Tuesday, May 31, 2016

ஒரு டிவியின் கதை....


முதல் முறை டிவி எனும் வஸ்துவை கண்டது ஐந்து வயதில்... நாங்கள் குடி இருந்த தெருவில் ஸ்கூல் ப்ரெண்ட் வீட்டில்... ஒரு பிரவுன் ஷட்டர் போட்ட பெட்டியில் ... அன்று தூக்கத்தில் ஒரே டிவி மயம்... வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பாக்கணும்னா என் வீட்டுக்கு வா என்ற அவள் வார்த்தையை பிடித்து கொண்டு அவள் வீட்டுக்கு ஓடி போய் பார்த்துவிட்டு திரும்பினால் ஆபீசில் இருந்து அப்பா திரும்பி இருந்தார்... டிவி பார்க்க எல்லாம் இன்னொருத்தர் வீட்டுக்கு போக கூடாது என்ற அவர் அட்வைஸ் ஐ கேட்டு அதன் பின் ஒலியும் ஒளியும் என்ற ப்ரோக்ராமை மறந்தாயிற்று..
அதற்கு பின் இட மாற்றம்..... இந்த முறை வட இந்தியா... ஒரே ஹிந்தி மயம்... யார் வீட்டிற்கு போனாலும் ஒரே டெம்ப்லேட்டில் ஒரு டிவி, ஒரு மர ஷோகேஸ்.... வெள்ளிக்கிழமை ராமானந்த் சாகரின் ராமாயணம் ... ஒரு வெள்ளிக்கிழமை கதவை தட்டிய அப்பா விற்கு கதவை திறந்தால் அவர் பின்னால் தலையில் டிவி பெட்டியை வைத்து கொண்டு ஒரு ஆள்.. வீட்டில் இருந்த சின்ன டீபாயில் அந்த போர்டபிள் டிவிஐ வைத்து அன்டேனாவை அட்ஜஸ்ட் செய்து ராமாயணம் பார்த்து தூக்கத்தில் எல்லாம் ஒரே காற்றில் பறந்து பறந்து புஸ் என்று போன அம்பு மயம்....
அதன் பின் அந்த டிவியிலேயே அடுத்த ஏழு வருஷங்களாய் கண்மணி பூங்கா, செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேர நாடகம், எதிரொலி, சித்ரஹார், ரங்கோலி, சண்டே காலையில் எஸ் வீ சேகர் இன் வண்ணக்கோலங்கள் எல்லாம் பார்த்து அப்படியும் திருப்தி வராமல் ப்ரோக்ராம் பட்டனை எவ்வளவு திருகினாலும் டான்டடடடான் எனும் தூர்தர்ஷன் மட்டும் தன் கிடைக்கும் .... நடு நடுவே காற்றில் திசை மாறி இருக்கும் அன்டனாவை பிடித்து திருகியதும் லைட் ஆக கிடைத்த தூர்தர்ஷன் செகண்ட் சேனலையும் விட்டு வைத்ததில்லை..
பதினொனாவது படிக்கும் போது ஒரு பெரிய கலர் டிவி வீட்டிற்க்கு வந்தது... துப்பறியும் சாம்புவையும், ஏக் சே பட்கர் ஏக் ஐயும், சந்திரகாந்தாவையும் கலரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது...
பிளஸ் 2 எக்ஸாம் ரிசல்ட் வந்த அன்று நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு கீழே இருந்த டாக்டர் ஆன்டி வீட்டில் முதல் முறையாக கேபிள் டிவி தரிசனம் கிடைத்தது... காலேஜ் படிக்கும் போது லீவ் இற்கு வீட்டிற்க்கு வந்தால் டிவியின் ரிமோட் பட்டன் சுத்தமாய் அமுங்கி போகும் அளவிற்கு மாற்றி மாற்றி இவ்வளவு சேனல் ஆ என்று ஸ்டடி லீவை எல்லாம் செமஸ்டர் லீவாய் மாற்றியது ஒரு காலம்...
வேலைக்கு போனபோது வீட்டிற்க்கு வந்தால் ஒரு தனி கவனிப்பு... அம்மா விற்கு ஒரு உதவியும் செய்யாமல் சும்மா இருக்கிறதே என்று எல்லா சேனல் ஐயும் மாற்றி மாற்றி சோபாவை தேய்த்தது வேறு ஒரு காலம்...
இன்று திருமணமாகி எட்டு வயதில் ஒரு குழந்தையும் வந்த பிறகு கணக்கே இல்லாத நூறு சேனல்கள் இருந்தாலும் ஏனோ டிவியை பார்க்கும் இன்டெரெஸ்ட் சுத்தமாய் பூஜ்யம்....
போறாததற்கு அவள் படிக்கும் மாண்டேசரி ஸ்கூல் இல் எனக்கு போதித்ததை எல்லாம் என் மனதில் உருவேற்றி என் பெண்ணிடம் ஒரு நாளைக்கு ஓராயிரம் முறை சொல்லும் டயலாக் 'கண்ணா நீ ஒண்ணும் பண்ணாம சும்மா வேணா இரு ஆனா இந்த இடியட் பாக்ஸ் அ பாக்காத'
.. இந்த கதை ஐ அவள் கண்ணிலேயே காட்ட கூடாது
இந்த லீவ் ல மைசூர் போலாம் என்று அப்பா சொன்னதை கேட்ட உடன் பயங்கர சந்தோஷம்.
பென்சில் பாக்ஸ் இல் அயர்ன் செய்த பர்த்டேவிற்கு தைத்த புது டிரஸ், குளிருமா என்றே தெரியாமல் பீரோவில் தூங்கி கொண்டிருந்த நாப்தலின் மணக்கும் ஸ்வெட்டர், மஞ்சள் பையில் சுற்றிய மண்டே ஸ்கூல் இற்கு அணியும் ப்ளூ கலர் வைட் கான்வாஸ் ஷூ, சாக்ஸ், இருந்த ரெண்டே ரெண்டு கர்சீப், என்னவோ எழுதி தள்ள போவது போல் நாலே நாலு பக்கங்கள் மீதி இருந்த பழைய மாத்ஸ் நோட், இருந்த எல்லா வளையல்கள், ரிப்பன்கள் இதை எல்லாம் அம்மாவிடம் கெஞ்சி வாங்கிய எம்ப்ராய்டரி செய்த ஒரு ரெட் ஜோல்னா பையில் திணித்து அதையே தலைக்கு வைத்து தூங்கி ஒரு வாரம் போனபோது.... ஏதோ ஒரு காரணத்தினால் இப்போ போக முடியாது அடுத்த லீவ் ல போலாம் என்று அப்பா சொல்ல, ரெண்டு நாட்கள் அழுது, இருபத்தைந்து வருஷங்கள் கழித்து போன வாரம் மைசூர் போயிருந்தேன்.
என்னவோ தெரியவில்லை மைசூர் போக ட்ரையின் ஏறியதில் இருந்து திரும்பி வீட்டிற்க்கு வரும் வரை ஏதோ ஒன்று குறைந்தது போலவே ஒரு உணர்வு. எவ்வளவு யோசித்தும் அந்த பீலிங் போகவே இல்லை. திரும்பி வந்து லக்கேஜ் எல்லாம் பிரித்து ஒழுங்கு படுத்தும் போது தான் அது என்ன என்று புரிந்தது.
அது நான் கொண்டு போக முடியாத ரெட் ஜோல்னா பை !!
மிகவும் எதிர்பார்த்து
இனி நடக்கவே நடக்காது
என்று கடந்து போன பின்
எதிர்பாராத தருணத்தில்
அது நடப்பது தான் 
வாழ்க்கை எனில் ...
அப்படி நடக்கும் போது
அதை ஏற்க முடியாமல் போவதே
விதி எனப்படும் !
வாழ்க்கையில் எந்த கட்டத்திலும் 
இறங்க மறுத்து
டிக்கெட் இல்லாமல் நம்மோடு 
இறுதி வரை பயணிக்கும்
ரயில் சிநேகம்..
நினைவுகள் !
சொல்லப்பட்ட வார்த்தைகளை விட
சொல்லாமல் விழுங்கிய வார்த்தைகளில்
புதைந்து இருக்கும் ஆயிரம் அர்த்தங்கள் !
ஓடியது பின் சறுக்கியது
உட்கார்ந்து தோண்டி கிளறியது
கிளறியதை எல்லாம் அள்ளி பார்த்தது
பார்த்ததை உதறி துடைத்தது
திரும்பவும் எழுந்து ஓடி ஊஞ்சலாடியது
பார்க்கில் விளையாடிய குழந்தை
எனக்கு ஏதோ புரிந்தது போல் இருக்கிறது !
வாழ்க்கையின் சில தருணங்களை
அதன் கனம் குறையாமல்
தலையில் சுமந்து செல்வது சகிப்பு நிலை
அந்த தருணங்கள் கடந்து செல்வதை
சிறிதும் அலட்டல் இன்றி
எட்டி நின்று கை கட்டி பார்ப்பதே
இதுவும் கடந்து போகும் மனோநிலை !
மணி கணக்கில் நான் பேசிய எதுவும்
மணிக்கணக்கில் என்பதை மட்டும் நினைவுப்படுத்த
அப்படி பேசியதற்கு இடையில்
நீ சொன்ன சில வார்த்தைகள் மட்டும்
மனதில் கல்வெட்டானது எப்படி !
# மனதின் பாஷை
நீண்டு கொண்டே சென்ற பயணம்
சட்டென்று
பின்னோக்கிய பயணமாய் மாறி இருந்தது
நெருக்கமான நினைவுகளை சுமந்த இடத்தில் 
பஸ் 
பத்து நிமிடம் நின்றுவிட்டு
புறப்பட்டபோது !
மௌனத்தில் பிரவாகம் எடுக்கும் நினைவுகள்
சொல்ல எத்தனிக்கும் போது மொழி மறந்து
வார்த்தைகள் அற்று விடுகிறது 
# மனதின் பாஷை
தேவையான போது கெஞ்சினாலும் வராமல் படுத்தி
அவசியமற்ற சமயங்களில் தவறாமல் வந்து கழுத்தறுப்பதே
மறதி !
எத்தனை தான் முறுக்கி கொண்டு காட்டாமல் இருந்தாலும்
கஷ்டமாய் இருக்கிறது என்று நான் அழும் போது
உன் கண்ணோரம் துளிர்க்கும் ரெண்டு சொட்டு கண்ணீர்
காட்டி கொடுத்து விடும் உன் அன்பை !
கண்ணால் பேசி தலை அசைத்து
விடை பெற்று கொண்டாலும்
இம்மி அளவும் அசையாமல்
பசை போட்டது போல
அங்கேயே நின்று கொண்டு இருக்கும்
மனம் !
# பிரிவு
அப்போ நான் போயிட்டு வரேன்
என்று நீ ஆயிரம் முறை சொல்லும் போதே தெரிகிறது
இன்னும் கொஞ்சம் நேரம் இரேன் என்று கேட்பதற்கு ஏங்குகிறாய் என்று !
# செல்லாமை உண்டேல் எனக்குரை
சந்தோஷமாக நான் சென்று கொண்டு இருந்த டைம் மெஷின்
சடாரென விசை நிறுத்தி என்னை புறம் தள்ளியது
பேருந்தில் ஓடி கொண்டிருந்த அந்த பாடல் முடிந்த போது !
மழை அழைத்து வரும் அமைதியை விட
அதன் பின் வரும் மண் வாசனை கிளறிவிடும் ஞாபகங்களே நெருக்கமானவை !
ஜன்னலோரம் சத்தமாக பாட்டு
தெருவே கேட்கும்படி அரட்டை
தூங்க முயற்சிப்பவரையும் எழுப்பி விடும் சிரிப்பு
அழகான நிலாவோடு கேண்டில் லைட் டின்னர்
மல்லாந்து கிடந்து நக்ஷத்திரம் எண்ணும் குழந்தைத்தனம் 
இன்வெர்டர்கள் புழக்கம் அற்ற கரண்ட் இல்லாத
என் இளமை கால மொட்டை மாடி இரவுகள் தான் எத்தனை அழகானவை !
அடிக்கப்படாத அழைப்பு மணிகள்
அழைக்கப்படாத தொலைபேசிகள்
பரிமாறப்படாத தட்டுக்கள்
ரசித்து பேசப்படாத நினைவுகள்
பேசி சிரிக்கப்படாத தருணங்கள் 
கைகோர்த்து செல்ல முடியாத நடைபாதைகள்
புரிந்து கொள்ளப்படாத ஜாடைகள்
நெக்குருக்கும் நாட்கள்
திறக்கப்படாத மனத்தாள்கள்
இவை அனைத்தும் தனிமையின் நெருங்கிய நண்பர்கள் !
ஓடி கொண்டே இருப்பது தெரிந்து
ஒரு நொடி திரும்பி பார்க்க
நான் ஓடிய பாதையில்
கண்ணில் படவில்லை என் கால்தடங்கள்
தெளிந்தது ஒன்று 
ஓடி கொண்டிருப்பது
யாரோ இட்ட பாதையில்
கால்தடங்கள் பதிக்க
புதிய பாதை உருவாக்க வேண்டும் !
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத கடல் அழகு
நம்மையே தூக்கி செல்லும்
கரையின் காற்று அழகு
நீரில் பட்டு தெறிக்கும்
கடற்கரை நிலவு அழகு
மணலில் செய்து அலை கலைக்கும் மாளிகை அழகு
மாங்காயும் சுண்டலும்
கொறிக்கும் சுவை அழகு
இத்தனையையும் தோற்கடித்தது
தன் அப்பாவின் காலை பிடித்து தொங்கி அலையில் ஆடும் என்னுயிர் பிள்ளை அழகு
தாய் மனம் !
ஓயாமல் உயிர் சிந்தி
சிந்தினாலும் உயிர் தந்து
என் பிள்ளை பருவத்தை
கனவுகளால் நிரப்பிய
ஹீரோ பேனா !
தலையில் விழும் அருவி போல தொடங்கி
படபடக்கும் பட்டாம்பூச்சியாய் பறந்து
தலை கோதும் விரல்களாய் மாறி
தாய் மடி ஸ்பரிசம் போல சுகித்து
தகிக்கும் வார்த்தைகளையும் சகித்து
சிந்தும் கண்ணீரை ஏந்தி
மனதால் உடன்கட்டை ஏறுவதே
காதலின் பரிணாம வளர்ச்சி !
விரல்களில் சிக்காமல்
நம் கையிலும் இல்லாமல்
ஒரு போதும் நிற்காமல்
நாம் கடக்கவும் முடியாமல்
கட்டுப்பாடும் இல்லாமல்
தறிகெட்டும் ஓடாமல்
விலை பேச முடியாமல்
விதி என்றும் விலகாமல்
நம் வாழ்க்கையை நடத்தி செல்லும்
நேரம் !
காக்காய் கடி கடித்து பகிர்ந்த மிட்டாய்களும்
ஒன்றாய் உட்கார்ந்து தேய்த்த பெஞ்சுகளும்
இம்மி மாறாமல் காப்பி அடித்த நோட்ஸ்களும்
டெலிபோன் பில்களை எகிற வைத்த சிரிப்புகளும்
தூக்கம் தொலைத்த இரவு நேர அரட்டைகளும்
உப்பு பெறாத விஷயங்களுக்கு போட்ட சண்டைகளும்
அதன் பின் நிமிடத்தில் வரும் சமாதானங்களும்
ஒன்றாக சென்ற பேருந்து பயணங்களும்
ஆனந்தமாக மிதித்து சென்ற சைக்கிள் டபுள்ஸ்களும்
வலிக்கையில் சாய்ந்து கொண்ட தோள்களும்
அட்வைஸ் செய்யாமல் கண்ணீர் துடைத்த கைகளும்
பிரிகையில் அழுத அழுகைகளும்
வாழ்வில் எத்தனை மைல்கள் தள்ளி இருந்தாலும்
வேறு எத்தனை மையல்கள் வந்தாலும்
நாம் நாமாக மட்டுமே இருக்கும்
நட்பில் மட்டுமே சாத்தியம் !
எவ்வளவு நேரம் தான் கண்ணாடி பார்ப்ப
இந்த டிரஸ் பளிச்சுன்னு இருக்குமா
தலைய அழுந்த வாராத
அண்ணா ஒரு புல் சைஸ்
டேய் அந்த பிளாஷ் ஐயும் போடு
இன்னும் கொஞ்சம் சிரிங்க
லேசா தலைய தூக்குங்க
ரெண்டு நாள் கழிச்சு வாங்க
இப்படியாக இருட்டு அறையில் பிரிண்ட் செய்து
நான்கு மரச்சட்டத்தில் பிரேம் செய்து
வீடு முற்றத்தில் மாட்டும் போட்டோ
பேசிய பல கதைகளை புரிய வைத்தது
இன்றைய டிஜிட்டல் போட்டோவை போட்டோ ஷோப்பில்
விண்டேஜ், ப்ளாக் அண்ட் வைட் என மாற்றி போட்ட போது விழுந்த ஆயிரம் லைக்ஸ் !
மெழுகு மட்டும் அல்ல
தானும் தான் தன்னை எரித்து
ஒளி கொடுக்கும் தன்னலம் இல்லாதது
உருகுவது தெரிந்தால் மட்டுமே தியாகம் அல்ல
ஒரு எரிந்த தீக்குச்சியின் மௌன சாட்சி !
நுரைத்த அழகில் உயிர் நெருங்கி
நுகர்ந்த மணத்தில் சுவாசம் கலந்து
மிடறு மிடறாய் இதயம் நனைத்து
பிரிய மனம் இல்லாது தொண்டை அடைத்து
இறுதியாய் நின்ற இனிப்பு தோய்ந்த கசப்பில்
மீண்டும் காண ஏங்க வைக்கும் தவிப்பில்
படைத்தவனின் இணை இல்லாத அற்புத படைப்பு
பில்டர் காபி !
சிறகை முறிக்க முடிவதில்லை
கால்களை ஒடிக்கவும் ஒழிவதில்லை
கூண்டில் அடைக்க பாடுபட்டும்
உடைத்து கொண்டு பறக்கிறது
கையில் சிக்கும் உயரமும் இல்லை
எதற்கும் அஞ்சும் பலவீனமும் இல்லை
காற்றை மிஞ்சும் வேகத்தில்
எதையும் கடக்கும் உறுதியுடன்
உயர பறக்கும் மனப்பறவை !
பயணங்கள் முடிவதில்லை
சிரித்து முடிக்க முடியாத மகிழ்ச்சிகள் இருக்கும் வரை
சொல்லப்படாத துயரங்கள் வருத்தும் வரை
கொண்டாடும் வெற்றிகள் இருக்கும் வரை
அது தரும் போதை தீரும் வரை 
கொடுத்து முடிக்கப்படாத முத்தங்கள் இருக்கும் வரை
தலை கோதும் விரல்கள் விலகாத வரை
நொறுங்கி சிதறும் உணர்ச்சிகள் உள்ள வரை
கதறி துடிக்கும் வலிகள் அடங்கும் வரை
அன்பின் எல்லை வரை செல்லாத மனம் இருக்கும் வரை
ஆழத்தை சொல்லி முடிக்காத இதயம் இருக்கும் வரை
ஆசைகள் கட்டுக்குள் அடங்கும் வரை
பந்தங்கள் நம்மை ஆளும் வரை
பாசமும் நம்மை வழுக்கும் வரை
பயணங்கள் முடிவதில்லை !
ரேடியோவில் வரும் ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி
தினமும் விளையாடும் கண்ணாமூச்சி
மாதம் முழுதும் காத்திருந்து படிக்கும் கோகுலம் அம்புலிமாமா
கோடை விடுமுறை ஸ்பெஷல் டிங்கில் சம்பக்
ஒரு மணி நேரம் இரண்டு ருபாய் வாடகை சைக்கிள்
அதை பிடிக்கவென்றே கூடவே ஓடி வரும் நண்பர்கள்
வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும்
சனிக்கிழமை மொழி புரியாத ரீஜினல் பிலிம்
தூர்தர்ஷனின் கண்மணி பூங்கா
ஞாயிற்றுக்கிழமை ரங்கோலி
பொருட்காட்சி் ஜெயண்ட் வீல் அங்கே விற்கும் டில்லி அப்பளம் …
இப்படி காணாமல் போனவைகளின் மிச்சங்களை இருட்டில் தேடி கொண்டே இருக்கிறது தொலைந்து போன பிள்ளை மனம் !!