Tuesday, May 31, 2016

இந்த லீவ் ல மைசூர் போலாம் என்று அப்பா சொன்னதை கேட்ட உடன் பயங்கர சந்தோஷம்.
பென்சில் பாக்ஸ் இல் அயர்ன் செய்த பர்த்டேவிற்கு தைத்த புது டிரஸ், குளிருமா என்றே தெரியாமல் பீரோவில் தூங்கி கொண்டிருந்த நாப்தலின் மணக்கும் ஸ்வெட்டர், மஞ்சள் பையில் சுற்றிய மண்டே ஸ்கூல் இற்கு அணியும் ப்ளூ கலர் வைட் கான்வாஸ் ஷூ, சாக்ஸ், இருந்த ரெண்டே ரெண்டு கர்சீப், என்னவோ எழுதி தள்ள போவது போல் நாலே நாலு பக்கங்கள் மீதி இருந்த பழைய மாத்ஸ் நோட், இருந்த எல்லா வளையல்கள், ரிப்பன்கள் இதை எல்லாம் அம்மாவிடம் கெஞ்சி வாங்கிய எம்ப்ராய்டரி செய்த ஒரு ரெட் ஜோல்னா பையில் திணித்து அதையே தலைக்கு வைத்து தூங்கி ஒரு வாரம் போனபோது.... ஏதோ ஒரு காரணத்தினால் இப்போ போக முடியாது அடுத்த லீவ் ல போலாம் என்று அப்பா சொல்ல, ரெண்டு நாட்கள் அழுது, இருபத்தைந்து வருஷங்கள் கழித்து போன வாரம் மைசூர் போயிருந்தேன்.
என்னவோ தெரியவில்லை மைசூர் போக ட்ரையின் ஏறியதில் இருந்து திரும்பி வீட்டிற்க்கு வரும் வரை ஏதோ ஒன்று குறைந்தது போலவே ஒரு உணர்வு. எவ்வளவு யோசித்தும் அந்த பீலிங் போகவே இல்லை. திரும்பி வந்து லக்கேஜ் எல்லாம் பிரித்து ஒழுங்கு படுத்தும் போது தான் அது என்ன என்று புரிந்தது.
அது நான் கொண்டு போக முடியாத ரெட் ஜோல்னா பை !!

No comments:

Post a Comment