Monday, July 25, 2016

என் அன்பு ஸ்ரீராமபிரான் ஏன் இப்படி தன்னையே வருத்தி கொள்கிறார்... என்னால் தாங்க முடியவில்லையே .... ஒரு முறை என் தாய் சீதாமாதாவை பிரிந்து ஜீவனே இல்லாது காடு திரிந்து  கடல் தாண்டி தவியாய் தவித்தாரே .. அதையே என்னால் சகித்து கொள்ள முடியவில்லையே .... சீத்தம்மாவை கண்டேன் என்று சொன்னால் அந்த கண்டேன் என்ற ஒரு சொல் கேட்க ஆகும் அந்த ஒரு நொடி தவிப்பை கூட அவருக்கு தர வேண்டாம் என்று தானே "கண்டேன் சீதையை" என்று சொன்னேன் .... என் தாய் தீயிலேயே குளித்த  போது அதற்கு இணையான வெப்பத்தில் அவர் நெஞ்சு வெந்தது எனக்கு தெரியாது என்று நினைத்தாரோ .... என்ன நினைத்து அதை செய்தாரோ அதற்கு அர்த்தமே இல்லாது போய்விட்டதே .... எங்கே என் சீதாமாதா .... கர்ப்பிணியான அவளையும், அவளோடு சேர்த்து தன் ஜீவனையும் எதற்கோ எங்கோ அனுப்பி விட்டு என் ப்ரபோ என்ன செய்ய எத்தனித்து இருக்கிறார்.. அனுமனால் துயரம் தாங்க முடியவில்லை .... நேரே அவன் உயிருக்கு உயிரான பிரபுவிடம் சென்றான்.. "பிரபோ .... இது என்ன விதி ... எதற்காக யாருக்காக இந்த முடிவு... மாதா இல்லாத நீங்கள் இங்கே என்ன செய்ய போகிறீர்கள்... இந்த முறை நான் உங்கள் உத்தரவிற்கோ சீத்தம்மாவின் அனுமதிக்கோ காத்திருக்க போவதில்லை... இப்போதே போய் சீதாமாதாவை இங்கே அழைத்து வரப்போகிறேன்... " என்றான்.
"பிரிய அனுமன்... க்ஷத்ரிய குலத்தில் பிறந்து நாடாளும் மன்னனாக எனக்கு இருப்பது சில முக்கியமான கடமைகள்.... என் ஒருவனின் உணர்வுகளுக்கு மட்டும் மதிப்பளித்து வாழ நான் கொடுத்து வைக்கவில்லை... இதுதான் என் விதி..." என்றான் ராமன்.
"இல்லை பிரபோ நான் இருக்கும் வரை நீங்கள் இப்படி துயரத்தில் தவிப்பதை என்னால் அனுமதிக்க முடியாது ... உங்களையும் சீதாமாதாவையும் சேர்த்து வைக்காமல் என் பிறவி முழுமை அடையாது..." என்று கூறிவிட்டு எங்கே அங்கேயே இன்னும் ஒரு நொடி நின்றாலும் ராமன் அவனை தடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் வெளியே வந்தான்.
"அயோத்திய மக்களே...உங்களுக்காகவே தன் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் என் ப்ரபோவின் அருமை என்றாவது உங்களுக்கு தெரிந்து இருக்கிறதா..  தன் பிள்ளைகளை போல் உங்களை எண்ணும் அவரின் துயரை போக்க வேண்டும் என்று அவர் மேல் உண்மையான அன்புடன் நீங்கள் யாராவது நினைத்து இருக்கிறீர்களா... கர்ப்பிணியான மனைவியை விரட்டி விட்டான் என்று என் பிரபுவிற்கு யுகம் யுகமாய் நிலைத்து நிற்க போகும்  அவப்பேரை தான் அவருக்கு தர போகிறீர்களா... இப்போதே என்னோடு சேர்ந்து வாருங்கள் .... போய் சீதாமாதாவை அழைத்து வருவோம் ... நீங்கள் அழைத்து வந்தால் ராமபிரான் ஏற்றுக்கொள்வார்...." என்று அழைத்து பார்த்தான்...மானிடர்கள் அல்லவா... யாரும் மசியவில்லை ....
ராமருடைய துயரை கண்டு செய்வதறியாது தவித்து "ஸ்ரீ ராம பிரபோ... ஸ்ரீ ராம பிரபோ" என்று அனுமனின் மனம் துவங்கிய அரற்றல்  யுகங்கள் கடந்து இன்னும் தொடர்வதாகவே எனக்கு தோன்றுகிறது !!!

Note:
ஸ்ரீராமர் மீது அளவற்ற பக்தியும் அன்பும் வைத்திருக்கும் அனுமன் ஸ்வாமியின் பார்வையில் ஒரு சிறிய முயற்சியே இது... யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கமில்லை... நானே ஒரு ardent devotee of Lord Hanuman.

No comments:

Post a Comment