Thursday, October 13, 2016

நானும் என் ஹிந்தியும் !!!

ஹிந்திங்கறதே எனக்கு கொஞ்சம் தகராறு .... பின்ன நான் என்ன பிரவீன் ராஷ்ட்ரபாஷாலாம் படிச்சேனா என்ன ... ஏதோ நாலாங்கிளாஸ் அஞ்சாங்கிளாஸ்ல சுத்தமா ஹிந்தி தெரியாம அதுல க்ராமர் மட்டும் படிச்சிட்டு அத வெச்சிட்டே  அலப்பறை விட்டுட்டு சுத்திட்டு இருந்தேன் ..... என்னோட அறியாமை எப்போ வெளிய வந்துதுன்னா எங்க அபார்ட்மெண்ட்ல ஒரு ஹிந்தி செக்யூரிட்டி  வந்தப்போ தான் .... அதிலயும் அபார்ட்மெண்ட் மெயின்டெனன்ஸ் இன்சார்ஜ் எங்க பிளாட் டர்ன் போது .... இவர் இருக்கும் போது தப்பிச்சிருவேன் (இவருக்கும் அவ்வளவெல்லாம் ஹிந்தி வராது பட் இவர் இருக்கும் போது டீலிங்லாம் பார்த்துப்பார் சொ மீ எஸ்கேப் )... இவர் ஆபீஸ் போன டைம்ல ஏதாவது சொல்ல வேண்டி வந்தா மாட்டுவேன் or rather அவன் எங்கிட்ட மாட்டுவான்.... நான் என்ன சொல்றேன்னு புரியறத்துக்கே அவனுக்கு அரை மணி நேரம் ஆகும்... அதுக்காக அவன் சொல்றதெல்லாம் எனக்கு புரியாதுன்னு நினைச்சுக்க வேண்டாம் ... பேசத்தான் தகராறே ஒழிய இந்த ஷாரூக்கின் பாஜிகர் , அனில் கபூரோட கிஷன் கன்னையா, சல்மான் கானோட மேனே பியார் கியா முக்கியமா  ராமானந்த சாகர் எடுத்த ராமாயணம் எல்லாம் பார்த்து ஹிந்தி புரியறதுல எனக்கு ஒண்ணும் கஷ்டமே இல்ல.. செக்யூரிட்டிக்கு எனக்கு பேசத்தெரியாம புரியறது மட்டும் ஆச்சர்யமா இருக்கும் போல ... சில சமயம் நான் பேசற ஹிந்திய  கேட்டுட்டு அடக்க முடியாம நக்கலா சிரிப்பான்...

இது ஒரு பக்கம்னா பொண்ணுக்கு பேசிக் ஹிந்தி லெட்டர்ஸ் சொல்லித்தரேன் பேர்வழின்னு ஹிந்தில எ ஏ தான் ஐ இல்லன்னு சொல்லிட்டேன்.... ஒரு 6 மாசம் நான் பிராக்டீஸ் கொடுத்து அப்பறம் அவ எதிர்காலத்தை நினைச்சு ஹிந்தி கிளாசில சேர்த்துட்டேன்... ஹிந்தி கிளாசில சேர்ந்த புதுசுல அவங்க டீச்சர் எ ஐ ன்னு சொல்லித்தராங்க ... இவ "Miss my mother has told there is no ஐ in hindi... this is ஏ..." அப்படின்னு அவங்களுக்கே சொல்லித்தரா...  முதல் நாளாச்சேன்னு வெளிய வெயிட் பண்ணிட்டு இருந்த நான் அவ டீச்சரை பாக்காமலேயே நழுவிட்டேன்... பின்ன மானம் போச்சே..

இப்படி இருக்க இந்த ஹிந்திய நம்பி நாங்க கிளம்பி வாரணாசி  ஹரிதுவார்ன்னு  தைரியமா போனோம்... அது என்னவோ என்ன மாயமோ தெரில.. அங்க போய் சுத்தி ஒரே இந்தி மயம்ன உடனே திருவிளையாடல்ல விறகு வெட்டி ங்கீயேன்னு ஆரம்பிச்சு திடீர்ன்னு  "பாட்டும் நானே ..." ன்னு பொளந்து கட்டற மாதிரி அங்க போனவுடனே எந்த காலத்துலயோ நான் படிச்ச ஹிந்தி கங்கா பிரவாகம் மாதிரி அப்படியே பீறிட்டு வருது ... ஹிஹி... விடுவேனா எப்பவும் ஒழுங்கா இவர் பின்னாடி போறவ ஏதாவது வழி கேக்கணும்னாலோ இல்லை விலை கேக்கணும்னாலோ "ஹரே பதிஜி ஆப் டைரியேனா ...மெய்ன் பூச்க்கே பதாத்திஹூன் ..." அப்படின்னு கிளாசில முதல் பெஞ்ச் ஸ்டுடன்ட் மாதிரி பாஞ்சிட்டு போனேன் ... ஏற்கனவே "அம்மா சொன்னா ... அம்மா சொல்லுவா... " ன்னு என் புராணம் பாடற பொண்ணு (மத்தவங்க கிட்ட மட்டும் தான் ... எங்கிட்ட பேசும்போது இல்ல ) கேக்கவா வேணும் .... அப்படியே என்னோட ஹிந்திய கேட்டு "அம்மா சூப்பரா பேசற மா " அப்படின்னு அசந்துட்டா ... எனக்கு ஒரே பெருமை தாங்கல ...

நிற்க ஹரித்வார்ல காலைல 6.30 மணிக்கு  கங்கால ஸ்நானம் பண்ண  சுறுசுறுப்பா கிளம்பினோம்... நிறைய இடத்தில குளிக்கறாங்க... நாங்களும் ஏதோ ஒரு படித்துறைக்கு போனோம் ... பட் மெயின் படித்துறை (ஹரி கி பவுரி ன்னு அந்த இடத்தை சொல்றாங்க ... ) எங்க இருக்குன்னு யாரையாவது  கேக்கணும்னு இவர் சொல்லிட்டு இருக்கார்.. நான் உடனே "நான் கேக்கறேன்... நானு நானு ..." ன்னு அங்க இருந்த ஒருத்தர் கிட்ட "பையா.... ஹமே கங்கா சே (நாந்தான் சொன்னேனே அரைகுறை க்ராமர் ) பாத் கர்னா ஹே .. கைஸே ஜானா ஹே ..." ன்னு கேக்கறேன் .... அந்த ஆளு உடனே "ஹரே பாத் கரியே தோ ... ஹே ஹமாரி கங்கா  மைய்யா ஹே ... ஆப் மன் கோல் கே ஜித்னே சாஹியே உத்னே பாத் கரியே ..." அப்டிங்கறாரு .... உடனே அவர் கூட இருந்த வைப் சிரிக்கறாங்க.... என் அருமை கணவர் என்ன பாத்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்... நான் bath ன்னு இங்கிலிஷ்ல கேட்டா அவர் ஹிந்தில பாத் (பேசறது) ன்னு நினைச்சுக்கிட்டு எங்க வேணா மனசு விட்டு பேசுங்கன்னு சொல்றார்.... இதுக்கு மேல ஊருக்கு திரும்ப வரைக்கும் நான் ஹிந்தில பேசி இருப்பேனா என்ன !!

No comments:

Post a Comment