ததும் டக்குனு டிபன் பாக்ஸ  மூடிட்டு எழுந்துட்டாங்க... எனக்கு என்னவோ ரொம்ப பாவமா இருந்தது .... "ஏன்க்கா இப்படி பாத்தாலே எழுந்துக்கறீங்க... நாங்க வந்தா என்ன.... நீங்க உங்க வேலைய முடிச்சிட்டு தான உட்கார்ந்து இருக்கீங்க... அது சரி இங்க போய் ஏன் சாப்பிடறீங்க... வேற எங்கயாவது சாப்பிடலாம் இல்ல ... " அப்படின்னு கேட்டேன் ... நான் அவங்கள அக்கா ன்னு கூப்பிட்ட உடனே அவங்க முகத்துல வந்தது பாருங்க ஒரு சந்தோஷம்... "இல்ல மேடம் சூப்பர்வைஸர் திட்டுவாரு.. ரொம்ப பசி காலைல சாப்பிடல...அதான் ..." அப்படின்னு சொன்னவங்க முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் ... "சரி நான் வயசுல ரொம்ப சின்னவ மேடம்ன்னு எல்லாம் கூப்பிடவேணாம் ... " அப்படின்னு சொன்னதுக்கு "அய்யோ பரவாலீங்கமா ..." அப்படினாங்க .... அதுல இருந்து டெயிலி என்னை எங்க பாத்தாலும் "குட் மார்னிங்மா ... சாப்டீங்களா... " அப்படின்னு தவறாம கேப்பாங்க....நானும் "குட் மார்னிங் க்கா ..." அப்படின்னு  சொல்லிட்டு சிரிச்சுட்டு வந்துருவேன்...  "பரவால்ல இப்படி அவங்க மனசு சந்தோஷப்படற மாறி பெருந்தன்மையா நடந்துக்கறேனே... நாம எவ்வளவு சிம்பிள் ஹம்பில் " அப்படி அப்படின்னு மனசுக்குள்ள என்னை பத்தி தற்பெருமையா நினைச்சுப்பேன்....  நம்ப வடிவமைப்பு தான் அப்படிப்பட்டதாச்சே...

அப்பறம் நான் கான்சிவ் ஆகி கொஞ்ச மாசம் ஆன்சைட்ல இருந்தேன் .... எட்டாவது மாசம் திரும்ப இந்த ஆபீஸ்க்கு வந்தேன் ... வேற பிளாக் வேற ப்ளோர் .... ஒரு பத்து நாள் கழிச்சு கஃபேடேரியாக்கு போய்ட்டு இருந்தப்போ "அம்மா.. அம்மா நில்லுங்கம்மா... எங்க போய்ட்டிங்க .... ரொம்ப நாளா உங்களை பார்க்கவே முடிலயே ..." ன்னு கேட்டுக்கிட்டே பின்னாடி இருந்து ஓடி வந்தாங்க அந்த அக்கா ... என் வயித்த பாத்திட்டு "ஏன் தாயி நிறைமாசமா இருந்துக்கிட்டு ஏன் இப்படி கஷ்டப்படற .... உன்னை பாத்தாலே எனக்கு பாவமா இருக்கு.... லீவ் எடுத்துக்கிட்டு போலாம்ல .." அப்படின்னு வாஞ்சையோடு கேட்டாங்க ... "நான் ரெண்டு நாள் முன்னாடி தூரத்துல இருந்து பாத்தேன் ... கூப்பிடறத்துக்குள்ள போய்ட்ட..  இந்தா இது எங்க வூட்டுல பூத்த பூ வெச்சிக்க...." ன்னு  பூ வேற தந்தாங்க .... அப்பவும் as usual i was feeling very proud about how i touched her heart with my simplicity, smile blah blah ...

அப்பறம் என் பொண்ணு பிறந்து நிறைய நாள் லீவ் எடுத்திட்டு ஜாயின் பண்ணி ஒரு மாசத்துலயே வேற கம்பெனில ஜாப் கிடைச்சு இங்க ரிசைன் பண்ணிட்டேன்... பைனல் வீக்ல நோ ட்யூஸ் எல்லாம் வாங்க சுத்திக்கிட்டே இருந்தப்போ அந்த அக்காவை எதேச்சையா பாத்தேன் .. "நான் ரிசைன் பண்ணிட்டேன்க்கா .." என்றதும் "என்னையெல்லாம் மறந்துராதமா ..." அப்படின்னு நெகிழ்ச்சியோடு சொன்னார்கள் ....

கொஞ்ச வருஷம் கழிச்சு எங்கேயோ ஏதோ பேசிட்டு இருக்கும் போது, யாரா  இருந்தாலும் எப்படி மரியாதையா நடத்தணும் அப்படின்னு என் பிரதாபத்தை அளந்துட்டு இருந்தப்போ தான் சட்னு தோணிச்சு "அது சரி இவ்வளவு பேசறோமே இது வரைக்கும் அந்த அக்கா பேரையாவது என்னன்னு கேட்டு இருக்கோமா" ன்னு ....

ம்ஹ்ம் என் மனசு விரிய வேண்டியதும், நான் வளர வேண்டியதும்  இன்னும் நிறைய  நிறைய !!!

Tuesday, August 23, 2016

மன்னிக்க முடியாதவை .....

"டேய் பெரிய மனுஷா வா வா... இப்போ தான் வழி தெரிஞ்சுதா... எவ்வளவு நாள் ஆச்சு நீ வீட்டுக்கு வந்து..ஏண்டா வேலைக்கு மெட்ராஸ்  போய்ட்டா எங்களை எல்லாம் மறந்திடுவியா... லீவ்ல ஊருக்கு வந்தா கூட பாக்க முடியறது இல்ல..." ஜெயா அக்கா உற்சாகமாய் என்னை வரவேற்றாள்... ஆனால் எப்பவும் போல இல்லாம நறுக்குன்னு  அவகிட்ட ஏதோ கேக்க வந்திருந்த என்னாலதான் அதை இயல்பா ஏத்துக்க முடியல... பேருக்கு சிரிச்சு வெச்சேன்...

ஜெயா எனக்கு பெரியப்பா பொண்ணு... 8 வயசு பெரியவ .... அப்பாவோட சேர்த்து நாலு பசங்க ரெண்டு பொண்ணுங்கன்னு தஞ்சாவூர்ல எங்க தாத்தா குடும்பம் பெரிய குடும்பம்.... ஒரே தெருவுல அடுத்தடுத்த வீடு..... பெரிய அத்தை மட்டும் அடுத்த தெரு .... நாங்க எல்லாருமே ஒண்ணா வளர்ந்தவங்க தான் .... நான் +2 முடிச்சிட்டு காலேஜ் சேர்ந்ததுல இருந்து இப்போ வேலை பார்க்கறது வரைக்கும் சென்னையில... ஆரம்பத்துல ஊருக்கு வந்தா எல்லாரையுமே பார்த்திட்டு தான் திரும்புவேன்.... இப்போ ஒரு 3 வருஷமா  அதுவும் குறைஞ்சு போச்சு ....

ஜெயாக்கா முன்னைக்கு இப்போ கொஞ்சம் பூசின மாறி அழகா இருந்தா.... பின்ன கண்ணன் மாமாவோட வாழறவ வேற எப்படியும் இருக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்.... கண்ணன் மாமா ... சின்ன வயசுல இருந்தே அவரை பார்த்து பார்த்து பிரமிச்சு ஹீரோவா நினைச்சு வளர்ந்தவன் நான்... அப்படி ஒரு அழகான அமைதியான இனிமையான நிறைய விஷயம் தெரிஞ்ச பல திறமைகள் இருந்த ஒரு மனுஷன்... என்னோட பெரியம்மாவோட அண்ணன் பையன் ... அதாவது ஜெயாக்காவோட மாமா பையன்.... அடுத்த தெருவில் அத்தை வீட்டுக்கு பக்கத்து வீடு தான் அவங்க வீடு.... நான் அத்தை வீட்டுக்கு போனா அவங்க வீட்டை விட கண்ணன் மாமா வீட்ல தான் அதிகமா இருப்பேன்... அப்போ நான் ஏழாவது .. அவர் காலேஜ்ல பி.ஜி படிச்சிட்டு இருந்தார்... சூப்பரா பாடுவார்.... அதைவிட அருமையா புல்லாங்குழல் வாசிப்பார்.... அவர் வாசிக்க ஆரம்பிச்சா ஆன்னு கேட்டுகிட்டு இருப்பேன்... "என்னடா இப்படி பாக்கற" அப்படின்னு செல்லமா தலைல தட்டுவார்.... என்னவோ கோட்டையை பிடிச்சிட்ட மாறி எனக்கு தலைகால் புரியாது... ஏன்னா அவர் வாய திறந்து பேசறதே அதிசயம்...

ஜெயாக்காவை கேக்கவே வேண்டாம் ... அவரை பாத்தாலே வெக்கப்படுவா... அவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பண்ணி வெக்கணும்னு சின்ன வயசுல இருந்தே எல்லாரும் பேசிக்குவாங்க... ஆனா எனக்கு என்னவோ அது எப்பவுமே அவ்வளவா பிடிச்சது இல்ல.... கண்ணன் மாமாக்கு, எப்பவும் ஏதாவது வம்பு பேசிக்கிட்டு முணுக்குனா அழுதுட்டு சுமாரா படிச்சி டிகிரி வாங்கணுமேங்கறதுக்காக காலேஜ் போயிட்டு வர ஜெயாக்கா பொருத்தமே இல்லைன்னு எனக்கு தோணும்... வெளிய சொல்லவா முடியும்... எல்லாரும் டின் கட்டிருவாங்க... கண்ணன் மாமாவை மட்டும் ஒரு தடவை வாயை அடக்க முடியாம கேட்டுட்டேன் "மாமா உங்களுக்கு ஜெயாக்காவை கல்யாணம் பண்ணிக்க ஓகே வா..." ன்னு....கொஞ்ச நேரம் ஒண்ணுமே  பேசாம என்னை பார்த்தவர் "இப்போ எதுக்குடா அதை கேக்கற... எதுவும் நம்ம கைல இல்ல...போடா போய் படி..." அப்படின்னு அவர் சொன்னப்போ அந்த வயசுல எனக்கு புரிஞ்சது அவருக்கும் அதுல அவ்வளவா இஷ்டம் இல்லைன்னு...

இப்படி இருக்கும் போதுதான் நான் எட்டாவது படிக்கும் போது கண்ணன் மாமா வீட்டு பக்கத்து வீட்டுக்கு ஒரு வாத்தியார் குடி வந்தார்.... அவர் பையன் ரகு என்னோட கிளாஸ்ல சேர்ந்தான்... ஒரே நாள்ல பிரெண்ட் ஆயிட்டான்.... அடுத்த சனிக்கிழமை அவன் வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தான்... நான் வழக்கம் போல கண்ணன் மாமா வீட்டுக்கு போயிட்டு அப்படியே அவன் வீட்டுக்கும் போனேன்.... உள்ள ஊஞ்சல்ல ரொம்ப அழகா ஒருத்தங்க உட்காந்து பூ கட்டிட்டு இருந்தாங்க.... "டேய் இவங்க என் அக்கா அகிலா டா.... உங்க அக்கா ஜெயா வோட கிளாஸ் தான் காலேஜ்ல.." அப்படினான்.... என்னை பார்த்து அழகா சிரிச்ச சிரிப்பிலேயே எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சு... வீட்ல இருந்த நிறைய அழகு பொருட்கள் எல்லாத்தையும் காமிச்சு "இது எல்லாமே எங்கக்கா பண்ணதுதான்டா.... சூப்பரா பாடுவாங்க ... ஸ்கூல்ல படிக்கும் போது எல்லாம் எங்கக்கா தான் பிரேயர் " அப்படின்னு ரகு சொன்னான்... அது என்னவோ எனக்கு அகிலாக்காவை ரொம்ப பிடிச்சு இருந்தாலும் அவன் பீத்திக்கிட்டவுடனே நானும் உடனே என் பங்குக்கு "டேய்ய் எங்க கண்ணன் மாமாவும் சூப்பரா பாடுவார்... என்னமா புல்லாங்குழல் வாசிப்பார் தெரியுமா.... உங்க பக்கத்து வீடு தான் ... " அப்படினேன்... வாழ்க்கைல சில சமயம் பல பெரிய விஷயங்கள் நடக்க எப்படியோ நமக்கு தெரியாமலே நாம ஒரு காரணமாயிடுவோம்... அன்னைக்கு நான் ஏன் அப்படி சொன்னேன்னு இப்போ வரைக்கும் பல தடவை நினைச்சு இருக்கேன்...
அடுத்த நாள் கண்ணன் மாமா வீட்டுக்கு போனப்போ "மாமா அடுத்த வீட்ல இருக்கறது என் பிரெண்ட் தான்... அவங்க அக்கா அவ்வளவு அழகா இருக்காங்க... சூப்பரா பாடறாங்க தெரியுமா... அவ்வளவு கிராஃப்ட் ஒர்க் பண்ணி இருக்காங்க..." அப்படின்னு அவங்க புராணத்தையே பாடினேன்... "டேய் நிறுத்துடா அப்போ அங்க போய் பேச வேண்டியது தான... இங்க வந்து வந்ததுல இருந்து அவங்கள பத்தியே புராணம் பாடிட்டு இருக்க.." அப்படின்னு சிரிச்சிகிட்டே அவர் கிண்டல் பண்ணார்...

அதுல இருந்து எப்போ கண்ணன் மாமா வீட்டுக்கு போனாலும் தவறாம ரகு  வீட்டுக்கு போய்டுவேன்.... போறது மட்டும் இல்ல ... அங்க போய் கண்ணன் மாமா புராணம் பாடறதும் இங்க வந்து அகிலாக்கா பத்தி சிலாகிச்சு பேசறதும்னு இதையே பண்ணிட்டு இருந்தேன்... அந்த வயசுல இது எந்த மாறி விளைவுகள் உண்டு பண்ணும்னு எனக்கு அவ்வளவா புரியலை... கொஞ்ச நாள் கழிச்சு கண்ணன் மாமா "அது சரி இவ்வளவு பேசறியே ஒரு நாளாவது உன் பிரெண்ட் அவங்க அக்கா இவங்களை எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கியா..." அப்படின்னு சிரிச்சிகிட்டே கேட்டார்.... உடனே நான் "மொட்டை மாடிக்கு வாங்க மாமா.." ன்னு சொல்லிட்டு ரகுவை அகிலா அக்காவை மாடிக்கு கூட்டிட்டு வர சொன்னேன்....

அதுக்கு அப்பறம் என்ன நடந்து இருக்கும்னு நான் சொல்லவே வேணாம்... கண்ணன் மாமாவும் அகிலா அக்காவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சுட்டாங்க.... எனக்கும் ரகுவுக்கும் ரொம்ப சந்தோஷம்.... ஆனா ரகுவோட அப்பா பயங்கர கோபக்காரர்... "டேய் எங்கப்பாக்கு மட்டும் தெரிஞ்சுது அவ்வளவுதான்... என்ன ஆனாலும் இவங்க ரெண்டு பேருக்கும் தான்  கல்யாணம் நடக்கணும்னு எனக்காக வேண்டிக்கோடா.." அப்படின்னு அவன் சொல்வான்.... நான் உடனே "உனக்காக என்னடா எனக்காகவே வேண்டிக்கறேன்.." அப்படின்னு சொல்வேன்... ஆனா இந்த ஜெயாக்கா மட்டும் ஒரு நாள் என்னை கேட்டா "டேய்ய் என்னடா நீ எந்நேரமும் அங்கேயே குடி இருக்க ... என்ன நடக்குது " அப்படின்னு... நான் உடனே "என்னக்கா நடக்குது.... நான் ரகுவோட படிக்க போறேன் .." அப்படின்னு சமாளிச்சிட்டேன்...ஆனா உள்ளுக்குள்ள என்னவோ ஒரு சந்தோஷம்.. கண்ணன் மாமாக்கு அகிலாக்கா தான் பொருத்தம் அப்படின்னு மனசுக்குள்ள சொல்லி சிரிச்சிக்கிட்டேன்...

இப்படியே எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்தது... திடீர்னு ஒரு நாள் ஸ்கூல் முடிஞ்சு ரகு வீட்டுக்கு அவனோட போனேன்... அவங்க அம்மா என்னை பாத்ததும் முறைச்சிட்டு "டேய் ரகு உள்ள வாடா.." அப்படின்னு உள்ள போய்ட்டாங்க ... அகிலா அக்காவை அன்னைக்கு பாக்கவே முடில... மறுநாள் ரகு ஸ்கூல்க்கு வரலை... எனக்கு என்னவோ போல இருந்தது... ஸ்கூல் முடியறதுக்காகவே காத்திருந்து அவன் வீட்டுக்கு ஓடினேன்... அவன் வீட்டில் பெரிய பூட்டு தொங்கியது... அடுத்த ஒரு வாரத்தில் அவன் அப்பா அம்மா மட்டும் வந்து ஸ்கூலிலே அவன் டீஸீ வாங்கினாங்க... அடுத்த நாள் சனிக்கிழமை... நான் அவங்க என்ன திட்டினாலும் பரவால்ல  எப்படியாவது ரகு பத்தி கேட்டுடணும்னு அவன் வீடுக்கு போனா வீடே காலியா இருந்தது .... ரொம்ப ஷாக் ஆயிட்டேன்... வீட்டுக்கு பின்னாடி காலி பண்ணப்போ தேவை இல்லாததை போட்டு வெச்சுருந்தாங்க.... அந்த குப்பைல முறிச்சு போட்ட கண்ணன் மாமாவோட புல்லாங்குழல் இருந்தது ... அகிலா அக்காக்கு கொடுத்து இருந்தார் ....  எனக்கு என்னவோ புரிஞ்சது போல இருந்தது .... மனசு கேக்காம அதை எடுத்துட்டு கண்ணன் மாமாவை பாக்கலாம்ன்னு போனேன் .... அது வரைக்கும் கண்ணன் மாமாவை அப்படி நான் பாத்ததே இல்ல.. கண்ணெல்லாம் கலங்கி போய் பாக்கவே ரொம்ப பரிதாபமா இருந்தார் ... இதுல முறிச்சு போட்ட புல்லாங்குழலை கொடுத்து அவரை இன்னும் கஷ்டப்படுத்த மனசு வராம அதை எடுத்திட்டு வந்து பத்திரமா வெச்சுக்கிட்டேன்...

அதுக்கு அப்பறம் என்னவோ கண்ணன் மாமாவை பாக்கவே கஷ்டப்பட்டுக்கிட்டு  அவர் வீட்டுக்கு போறதையே  அவாய்டு பண்ணேன்... என்னவோ சொல்லத் தெரியாத ஒரு குற்ற உணர்வு.... +2 முடிச்சு வெளியூர்ல காலேஜ் சேர்ந்த உடனே சொல்லிக்கறதுக்காக அவர் வீட்டுக்கு  போயிருந்தேன்.... ரொம்ப இளைச்சு இருந்தார் .... "ஏண்டா என்னை  எல்லாம் மறந்துட்டியா.... " அப்படின்னு கேட்ட உடனே என்னவோ சொல்லி சமாளிச்சிட்டு வெளியூர் காலேஜ்ல சேர்ந்ததை சொன்னேன் .... "நல்லா படிடா.... " அப்படினார். அவர் ஒரு 5 6 வருஷமா  கல்யாணமே பண்ணிக்கலை... யாருக்கும் என்ன காரணம்னே புரியல.... ஜெயாக்கா மட்டும் கட்டினா இவரைத்தான் கட்டுவேன்னு பிடிவாதமா இருந்தா ... அப்பறம் சினிமால வர்ற மாதிரி கண்ணன் மாமாவோட அம்மாக்கு ஹார்ட் அட்டாக்  வந்து அதையே காரணமா காட்டி அப்பறம் ஜெயாக்காவை கட்டி வெச்சாங்க .... அந்த கல்யாணத்துக்கு மட்டும் நான் போகலை...
அதுக்கு அப்பறம் ஒரு தடவை அவங்களை பார்க்க போனேன் ... ஜெயாக்கா ரொம்ப சந்தோஷமா இருந்தா ..... கண்ணன் மாமா முன்ன விட ரொம்ப அமைதியா இருந்தார் ... அவரையே பார்த்தது புரிந்து தனியே இருந்தப்போ "என்னடா பண்றது... எதுதான் நம்ம கைல இருக்கு... மனசுல என்ன கஷ்டம் இருந்தாலும் கல்யாணம் ஆன அப்பறம் நம்மளை நம்பி  வந்தவங்களை கஷ்டப்படுத்த கூடாது ... ஜெயா என்ன பண்ணுவா என் விதி அப்படி இருந்தா ..." என்றார் .

இது எல்லாம் நடந்து 6 வருஷம் ஆய்டுச்சு .... போன மாசம் சைதாபேட்டைல இருந்து எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஏதோ வேலையா போய்ட்டு இருந்தப்போ பக்கத்தில வந்து உட்கார்ந்தவனை எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சிட்டே இருக்கேன் .... அவனும் அதே நிலைமையில தான் இருந்தான்... ரகு.... ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியலை..... "டேய் எப்படிடா இருக்க... ஏண்டா திடீர்ன்னு எங்க போயிட்டீங்க.... அக்கா எப்படி இருக்காங்க ..." நான் கேட்டதுக்கு "அப்பாக்கு அக்கா விஷயம் தெரிஞ்சு எங்க சொந்த ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டாருடா.... அக்கா எவ்வளவு கெஞ்சியும் டிகிரிய கூட முடிக்க விடல... எங்க தூரத்து சொந்தத்துலயே சுமாரா ஒரு மாப்பிள்ளையை பாத்து ஒரே மாசத்துல கல்யாணம் பண்ணி வெச்சிட்டாரு .... பாவம் டா என் அக்கா .... எப்படி எப்படியோ எல்லாம் இருக்க வேண்டியவ ஏதோ வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்கா ..." என்றான் ..
"கண்ணன் மாமாவும் அப்படிதான்டா ரொம்ப நாள் கல்யாணமே பண்ணிக்காம இருந்தார் .... ஆனா ஜெயாக்கா அவருக்காகவே காத்திருந்து எப்படியோ கல்யாணம் முடிஞ்சிருச்சு" ன்னு சொன்ன என்னை பார்த்து "பின்ன விட்ருவாங்களா .... அன்னைக்கு காலேஜ்ல இருந்து என் அக்காவோடவே எங்க வீட்டுக்கு வந்து எங்க அம்மாகிட்ட வத்தி வெச்சதே உங்க ஜெயாக்கா தானே " என்றதும் இடி விழுந்த மாதிரி இருந்தது ... ஏதோ சும்மா பொழுது போக வம்படிப்பாள் மற்றபடி மோசமானவளில்லை என்று நினைத்து இருந்த ஜெயா வா இப்படி ஒருவர் வாழ்க்கையை கெடுக்கும் அளவு போனாள் .... நினைக்கும் போதே மனம் கசந்தது..... இப்படிப்பட்டவளுக்கா கண்ணன் மாமா..... மனசு பொறுக்காமல் அவளை நறுக்கென்று நாலு வார்த்தை கேக்க தான் அவள் வீட்டுக்கு வந்து இருக்கேன் ....

"டேய்ய்ய் என்ன யோசனை.. சரி நல்ல நேரத்துல தான் வந்து இருக்க.. இன்னைக்கு எங்க கல்யாண நாள் .. நீதான் கல்யாணத்துக்கே வரலையே... சாயங்காலம் மாமா வந்ததும் எல்லாரும் கோவில் போய்ட்டு ஹோட்டல் போறோம் ... நீயும் மறக்காம 5 மணிக்கு இங்க வீட்டுக்கு வந்துடு.... சேர்ந்து போலாம் ..." ன்னு அவ சொன்ன உடனே சட்டென்று ஒன்று தோன்றியது.... அவளிடம் சாதாரணமா பேசிட்டு வீட்டிக்கு வந்தேன் .... அவ கல்யாண நாளுக்கான கிப்ட்டை பேக் பண்ணிட்டு சாயங்காலம் போனேன் ...

"ஹேய்ய்ய் இது என்னடா கிப்ட் எல்லாம் ..." என்று சொன்னாலும் ஆர்வமாக வாங்கிக்கொண்டாள்.... "அக்கா .. இது ஸ்பெஷல் கிப்ட் உனக்கு மட்டும் தான் ... தனியா இருக்கும் போது தான் பிரிக்கணும் .." என்று சொல்லிவிட்டு கிளம்பினேன் ...

"எதனாலன்னு இவ்வளவு நாள் புரியாம இருந்தது .... நீதான்னு இப்போதான் தெரிஞ்சுது.. கவலைப்படாத மாமா கிட்ட சொல்லமாட்டேன்.... சொன்னாலும் அவர் நல்ல மனசுக்கு உன்னை மன்னிச்சிடுவார்..... உன்னோட கல்யாண நாளுக்கு என்னோட கிப்ட் இதோ உன்னால முறிஞ்சு போன புல்லாங்குழல்... முறிஞ்சு போன குழல்ல என்னைக்குமே உன்னால இசையை கேக்க முடியாது ..." என்ற என் லெட்டரோடு அந்த புல்லாங்குழலை பார்க்கும் போது அவள் முகம் போகும் போக்கை  நினைத்துப் பார்த்தேன்.... இதுக்கு எல்லாம் அவள் அசருவாளான்னு தெரியல... இனி என்னைக்குமே என்னால் அவளை   மன்னிக்க முடியும்ன்னு தோணல... இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அவளை தண்டித்த ஒரு அமைதி என் மனதில் !!!

Thursday, August 18, 2016

ஊஞ்சல்...

இந்த ஊஞ்சலை பிடிக்காதவங்க யாராவது உண்டா .... அப்படி இருந்தா என்னை பொறுத்தவரை அவங்க தனி பிறவி .... சரி எவ்வளவு பேருக்கு ஊஞ்சல் பிடிக்குதுங்கறது இப்போ முக்கியம் இல்லை... நான் சொல்லப் போறது எனக்கு எவ்வளவு பிடிக்குங்கறதை பத்தி தான் ...

7 வயசானாலும் வீட்ல ஏதாவது குட்டி பாப்பா இருந்தா அது தூங்கற நேரம் போக மீதி இருக்கற நேரத்துல ப்ரீயா இருக்கும் அதோட தூளில ஹாய்யா ரெண்டு பக்கமும் காலை தொங்க போட்டுக்கிட்டு பின்னாடி தூளி புடவைக்குள்ள சாஞ்சிகிட்டு முன்னாடி அந்த புடவைய சேர்த்து பிடிச்சிட்டு ஊஞ்சல் மாறி இல்லைனாலும் ஏதோ சுமாரா ஒரு ஸ்விங்கிங் எபெக்ட்டோட (டீ குழந்தை தூளி அறுந்துட போகுது... அறுந்த வாலு ன்னு கோரஸா திட்டு வாங்கிட்டு தான் ) ஆடின அந்த நாட்கள்லயே என்னோட ஊஞ்சல் ஆசை ஆரம்பிச்சுடுச்சு.... அப்போ எல்லாம் வாடகை வீடு ...ஊஞ்சல் கொக்கியே இருக்காது அப்பறம் தான ஊஞ்சலை மாட்டி ஆடறது... தாத்தா பாட்டி வீட்டிக்கு ஊருக்கு போனா ஊஞ்சல் பலகை இருக்கும்.... ஆனா சமையலறையில இருக்கும்... அதுக்கு மேல அடுக்கு அண்டா அடுப்பு எல்லாம் இருக்கும் ....

அப்பறம் போர்த் படிக்கும் போது பாம்பே போனோம் .... அங்க இருந்த ஒரு தமிழ் பேசற மலையாளி கடைல அப்போலாம் மாசத்துக்கு ஒரு தடவை மட்டுமே வர்ற கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா
தமிழ் புக்ஸ் கிடைக்கும் ... ஒரு அண்ணா சைக்கிள்ல முன்னாடி ஹாண்டில் பார்ல ஒரு காக்கி பைய்ய மாட்டி அதுல புக்ஸ்  கொண்டு வந்து ஸ்டைலா  கிரௌண்ட் ப்ளோர் பால்கனி கிரில்ல சொருகிட்டு போவாரு (எங்க வீடு கிரௌண்ட் ப்ளோர் ).... அந்த மாசத்துக்கு  ஒரு தடவை வர்ற புக்ஸ்காக நான் தினமும் சாயங்காலம் அந்த பால்கனில காக்கி பை மாட்டின சைக்கிள் தரிசனத்துக்காக கடும் தவம் பண்ணுவேன்... முணு புக்கும் வந்த அப்பறமும் அடுத்த மாச புக் வந்துடுச்சான்னு அடுத்த மாசம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அந்த அண்ணாவை தினமும் நச்சரிப்பேன்.... பலநாள் என்னை பார்த்ததும் நைசா சைக்கிளை திருப்பிட்டு தப்பிச்சு ஓடிருவார்.... சரி டாபிக் ஊஞ்சல் தான இது என்ன வேற கதை சொல்றேன் let me get back to track.. அப்போ தினம் நிக்கறோமே போர் அடிக்குதேன்னு உத்திரத்தை பார்த்து யோசிச்சப்போ உள்ள தூங்கிட்டு இருந்த ஊஞ்சல் ஆசை மறுபடியும் வெளிய வந்தது ... நாம தான் ரூம் போட்டு யோசிக்கற ஐடியா மணியாச்சே .... உடனே எடுத்தேன் துணி காயப்போடற கயிறை ... ஹாலுக்கும் பால்கனிக்கும் நடுவே இருந்த ஜன்னல் கம்பிக்கும் பால்கனி க்ரில்லுக்கும் கட்டினேன் ஒரு ஊஞ்சல் ... சீட் ஒரு பிஞ்சு போன தலைகாணி (நல்ல தலைகாணி எடுத்துட்டு திட்டு வாங்கினதால தான் பிஞ்சது )... அங்க இருந்த 2 வருஷமும் இந்த பால்கனி ஊஞ்சல் தான்... வெயிட் தாங்கிச்சான்னு  கேக்காதீங்க அப்போ 11 வயசு தான் so தாங்கிச்சு... அதுல உக்காந்துக்கிட்டே இருக்கற  ரெண்டு முணு புக்ஸை (லீவ்னா பழய புஸ்தக கடைல வாங்கின டிங்கில் சம்பக் ) படிக்கறதுல அப்படி ஒரு பெருமை ஆனந்தம் ....

அப்பறம் ஊர் பக்கம் வந்துட்டோம் ... உத்தரத்திலயும் இல்ல பால்கனிலயும் ஆப்ஷன் இல்ல... அடுத்து ஒரு 2 வருஷம் கழிச்சு வேற ஊருக்கு ட்ரான்ஸ்பார் ஆச்சு... முன்னாடி போய் வீடு பார்த்துட்டு வந்த அப்பா "வீடு நல்லா இருக்கு.. வீட்டுக்கு பின்னாடி காம்பௌண்ட்க்கு உள்ளேயே  நிறைய இடம் இருக்கு... துணி துவைக்கற கல்லு , வேப்ப மரம் எல்லாம் இருக்கு... " அப்படினாரு பாருங்க ..... எனக்கு வேப்ப மரம் மட்டும் தான் மனசுக்குள்ள ச்சக்குன்னு நுழைஞ்சுது..... பின்ன பதினாறு வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி மரத்துல ஊஞ்சல் கட்டி "செந்தூரப்பூவே... செந்தூரப்பூவே.. " ன்னு பாட்டெல்லாம் பாட ஆரம்பிச்சுட்டேன்.. ராத்திரி 8 மணிக்கு அந்த வீட்டுக்குள்ள முதல் முதலா நுழைஞ்சதும் ரொம்ம்ப வேகமா பின்பக்க கதவை திறந்து பாத்தா செம்ம்ம்ம்ம பல்பு ... நட்டு வச்சு கொஞ்ச காலமே ஆன ஒரு 6 அடி பச்ச குழந்தை வேப்ப மரம் .... அதுல பேருக்கு ஒரு கிளை... அப்பவும் மனசு உடையாம நாம தான் குட்டியா இருக்கோமே ட்ரை பண்ணலாம்ன்னு ஒரு கயிறை கட்டி உட்கார்ந்தேனோ இல்லயோ அந்த கிளையே உடைஞ்சு பத்தாததற்கு மரமே  தயவு செஞ்சி என்ன விட்டுடுன்னு கால்ல விழுந்து வணங்கிடுச்சு... அவ்வளவு தான் அப்போதைக்கு ஊஞ்சல் ஆசையை கழட்டி அந்த வேப்ப மரத்துலயே மாட்டிட்டேன்.....
அதுக்கு அப்பறம் 3 வருஷம் கழிச்சு இன்னொரு ட்ரான்ஸ்பார்... அங்க எனக்கு கிடைச்ச க்ளோஸ் பிரெண்ட் வீட்டுக்கு முதல் முதலா போனப்போ அடா அடா அடா நல்ல பெரிய ஊஞ்சல் ... அதுல உட்கார்ந்து உலகளந்த  பெருமாள் மாறி தரையில ஒரு கால் விட்டத்தில் ஒரு கால்ன்னு அவ வீட்டோட ஹைட்ட  அளந்ததுல எங்கயோ வேப்ப மரத்துல மாட்டி இருந்த ஊஞ்சல் ஆசை திரும்ப  என் முதுகுல தொத்திக்கிச்சு .... அப்போ  இருந்த வீட்ல பால்கனி க்ரில் இல்ல ஆனா ஜாலி வொர்க்... சொ சேம் டெக்னிக் ஜன்னல் டு ஜாலி வொர்க் கயறு வித் பிஞ்சு போன தலைகாணி (இன்னுமா அந்த பிஞ்சு போனதை தூக்கி போடல ன்னு கேக்காதீங்க .... உள்ளயே அடக்கி வெச்சிருந்த  ஊஞ்சல் ஆசைக்காகவே அந்த தலைகாணியை  ப்ரீசர்வ் செஞ்சு வெச்சிருந்தேன்...)
இந்த தடவை ஒரே 1947 லவ்  ஸ்டோரி மனிஷா கொய்ராலா தான் ... அதுல ஆடிக்கிட்டே "குச் நா கஹோ குச் பீ நா கஹோ ..." அப்பறம் "பியார் ஹுவா சுப்புகே சே ..." இதெல்லாம் பாடி பாடி எங்கம்மாவை கலவரப்படுத்தினேன்...
இப்படியே 2 வருஷமா ஊஞ்சலாடிட்டு அப்பறம் காலேஜ் ஹாஸ்டல் போய்ட்டேன் ... அங்கேயும் வராண்டா ஜாலி வொர்க் தான் ஆனா ஊஞ்சல் கட்டினா வழிய அடைச்சிக்கும்.... பிரியா ஆட முடியாது யாராவது வந்துகிட்டே இருப்பாங்க வழி விடணும் அப்டிங்கறதால ஊஞ்சலுக்கு no for 4 long years....

அப்பறம் வீடு வாங்கும்போது  பில்டர்கிட்ட சொல்லி ஸ்பெஷலா பெரிய ஊஞ்சல் கொக்கி போட்டு பரம்பரை ஊஞ்சலை (அதான் தாத்தா வீட்ல அடுப்பு அண்டா இருந்ததே  அதேதான்) என் கையால (அப்பாவும் சேர்ந்து தான் அவருக்கும் ஊஞ்சல் ஆசை இருந்து இருக்கும் போல ) வார்னிஷ் அடிச்சு மாட்டினா அது ஸ்லைடிங் ஊஞ்சலாருக்கு... பின்ன ரெண்டு கொக்கியும் வேற வேற ஹைட்ல இருந்தா .... ஸ்டில் அதிலயும் சறுக்கிக்கிட்டே ஒரு 3 மாசம் தான் ஆடி இருப்பேன் அதுக்குள்ள கல்யாணம் ஆய்டுச்சு ....

கல்யாணத்துக்கு  முன்னாடியே வீட்ல ஊஞ்சல் ஹுக் இருக்கானு கேட்டேனே... ஓ இருக்கேன்னு சொன்னாரே... வந்து பாத்தா ரெண்டு fan ஹுக் தான் இருக்கு... இதுவா அதுன்னு கேட்டா ஆமா பாஸ்கட் ஊஞ்சல் மாட்டலாமே அப்படிங்கறார் .... சரி அதையாவது  வாங்கலாம்னு யோசிக்கறத்துக்குள்ள ஆஃபிஸ் ட்ராவல குறைக்க கொஞ்ச வருஷம் வாடகை வீட்டுக்கு போய்ட்டோம் ... அந்த வீட்ல என் பொண்ணுக்கு 3 வயசானப்போ அவ கேட்டான்னு இந்த பாஸ்கட் ஊஞ்சலை வாங்கினோம்... வாங்கி முதல் நாள் அதை மாட்டி  உட்கார்ந்தார் இவர் ... தமால்ன்னு ஒரு சத்தம் .... ஊஞ்சல் மாட்டி இருந்த ஹுக்கே விட்டத்துல இருந்து கழண்டு வந்திடுச்சு... அது சீலிங் போட்டப்பறம் போட்ட ஹூக்காம்.. அப்பறம் வேற ஹுக்ல மாட்டினாலும் என் வெயிட்க்கு பயந்தே அதுல உட்கார பயம் ... உட்காரவே பயம்னா எங்க ஆடறது ....

இப்போ திரும்ப எங்க வீட்டுக்கு வந்து அந்த ஊஞ்சலை இவர் முன்னாடி சொன்ன ஸ்ட்ராங் ஹுக்ல மாட்டியாச்சு... பக்கத்துலயே அப்போ மாறி ஒரு மாசம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாம வாங்கற நிறைய புக்ஸ் மேகசின்ஸ் .... ஆனா அது என்னவோ உள்ள இருந்த செந்தூரப்பூவே ஸ்ரீதேவியும் குச் நா கஹோ மனிஷா கொய்ராலாவையும் மட்டும் தேடி தேடி பாக்கறேன்.... ம்ஹும்ம்ம் அவங்கள மட்டும் காணவே காணோம் !!!!!

Tuesday, August 16, 2016

வர மறுத்த மனசு ...

துணி ஹாங்கர் கர்சீப் பெட் ஸ்ப்ரெட்
பேஸ்ட் ஹேர் ஆயில் ஷாம்பு சோப்
பிரஷ் சீப்பு ஹேர் கிளிப்ஸ் செப்டீ பின்
மொபைல் சார்ஜர் லேப்டாப் பென்ட்ரைவ்
சர்டிபிகேட்ஸ் முக்கியமான பேப்பர்ஸ் டிக்கட்ஸ்
பர்ஸ் டைரி அவசரத்துக்கு மருந்து மாத்திரை
சாம்பார் பொடி ரச பொடி பருப்பு பொடி
எக்ஸெட்ரா எக்ஸெட்ரா
பேக்கிங்கை எல்லாம் எடுத்து ஒன்றாக வைத்து
மனதிற்குள் செக் செய்து கொண்டே இருக்கிறேன்
ஏதோ ஓன்று குறைந்தது போலவே
எத்தனை யோசித்தும் என்னவென்று தெரியவில்லை
மறக்காம எல்லாத்தையும் எடுத்துகிட்டியா
கண்ணீரை மறைத்து அம்மா கேட்கும் வரை !!!

Friday, August 12, 2016

மறக்க முடியாதவை

என்னோட ஸ்கூல்ல மணின்னு ஒரு பையன் படிச்சான்.... ரொம்ப சாந்தமான, ஒரளவு நல்லா படிக்கற, நாலு வருஷம் ஒரே ஸ்கூல் யுனிபார்மை கிழியாம போட்டுக்கிட்டு, மத்தவங்க கொண்டு வர்ற டிசைன் டிசைனான பேகுகளை கண்ணில ஏக்கத்தோடு பார்த்துட்டே தோளில் ஜோல்னா பையோட வரும் ஒரு குருக்களோட பையன் ... எப்பவும் அவன் வீட்டிலிருந்து 25 நிமிஷம் நடந்தே ஸ்கூலுக்கு வர்றவன் எப்போவாவது அவன் அப்பா எதாவது வைதீக விஷயங்களுக்காக ஸ்கூல் இருக்கும் ஏரியா பக்கம் வந்தார்னா அவர் கூட சைக்கிள் ரிக்ஷால வந்து இறங்குவான்..... அப்போல்லாம் ஸ்கூலுக்கு நிறைய பேர் ஆட்டோல வருவாங்க... அவங்களை எல்லாம் பாத்து மணிக்கும் ஒரு நாளாவது ஆட்டோல ஸ்கூலுக்கு வரணும்னு அவ்வளவு ஆசை .... "எங்க அப்பா எப்பவும் ரிக்ஷால  தான் வருவார் .... ஆட்டோன்னு கேட்டா சார்ஜ் அதிகம் அதுவும் இல்லாம ரிக்ஷாகாராளாம் பாவம் டா ... சவாரியை நம்பித்தானே அவா இருக்கா ... நாம அதுல போலைனா பாவம் தானே அப்படீன்னு சொல்லுவாருடா " என்பான்... ஆமாம் அவன் அப்பாவை பாத்தாலே யாருக்கும் ரொம்ப பிடித்து விடும் ... எப்பவும் சிரிச்ச முகம் ... அந்த ரிக்ஷா ஓட்டுபவரை கூட அவ்வளவு மரியாதையாய் நடத்துவார்... ஒரு நாள் மணி ஸ்கூலுக்கு வரலை... அசெம்பிளில ஒரு அனௌன்ஸ்மாண்ட் "நம்ம ஸ்கூல்ல செவன்த் c ல படிக்கும் மணியின் தந்தை நேற்று இரவு இறந்து விட்டார் ... அவருக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்" அப்படின்னு ... பயங்கரமா ஷாக் ஆயிட்டோம்.. அவரை அதற்கு முன்னாடி நாள் தான் பார்த்தோம்.. அதிசயமா ஆட்டோல வந்து மணியை இறக்கிவிட்டார்... அப்ப கூட நல்லாதான்  இருந்தார்.. நாங்க எல்லாம் கூட ரொம்ப சந்தோஷமா இருந்த மணியை கேட்டோம் "என்னடா ஆட்டோல ஸ்கூலுக்கு வரணும்ங்கற உன் நீண்ட நாள் ஆசை நிறைவேறிடுச்சா" ன்னு .... "ஆமாடா என்னவோ இன்னைக்கு அப்பா ரொம்ப நாளா கேட்டுண்டே இருக்கியேடா வா ஆட்டோல ஸ்கூல்ல விடறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்தார் டா..." எனறான்... எங்க கிளாஸ்ல எல்லாரும் மணி வீட்டுக்கு போனோம்... அவன் அம்மா , அக்கா, தம்பி இவங்களை எல்லாம் கண்கொண்டு பார்க்கவே முடியல.. "என்னடா எப்படிடா ஆச்சு" ன்னு பசங்க கேட்டாங்க... "நேத்து காலைல என்னை ஸ்கூல்ல இறக்கி விட்டப்போ ஆட்டோ கம்பில தலையை சைடுல நல்லா இடிச்சுக்கிட்டார்.. அப்பறம் ஒண்ணும் வலி இல்லைன்னு டாக்டர் கிட்ட எல்லாம் போல ... நைட் திடீர்ன்னு காதுல பிளட் வந்தது....  ஒரு மாறி தலை எல்லாம் சுத்துதுன்னு  சொல்லிட்டே கீழ விழுந்து இறந்துட்டாருடா " ன்னு கதறி கொண்டு சொன்ன அவனை பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது ... அதற்கு அப்பறம் ஆட்டோவில் போவது அவனுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் விஷயமாக இருந்து இருக்குமா என்று இன்று வரைக்கும் என் மனசுல ஒரு கேள்வி இருக்கு !!!

Tuesday, August 9, 2016

Bag போய் ball வந்தது டும்டும்டும்டும் !!!

5 வருஷத்துக்கு முன்ன நான் வொர்க் பண்ணிட்டு இருந்தப்போ ஒரு நியூ இயருக்கு ஆஃபீசில எல்லாருக்கும் பீன் பேக் தந்தாங்க.. . அந்த பேக் வந்த கொஞ்ச நாள் நாங்க சாமான் செட்டோட குடும்ப சமேதரா அது மேலயே குடித்தனம் பண்ணதுல பாவம் அதுவும் எவ்வளவு தான் குடும்ப பாரத்தை தாங்கும்...
ஒரு நாள் தூசு தட்டறேன்னு அது மேல ஒரு துணிய வச்சு தட்டினேனோ இல்லையோ உடனே ஏதோ ஒரு இடத்தில் விரிசல் விட்டு டப்பென்று ஒரு கொத்து தெர்மோகோல் பீன்ஸ் தெறித்து , வீடெல்லாம் பறந்து , என் 2 வயசு பொண்ணு (அப்போ) மெய்மறந்து , அவ மூக்குக்குள்ள ஒரு பீன் மாட்டி, பதட்டத்துல நான் தும்ம சொன்னது புரியாம அவ மாத்தி புரிஞ்சுட்டு பிராணாயாமம் மாறி அதை உள்ள்ள்ள இழுத்து , டாக்டர்கிட்ட ஒடி, அவர் கொறடு மாறி ஒண்ண வச்சு மூக்குல நொண்டி எடுத்து அப்ப்ப்பப்ப்பா... அதுக்கப்பறம்  உடனே அதை எடுத்துட்டு ஒரு டெய்லர் கிட்ட போனா அவர் பீன் எல்லாம் காலி பண்ணித் தாங்கமா ங்கறார் ... மறுபடியுமா அய்யயோ ன்னு எப்படியோ அவரை சமாதானப்படுத்தி அப்படியே தெச்சு தாங்க ன்னா  அவர் முறைச்சுகிட்டே தையல் போட ட்ரை பண்ணார்... தையல் எல்லாம் நல்லாதான் போட்டார் ஆனா போட்டுட்டு பாத்தா இந்திரலோகம் செட் போட்ட மாறி அவர் கடையெல்லாம் தெர்மாகோல் பீன்ஸ் மயம் .... அந்த பீன்ஸ் புகை மண்டலத்துல டக்குன்னு காச அவர் கைல திணிச்சிட்டு அவர் வாயில இருந்த பீன்ஸ் அ க்ளியர் பண்ணிட்டு அர்ச்சனை பண்றதுக்கு முன்னால அப்படியே விட்டேன் ஜுட் ... அதுக்கு அப்பறம் அந்த பீன் பேக் only for kids ... பெரியவங்க எல்லாம்  (வேற யாரு நானும் என் பிராணநாதரும் தான் ) ஸ்ட்ரிக்ட்லி நோ .... ஆனா ஓட்டைன்னு ஒண்ண ஒரு தடவை பாத்த குழந்தையும் எதையும் நோண்டும் அதன் கையும் சும்மா இருக்குமா... அந்த தையல் போட்ட இடத்தை கையாலயும் இன்னும் பல இடங்களை பேனா பென்சில் ன்னு எல்லா ஆயுதங்களையும் பிரயோகம் பண்ணி எல்லா பீன்ஸ் உம் தவணை முறையில வெளியேறி கன்னா பின்னான்னு டயட் இருந்த டீனேஜ் பொண்ணு மாறி zero சைஸ் ஆனது பீன் பேக் ...
ரொம்ம்ப நல்லதா போச்சுன்னு அதை ஒரு பெரிய, நான் கட்டாமலேயே பழசான புது புடவையில் மூட்டை கட்டி பரண் மேல போட்டேன் (அதுக்குள்ள வேலைய ரிசைன் பண்ணிட்டதால அந்த bean bag ஏதோ பெரிரிரிய on job award ரேஞ்சுக்கு ஒரு feeling ..so தூக்கி போட மனசு வரலை )... ஒரு ஒரு மாசம் கழிச்சு வெளிய போன அப்பாவும் பொண்ணும் திரும்பி வரும்போது கைல  ஒரு பெரிய மூட்டை .... கேட்டா பீன் பேகுக்கு ரீபில் பண்ண தெர்மகோல் பீன்ஸ் ஆம் .... அட கடவுளே இவங்க ரெண்டு பேரும் பண்ற அக்கப்போர்  தாங்க முடிலயேன்னு நொந்துக்கிட்டே சரி அட்லீஸ்ட் இந்த தடவை உஷாரா  fill பண்றதுக்கு முன்னாடி தெச்சிடணும்னு அதே டெய்லர் கிட்ட போய் காளி மாறி  முறைச்ச அவருகிட்ட காலி பேகை காட்டி சாந்தப்படுத்தி தெச்சு ரீபில் பண்ணி யூஸ் பண்ண ஆரம்பிச்சோம்... பட் ஆல்ரெடி  வீக் பாடியா இருந்த அது ரொம்ப நாள் தாக்கு பிடிக்கலை.... அப்போதான் வசமா மாட்டினேன்.... full capacity பீன்ஸ் ஒட இருந்த அதை வீட்ல பரண் மேலயும் போட முடில (நாம தான் வீட்ல பரணை மட்டும் எப்பவும் முழுசா ரொப்பி இருப்போமே இதுல பீன் பேகுக்கு எல்லாம் ஏது இடம்)... அதுல உட்காரவும் முடில (இந்திரலோகம் எபெக்ட் ).... எப்பவும் விஜிலென்ஸ் மோட்ல வீட்ல வேற யாரும் மெய்மறந்து அதுல உட்காராம பாத்துக்கற டூட்டி வேற ..... ஊர்ல எல்லா வீட்லயும் பீன் பேக்ல உக்காருவாங்க ... எங்க வீட்ல தான் இருக்கற சோபா சேர் டேபிள் இப்படி எல்லாத்து மேலயும் பீன் பேக் சிம்மாசனம் போட்டுட்டு உக்காந்து இருக்கும் (எவ்வளவு அவாய்ட் பண்ணியும் சில சமயம் அந்த எக்சர்சைஸ் பண்ற சைக்கிள் மேலயும் தான் )... ஒரு 2 வருஷம் பாத்தேன் ... ஒரு ரெண்டு வாரம் முன்னாடி தான் சென்டிமென்ட்ஸ் எல்லாம் மூட்டை கட்டி அந்த பீன் பேகை டிஸ்போஸ் பண்ண போய் அதை ஆர்வமாய் பாத்த அபார்ட்மெண்ட் செக்யூரிட்டிக்கு அதை பத்தின்ன முழு கதையும் இன்ன பிற முன்னெச்சரிக்கை report, disclaimer எல்லாம் கொடுத்து அப்பவும் அவன் இன்டரஸ்ட்டட் ன்னு கன்பார்ம் பண்ணிக்கிட்டு  அவனுக்கு கொடுத்தேன் (no return accepted ன்னு condition வேற )... சரி புதுசா  பீன் பேக் வாங்கலாமான்னு கேட்டவரை தயவு செஞ்சு அது மட்டும் வேணாம்னேன்.. அப்பறம் என்னவோ ஹாலே பிரீயான மாறி ஒரு நல்ல பீலிங்...

பொறுக்காதே.... இப்போ நேத்து ராத்திரி என்னருமை கணவர் "இன்னும் ரெண்டு நாள்ல ஒரு பெரிய பார்சல் வரும்.... என்னடான்னு முழிச்சிட்டு வாங்காம விட்டுடாத... நான் தான் ஆர்டர் பண்ணி இருக்கேன்" அப்படினார்... அப்படி என்ன ஆர்டர் பண்ணார் ன்னு கேட்டா இதோ இங்க போட்டோ போட்டு இருக்கேனே அந்த மெகா சைஸ் எக்சர்சைஸ் பாலாம்... அட தேவுடா இதுக்கு எந்த டெய்லரை பாக்கறது அப்படின்னு நொந்துக்கிட்ட என் மைண்ட்   வாய்ஸ் கேட்டு இருக்கும் போல ... "கவலைப்படாத இது air அடிக்கறது தான் ... so சுருட்டி பரண்ல வெக்க முடியும் " ன்னு நமட்டு சிரிப்போட சொல்றார் !!!

Monday, August 8, 2016

அது என்ன மாயமோ
ஞாபக ஊற்றுக்கு மட்டும்
எப்போதும் வறட்சி ஏற்படுவதில்லை
ஆனால் வெள்ளம் மட்டும் தவறாமல் !!!

Tuesday, August 2, 2016

என்னுயிர் தோழி ....

நானும் மதுவும் ஸ்கூல் போன காலத்திலிருந்தே பிரெண்ட்ஸ்... ஸ்கூல் முடித்து காலேஜில் பி.எட் படித்ததும் ஒன்றாகத்தான்.... நான் வாயை திறக்கவே யோசித்தால் அவள் வாயை மூடவே யோசிப்பாள்.... நான் ஹம்ம்ம் என்றாலே பயந்து அழுதால் அவள் இடியே விழுந்தாலும் சிரித்து கொண்டிருப்பாள்.... ஒரளவு வசதி உள்ள குடும்பம் என்னுடையது... ஒரு ஏழை குமாஸ்த்தாவின் மூன்றாவது  பெண்  மது.... நான் பயங்கர சென்டிமென்ட் .... ஒரு நாள் பச்சை கலர் ட்ரெஸ்ஸில் போய் அன்று கிளாஸ் டெஸ்டில் நல்ல மார்க் வாங்கி விட்டு அன்றில் இருந்து காலேஜ் முடிக்கும் வரைக்கும் எந்த டெஸ்ட் எக்ஸாமாக இருந்தாலும் தவறாமல் பச்சை கலர் ட்ரஸில் போனவள்... இதற்காகவே ஆல் ஷேட்ஸ் ஒப் கிரீனில் ட்ரஸ் வாங்கி வைத்திருப்பேன்.. பத்தாவது படிக்கும் போது அப்பா ஒரு ஹீரோ pen வாங்கித்  தந்தார்... அதில எழுதி நல்ல மார்க் வந்ததால அதுக்கு அப்பறம் வந்த எல்லா எக்ஸாம் அப்ளிகேஷன் எல்லாத்துக்கும் அந்த ஹீரோ pen தான் .... இவ்வளவு ஏன் ஒத்தை பின்னலில் போன ஒரு சின்ன காம்படீஷனில் கான்ஸோலேஷன் ப்ரைஸ் வாங்கியதால் அதுக்கு அப்பறம் எப்பவும் ஒத்தை பின்னல்... "என்னடி இது இப்படி இருக்க... இவ்வளவு எல்லாம் சென்டிமென்ட்ஸ் பாத்தா அப்பறம் ரொம்ப கஷ்டம்டி.... இப்ப நான் கூட இருக்கும் போது ஏதாவது அதிர்ஷ்டம் வந்தா அப்பறம் என்னை கட்டிகிட்டே சுத்துவியா ..." ன்னு கிண்டலா கேப்பா மது.... காலேஜ் முடிச்சதும் வேலை தேடி ஒன்றாக சுத்தினோம் ...  மது அளவிற்கு எனக்கு வேலைக்கு போகும் அவசியம் இல்லை தான் ... இருந்தாலும் வேலைக்கு போணும்ன்னு ஒரு ஆசை .... இருக்கும் எல்லா classified காலமையும் அலசி அப்ளிக்கேஷன் போடுவோம்...  ஒரு வருஷம் தேடி எனக்கு ஒரு பிரைவேட் ஸ்கூலில் வேலை கிடைத்தது.... அதில் சேர்ந்த பிறகு மதுவை பார்ப்பது கொஞ்சம் குறைந்தது.... அவளும்  அவள் அம்மாவிற்கு உடம்பு முடியாமல் போனதால் அதிலேயே கவனம் போய் விட்டது.... நடுவே பார்க்கும் போதெல்லாம் "எனக்கு ஒரு வேலை கிடைச்சா ரொம்ப உதவியா இருக்கும் ... ஏதாவது vacancy தெரிய வந்தா கட்டாயம் சொல்லுடி.... அம்மாவை விட்டுட்டு வேலைக்கு எப்படி போவேன்னு நினைச்சு சொல்லாம விட்டுடாத.... அது எல்லாம் மேனேஜ் பண்ணிக்கலாம்.... பட் ஒரு வருமானம் வந்தா நல்லது ..." அப்படின்னு சொல்லுவாள்.... அன்னிக்கு எங்க காலேஜ் HODய கடைவீதில பாத்தேன்... என்னை பாத்த உடனே வேகமா வந்தாங்க .... "நானே மதுவையோ உன்னையோ காண்டாக்ட் பண்ணணும்னு இருந்தேன்மா... நல்லா இருக்கியா..." என்றார்...  நான் நல்லா இருக்கேன்னு சொன்னதும் அது ஒண்ணும் இல்லமா பக்கத்து ஊர் government high ஸ்கூல் பிரின்சிபால் என்னோட மாமா தான் ... அந்த ஸ்கூல்ல   ஒரு லீவ் வேகன்ஸீ வருது... என் மாமா "ஏம்மா உன்னோட ஸ்டுடண்ட்ஸ் யாராவது இருக்காங்களா.... அட்வெர்டைஸ்மண்ட் கொடுக்கணும்... பட் அதுக்கு முன்னாடி தெரிஞ்ச நல்லா டீச் பண்ணக்கூடிய டீச்சர் இருந்தா அவங்களையே அப்பாய்ண்ட் பண்ணலாம்... லீவ் வெகன்ஸீ னாலும் உள்ள வந்துட்டா நல்ல டீச்சர்ன்னா பர்மனண்ட் பண்ணிடலாம் அது ப்ராபளம் இல்ல... ஏன்னா இப்போ லீவில போகப்போற டீச்சர் அவ்வளவு சரி இல்ல ..." அப்படின்னு சொல்லிட்டு இருந்தார் ..... நான் மதுவையோ உன்னையோ தான் நினைச்சேன்..... மதுவை கேட்டுட்டு அவளால முடிலனா உன்னை கேட்கலாம்னு நினைச்சேன் ... நீங்க ரெண்டு பேரும் எங்கயாவது வேலைக்கு போறீங்களா என்றார் ... goverment வேலை என்றதும் ஒரு செகண்ட் யோசித்து நான் வேலைக்கு போவதை சொல்ல வேண்டாம்ன்னு முடிவு எடுத்தேன்... "மேம் மதுவோட அம்மாக்கு  ரொம்ப உடம்பு சரி இல்ல... அதனால அவளுக்கு வேலைக்கு போற ஐடியாவே இல்ல... நான் வேணா அப்ளை பண்ணவா " என்று கேட்டேன் .... "ஒ யெஸ் தாராளமா... நீ ஒரு அப்ளிகேஷனை எழுதி என்கிட்டே கொடு.. நான் பாத்துக்கறேன்..." என்றார் ... அப்ளிகேஷனை கொடுத்து ஒரு மாசம் கழித்து ஆர்டர் வந்தது ... இதற்கு நடுவில் ஒரு தடவை மதுவை ரோடில் பார்த்து ஆர்வமாக பேச வந்த அவளை ஏதோ அவசர வேலையாக போவது போல காட்டிக்கொண்டு நைசாக அவொய்ட் செய்து நழுவி  வந்து விட்டேன் ...  மறுநாள் வேலையில் சேர்வதற்காக பாக்கிங் செய்து கொண்டிருந்த போது மது வந்திருப்பதாக அம்மா சொன்னாள் .... ஒரு நிமிடம் தடுமாறி பின்ன போய் "வாடி என்ன அதிசயம்... இவ்வளவு நாளா ஆளையே காணோம்" என்றேன் .... ஒரு செகண்ட் என்னையே பார்த்தவள் "ஹேய்ய் நேத்து நம்ம HODய எதேச்சையா பாத்தேன் ... அவங்க தான் நீ நாளைக்கு வேலைக்கு சேர போற விஷயத்தையே சொன்னாங்க .... ஏண்டி என்கிட்ட எல்லாம் சொல்ல மாட்டியா.... சொன்னா நான் சந்தோஷ பட மாட்டேனா... " என்றாள் .... ஒரு நிமிடம் பக் என்று இருந்தது என் குட்டு HODயிடம் வெளிப்பட்டு விட்டதோ என்று .... அப்போது கூட மதுவிற்கு  செய்த துரோகம் உறுத்தவில்லை... HOD க்கு தெரிந்து இந்த வேலை போய் விடுமோ என்ற பயம் தான்..... "என்னடி இப்படி முழிக்கிற... உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு தெரியுமா " என்று சொன்ன அவளை புரியாமல் பார்த்தேன் ... "ஞாபகம் இருக்கா நம்ம காலேஜ் பைனல் எக்ஸாம் முடிஞ்ச அன்னைக்கு உன்னோட ராசியான ஹீரோ பேனாவை  காணலைன்னு பிழிய பிழிய எழுதியே.... போன மாசம் ஒரு நாள் நான் என்னோட பழைய திங்க்ஸை கிளீன் பண்ணிட்டு இருந்தப்போ என்னோட பேக்ல அந்த பேனா இருந்தது .... உன்னோட பேக்ல போடறதுக்கு பதிலா என் பேக்ல போட்டுருக்க... நானும் காலேஜ் முடிஞ்சதும் அந்த பையை யூஸ் பண்ணாம என்னோட ஷெல்ப்பில வெச்சிருந்து இருக்கேன் ... அந்த பேனா கிடைச்சதும் அதை உன் கைல கொடுத்தா நீ எவ்வளவு சந்தோஷ படுவேன்னு நினைச்சேன் ... உனக்கு அடுத்த மாசம் பர்த்டே வருதே அப்போ அதை கொடுத்து சந்தோஷப் படுத்தலாம்னு நினைச்சிட்டு இருந்தேன் ... ஆனா அதுக்குள்ள நீ வேலையில சேர போறன்னு தெரிஞ்ச உடனே இப்போவே உனக்கு பிளசன்ட் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு தான் வந்தேன் ... இந்தா உன்னோட ராசியான பேனாவில் கையெழுத்து போட்டு வேலையில் சேரு ... அங்க போய் என்னை மறந்துராத ... கண்டிப்பா போன் பண்ணு ..." என்றாள் .. நான் உள்ளே சுக்கு நூறாய் நொறுங்கி கண்ணில் நீர் வழிய நிற்பதை கண்டு "ஹேய்ய் அசடு.... நீ என் பிரெண்ட் டீ ... சந்தோஷமா போய் ஜாயின் பண்ணு.. " என்று என்னை கட்டி அணைத்து விட்டு கிளம்பினாள்..  அவள் போய் எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேனோ  "என்னடி இன்னும் பேக்கிங்கை முடிக்காம அப்படியே உட்கார்ந்து இருக்க... காலைல சீக்கிரம் கிளம்பணும் ... சட்புட்ன்னு முடிச்சிட்டு சாப்பிட வா... " என்ற அம்மாவின் குரல் என்னை உலுக்கியது....
சட்டென்று எழுந்து ஒரு பேப்பரை எடுத்து என்னுடைய ராசியான ஹீரோ பேனாவினால்  வேகமாக எழுத ஆரம்பித்தேன் "டியர் மேம் ஒரு நல்ல டீச்சர் என்ற தகுதியை நான் இழந்து விட்டதால் இந்த  வேலையில் என்னால் சேர முடியாது... என்னை மன்னித்து விடுங்கள்.... முடிந்தால் இந்த வேலையை மதுக்கு வாங்கித்தாங்க..."  !