Friday, August 26, 2016

தற்பெருமை..

சில வருஷங்களுக்கு முன்னால நான் ஒரு ஐடி கம்பனில வேலை செஞ்சிட்டு இருந்தப்போ நடந்தது..அங்க இந்த ஹவுஸ் கீப்பிங் வேலைகளுக்கு எல்லாம் காண்ட்ராக்ட் பேசிஸ்ல அவுட்சோர்ஸிங் பண்ணி இருப்பாங்க... அதுல வேலைக்கு வர்ற பெண்கள் அடிக்கடி மாறிக்கிட்டே இருப்பாங்க ... எரிஞ்சி எரிஞ்சி விழற சூப்பர்வைஸர் ஒருத்தர் இருப்பார் .... ஒரு பெண் புதுசா எங்க ப்ளோர் ரெஸ்ட் ரூமுக்கு வர ஆரம்பிச்சாங்க ... பாக்கவே ரொம்ப பொறுமையா அமைதியா இருப்பாங்க .... மத்தியான வேளையில ரெஸ்ட் ரூமுக்கு போனா, அங்க ஒரு பத்து நிமிஷம் ரெஸ்டுக்காக உட்காந்து  இருக்கறவங்க டக்குனு எழுந்து நின்னுடுவாங்க... எனக்கு ரொம்ப கஷ்டமா போய்டும்... ஒரு நாள் நானே "ஏன் எழுந்துக்கறீங்க... உட்கார்ந்துக்கோங்க.. " அப்படின்னு சொல்லியும் "இல்ல மேடம் பரவால்ல ..." அப்படின்னு நின்னுக்கிட்டே இருந்தாங்க .... அதுல இருந்து நான் முடிஞ்ச வரைக்கும் அந்த டைம்ல ரெஸ்ட் ரூம் போறதை அவாய்டு பண்ணிடுவேன்... கொஞ்சம் நேரம் கழிச்சு போவேன் .... ஒரு நாள் நான் போனப்போ அவங்க அங்க மூலைல உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தாங்க ... என்னை பார்த்ததும் டக்குனு டிபன் பாக்ஸ  மூடிட்டு எழுந்துட்டாங்க... எனக்கு என்னவோ ரொம்ப பாவமா இருந்தது .... "ஏன்க்கா இப்படி பாத்தாலே எழுந்துக்கறீங்க... நாங்க வந்தா என்ன.... நீங்க உங்க வேலைய முடிச்சிட்டு தான உட்கார்ந்து இருக்கீங்க... அது சரி இங்க போய் ஏன் சாப்பிடறீங்க... வேற எங்கயாவது சாப்பிடலாம் இல்ல ... " அப்படின்னு கேட்டேன் ... நான் அவங்கள அக்கா ன்னு கூப்பிட்ட உடனே அவங்க முகத்துல வந்தது பாருங்க ஒரு சந்தோஷம்... "இல்ல மேடம் சூப்பர்வைஸர் திட்டுவாரு.. ரொம்ப பசி காலைல சாப்பிடல...அதான் ..." அப்படின்னு சொன்னவங்க முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் ... "சரி நான் வயசுல ரொம்ப சின்னவ மேடம்ன்னு எல்லாம் கூப்பிடவேணாம் ... " அப்படின்னு சொன்னதுக்கு "அய்யோ பரவாலீங்கமா ..." அப்படினாங்க .... அதுல இருந்து டெயிலி என்னை எங்க பாத்தாலும் "குட் மார்னிங்மா ... சாப்டீங்களா... " அப்படின்னு தவறாம கேப்பாங்க....நானும் "குட் மார்னிங் க்கா ..." அப்படின்னு  சொல்லிட்டு சிரிச்சுட்டு வந்துருவேன்...  "பரவால்ல இப்படி அவங்க மனசு சந்தோஷப்படற மாறி பெருந்தன்மையா நடந்துக்கறேனே... நாம எவ்வளவு சிம்பிள் ஹம்பில் " அப்படி அப்படின்னு மனசுக்குள்ள என்னை பத்தி தற்பெருமையா நினைச்சுப்பேன்....  நம்ப வடிவமைப்பு தான் அப்படிப்பட்டதாச்சே...

அப்பறம் நான் கான்சிவ் ஆகி கொஞ்ச மாசம் ஆன்சைட்ல இருந்தேன் .... எட்டாவது மாசம் திரும்ப இந்த ஆபீஸ்க்கு வந்தேன் ... வேற பிளாக் வேற ப்ளோர் .... ஒரு பத்து நாள் கழிச்சு கஃபேடேரியாக்கு போய்ட்டு இருந்தப்போ "அம்மா.. அம்மா நில்லுங்கம்மா... எங்க போய்ட்டிங்க .... ரொம்ப நாளா உங்களை பார்க்கவே முடிலயே ..." ன்னு கேட்டுக்கிட்டே பின்னாடி இருந்து ஓடி வந்தாங்க அந்த அக்கா ... என் வயித்த பாத்திட்டு "ஏன் தாயி நிறைமாசமா இருந்துக்கிட்டு ஏன் இப்படி கஷ்டப்படற .... உன்னை பாத்தாலே எனக்கு பாவமா இருக்கு.... லீவ் எடுத்துக்கிட்டு போலாம்ல .." அப்படின்னு வாஞ்சையோடு கேட்டாங்க ... "நான் ரெண்டு நாள் முன்னாடி தூரத்துல இருந்து பாத்தேன் ... கூப்பிடறத்துக்குள்ள போய்ட்ட..  இந்தா இது எங்க வூட்டுல பூத்த பூ வெச்சிக்க...." ன்னு  பூ வேற தந்தாங்க .... அப்பவும் as usual i was feeling very proud about how i touched her heart with my simplicity, smile blah blah ...

அப்பறம் என் பொண்ணு பிறந்து நிறைய நாள் லீவ் எடுத்திட்டு ஜாயின் பண்ணி ஒரு மாசத்துலயே வேற கம்பெனில ஜாப் கிடைச்சு இங்க ரிசைன் பண்ணிட்டேன்... பைனல் வீக்ல நோ ட்யூஸ் எல்லாம் வாங்க சுத்திக்கிட்டே இருந்தப்போ அந்த அக்காவை எதேச்சையா பாத்தேன் .. "நான் ரிசைன் பண்ணிட்டேன்க்கா .." என்றதும் "என்னையெல்லாம் மறந்துராதமா ..." அப்படின்னு நெகிழ்ச்சியோடு சொன்னார்கள் ....

கொஞ்ச வருஷம் கழிச்சு எங்கேயோ ஏதோ பேசிட்டு இருக்கும் போது, யாரா  இருந்தாலும் எப்படி மரியாதையா நடத்தணும் அப்படின்னு என் பிரதாபத்தை அளந்துட்டு இருந்தப்போ தான் சட்னு தோணிச்சு "அது சரி இவ்வளவு பேசறோமே இது வரைக்கும் அந்த அக்கா பேரையாவது என்னன்னு கேட்டு இருக்கோமா" ன்னு ....

ம்ஹ்ம் என் மனசு விரிய வேண்டியதும், நான் வளர வேண்டியதும்  இன்னும் நிறைய  நிறைய !!!

2 comments:

  1. நல்ல இருக்கு அனுபவமும், எழுத்து நடையும்'!

    ReplyDelete