Thursday, September 29, 2016

சாப்பிடுவதும் ஒரு கலைதான் !!!

சமைப்பது ஒரு கலைனா  (நான் சமைக்கறத சொல்லல... இன் ஜெனரல்) ரசனையோடு சாப்பிடுவதும் ஒரு கலைதான்...  சமைப்பதில் எக்ஸ்பர்ட்டோ இல்லயோ முன்னொரு காலத்துல நான் சாப்பிடுவதில் பயங்கர எக்ஸ்பர்ட்...

ஸ்கூல்ல இருந்து வரும்போதே இன்னைக்கு என்ன மெனுன்னே யோசிச்சிட்டு வர்ற ஆள் ... எங்களுக்கு பாட்டு சொல்லித்தர பாட்டு மாமி பாவம் ஹால்ல வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க .... "மாமி ரொம்ம்ப பசிக்கறது ... ஒரு டூ நிமிட்ஸ் பிளீஸ்..." ன்னு சொல்லி அசுர வேகத்துல ஒரு தாம்பாளம் நிறைய இடியாப்பத்தை உள்ளே தள்ளுவேன் (ஒரு படத்துல நடு ராத்திரி ராதிகா "மாமா இருந்த கொஞ்சுண்டு மாவுல இட்லி பண்ணிருக்கேன் ... எழுந்துருங்க மாமா " அப்படின்னு ஒரு தாம்பாளத்த ரஜினியை எழுப்பி காட்டுவாளே அதே தாம்பாளம் தான்).... தோசை , இட்லி எல்லாம் டஜன் கணக்கு தான் ... பூரி கேக்கவே வேணாம்  "என்னடி ஹோட்டல் சர்வர் நிறைய பேருக்கு அடுக்கிட்டு வரத நீ உன் ஒருத்தி பிளேட்ல அடுக்கிட்டு வர்ற..." அப்படின்னு என் உடன்பிறப்பு கேலி பண்ணாலும் அசராம ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டவ...

காலேஜ் ஹாஸ்டல் ... இருந்தாலும் சாயங்காலம் தாம்பாளத்தை முழுங்கிய வயறு சும்மா இருக்குமா... முதல் வருஷம் பல்லை கடிச்சிட்டு ஓட்டிட்டேன் (ஏன்னா வெளிய நாட் அல்லோவ்ட் ... இல்லனா ஆரம்பிச்சுருக்க மாட்டேனா ).... அடுத்த வருஷம் பாத்தேன் ... முதல்ல தனியா ஹோட்டல் போக தயக்கமா இருந்தது .... அப்பறம் கவலையே படாம தனியா போக ஆரம்பிச்சேன் ... அதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சது நம்ம நட்புக்களும் நம்மள மாதிரித்தான்னு... கோவை சாய்பாபா காலனி அன்னபூர்ணால என் சைக்கிளை பார்த்தாலே வரிசையா ஒரு சாம்பார் வடை , மசால் தோசை அண்ட் பில்டர் காஃபி டேபிளுக்கு வந்துரும்... அங்க போய் 15 வருஷமாச்சு.... பட் இப்போ போனாலும் மறக்காம அதே ஐட்டம்ஸ் டேபிளுக்கு வந்துரும்னு நினைக்கறேன் அந்த அளவு ரெகுலர் ஈட்டர் ஐ மீன் விசிட்டர் ஹிஹி...

இன்னொரு முக்கியமான விஷயம் என்னதான் வித விதமா சமைச்சாலும் ஒரு ப்ராப்பர் காம்பினேஷன் இல்லனா ரசிச்சு சாப்பிட முடியுமா .... பார் எக்ஸாம்பில் டொமட்டோ ரைஸ் அண்ட் புடலங்கா கூட்டு ன்னா எப்படி இருக்கும் .... சொ சாப்பிடறதையும் அழகான காம்பினேஷன்ல சாப்பிடறது ஒரு ரசனை.... இது வரைக்கும் என் மனதில் நீங்கா இடம் பெற்ற நான் கற்ற கேட்ட பார்த்த படித்த சில எவர்க்ரீன் காம்பினேஷன்ஸும் இருக்கு...

பாலிகா அங்கிள் கற்றுத் தந்த சூடான போளியை அதுக்கு மேலே நல்லா ஒரு குழிக்கரண்டி நெய் (ஒரு போளிக்கு தான் ஒரு கரண்டி) ஊத்தி சாப்பிடுவது....  என் கசின் (அத்தை பொண்ணு) சூப்பரா இருக்கும்ன்னு சொல்லிக் கேட்ட மழை நாட்களில் நல்ல சூடான  ரசத்துக்கு எலுமிச்சம்பழ ஊறுகாய் (அவ ஒரு ஸ்பூன் ஊறுகாய் ன்னு தான் சொன்னா நான் என் நாக்குக்கு தகுந்தா மாறி ஒரு பாட்டில் ன்னு  மாத்திக்கிட்டேன்)... வெளிய டிராவல் பண்ணும் போது என் நாக்கை நாற்பது முழம் வளர்த்த அம்மா தந்த நல்லா மிளகாய்ப்பொடி தடவிய இட்லி (கவனிக்கவும் மிளகாய்ப் பொடிக்கு தொட்டுக்க இட்லி என்ற ப்ரபோஷன் நாட் அதர்வேய்ஸ்), சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (இப்போ நினைத்தாலும் ஜலம் வர்றது கண்ணுல இல்ல நாக்குல).. 1980's இல் ஏதோ ஒரு மாதத்தில் வந்த மங்கையர் மலர் புக்கில், டயட்டிங் (??) பற்றிய ஒரு காமெடி கதையில் படித்த ஜாங்கிரிய  சூடா பால் ஊத்தி சாப்பிடணும், குலாப்ஜாமூனை நல்லா ஐஸ்க்ரீம் சேர்த்து சாப்பிடணும்... அந்த கதைய படிச்சதிலிருந்து இப்போ வரைக்கும் குலாப்ஜாமூனும் ஐஸ்க்ரீமும் ஒண்ணா கிடைச்சா நான் மிஸ் பண்ணதே இல்ல  வாட் அ டிவைன் டேஸ்ட் .... என் நாக்கு நல்லா கேட்ட பட்டர் நான் வித் மலாய் கோப்தா (கவனிக்கவும் பட்டர்ர்ர்ர் நான்), எந்த சூப்பா இருந்தாலும் அது மேல ஒரு 4 ஸ்பூன் பட்டர்ர்ர்ர், காரட் ஹல்வா வித் உருளைக்கிழங்கு போண்டா (யெஸ் யெஸ் அது இல்லாமயா ... பில்டர் காஃபி )...

இப்படியெல்லாம் ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டுட்டு ( ஆனா அப்போ இப்படி சாப்பிட்டும் 50 கேஜி தாஜ்மஹாலா தான் இருந்தேன் ... நம்பாதவங்களுக்கு போட்டோ ப்ரூப் இருக்கு) இப்போ கேரட்டை வெறுமனே அரைச்சு , கம்பு மாவை கரைச்சு, ஓட்ஸை குடிச்சு (ஏன்னு கேக்கறீங்களா... எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான் பிகாஸ் மை பாமிலி அ ஸ்வீட் பாமிலி) என்னைக்காவது  இதையெல்லாம் நினைச்சிட்டே "ச்சை... எப்படி இருந்த நான் இப்படி ஆக வேண்டியதாயிடுச்சே ..." ன்னு நொந்து, மெய் மறந்து, டயட் தவம் கலைந்து சில பல காம்பினேஷன்ஸை எல்லாம் நல்லா சாப்பிட்டுட்டு, "அய்யயோ இது என்ன சொல்ல போறதோ" ன்னு மனசு கேக்காம நேரா போய் பாத்தா "யக்கா.... உனக்கு இந்த காம்பினேஷன் பிடிச்சு நீ ரசிச்சு சாப்பிட்டதெல்லாம்  சரி... இப்போ சுகர் அண்ட் பிளட் பிரெஷர் , கொலஸ்ட்ரால் அண்ட் லிவர் fat ன்னு இன்னும் சில காம்பினேஷனுக்கு எல்லாம் சீக்கிரமே உன்னை ரொம்ப பிடிச்சு போய்டுமே... beware... Prevention is better than cure" அப்படின்னு சொல்ற வெயிங் மெஷின் மட்டும் கடுப்பேத்துது மை லார்ட் ...

இதனால் சகலமானவர்க்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால்
"இளமையில் உண் " !!!!

Sunday, September 25, 2016

கடவுளுக்கும் சில சமயம் கண் தெரிவதில்லை....

"டேய்ய் குமார் .....  வேணான்டா.... ஜட்ஜ் மாமா கிட்ட மாட்டின அவ்வளவுதான்.... நல்லா வாங்குவ .... சொன்னா கேளுடா ...." என்று கத்திய என்னை அலட்சியமாக பார்த்த குமார் அந்த வீட்டு கம்பௌண்ட் தாண்டி உள்ளே குதித்தான்..... மெதுவா நடந்து வீட்டு காலிங் பெல்லை விடாமல் அமுக்கி அலற விட்டு சர்ர்ன்னு வேகமா அவங்க வீட்டு மாமரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டான் ...

அந்த அக்ரஹாரத்துல நான் , குமார்,  சீனி , ரவி, சர்குணம்ன்னு பெரிய கேங் ... எல்லாரும் அங்க இருந்த பாய்ஸ் ஹை ஸ்கூல்ல ஏழாவது, எட்டாவதுன்னு படிச்சிட்டு இருந்தோம்... பெரிய  கம்பௌண்ட் வெச்ச அந்த கடைசீ  வீட்டுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி
ஜட்ஜ் மாமா குடி வந்ததுல இருந்து இதே வேலை ... அவர் வீட்ல அவரும் மாமியும் தான் .... அந்த மாமா பாத்தாலே டெர்ரரா இருப்பார் (கவுரவம் சிவாஜி மாதிரி)... ஆனா மாமி பார்க்கவே சாந்தமா மஹாலக்ஷ்மி மாறி இருப்பாங்க ... என்ன கொஞ்சம் சிரிச்சா இன்னும் அழகா இருப்பங்களேன்னு தோணற அளவுக்கு முகத்தில எந்த உணர்ச்சியும் இருக்காது... வீடு விட்டா சிவன் கோவில்ன்னு ரொம்ப அமைதியா இருப்பாங்க .... எங்க தெரு மத்த மாமிகளாம் "அவ ஆத்துக்காரர் பெர்ர்ரிய ஜட்ஜோன்னோ .... அதான் கர்வம் ..." அப்படின்னு பேசிப்பாங்க...

ஜட்ஜ் மாமா குடி வந்த உடனே வாசல்ல "தயவு செய்து காலிங் பெல்லை அடிக்காதீர்கள்" ன்னு ஒரு போர்ட் தான் மாட்டப்பட்டது ... ஒரு தடவை அவங்க வீட்டு மாமரத்துல இருந்த மாங்காயை பறிச்சுக்கலாமான்னு கேக்கறதுக்காக குமார் தெரியாம காலிங் பெல் அடிச்சிட்டான்... ரொம்ப நேரமா கதவு திறக்கலைனதும்  திரும்ப அடிச்சான் .... கொஞ்ச நேரத்துல கதவை திறந்த ஜட்ஜ் மாமா குமார் காதை பிடிச்சு திருகி "ஏன்டா பெல் அடிக்க வேண்டாம்னு தான் தெளிவா போர்ட் போட்டுருக்கே... அறிவு இல்ல ...  ஏன்டா இப்படி உயிரை வாங்கறீங்க... " அப்படின்னு ரொம்ப கடுமையா  திட்டிட்டார்... குமார் ரோஷக்காரன்.. "அது என்னடா ஏதோ கவனம் இல்லாம பெல் அடிச்சிட்டேன்.... அதுக்கு போய் இப்படி காதை எல்லாம் திருகி கன்னா பின்னான்னு திட்டறார்... அது சரி அடிக்க தானே காலிங் பெல் ... அடிக்க கூடாதுன்னா அதை கழட்டி வெக்க வேண்டியது தானே ..."  அப்படின்னு பொருமி தள்ளிட்டான்...

அதுல இருந்து வேணும்னே அந்த வீட்டை தாண்டி போகும்போதெல்லாம் எங்க குரூப்ல எவனாவது போய் அந்த பெல்லை அடிச்சிட்டு ஒளிஞ்சுக்குவான் ... கொஞ்ச நேரத்துல அந்த மாமா வெளிய வந்து கத்துவார்.. எங்க தொல்லை தாங்க முடியாம எங்க வீட்லலாம் வந்து கத்திட்டு போவார் ... எங்க கணக்கு வாத்தியார் நரசிம்மமூர்த்தி கிட்ட கூட சொல்லிப் பாத்துட்டார்... அவர்னா எங்களுக்கு ஒரு பயம் ... ஆனா இந்த விஷயத்தில குமார் ரொம்ப உறுதியா இருந்தான் ... ஒரு கட்டத்துல எங்க தொல்லை தாங்காம அந்த பெல்லை கழட்டணும்னு முடிவு பண்ணார்... அந்த காலிங் பெல் அவங்க வீட்டு முற்றத்துக்கு மேல உயரமா வெச்சுருந்தாங்க ... அதை கழட்ட ஆள் தேடினார்ன்னு கேள்விப்பட்டு "அவர் அதை கழட்டறதுக்குள்ள ஒரு வழி பண்ணனும்டா..." ன்னு சொல்லி வேணும்ன்னே தினமும் போய் அடிக்க ஆரம்பிச்சான்...

அன்னைக்கும்  அப்படி அடிச்சிட்டு தான் மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டான்.. கொஞ்ச நேரத்துல ஜட்ஜ் மாமா வீட்ல இருந்து அவரோட குமாஸ்தா வேகமா வெளிய ஓடி வந்தார் ... வெளிய போய்ட்டு திரும்பி வந்தப்போ "இப்படி அடிக்கடி வந்தா அப்பறம் சீரியஸ் ஆய்டும்.... ஏன் இப்படி நடக்குது ..." ன்னு சொல்லிட்டே கூடவே ராமானுஜம் டாக்டர் வரார்.... எங்களுக்கு ஒண்ணும் புரியல.... கொஞ்ச நேரத்துல அந்த மாமிய தூக்கிட்டு ஹாஸ்பிட்டல்க்கு போனாங்க... என்னன்னு புரியலைனாலும் கொஞ்ச நாளைக்கு அந்த காலிங் பெல்லை அடிக்காம இருந்தோம்... ஒரு வாரம் கழிச்சு அந்த மாமி ஆளே பாதியா போய் திரும்ப வீட்டுக்கு வந்தாங்க ...

அப்பறம் 2 நாள்ல அவங்க வீட்டை காலி பண்ண சாமான்லாம் வண்டில ஏத்திட்டு இருந்தாங்க ... அதை பாத்த குமார் "பாத்தியாடா ... வீட்டையே காலி பண்ணிட்டு ஓடறார்..." அப்படின்னு சிரிச்சான்.... எங்களை பாத்த அந்த குமாஸ்தா நேரா வந்து "ஏன்பா சின்ன பசங்களா இருக்கீங்க ... எவ்வளவு சொன்னாலும் கேக்காம பெல்லை அடிச்சு அடிச்சு பாவம் இப்படி வீட்டையே காலி பண்ண வெச்சுட்டிங்களே ... பாவம் அந்த மாமி பரம சாது ... ஸ்கூல் போன அவங்க குழந்தை ரோட்டில அடிப்பட்டு இறந்துடுச்சுன்னு அவங்க வீட்டு காலிங் பெல்லை அடிச்சு தான் சொல்லி இருக்காங்க ... அதுல இருந்து பெல்லை யாராவது  அடிச்சாலே மாமிக்கு பிட்ஸ் வந்துரும் ... இங்க குடி வந்ததுல இருந்து அடிக்கடி பிட்ஸ் வந்து ரொம்ப சீரியஸா போயிடுச்சு ... அதான் வீட்டையே காலி பண்ணறாங்க ... போங்கப்பா உங்கள எல்லாம் நல்ல பசங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன் ..." என்றாரே பார்க்கணும்..
மளுக்கென்று உள்ளே ஏதோ உடைய கண்ணில் வழிந்த கண்ணீரோடு அங்கிருந்து வீட்டு வாசலில் இருந்த
மாமியை பார்த்தோம் ... அழும் எங்களை ஒண்ணும் புரியாமல் பார்த்த மாமி நாங்கள் பார்த்த அவ்வளவு நாட்களில் முதல் முறையா மென்மையா சிரித்தார் ...

கடவுளுக்கும் சில சமயம் கண் தெரிவதில்லை...

Wednesday, September 21, 2016

தன்னம்பிக்கை மனிதர்கள் !

ஒன்பது வயசு இருக்கும் போது நாலு வீடுகள் இருந்த ஒரு காம்பௌண்ட்ல குடி இருந்தோம்... எங்க வீடு மெயின் ... பின்னாடி வரிசையா வேற முணு போர்ஷன்... நான் , பின்னாடி முதல் வீட்டு அபி, ரெண்டாவது வீட்டு மஞ்சு முணு பேரும் தான் ஸ்கூல் போற நேரம் தவிர எப்பவும் ஒண்ணா விளையாடிட்டு  இருப்போம் .... விளையாட்டு னா இந்த ஓடி பிடிச்சி , கண்ணாமூச்சி, செங்கல் அடுப்பு வச்சு சமைக்கறோம் பேர்வழின்னு துவரம் பருப்புக்கு பதிலா கடலை பருப்பை வேகவைக்க படாதபாடு பட்ட சமையல் விளையாட்டு , பிசினெஸ் , கேரம் இதெல்லாம் மட்டும் இல்ல... எங்க காம்பௌண்ட் உள்ள இருந்த கொய்யா மரத்தில ஏறுறது , அதுல இருந்து சன்ஷேட்க்கு தாவறது , மாடிப்படி சுவர்ல சறுக்கறதுன்னு பல வீர விளையாட்டுகளும் அடக்கம்...... பல நாள் இந்த மாதிரி விளையாட்டுல அடிபட்டுருமோங்கற பயத்துல அம்மா கையால தான் அடிபட்டுக்கிட்டு இருக்கேன் .... கடைசீ போர்ஷன் ஹரி அண்ணா மட்டும் நாங்க விளையாடுற இந்த வீர விளையாட்டை எல்லாம் சிரிச்சிகிட்டே வேடிக்கை பார்த்திட்டு இருப்பான்...
ரொம்ப சாதுவா அமைதியா அதே சமயம் ரொம்ப disciplined ஆ இருக்கற பையன் ... அவன் அம்மா ஒரு டீச்சரா இருந்ததும் காரணமா இருக்கலாம்... காலைல அஞ்சு மணிக்கே  எழுந்துருவான்.... ஆறாங் கிளாஸ் படிக்கும் போது அவ்வளவு சீக்கிரமா  எழுந்து தினமும் என்னதான் படிப்பானோ .... ஆனா படிப்புல மட்டும் இல்லாம பயங்கர ஜெனரல் நாலேஜ் ... அவன் நோட் எல்லாம் அவ்வளவு கிளீனா  இருக்கும் ... கையெழுத்து கண்ணுல ஒத்திக்கலாம் போல இருக்கும் ... அவ்வளவு கிராஃப்ட் வொர்க் பண்ணுவான்.. நாலாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்த எனக்கு ஹரி அண்ணா அப்படினாலே ஒரு மரியாதை..... ஆனால் அவனை பார்த்து அபிக்கு எப்பவும் பொறாமை.... "அவனே அப்படி படிக்கறான்.... உனக்கென்ன நல்லாதானே இருக்க... அப்பறம் என்ன ..." ன்னு அவனை கம்பேர் பண்ணி அவ அம்மா அவளை எப்பவும் திட்டறதும் காரணமா இருக்கலாம்....

இப்படி இருக்க ஒரு நாள் அபி ஒரு பக்கம் உசுப்பேத்த (அவ தெளிவு.. ஏற மாட்டா என்னை ஏத்தி விட்டு நான் அடிவாங்கும் போது ஓடிருவா ) நான் நல்லா வழுக்கற  கொய்யா மரத்தில எப்படியோ ஏறிட்டேன்... சன் ஷேட் உயரத்துக்கு போயிட்டேன் .... அப்போ வெளிய இருந்து வீட்டுக்கு வந்துட்டு இருந்த ஹரி அண்ணா "ஹேய் கீழ விழுந்துற போற .. ஏன் இப்படி ஆபத்தான விளையாட்டு எல்லாம் விளையாடறீங்க  " அப்படினான்... உடனே அபி வெடுக்குன்னு "ஏன் உன்னால இது எல்லாம் செய்ய முடிலயேன்னு பொறாமையா.."  அப்படின்னு கேட்டா .... அப்படி கேட்ட உடனே ஹரி அண்ணா முகம் அப்படியே சுண்டி போச்சு ... நான் அதுவரைக்கும் அவனை அப்படி பார்த்ததில்லை..  ஆனா ஒரு நிமிஷம் தான் .. அதுக்குள்ள டக்குனு மெல்லிசா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு போய்ட்டான்...
ஒண்ணும் சொல்லாம போன அவனை பார்த்து எனக்கே ரொம்ப கஷ்டமா போச்சு .... "ஏன் அபி இப்படி பேசற .. இப்படி பேசறது தப்பு இல்லயா ..." அப்படின்னு கேட்ட என்னை "அட போப்பா அவனுக்கு தான் ரொம்ப இன்டெலிஜெண்ட்ன்னு ப்ரவுட்... அவனால நான் எவ்வளவு திட்டு வாங்கறேன் தெரியுமா " ன்னு சொன்னா ...
அந்த வருஷம் நவராத்திரி வந்தது... ஹரி அண்ணா வீட்ல  எப்பவுமே பெருசா கொலு வெப்பாங்க... அந்த வருஷமும் பெருசா வெச்சிருந்தாங்க... டீச்சர் "இந்த வருஷம் எங்காத்து ஹரி ஸ்பெஷலா ஒரு தனி கொலு வெச்சிருக்கான் .... நீங்க வந்து பாருங்க..." அப்படின்னு சொன்ன உடனே ஆர்வத்துல போனோம் ... அடேங்கப்பா ஒரு மலை அதுக்கு கீழ காடு அனிமல்ஸ் குளம் அப்பறம் பேனால பவுண்டன் ரெயில்வே ட்ராக் pulley மாறி ஏதோ எல்லாம் வெச்சிருந்தான்..
எங்கயோ ஒரு பைப்பை ஓபன் பண்ணினா பேனா பவுண்டன்ல இருந்து தண்ணி வருது.... அப்பறம் கீ கொடுத்தா டிரெயின் ஒடி வருது... அதுல மனுஷன் மாறி ஒரு பொம்மை டிரெயின் எஞ்சின்ல அதை ஓட்டற டிரைவர் மாறி உட்காந்து வருது .... ரொம்ப யோசிச்சு ஏதோ பண்ணி இருந்தான் .... அடுத்த கொலுவுல ஏரோபிளேன் ஹெலிகாப்டர் லாம் பண்ண போறேன்னு சொல்லிட்டு அபியை பாத்து பெருமையா ஒரு சிரிப்பு  சிரிச்சான் ... அவளுக்கு முகமே சரி இல்ல... அப்ப தான் நான் அந்த பொம்மைய கவனிச்சேன்... அதுக்கு ஒரு கையை காணோம்.... எனக்கு ஹரி அண்ணாவோட அந்த confidence பிடிச்சி இருந்தது .... ஆமா அவனுக்கு போலியோனால வலது கை ரொம்ப குட்டியா இருக்கும் ...

தன்னம்பிக்கை மனிதர்கள் !!!!

Saturday, September 17, 2016

அப்படி என்ன இடம்...

மாமாவிற்கு கல்யாணம் ஆகி கொஞ்ச நாளே ஆகி இருந்தது .... லீவுக்கு மாமா வீட்டில் .... அன்னைக்கு காலைல எழுந்த உடனே அம்மா சொன்னது "அத்தையோட பாமிலி பிரெண்ட் ஒரு மாமி .... நீ கூட கல்யாணத்துல பாத்தியே ... அவங்க வீட்டுக்கு நம்ம எல்லாரையும் கூப்பிட்டு இருக்காங்க .... மாமாக்கு ஆபிஸ் ... அதனால அத்தை சித்தி பாட்டி நாம மட்டும் அவங்க வீட்டுக்கு இன்னைக்கு போறோம் ... அது கொஞ்சம் தூரம் ரெண்டு பஸ் மாறி போகணும்... அதுவும் இல்லாம முக்கியமா சாயங்காலம் 5 மணிக்குள்ள அங்க இருந்து ரிட்டர்ன் ஆய்டணுமாம் .... இருட்டினா safe இல்லயாம்.. அதனால ஒழுங்கா சீக்கிரம் கிளம்பணும் ... சரியா "... உடனே ஒரே ஆர்வம் ..... அப்படி என்ன இடம் .... கூடவே ஒரு பயம் ... 5 மணிக்கு மேல லேட் ஆச்சுன்னா என்ன பண்றதுன்னு...

மத்தியானம் கிளம்பினோம்... முதல்ல ஒரு பஸ்ல ஏறி ஏதோ இடத்துக்கு போனோம் ... அந்த இடம் அந்த ஊர்ல நான் பாத்த மத்த இடங்கள் மாறித்தான் இருந்தது .... இன்னொரு வண்டில (பஸ்ஸா ஆட்டோவா ன்னு சரியா ஞாபகம் இல்ல) ஏறினோம்..... கொஞ்ச நேரத்துல பாத்தா  ரோட்க்கு ரெண்டு பக்கமும் பச்ச பசேல்ன்னு ஏதோ கிராமம் மாறி வருது.... கொஞ்ச தூரத்தில செம்மண் ... அப்பறம் பாத்தா அழகா வரிசையா தனி தனி கம்பௌண்ட் வெச்ச வீடுகள் .... ஒவ்வொரு வீட்டிலும் மரங்கள்..... வீட்டுக்கு முன்னாடி கோலம்.... ஏதோ அழகான காலனி மாறி இருக்கு....  ஆன போற வழில ஆள் நடமாட்டம் அவ்வளவா இல்ல... எல்லாரும் மத்தியானம் வீட்ல இல்ல இருப்பாங்கன்னு அப்போ புரில...அவங்க வீட்டுக்கு போனப்போ 4 மணி ஆய்டுச்சு .. போன உடனே லெமன் சேவை , தேங்காய் சேவை ..... நல்லா சாப்பிட்டு ஆன்னு பராக்கு பாத்திட்டு கிளம்பலாமான்னு கேட்ட உடனே சட்டுனு அவங்க வீட்டு கடிகாரத்தை பாக்கறேன்... ஆஆ மணி 5.15 ..... அவ்வளவுதான் அய்யயோ 5 மணிக்கு மேல ஆச்சுனா safe இல்லயே... வர்ற வழில எல்லாம் யாருமே இல்லயே... இப்படி பயந்துகிட்டே திரும்பி வர்ற வழியெல்லாம் யோசிச்சிகிட்டே வரேன் ... ஆனா அப்ப கூட அந்த சாயங்கால நேரத்துல அந்த காத்து, அந்த வயல்வெளி அழகை எல்லாம் ரசிக்கணும்னு தோணுது பட் சீக்கிரம் வீட்டுக்கு போய் சேரணுமேன்னு ஒரே கவலை (எனக்கு தான்)... எப்படியோ படக்படக்ன்னு அடிச்சிக்கற நெஞ்சோட ஒரு வழியா 7 மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு....

ஆனா ஒண்ணு ஒரே ஒரு தடவை பார்த்த அந்த இடமும், அந்த வீடுகளும் 27 வருஷங்கள் கழிச்சும் மனச விட்டு போகவே இல்ல (பாருங்க சாப்பிட்ட சேவை வரைக்கும் ஞாபகம் இருக்கு)... இப்போ திரும்பவும் அங்கயே போனாலும் அதை எல்லாம் கண்டு பிடிக்க முடியுமா இல்ல அது எல்லாம் இருக்குமான்னே தெரில .... அப்படி என்ன இடம்னா கேக்கறீங்க...  

இடம்: தாம்பரம்
வருடம்: 1989
கிளம்பிய  இடம் : மாம்பலம்

Sunday, September 11, 2016

பசுமை நிறைந்த நினைவுகளே....

அரட்டைனா அரட்டை அப்படி ஒரு அரட்டை... எப்போன்னு கேக்கறீங்களா.. நான் காலேஜ் ஹாஸ்டல்ல இருந்தப்போ  தான் .... இப்போவே இவ்வளவு பேசறியே அப்ப என்னவோ காலேஜ் படிக்கும் போது மட்டும் தான் அரட்டை அடிச்ச மாதிரி கதை விடற... ஏன் அதுக்கு முன்ன அதுக்கு பின்ன நீ அரட்டையே அடிச்சதில்லையான்னு தானே கேக்கறீங்க... அதெப்படி சும்மா இருந்து இருப்பேன் ... நான் நான்ஸ்டாப்பா  அரட்டை அடிப்பேன் தான் பட் எல்லார்கிட்டயும் இல்ல... அது மனசு செட் ஆகணும்.....மனசு செட் ஆனாலும் மணிக்கணக்கா அரட்டை அடிக்க வாய்ப்பும் இருக்கணும்...  ரெண்டுமே அமைஞ்சது  காலேஜ் ஹாஸ்டல் லைஃப் தான் ....

ஏன் இப்படி சொல்றேன்னா +1 வந்தப்போ ஒரு கிளோஸஸ்ட் பிரெண்ட் கிடைச்சா... ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வந்து டெலிபோன்ல கன்டின்யூ பண்ணுவோம்... அப்போல்லாம் நோ மொபைல் ....போனும் பேங்க் மேனேஜர்க்காக அப்பாக்கு பாங்க் தந்தது.... அப்படி என்ன அரட்டை அதான் ஸ்கூல்லயே பேசிக்கறீங்க இல்லன்னு  திட்டு வாங்கிக்கிட்டே எந்த அளவு டெலிபோன்ல பேசுவேனா ஒரு தடவை யாரோ எங்க வீட்டுக்கு போன் பண்ணி "இது 23814 ங்களா" ன்னு கேக்கறாங்க .... அதான் எங்க நம்பர்.... நான் உடனே "இல்ல இது .... " அப்படின்னு என் பிரெண்ட் வீட்டு நம்பரை சொல்லி வீட்ல நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன்... இப்படி மணிக்கணக்கா பேச நினைச்சதை எல்லாம் ஒரு கால் மணி அரை மணி ன்னு கெரகம் புடிச்ச  ஸாரி கிரஹாம்பெல் கண்டுபிடிச்ச டெலிபோன்ல பேசறது ரொம்ப சேலஞ்சிங் டாஸ்கா இருந்தது ....

அப்பறம் தான் காலேஜ்க்கு ஹாஸ்டல் போனேன் .... இனிஷியலா இந்த ஹோம் சிக் ஹோம் புட் சிக் ன்னு அழுகைல போய்டுச்சு ... அப்பறம் தான் மாட்டினா ஒரு அப்பாவி பிரெண்ட் ... ஏன் அப்பாவின்னு சொல்றேன் .... ஏதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருந்ததால ரூம் மட்டும் வேற வேற .... பட் அவ தூங்கற நேரத்தைக்கூட நாந்தான் முடிவு பண்ணுவேன்... என்னல்லாம் அட்டூழியம் பண்ணுவேன்னா என்னை சைக்கிள்ல டபிள்ஸ் ஏத்திட்டு கஷ்டப்பட்டு மிதிச்சிட்டு போவா நான் அவ பின்னாடி ஹாய்யா உட்கார்ந்து அவ காதை கடிச்சிட்டே போவேன் ... அசைன்மென்டை சீக்கிரம் எழுதி குடு நான் காப்பி அடிக்கணும்னு சொல்லி பக்கத்துலயே உட்காந்து அவ கஷ்டப்பட்டு எழுத நான் இஷ்டத்துக்கு பேசிட்டு இருப்பேன்.. அவ என் பேச்சை கேட்டுக்கிட்டே எழுதி முடிக்கணும்.... இதுல ஒரு தடவை நான்ஸ்டாப்பா நான் "காதல் மன்னன் " படத்தை பேக்ரவுண்ட் ம்யூசிக் பாட்டு வசனம் சகிதம் 3 மணி நேரம் கதை சொல்லிட்டே ஒரு முக்கியமான மண்டைய பிச்சுக்கற அசைன்மெண்டை அவளை எழுத வச்சு அப்பறம் நான் ஈஸியா காப்பி அடிச்சிட்டேன்... அந்த ரூம்ல மூணு பிரெண்ட்ஸ்.... எல்லாரையும் என்டர்டெயின் பண்ணிட்டு அவங்க டயர்டு ஆகி தூங்கினதும்  இந்த அப்பாவிய மட்டும் டார்கெட் பண்ணி அவ காட்ல உக்காந்து "குட் நைட் டா.. " ன்னு ஆரம்பிச்சு நைட் 2 3 வரைக்கும் விடாம மூச்சு முட்ட பேசிட்டு மனசே இல்லாம என் ரூம்க்கு வந்து என் ரூம்ல இருந்த இன்னொரு அப்பாவியை தூங்க விடாம அரட்டை அடிப்பேன்.... இது மட்டும் இல்லாம ஊருக்கு பஸ்ல ட்ரெயின்லன்னு  எதுல போனாலும் நான் ஸ்டாப் நான்சென்ஸ் (நான் தான் ..)
இதுல ஒரே கம்பெனில காம்பஸ் செலக்க்ஷன் ஆயிட்டோம்... பாவம் அவ... பட் அவன் வேலைல ஜாயின் பண்ண கூப்பிட ரொம்ப லேட் பண்ணான்.... அந்த கேப்ல 2  3 தடவை நானும் அவளும் டிரெயின்ல பெங்களூர் போனோம் சில இன்டெர்வியூக்காக ... டிரெயின்ல என் பர்த் அ  விட்டுட்டு அவளோட டாப் பர்த்ல உட்கார்ந்து தூங்க விடாம பேசி அடுத்த நாள் இண்டெர்வியூல நல்லா தூங்கினேன்.... கடைசில ஒண்ணா வேலைல சேர போனா என்னோட லக் என் ஸ்கூல் பிரெண்டும் அதே நாள் அதே கம்பெனில ஜாயின் பண்றா... பயங்கர குஷியா எல்லாரும் சேர்ந்து ஒரு வீட்ல இருந்தோம்... நான் பேசி பேசி சாகடிக்கறது அந்த ஆண்டவனுக்கே பொறுக்கலை.. எனக்கு மட்டும்  ட்ரைனிங் முடிஞ்சி போஸ்டிங் சென்னைல ...

சென்னை வந்து ரொம்ப நாள் பேச ஆள் இல்லாம புது முகங்களோட ஒரு ஹாஸ்டல்ல இருந்து தனிமை  துயர்ல பைத்தியமே பிடிச்சிடுச்சு ....  அப்படியே கொஞ்ச நாள் போனப்போ ஒரு வீக் எண்ட் நான் பெங்களுர் போக முடிவு பண்ணேன்.. அங்க போய் என் பிரெண்ட்ஸை எல்லாம் பாத்ததும் சந்தோஷம் துக்கம் எல்லாம் சேர்ந்து தொண்டையை அடிக்குது.... அன்னைக்கு நைட் எல்லாரும் ஒண்ணா படுத்து இருக்கோம் ....  முதல் நாள் டிரெயின் அலுப்பு பகல்ல பெங்களுர் சுத்தின அலுப்புன்னு அலுப்புல என் கண்ணு அப்படியேஏஏ தூக்கத்துல சொருகுது... இந்த அப்பாவி என்னை மெதுவா சுரண்டி "ஏன் ஒண்ணுமே பேச மாட்டேங்கற.... பேசு சாரு...." ங்கறா .... ஒருத்தர்கிட்ட மனசு செட் ஆகறதுனா என்னன்னு இப்போ புரிஞ்சி இருக்குமே !!!

பின் குறிப்பு:
இப்போ போன மாசம் அவ யூ எஸ் ல இருந்து இங்க ஒரு மாசம் வந்து இருந்தா .... கடைசில அவ கிளம்ப ஒரு 2 நாள் இருந்தப்போ என் பொண்ணு ஸ்கூல் போய் இருந்தப்போ அவசரமா போய் ஒரு 1 ஹவர் அரட்டை அடிச்சிட்டு வந்தேன் .... என்னவோ பேசின மாறியே இல்ல.... so அவ கிளம்பும் போது வேகமா ஏர்போர்ட் போய் கரெக்ட்டா அவ கேட்ல நுழைய அவளுக்கு முன்னாடி ரெண்டு பேர் இருக்கும் போது அவளை பாத்து நல்லா (???) 2 நிமிஷம்  பேசிட்டு திரும்ப கார்ல வரும்போது FM ல  "வானும் மண்ணும் கட்டி கொண்டதே ..." ன்னு காதல் மன்னன் பட பாட்டு ஓடுது ... அப்படியே என் நினைவுகளும் !!!!!!

Wednesday, September 7, 2016

நெவர்...

ரொம்ப நாளைக்கு அப்பறம் போன வாரம் பெசன்ட் நகர் பீச் விசிட் .... ரெண்டு நாளா சென்னையை வறுத்தெடுத்த வெயிலா இல்லை சண்டே ங்கறதாலயான்னு தெரில பீச்ல நல்ல கூட்டம் .... செருப்பை கார்லயே கழட்டிட்டு வெறும் காலோட பேவ்மெண்ட்ல இருந்து கடல் வரைக்கும் மணல்லயே நடந்தோம்..... காரணம் ஒண்ணு எல்லாருமே அலையில காலை நனைக்கனும்னா இந்த செருப்பை காவல் காக்கற வேலை இல்ல.. ரெண்டு காலை நனைச்சிட்டு மணலை leg pack போட்டுக்கிட்டு செருப்பையும் போட்டுட்டு திரும்ப வரும்போது அந்த மணலை எல்லாம் பிரபுதேவா மாறி காலை உதறி டான்ஸ் ஆடிட்டே உதிர்க்கணும் இல்லேன்னா கார்  பீச்சா மாறிடும் அபாயம்.... முணு மணல்ல வாக்கிங் போனா சட்டுனு நாலு கிலோ வெயிட் குறைஞ்சிடும்னு முன்ன யாரோ ஒரு ஞானி சொன்னதா ஞாபகம் ...

போய் அப்பா பொண்ணை அலையில விளையாட அனுப்பிட்டு ஆன்னு கடலை பராக்கு பாத்துட்டு உட்காந்தாச்சு... இப்படி இருக்கும்போது உடனே இளையராஜா மியூசிக் பாக்ஸா மாறிடறது என்னோட வழக்கம்... அங்க நாம யாரோதான ... யாருக்கு நம்மள தெரியும்கற தைரியத்துல வாயாலேயே வயலின் வீணை புல்லங்குழல் இப்படி சகல விதமான வாத்தியங்களையும் வாசிச்சு பாட்டும் பாடுவேன்... so வழக்கப்படி  ராதிகாவா மாறி காலால தாளம் போட்டுட்டே "கண்ணன் வந்து பாடுகின்றான் .." ன்னு  பீலோட ஆரம்பிச்சேன்... பக்கத்தில ஒரு காலேஜ் கேர்ள்...  ஒரு க்ரூப்பா வந்து இருப்பாங்க போல இருக்கு... ஒரு பெரிய செருப்பு கடையவே காவல் காத்துட்டு இருந்தா .... நான் முதல் பாட்ட பாடி முடிச்சதுமே என்னை திரும்பி பாத்தா .... ஆஹா நமக்கு ஒரு ரசிகை போல ... அவளை ஏமாத்த வேண்டாமே ன்னு உற்சாகமா அடுத்து அர்விந்த்ஸ்வாமியா மாறி "எல்லோரும் சொல்லும் பாட்டு ...." ன்னு கிட்டரோட (அட வாயால தான் பா) கருத்து சொல்ல ஆரம்பிச்சேன் ... உடனே அவ எழுந்து போய் அலையில விளையாடிட்டு இருந்த அவ பிரெண்ட்ஸ் கிட்ட என்னை காமிச்சு ஏதோ சொன்னா ..... உடனே அவங்க இன்னும் கொஞ்ச நேரம்ன்னு சைகை காட்டின மாறி இருந்தது ... ஆஹா நம்ம ரசிகை அவ பிரெண்ட்ஸும் என் கான மழையில நனையட்டும்னு கூப்படறா போல இருக்குன்னு பயங்கர குஷி எனக்கு... இப்போ திரும்பி வந்து உட்கார்ந்த அவளுக்காக ஸ்பெஷலா ஒண்ணு பாடுவோம்னு எனக்கு பிடிச்ச (எனக்கு மட்டும் பிடிச்சா போறுமான்னு தான கேக்கறீங்க... புரியுது...) "குச் நா கஹோ ..." வ ஆரம்பிச்சேன் ... பின்ன எனக்கு ஹிந்தியும் வரும்னு ரசிகைக்கு காட்ட வேணாமா....  அவ பேக்ல இருந்து மொபைல எடுத்தா... ஆஹா ஆஹா என் பாட்டை பிரெண்ட்ஸ்க்காக ரெகார்ட் வேற பண்ணிக்க போறாளான்னு எனக்கு பெருமை தாங்கல ... உடனே வாய்ஸ் கிளாரிட்டிக்காக வால்யூமை கூட்டினேன்.... உடனே அவ பேக்ல தீவிரமா எதையோ தேடி அப்பான்னு பெருமூச்சோடு ஒண்ண எடுத்து மொபைல்ல  சொருகி காதுல மாட்டிக்கிட்டா.... வேற ஒண்ணும் இல்ல  ... earphones ....ஹிஹி ...

இதுக்கெல்லாம் அசந்து பீச்ல பாடறத நிறுத்துவேனா என்ன ... Never !!

Friday, September 2, 2016

அது அப்படித்தான்....

"ஹேய் இன்னைக்கு ஆபீஸ்ல ஒரு இன்டரெஸ்டிங்கான விஷயம் நடந்தது ..."

"ஒரு நிமிஷம் இருங்க கேஸ் ஆப் பண்ணிட்டு வந்துறேன் ..ம்ம்.. இப்போ சொல்லுங்க ...."

"இன்னைக்கு மார்னிங் காபி பிரேக்குக்கு for a change cafeteria போலாம்ன்னு போய் இருந்தோம்..."

"வெயிட்... நீங்க காபி ப்ரேக்குக்கு எல்லாம் போவீங்களா ... நான் வர்க் பண்ணிட்டு இருந்தப்போ ஆஃபிஸ்ல கரெக்ட்டா டைமை மேனேஜ் பண்ணா சீக்கிரமா வந்துறலாம் ... இந்த காபி டீ ன்னு போனா அதுலயே டைம் வேஸ்ட் ன்னு அட்வைஸ் பண்ணுவீங்களே ..."

"இல்லமா எப்பவாவது போவோம் ... அங்க தண்ணி குடிக்கலாம்னு போனா அங்க ரொம்ப நாளைக்கு அப்பறம் கிருஷ்ணாவ பாத்தேன் ..."

"ஹேய் ஒரு நிமிஷம் .... தண்ணின்னு சொன்ன உடனே ஞாபகம் வருது ... வாட்டர் கேன்க்கு சொல்லணும்.... ஒரு போன் பண்ணிடறேன்.... அப்பறம் மறந்துருவேன்... ம்ம்ம்ம்.. இப்போ சொல்லுங்க ..."

"எங்க விட்டேன் ..."

"வாட்டர் ... கிருஷ்ணா..."

"ஓகே ... உடனே புதுசா ஏதாவது பேடண்ட் பண்ணலாமான்னு ஒரு பேச்சு வந்தது ..."

"ஆமா ... போன தடவை பேடண்ட் அப்ரூவ் ஆனதுக்கே நீங்க ப்ராமிஸ் பண்ண மாறி இன்னும் ட்ரீட் தரலை... நைஸா மறந்துட்டீங்க... நானும் மறந்துட்டேன் ... இந்த வீக் போலாமா ..."

"சரி சரி போலாம் ... இப்போ விஷயத்தை கேளு..."

"கேட்டுட்டு தான இருக்கேன் ... நீங்க தான் விஷயத்தை சொல்லாம ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க... சீக்கிரம் சொல்லுங்க ... எனக்கு பாத்திரம் தேய்க்கணும் ... கிச்சனை கிளீன் பண்ணணும்..."

"சரி நீ வேலையெல்லாம் முடிச்சிட்டு வா... சொல்றேன் ..."

"அதான ... முன்ன எல்லாம் ஆஃபிஸ் விட்டு வீட்டுக்கு வந்தா அந்த நாளை பத்தி நிறைய சொல்வீங்க.. இப்போ எல்லாம் என்கிட்ட பேசக்கூட உங்களுக்கு நேரம் இல்லை ... "

"ஙே! "

"அம்மா... அம்மா... listening skill னா என்னமா ..."

"நான் சொல்றேன் வாடா ... அம்மாக்கு தெரியாத விஷயத்தை  கேட்டா  அவ எப்படி சொல்லுவா....." நமட்டு சிரிப்புடன் !!

என்னத்த  சொல்ல....

Men are from mars ... Women are from venus...