Sunday, November 13, 2016

ஒரு யூத் ஸ்டோரி...

ஆபிஸ் பஸ்சில் ஒரு ஒரு வாரமாக எல்லாருடைய கவனமும் புதியதாய் அஷோக் பில்லரில் ஏறும் அவள் மேல்தான்..  போன வாரம் 3 நாட்கள் லீவ் எடுத்துட்டு ஊருக்கு ஒரு வேலையாய் போய்விட்டு வியாழன் அன்று பஸ்சில் ஏறியதும் எப்போதும் பின்னாடி ஸீட்டில் உட்காரும் அரவிந்த் முன் ஸீட்டில் இருந்தான் ... என்னை பார்த்து உற்சாகமாய் கையசைத்து அவன் பக்கத்து ஸீட்டை காட்டினான்... "என்னடா இங்க உட்கார்ந்து இருக்க.... " என்று நான் கேட்டதுக்கு நமட்டு சிரிப்பு சிரித்து "வெயிட் டில் அஷோக் பில்லர்" அப்படினான் ... அஷோக் பில்லரில் அவள் ஏறியதும் எனக்கு அவன் மாற்றத்தின் காரணம் சொல்லாமலேயே  புரிந்து விட்டது.....

"புதுசா வந்துருக்கற ஹெச் ஆர் டா.. எப்படி ..." என்று கேட்டவனை பார்த்து "சரிடா சரிடா நடத்து..." ன்னு சிரிச்சேன்.. "எங்ங்ங்க.... கொஞ்சம் திரும்பி பாரு ... பஸ் புல்லா எவனும் 3 நாளா வெளிய வேடிக்கை பாக்கறது இல்ல... மொபைல நோண்டறது இல்ல... பொதுவா ஹெச் ஆர் னா நல்லா பேசுவாங்க இல்ல... ஆனா அவ யாரையும் பார்த்து ஒரு சிரிப்பு கூட சிரிக்கறது இல்ல.. அப்பறம் தான் தெரிஞ்சுது பைனான்ஸ் டிபார்ட்மெண்ட்ன்னு .... நான் கூட  டீசெண்டா கொஞ்சம் சிரிச்சு ஒரு ஹலோன்னேன்... ரியாக்ஷனே இல்ல..... இதுல நடத்துங்கற...." என்றான்.

"சரிடா ... புதிசா சேரும்போது அப்படித் தான் இருப்பாங்க .... பிரெண்ட்லியா genuine ஆ இருடா "ன்னு சொல்லிட்டு நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பிச்சேன் ....

ஒரு 10 நாள் இருக்கும் .... அன்றைக்கு பஸ்சில் ஏறியவளை எதேச்சையாக பார்த்தேன் .... மெல்லியதாய் ஒரு சிரிப்பு  சிரிச்சா .... நானும் பதிலுக்கு சிரித்து வைத்தேன்... ஒரு செகண்ட் பஸ்சே (ட்ரைவர் உட்பட) என்னையே பார்த்தது ...
அவ்வளவுதான் அரவிந்த் ஒரு முறை முறைத்தான் ... "டேய்ய்.. என்னடா நடக்குது.... உனக்கே இது நியாயமா படுதா.... இதெல்லாம் சரி இல்ல ..." என்றவனை பார்த்து "ஹேய்ய் நான் என்ன பண்ணேன்... சிரிச்சா ஒரு கர்டெசிக்கு நானும் சிரிச்சேன்... ஏண்டா இப்படி ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கீங்க.. கொஞ்சம் மெச்சூர்டா இருடா.. அதனால தான் அவ உங்களை எல்லாம் மைண்ட் பண்றதில்லை ..." என்றேன் .. "நீ பேசுவடா ... உனக்கு என்ன " என்று சொல்லிட்டு திரும்பி கொண்டவனை பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது ...

இப்படியே ஒரு ஒரு மாசம் போனபோது..... ஒரு 10 நாட்கள் பிராஜெக்ட் விஷயமா பெங்களூரு போய்ட்டு அன்னைக்கு தான் பஸ்சில் வந்தேன் ... என்னை பார்த்ததும் அர்விந்த் "அப்ப்பா நல்லவனே ... உன்னால எனக்கு ஒரே ஒரு நல்லதுதான்டா நடந்தது .... நீ 10 நாளா பஸ்ல வராம இருந்தாலும் இருந்த ... அந்த அஷோக் பில்லர் 2 நாள் முன்னாடி  திடீர்னு என்கிட்டே வந்து பேசினாடா....ஹாய்... எங்க உங்க பிரெண்டை ரொம்ப நாளா பாக்கமுடியலையே.... ரிசைன் பண்ணிட்டாரான்னு அக்கறையோட கேக்கறா ... இல்லனதும் ஒரு நிம்மதியோட போனா ... உனக்கு என்னடா .... மச்சம் தான் " ன்னு வயித்தெரிச்சலோட சொன்னான்..

அஷோக் பில்லரில் அவள் ஏறியதும் நான் இருக்கும் ஸீட்டை தான் பார்த்தாள் .... அடுத்த செகண்ட் அவள் முகத்தில் தோன்றிய ஒரு பீலிங் சட்டென்று எனக்குள் ஒரு மணி அடித்தது....

என்னை பார்த்து சிரித்துவிட்டு ஏதோ கேட்க வந்தவளை பேப்பர் படிப்பவன் போல நாசூக்காய் அவாய்ட் செய்தேன் .... முகம் வாடி உட்கார்ந்தவளை பார்க்க எனக்கே கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது ...

வழக்கமாய் அஷோக் பில்லரில் அவள் இறங்கி போனதும் வடபழனியில் இறங்கும் நான், அன்றைக்கு சாயங்காலம்  கிண்டியில் இறங்க போனதை ஆச்சர்யமாக அவள் பார்ப்பது  தெரிந்தது...

கிண்டியில் இறங்கியதும் "அப்ப்பா ... " என்று பஸ் ஸ்டாப்பில் என் மனைவியோடு காத்து கொண்டிருந்த என் ரெண்டரை வயது மகள் என்னிடம் தாவியதை அவள் ஷாக்கோட பார்த்தது தெரிந்ததும் கொஞ்சம் நிம்மதியா இருந்தது ....

"இது என்னங்க உலக அதிசயமா ஆபிஸ்    இருக்கற வீக் டேல சினிமா போறோம் ... கிண்டி வந்துருன்னு திடீர்னு 4 மணிக்கு போன் பண்ணி சொல்றீங்க ...ஒண்ணும் புரியல .." என்ற மனைவியை பார்த்து "ச்சும்மா ஒரு சர்ப்ரைஸ்" என்று சிரித்தேன்... இவளுக்கு புரியாது ஆனால் அவளுக்கு புரிந்திருக்கும்...

பின்ன என்னங்க சந்தனத்தின் குணம் நிறைந்த santoor soap ன்னா பொண்ணுங்க மட்டும் தானா... நானும் சந்தனத்தின் குணம் நிறைந்த mysore sandal தாங்க !!!

No comments:

Post a Comment