Sunday, September 25, 2016

கடவுளுக்கும் சில சமயம் கண் தெரிவதில்லை....

"டேய்ய் குமார் .....  வேணான்டா.... ஜட்ஜ் மாமா கிட்ட மாட்டின அவ்வளவுதான்.... நல்லா வாங்குவ .... சொன்னா கேளுடா ...." என்று கத்திய என்னை அலட்சியமாக பார்த்த குமார் அந்த வீட்டு கம்பௌண்ட் தாண்டி உள்ளே குதித்தான்..... மெதுவா நடந்து வீட்டு காலிங் பெல்லை விடாமல் அமுக்கி அலற விட்டு சர்ர்ன்னு வேகமா அவங்க வீட்டு மாமரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டான் ...

அந்த அக்ரஹாரத்துல நான் , குமார்,  சீனி , ரவி, சர்குணம்ன்னு பெரிய கேங் ... எல்லாரும் அங்க இருந்த பாய்ஸ் ஹை ஸ்கூல்ல ஏழாவது, எட்டாவதுன்னு படிச்சிட்டு இருந்தோம்... பெரிய  கம்பௌண்ட் வெச்ச அந்த கடைசீ  வீட்டுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி
ஜட்ஜ் மாமா குடி வந்ததுல இருந்து இதே வேலை ... அவர் வீட்ல அவரும் மாமியும் தான் .... அந்த மாமா பாத்தாலே டெர்ரரா இருப்பார் (கவுரவம் சிவாஜி மாதிரி)... ஆனா மாமி பார்க்கவே சாந்தமா மஹாலக்ஷ்மி மாறி இருப்பாங்க ... என்ன கொஞ்சம் சிரிச்சா இன்னும் அழகா இருப்பங்களேன்னு தோணற அளவுக்கு முகத்தில எந்த உணர்ச்சியும் இருக்காது... வீடு விட்டா சிவன் கோவில்ன்னு ரொம்ப அமைதியா இருப்பாங்க .... எங்க தெரு மத்த மாமிகளாம் "அவ ஆத்துக்காரர் பெர்ர்ரிய ஜட்ஜோன்னோ .... அதான் கர்வம் ..." அப்படின்னு பேசிப்பாங்க...

ஜட்ஜ் மாமா குடி வந்த உடனே வாசல்ல "தயவு செய்து காலிங் பெல்லை அடிக்காதீர்கள்" ன்னு ஒரு போர்ட் தான் மாட்டப்பட்டது ... ஒரு தடவை அவங்க வீட்டு மாமரத்துல இருந்த மாங்காயை பறிச்சுக்கலாமான்னு கேக்கறதுக்காக குமார் தெரியாம காலிங் பெல் அடிச்சிட்டான்... ரொம்ப நேரமா கதவு திறக்கலைனதும்  திரும்ப அடிச்சான் .... கொஞ்ச நேரத்துல கதவை திறந்த ஜட்ஜ் மாமா குமார் காதை பிடிச்சு திருகி "ஏன்டா பெல் அடிக்க வேண்டாம்னு தான் தெளிவா போர்ட் போட்டுருக்கே... அறிவு இல்ல ...  ஏன்டா இப்படி உயிரை வாங்கறீங்க... " அப்படின்னு ரொம்ப கடுமையா  திட்டிட்டார்... குமார் ரோஷக்காரன்.. "அது என்னடா ஏதோ கவனம் இல்லாம பெல் அடிச்சிட்டேன்.... அதுக்கு போய் இப்படி காதை எல்லாம் திருகி கன்னா பின்னான்னு திட்டறார்... அது சரி அடிக்க தானே காலிங் பெல் ... அடிக்க கூடாதுன்னா அதை கழட்டி வெக்க வேண்டியது தானே ..."  அப்படின்னு பொருமி தள்ளிட்டான்...

அதுல இருந்து வேணும்னே அந்த வீட்டை தாண்டி போகும்போதெல்லாம் எங்க குரூப்ல எவனாவது போய் அந்த பெல்லை அடிச்சிட்டு ஒளிஞ்சுக்குவான் ... கொஞ்ச நேரத்துல அந்த மாமா வெளிய வந்து கத்துவார்.. எங்க தொல்லை தாங்க முடியாம எங்க வீட்லலாம் வந்து கத்திட்டு போவார் ... எங்க கணக்கு வாத்தியார் நரசிம்மமூர்த்தி கிட்ட கூட சொல்லிப் பாத்துட்டார்... அவர்னா எங்களுக்கு ஒரு பயம் ... ஆனா இந்த விஷயத்தில குமார் ரொம்ப உறுதியா இருந்தான் ... ஒரு கட்டத்துல எங்க தொல்லை தாங்காம அந்த பெல்லை கழட்டணும்னு முடிவு பண்ணார்... அந்த காலிங் பெல் அவங்க வீட்டு முற்றத்துக்கு மேல உயரமா வெச்சுருந்தாங்க ... அதை கழட்ட ஆள் தேடினார்ன்னு கேள்விப்பட்டு "அவர் அதை கழட்டறதுக்குள்ள ஒரு வழி பண்ணனும்டா..." ன்னு சொல்லி வேணும்ன்னே தினமும் போய் அடிக்க ஆரம்பிச்சான்...

அன்னைக்கும்  அப்படி அடிச்சிட்டு தான் மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டான்.. கொஞ்ச நேரத்துல ஜட்ஜ் மாமா வீட்ல இருந்து அவரோட குமாஸ்தா வேகமா வெளிய ஓடி வந்தார் ... வெளிய போய்ட்டு திரும்பி வந்தப்போ "இப்படி அடிக்கடி வந்தா அப்பறம் சீரியஸ் ஆய்டும்.... ஏன் இப்படி நடக்குது ..." ன்னு சொல்லிட்டே கூடவே ராமானுஜம் டாக்டர் வரார்.... எங்களுக்கு ஒண்ணும் புரியல.... கொஞ்ச நேரத்துல அந்த மாமிய தூக்கிட்டு ஹாஸ்பிட்டல்க்கு போனாங்க... என்னன்னு புரியலைனாலும் கொஞ்ச நாளைக்கு அந்த காலிங் பெல்லை அடிக்காம இருந்தோம்... ஒரு வாரம் கழிச்சு அந்த மாமி ஆளே பாதியா போய் திரும்ப வீட்டுக்கு வந்தாங்க ...

அப்பறம் 2 நாள்ல அவங்க வீட்டை காலி பண்ண சாமான்லாம் வண்டில ஏத்திட்டு இருந்தாங்க ... அதை பாத்த குமார் "பாத்தியாடா ... வீட்டையே காலி பண்ணிட்டு ஓடறார்..." அப்படின்னு சிரிச்சான்.... எங்களை பாத்த அந்த குமாஸ்தா நேரா வந்து "ஏன்பா சின்ன பசங்களா இருக்கீங்க ... எவ்வளவு சொன்னாலும் கேக்காம பெல்லை அடிச்சு அடிச்சு பாவம் இப்படி வீட்டையே காலி பண்ண வெச்சுட்டிங்களே ... பாவம் அந்த மாமி பரம சாது ... ஸ்கூல் போன அவங்க குழந்தை ரோட்டில அடிப்பட்டு இறந்துடுச்சுன்னு அவங்க வீட்டு காலிங் பெல்லை அடிச்சு தான் சொல்லி இருக்காங்க ... அதுல இருந்து பெல்லை யாராவது  அடிச்சாலே மாமிக்கு பிட்ஸ் வந்துரும் ... இங்க குடி வந்ததுல இருந்து அடிக்கடி பிட்ஸ் வந்து ரொம்ப சீரியஸா போயிடுச்சு ... அதான் வீட்டையே காலி பண்ணறாங்க ... போங்கப்பா உங்கள எல்லாம் நல்ல பசங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன் ..." என்றாரே பார்க்கணும்..
மளுக்கென்று உள்ளே ஏதோ உடைய கண்ணில் வழிந்த கண்ணீரோடு அங்கிருந்து வீட்டு வாசலில் இருந்த
மாமியை பார்த்தோம் ... அழும் எங்களை ஒண்ணும் புரியாமல் பார்த்த மாமி நாங்கள் பார்த்த அவ்வளவு நாட்களில் முதல் முறையா மென்மையா சிரித்தார் ...

கடவுளுக்கும் சில சமயம் கண் தெரிவதில்லை...

No comments:

Post a Comment