Thursday, June 30, 2016

Scent of the perfume...
மனதில், ஞாபக அடுக்குகளில் நிரந்தரமா வாசம் செய்யறதுனால தான் வாசனையை வாசம் ன்னு சொல்றாங்களோ... நம்ம புலன்களிலேயே என்னை பொறுத்தவரை  இந்த  ஸ்மெலிங் ஸென்ஸ் ரொம்ப ஸ்மார்ட்... ஒரு தடவை இதயத்தை தொட்டுட்டா அப்புறம் அது நிரந்தரமா மூளைல தங்கிடும்... நிறைய காம்ப்ளெக்ஸ் முடிச்சுகளோட ஒரு மூட்டை நினைவுகளை முடிஞ்சி வெச்சிருக்கும்....... என்னைக்காவது அதே வாசனை எங்கிருந்தாவது வந்தா உடனே ரயில் பெட்டி மாறி அது தொடர்பான ஞாபகங்கள் வரிசை கட்டி பின்னாலயே வந்துரும் ...உதாரணத்துக்கு சும்மா வீட்ல நெய் காய்ச்சினா கூட சின்ன வயசுல தாத்தா பாட்டி வீட்ல ஒரு பெரிய பட்டாளமே பண்டிகைக்கு கூடி கூத்து அடிச்சது ....
எவ்வளவு வயசானாலும் vicco turmeric மஞ்சளும் ponds பௌடரும் அம்மாவை தான் ஞாபகப்படுத்தும் (இந்த காலத்து குழந்தைங்களுக்கு அம்மாவை ஞாபகப்படுத்த நிறைய ப்ராண்ட் கன்பியூஷன் இருக்கும்.. கொஞ்சம் கஷ்டம் )..
எல்லாருக்குமே கண்டிப்பா இந்த cuticura சம்பந்த பட்ட ஒரு ஞாபகமாவது மனசுக்கு நெருக்கமா இருக்கும்... அந்த டால்கம் பௌடர்க்கு மட்டும் அப்படி ஒரு இன்டிமேட் வாசமா இல்லை முதன் முதல்ல அப்படி ஒரு ரொமான்டிக்கான வாசத்தோட வந்த பௌடரா எது காரணம்னு கேட்டா அதுக்கு நம்ம முக்கு மட்டும் தான் பதில் சொல்ல முடியும் .. எனக்கு ஞாபகம் வரது எனக்கு இங்கிலிஷ் எடுத்த அழகான எலிசபெத் டீச்சர் ...
இந்த விபூதியை எடுத்தாலே நல்லா காலைல குளிச்சிட்டு அழகா ஒரு ரசனையோட அதை இட்டு கொள்ளும் என் தாத்தா ஞாபகம் தான் வரும்.. அதிலும்  மூணு விரலில் அதை எடுத்து நெற்றியில் பட்டை போட்டு அந்த முணு வரிகளும் சரியாக தெரிய அதை பூணலால் மார்க் செய்யும் அந்த பர்பெக்ஷன் இருக்கே மறக்கவே முடியாதது ....
புது புக்கை மோந்து பாத்தா அந்த புக் அளவு எழுதறதுக்கு விஷயங்கள் வருது... உதாரணம் சின்ன வயசில் நானே போய் எனக்கு மேத்ஸ் நோட் வாங்கி அந்த நோட்ல ஒரு பெய்ஜ்ல எழுதினா பத்து பெய்ஜுக்கு இங்க் பதியற அளவு அது மட்டமா இருந்து  டீச்சர் கிட்ட வாங்கி கட்டிக்கிட்டது...
ஒண்ணும் இல்லை இந்த நெல்லு புது அரிசி எல்லாம் பாத்தா என்னொட ஒரு கிளோஸ் பிரெண்ட் வீட்ல இருந்த நெல் குதிர் அதுல அடிச்சிருந்த பிரௌன் கலர் பெயிண்ட் மாட்டி இருந்த மஹாலக்ஷ்மி படம் போட்ட டெயிலி ஷீட் காலண்டர் அங்க சாப்பிட தோசை வரைக்கும் ஞாபகம் வரும்...
இந்த நெய்ல் பாலிஷ் , பெயிண்ட் , வார்னிஷ் இதெல்லாம் என்னவோ நான்  குடியிருந்த அந்த ரெட் ஆக்ஸைட் தரை கொண்ட அந்த வீட்டை தான் ஞாபகப்படுத்தும் .... அந்த வீட்டில் இருந்த அலமாரி  தூண்கள் எல்லாத்திலும் வார்னிஷ் கலந்த நினைவுகளின் வாசம் ....
இன்னைக்கும் யார் வீட்டில் இருந்தாவது  வத்தக்குழம்பு கொதிக்கும் வாசனை வந்தால் சின்ன வயதில் எங்கள் குட்டி  பட்டாளத்தை உட்கார வைத்து அந்த வத்தக்குழம்பு சாதத்தை பிசைந்து கையில் கொடுத்த நாட்கள் தான் முந்தி கொண்டு வரும்...
ஒன்றும் இல்லை இந்த பாயின் வாசனை வந்தால் கூட அந்த திண்ணை வீட்டில் மழை வந்தால் மட மடவென சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் திண்ணையின் பாய்களை கிழே இழுத்து விட்டு மழையை பாயின் இடுக்கு வழியே ரசித்தது தான் நினைவுக்கு வருது...
ரெக்ஸோனா சோப்பின் வாசனை என் நெருங்கிய தோழியை, eau de cologne வாசனை என் அப்பாவை , பெட்ரோல் வாசனை சின்ன வயதில் ஏறி போன மொபெட்டை என்று பட்டியல் போட்டு கொண்டே போலாம்..
அது ஏன்  சொல்லி வைத்த மாதிரி இப்படி எல்லாத்துக்கும் சின்ன வயசு ஞாபகம் மட்டுமே வருதுன்னு நிறைய தடவை யோசிச்சு இருக்கேன் ...... காலேஜ் படிக்கும் போது நடந்த கேம்பஸ் செலக்ஷன் ல ஒரு கம்பெனில மட்டும் க்ரூப் டிஸ்க்ஸ்ஷன் இருந்தது ... அது பத்தி டிப்ஸ் கொடுத்த சீனியர்ஸ் "அவங்க டிஸ்க்ஸ்ஷன்க்கு கொடுக்கற டாபிக் ஏ ரேஞ்சா இருக்கும் ... for example talk about the scent of a perfume ன்னு சொல்லுவாங்க... " அப்படின்னு சொன்னாங்க ... அப்போ அது எனக்கு சரியா புரில.. இப்போ தோணுது இப்படி நினைவுகளையோட connected ஆ இருக்கறதை பத்தி தான் இருக்குமோ !!!

Wednesday, June 29, 2016

சின்ன வயசுல ஸ்கூல் படிக்கற காலத்துல நிறைய தடவை எப்போடா இந்த ஸ்கூல் படிப்பு முடியும்னு தோணி இருக்கு.... முக்கியமா டெய்லி இந்த ஹோம்ஒர்க் பண்ணும் போது ... எப்போவாவது இம்போசிஷன் எழுதும் போது .... எக்ஸாம் டைம் டேபிள் வந்துடுச்சுன்னா இன்னும் கஷ்டமா இருக்கும்... யாருடா இந்த எக்ஸாம் எல்லாம் கண்டுபிடிச்சது... படிச்சா மட்டும் போறாதா (?? என்னவோ பெரிய சைன்டிஸ்ட்ன்னு ஒரு நினைப்பு தான் ஹிஹி)..... அதுவும் இந்த அனுவல் லீவ்ல கொடுப்பாங்களே ஒரு ஹோம்ஒர்க்... எல்லாஆஆஅ கொஸ்டின் பேப்பர்க்கும் ஆன்சர் எழுதணும் (அதுவும் கொடுமையிலும் கொடுமை சாய்ஸ் இல்லாம )... சில சப்ஜெக்ட் மூணு தடவை நாலு தடவைன்னு எழுதணும்... ஊருக்கு எல்லாம் போய்ட்டு வந்து, கடைசீசீசீ நாள்ல, இதுக்கு ஏண்டா லீவ் விட்டாங்க ஸ்கூல் ஏ இருந்து இருக்கலாம் அட்லீஸ்ட் ஹோம்ஒர்க் மட்டும் தான்னு மூக்கால் அழுதுக்கிட்டே எழுதுவேன்..... அப்பறம் இந்த ரெக்கார்ட் நோட் ... அதுல நீட்டா வரைஞ்சு (ஸ்கேல் எல்லாம் வேற யூஸ் பண்ண வேண்டிய கட்டாயம்... நம்மளானா பேப்பரை ஒரு மடி மடிச்சு அப்பறம் பிரிச்சு அந்த மடிப்பையே மார்ஜினா யூஸ் பண்ற ஆளு).... இந்த வேலையை எல்லாம் என்னடா கொடுமை எப்போடா ஸ்கூல் படிப்பை முடிச்சு பெரிய (??) ஆளா ஆவோம்னு புலம்பிக்கிட்டே செய்வேன்..
இதெல்லாம் பண்ணும் போது கட்டாயம் தோணற ஒரு விஷயம் தான் இங்க ஹைலைட் ... இது எல்லாம் பண்ணும் போது சமையலறையிலோ இல்லை துணி துவைத்து கொண்டோ இல்லை மாவரைத்து கொண்டோ இருக்கும் அம்மாவை பார்த்து "ச்ச்ச் அம்மா மட்டும் இந்த ஸ்கூல் எல்லாம் போகாம எக்ஸாம்க்கு படிக்காம ஹோம்ஒர்க் எல்லாம் இல்லாம எவ்வளவு ஜாலியா (???) இருக்காங்க... ஹ்ம்ம்ம்.... எப்போடா நாமளும் இப்படி ஆவோம்" என்று தவறாமல் மனசுக்குள் புலம்புவது... சம் டைம்ஸ் அப்பாவை பார்த்தும் தோணும் "இவர் எவ்வளவு ஜாலியா (??) ஆஃபீஸ் போய்ட்டு வரார்... படிக்கவே வேண்டாம்"...
அன்னைக்கு எப்பவும் போல எனக்கும் ரெண்டாங்கிளாஸ்(!) படிக்கும் என் பொண்ணுக்கும் நடுவுல ஒரு வாக்குவாதம் ... நான் எப்பவும் போல "கண்ணா லைப்க்கு படிப்பு தான் முக்கியம்... டெய்லி ஒரு மணி நேரமாவது படிக்கற ஹாபிட் வரணும் இல்லைனா ரொம்ப கஷ்டம் (நாங்க எல்லாம் ப்ளஸ் 2 க்கே ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் படிச்சது.. ரெண்டாங்கிளாஸுக்கு நான் இதை சொல்றது கொஞ்சம் ஓவரா எனக்கே தெரிஞ்சாலும்... இப்போ காலம் மாறிடுச்சு இல்ல அதனால சொல்லலாம்)" அப்படி இப்படின்னு என்னோட லெக்சரை ஆரம்பித்தேன்.... சட்டென்று டென்ஷன் ஆகி (பாவம் அவளும் என் இம்சையை எவ்வளவு தான் தாங்குவா) "நீ மட்டும் டெய்லி படிக்கறியா...ஸ்கூலுக்கு போறியா ... நீ மட்டும் ஜாலியா இருக்க... என்னை மட்டும் சொல்ற" என்றாளே பார்க்கணும் ... why blood same blood (my blood இல்ல அதான் )
இப்போ டெய்லி அவளோட நானும் (நோட் தி பாயிண்ட் அம்மாவான அப்பறமும்) ஒரு மணி நேரம் படிக்கறேங்கறது வேற விஷயம் ...
ஸ்கூல் போங்க சார் லைப் நல்லா இருக்கும் !!!

Monday, June 27, 2016

"இன்னைக்கு என்ன ஸ்பெஷல்ன்னு ஞாபகம் இருக்கா ..."

"இன்னைக்கு என்ன ஸ்பெஷல் நீயே சொல்லிடேன்.. " (எக்கச்சக்க மெயில்ஸ் ரெஸ்பாண்ட் பண்ணணும்.. இதுல இன்னைக்கு ஹை  லெவெல் ப்ரோபோசல் மீட்டிங் வேற ..)

"அது கூட ஞாபகம் இல்லையா.. நல்லா யோசிங்க பார்ப்போம் ..."

"யோசிக்க எல்லாம் டைம் இல்ல ... நீயே சொல்றதானா சொல்லு ...." (சலிப்புடன் )

"சரி விடுங்க ..." (கல்யாணமாகி கொஞ்ச வருஷத்துலயே எப்படி சலிச்சுக்கறார் ... )

காரை ஸ்டார்ட் செய்தபோது ஒரு மாதிரி கனைத்தது ... நிறைய கஷ்டப்பட்டு ஸ்டார்ட் செய்ய வேண்டி இருந்தது .. இந்த சனிக்கிழமையாவது சர்வீஸ்க்கு கொடுக்கணும்.... போன் அடித்தது..  "இன்னைக்கு ஈவினிங் ஈ ஸீ ஆர் ல இருக்கற பாபா கோவிலுக்கு போலாமா ..."

"இன்னைக்கு எல்லாம் கஷ்டம் ... அதுவும் அவ்வளவு தூரம் போய்த்தான் பார்க்கணுமா.. நீயே லோக்கல்ல இருக்கற சமிதி போய் பாத்துக்கோ ...."

"இல்லை இன்னைக்கு வரதா மனசுல வேண்டிட்டே இருந்தேன் ..."

"உனக்கு வேற வேலை இல்லை .. நான் ட்ராபிக் ல இருக்கேன் ... அப்றம் பேசறேன்... "

வேலை டென்ஷனில் மொபைல் சைலன்ட் மோடில் இருந்ததை கவனிக்கவில்லை....

அவள் திரும்ப திரும்ப ட்ரை செய்து போனை எடுக்கவில்லை.. "இவ்வளவு  தடவை போன் பண்ணறேன் ... எடுக்கறாரா பாரு ... அவ்வளவு அலட்சியம் ... எல்லாரும் சொல்றா மாறி நாற்பது வயசுன்னா இப்படி தான் மாறிடுவாங்களோ .. முன்ன எல்லாம் என் மேல எவ்வளவு அன்பா இருப்பார்.. இப்போ சுத்தமா என் மேல அன்பே இல்லை ... " ரொம்ம்ம்ப யோசித்து யோசித்து ஒரு அழுகை அழுது முகம் எல்லாம் வீங்கி விட்டது...

கிட்டத்தட்ட நாலு  மணியாகி விட்டது  மீட்டிங் முடிந்து ஓரளவு டென்க்ஷன் குறைந்து அப்போதான் லன்ச் பேகையே  பிரித்தான்.. "அட என்ன இது ஸ்பெஷல் லன்ச் ... பாயசம் வேற இருக்கு ... எனனவோ ஸ்பெஷல் கண்டுபிடிங்கன்னு வேற சொன்னாளே ... ஒரு வேளை இன்னைக்கு அவ பர்த்டேவோ .. மார்ச் 4 ஆ மார்ச் 14 ஆ ... இப்படியா மறந்து போவேன் ... சரி எதுக்கும் ஒரு பொக்கேயோடவே வீட்டுக்கு போவோம்.. "

கதவை திறந்தவள் முகத்தை பார்த்தவுடனே தெரிந்து விட்டது ... "அய்யோ ஸாரிம்மா காலைல ஒரே வொர்க் டென்க்ஷன் ... மொபைலை வேற கவனிக்காம சைலண்ட்ல போட்டு இருந்தேன் ... அதுக்கு போய் இப்படி அழுதியா ... ஹேய் many many happy returns of the day... ஆனா பாத்தியா அப்பவும் நான் மறக்கலை ... உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு தான் ஒண்ணுமே ஞாபகம் இல்லாத மாறி நடிச்சேன் ... எப்படி ..." (கடவுளே எப்படியோ சமாளிச்சாச்சு ... நீதான் காப்பாத்தணும் )

அவன் தந்த பொக்கேவையே பார்த்தவள் சொன்னாள் "இன்னைக்கு பர்த்டே உங்களுக்குதான்.... அதுக்கு தான் பாயசம் பண்ணேன்.. கோவிலுக்கு போலாம்னு சொன்னேன் "

"ஙே !!!"

Men are from mars, women are from venus ன்னு சும்மாவா  சொன்னாங்க...

Friday, June 24, 2016

இது நான்கு வருடங்களுக்கு முன் நான் எழுதிய முதல் கதை

அவனுக்கு துளி கூட இஷ்டம் இல்லை.... என்ன பெண் இவள்...ஆபீசில் அதிகமாக வேலை இருக்கு.. ஆடிட் டைம்னு சொல்லியும் கூட கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம அவசியம் அந்த மலை மேல இருக்கற கோவிலுக்கு போகணும்னு பிடிவாதம் பிடிக்கிறாளே.. என்னவோ நேரம் சரி இல்லையாம்.. அந்த கோவிலுக்கு போனா தோஷம் நிவர்த்தி ஆய்டுமாம்.... இந்த 21ஆம்  செஞ்சுரியில் இப்படியும் ஒரு நம்பிக்கை.... அவனுக்கு இதில் எல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இல்லை… இந்த வெயிலில் காரை காட் ரோட்டில் விடுவது எரிச்சலாக இருந்தது....

இது என்னடா.... இந்த சின்ன கோவிலுக்கு இவ்வளவு கூட்டமா... சரி என்ன தான் இருக்குனு பாக்கலாமே என்று கோவில் கர்ப்பக்ரஹத்தில் நுழைந்தவன் அப்படியே ஷாக் ஆகி விட்டான்....ஏதோ ஒரு பெரிய பாறையை பெயர்த்து அதுக்கு கடவுள்னு பேர் வெச்ச மாதிரி உருவமே இல்லாத ஒரு கல் தான் கடவுளாக நின்று இருந்தது…. ஏதோ சுயம்புவாம் … இந்த ஊரை பல முறை அழிவில் இருந்து காபாத்தியதாம்.... ஸ்தல புராணம் சொன்னார் அர்ச்சகர்.... அவனால் அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை.... மனைவியை திட்டி தீர்த்து விட்டான்.... "இந்த கோவிலுக்கு தான் போகணும்னு இப்படி அடம் பிடிச்சியா..... வேலை எல்லாம் விட்டுட்டு 100 கிலோமீட்டர் தள்ளி மலை மேல இருக்கற இந்த கோவிலுக்கு தான் கஷ்டப்பட்டு வந்தோமா... சரி இந்த கல்லைத்தான் எல்லாரும் சக்தி வாய்ந்த கடவுள்னு சொல்றாங்களா... நீங்க எல்லாம் வடிகட்டின முட்டாள்கள்.... என்னால இதை ஜீரணிச்சிக்கவே முடில" என்று பொரிந்து தள்ளி விட்டான் ....

பாவம் அவள்... கண்கள் எல்லாம் கலங்கி போய் பார்க்கவே பயந்த மாதிரி இருந்தாள்... பின்னே கணவரோட ஜாதகத்தில் ஏதோ தோஷம்... இந்த வருடம் அவனுக்கு பெரிய கண்டம் இருக்கு... இந்த கோவிலுக்கு போனால் நிவர்த்தி ஆய்டும் என்று பார்க்கும் ஜோசியர்கள் எல்லாம் சொன்னால் அவள் தான் என்ன செய்வாள்.... கஷ்டப்பட்டு கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்தால் அவனோ துளி கூட பக்தியும் பயமும் இல்லாமல் இப்படி இந்த கடவுளை நிந்திக்கிறானே.. அவளுக்கு பயமாக இருந்தது...
கார் வேகமாக கீழே இறங்கி கொண்டு இருந்தது.... அவன் அவனுடைய கடுப்பை எல்லாம் ஸ்டீரிங்கில் காட்டி கொண்டு இருந்தான்... திடீரென எதிரில் வந்த ஒரு லாரியை தவிர்க்க ஸ்டீரிங்கை திருப்ப கார் பாலன்சை இழந்து ரோட்டின் பௌண்டரியை உடைக்க... "ஐயோ நான் பயந்த மாதிரியே நடந்துடுச்சே" என்று அவள் பயத்தில் அலறி மயங்கினாள்...
என்ன இது கீழே உருள போகுதுன்னு நினைச்ச கார் யாரோ பிடிச்சு நிறுத்திய மாதிரி அப்படியே தொங்கிகிட்டு நிற்கிறதே என்று அவன் எட்டி பார்க்க, அங்கே பள்ளத்தில் விழ இருந்த காரை தாங்கி பிடித்து இருந்தது, "இது தான் கடவுளா" என்று அத்தனை நேரம் அவன் ஏளனமாக பேசிய ஒரு கல் !

Thursday, June 23, 2016

பயணங்கள் இல்லாத வாழ்க்கை என்பது உப்பில்லாமல் சாப்பிடுவது போல தான் என்று தோன்றுகிறது... பயணம் என்றால் எந்த பயணமாகவும் இருக்கலாம்... வெறுமனே நடப்பதாகவோ, இல்லை பஸ் அல்லது டிரெய்ன் பிரயாணமோ, இல்லை மனதில் ஓட்டும் நினைவு பயணமோ ஏதோ ஒன்று..
பல முறை வேகவேகமாக ஓடும் போது படு அலுப்பாக தோன்றும் பிரயாணம் கூட அது இல்லாத போது ரொம்ப வெறுமையை தரும்...
சின்ன கிளாசில் படிக்கும் போது பொங்கி வழியும் பொங்கல் பானை போல ஒரே ஸ்கூல் பேகும் லஞ்ச் கூடைகளும் வழிந்து கொண்டு வரும் ஸ்கூல் ஆட்டோவில் மீதி இருக்கும் இடத்தில் எப்படியோ நம்மை நுழைத்து கொண்டு அரட்டை அடித்து கொண்டே சென்றது ஒரு வகை என்றால், ஹை ஸ்கூல் வந்தப்பிறகு அண்ணாமலை ரஜினி போல ஸ்டைல் ஆக சைக்கிளில் ஹேண்டில் பாரை பிடிக்காமல் ஒட்டி கொண்டு போய் கீழே விழுந்து வாரி கொண்டு வந்தது ஒரு வகை....
கல்லூரி படிக்கும் காலத்தில் பஸ் பயணம்... அதிலும் லொடுக் லொடுக் என்று சும்மா அதிருதில்ல எபக்டில் ஓடும் அரசு பஸ்களை தவிர்த்து நல்ல பளிச்சென்று சூப்பரான பாட்டுக்கள் ஒலிக்கும் ப்ரைவேட் பஸ்சை சூஸ் செய்து போனது டிவைன் ரகம்...
வேலைக்கு போகும் போது எலெக்ட்ரிக் ட்ரைன் ... சீக்கிரமே ஆபீஸ் கிளம்பினால் ஒரு நல்ல சீட்டை பிடித்து செட்டில் ஆகி ஒரு புக்கை பிரித்து கொண்டால் நேரம் போவதே தெரியாது... புக்கையும் மீறி பல சமயங்களில் சுவாரஸ்யமான பல அம்புஜம் மாமிகளின் வம்பு அரட்டைகள் நம் காதை துளைத்து அதை கவனிக்க செய்து சிரிக்கவும் சிந்திக்கவும் (!) வைத்து விடும்...
இவை எல்லாம் தினப்படி பயணங்கள்...
இதை தவிர வெளியூர் பஸ் பயணங்கள் இன்னும் பல அனுபவங்கள் (!) நிறைந்தது.... சீட் கிடைக்காமல் கம்பி இருக்கும் சீட்டை தேர்ந்து எடுத்து அந்த கம்பியை பிடித்து கொண்டே ஒவ்வொரு ஸ்டாப்புக்கு முன்னிலும் யாராவது சீட்டில் இருந்து அசைகிறார்களா என்று ஏக்கத்தோடு பஸ்ஸை ஸ்கேன் செய்து கொண்டோ, இல்லை பஸ்சின் நடு பாதையின் அருகில் சீட் கிடைத்ததால் கம்பியை பிடிக்கிறேன் பேர்வழி என்று கிட்டத்தட்ட நம் மடியிலேயே விழுபவர்களை சமாளித்து கொண்டோ, நம் தோளை தலையணையாக கருதி நன்றாக தூங்கும் அடுத்த சீட் இம்சையை இடைவிடாது தலையை பிடித்து
கல்லுரலில் மாவு அரைக்கும் போது தள்ளுவது போல மறுபக்கம் தள்ளி கொண்டேயோ, அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும் ஜன்னலோர சீட்டில் காற்று முகத்தில் அடிக்க கற்பனை குதிரையை தட்டிவிட்டு கொண்டோ என்று பல அனுபவங்கள்....
வெளியூர் ரயில் பயணங்கள் வேற டைப்..
பகல் நேர ட்ரைன் என்றால் முன்பின் தெரியாத முகங்களை எதிர்த்த சீட்டிலேயே வைத்து கொண்டு வேடிக்கை பார்த்தாக வேண்டிய கட்டாயம்... தூங்க கூட படு யோசனையாய் இருக்கும்... தூங்கும் போது நம் முகம் எப்படி இருக்குமோ என்ற பயம் தான்... இருந்தாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டே முடிந்த வரை எத்தனை அரைக்க முடியுமோ அத்தனை நொறுக்கு தீனியையும் அரைத்து கொண்டு, புக் படித்து கொண்டு சில மணி நேரங்கள் தினசரி பரபரப்புகளில் இருந்து விடுப்பட்டு, அரட்டை அடித்து கொண்டு வருவது ஒரு சந்தோஷம்..... இன்பாக்ட் நிறைய கணவர்கள் பொழுது போவதற்காக ஒழுங்காக மனைவிக்கு காதை கொடுப்பதே இது போல பயணங்களில் தான்....
எது எப்படியோ இந்த கத்திரியில் வெயிலுக்கு பயந்து எங்கேயும் போகாமல் வீட்டிலேயே ஒரு ரெண்டு வாரம் மண்டையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்து விட்டு காரில் ஒரு லாங் ஜெர்னி ஒட்டி கொண்டு வந்த கணவரை எண்டெர்டைன் செய்ய நான்ஸ்டாப் அரட்டை அடித்து கொண்டே வந்ததில் ஒன்று புரிந்தது.... பயணங்களை போல வேறு ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் இல்லை...

Wednesday, June 22, 2016

இந்த herbarium னா என்னன்னு எல்லாருக்கும் தெரியுமா ... சரி ப்ளஸ் 2 ல சயின்ஸ் குரூப் எடுத்தவங்க மட்டும் கை தூக்குங்க.. ஓகே நீங்க ஒரு ஒரு நிமிஷம் தூங்கிக்கலாம் பிகாஸ் herbarium னா என்னன்னு மத்தவங்களுக்கு ஷார்ட் ஆ சொல்லிடறேன்... காய்ந்த இலை தழை  எல்லாத்தையும் ஒரு நோட்ல ஒட்டி அதை  பத்தி ரீலை ஓட்டறது தான் herbarium ... பிளஸ் 2 பயாலஜி க்ரூப்ல பைனல் ப்ராக்டிகல்ஸ்க்கு இந்த herbarium இன்டெர்னல் மார்க்ஸ் உண்டு.. எதுக்கு இவ்வளவு விளக்கம் னா இந்த herbarium என்னை படுத்திய சாரி நான் அதை படுத்திய பாடு இருக்கே ...

இங்க பாட்டனி டீச்சர் பத்தி ஒரு முதல் வணக்கம்... பயங்கர ஸ்ட்ரிக்ட்... அவங்களுக்கு மட்டும் எங்க இருந்து தான் இவ்வளவு வகையான செடி இலை கிடைக்குமோ... நாங்க இந்த herbarium பண்ண அவங்க ஒரு மாடல் நோட் கொண்டு வந்து, அதுல இருந்த இலை எல்லாம் காமிச்சு இப்படி தான் இருக்கணும் இல்லேன்னா நோ மார்க்ஸ்  ன்னு சொல்லிட்டாங்க .... அதுக்கு ஒரு டெட்லைன்னும் கொடுத்துட்டாங்க...

நானும் எப்பவும் போல கடைசீசீ ரெண்டு நாள் இருக்கும் போது தான் அந்த செடி இலை எல்லாம் தேடி தெருத்தெருவா லோலோன்னு அலைஞ்சேன்... என்னோட பரந்த நெட் வொர்க் (!!) வச்சு எப்படியோ அதுல சிலதை தேத்திட்டேன்.. வீட்டுக்கு வந்தா எங்க அப்பா திடிர்னு நாளைக்கு நைட் திருப்பதி போறோம்ங்கறார்... டென்ஷன் ஆயிட்டேன்... ஏன்பா முன்னாடியே சொல்றதுக்கென்ன.. எனக்கு நாளான்னைக்கு herbarium சப்மிட் பண்ணனும்.. இப்போதான் ஆரம்பிச்சு இருக்கேனேன் ... அவர் அவர்  ஸ்டையில்ல நீ முன்னாடியே பண்ணி வைக்கருத்துக்கென்ன ன்னு வெறுப்பேத்தறார்... அப்றம் சரி அதான் நாளைக்கு ஸ்கூல் போவியே அப்போ கொடுத்து வெச்சுருன்னு சொல்லிட்டார்... ஓகே வேற வழி இல்லைன்னு மடமடன்னு ராத்தரியோட  ராத்திரியா ப்ரீபெர் பண்ணி அடுத்த நாள் ஸ்கூல் க்கு கொண்டு போனா டீச்சர் லீவு....

சரி ஓகே ன்னு பிரென்ட் கிட்ட கொடுத்து அடுத்த நாள் நோட் கலெக்ட் பண்ணும் போது கொடுத்துருடீ ன்னு சொல்லிட்டு திருப்பதி லட்டுவை திருப்தியா சாப்பிட போய்ட்டேன்.. அந்த தடவைன்னு பார்த்து திருப்பதி ஸ்வாமி வேற ஒரு நாள் ஷெட்ல ஒக்கார வச்சு தான் லட்டு கொடுத்தார்....
திருப்பி வந்தப்போ சனி ஞாயிறு ....

மண்டே ஸ்கூல் க்கு போனா உடனே என் கிளாஸ் ல எல்லாரும் என்னை பாவமா பார்த்து உன்னை பாட்டனி டீச்சர் கேட்டுட்டே இருந்தாங்க.. வந்தா உடனே ஸ்டாப் ரூம்க்கு வர சொன்னாங்கன்னு சொல்றாங்க... ஒரே திகில் ல போனேன்... என்னை பார்த்த உடனே எங்க போய் இருந்த.. நான் உன்னை என்ன செய்ய சொல்லி இருந்தேன்னு முறைச்சாங்க... சாரி மிஸ் திருப்பதி போய் இருந்தேன் ... அங்க லேட் ஆய்டுச்சு ... பட் நான் herbarium நோட்டை கொடுத்துட்டு தான் போய் இருந்தேன்னு சொன்னேன்... அந்த அலமாரில உன் நோட் இருக்கு போய் எடுத்துட்டு வான்னு சொன்னாங்க... போய் பாத்தா தனியா லாஸ்ட் ஷெல்ப்பில இருக்கு.. எடுத்தா என்னவோ ஒரு ஸ்மெல் ....பயந்துகிட்டே  போனா "உன்னை herbarium தானே பண்ண சொன்னேன் ... fungarium ஆ பண்ண சொன்னேன்..நோட்டை திறந்து பார் " ன்னு ஒரே அர்ச்சனை... பாத்தா வெள்ளை வெள்ளையா ஒரே  fungus ...

அது ஒண்ணும் இல்லை என் வேலை எப்பவும் சுத்தமா இருக்குமா.. அன்னைக்கு herbarium பண்ணும் போது அந்த இலை தழை எல்லாம் நல்லா தண்ணில அலம்பி சுத்தம் பண்ணி சரியா துடைக்காம  நோட்ல ஒட்டிட்டேன் .... அதான் அந்த ஸ்பெஷல் ஸ்மெல் ...

அப்புறம் டீச்சர் அர்ச்சனை முடிச்சிட்டு தந்த ரெண்டு நாள்ல ஏதோ வீட்லயே இருந்த செம்பருத்தி இலை, துளசி இலை, கொத்தமல்லி , கறிவேப்பிலை , புதினா இப்படி எல்லாத்தையும் நோட்ல ஒட்டி herbarium ன்னு டீச்சர் கிட்ட கொடுத்து, அதை பத்தி செம்பருத்தி முடிக்கு  நல்லது நான் கூட யூஸ் பண்ணுவேன், துளசி இஸ் விஷ்ணு  பத்னி, கொத்தமல்லி சாப்பிட்டா லிப்ஸ்டிக் கே வேணாம் , புதினா நல்ல மௌத் பிரெஷ்னர் ன்னு ரீல் ஓட்டினா  அப்புறம் இண்டெர்னல் மார்க்ஸ் ஆ கிடைச்சிருக்கும்....

Sunday, June 19, 2016

ஒரு மகனின் பார்வையில் அப்பா ...

சின்ன வயதில் அப்பா தான் முதல் ஹீரோ ... அப்பா என்ன செய்தாலும் நன்றாக கவனித்து வைத்து அதையே ரிபீட் செய்வதுதான் என் ஹீரோயிசம் .... ரிமோட் கார் அப்பா ... சைக்கிள் வேணும் அப்பா ... ரிப்போர்ட்  கார்டு அப்பா .... பைக் ரைட் அப்பா என்று சுற்றிய என் அப்பா உலகம் எப்போ எங்கே எப்படி சற்று மாறியது..... ஹை ஸ்கூல் , பிரெண்ட்ஸ், ட்யுஷன், மேட்ச், தியேட்டர் , காலேஜ் என்று மற்ற எல்லாம் முதல் சீட் எடுக்க எப்படியும் பாக் சீட்டில் இருக்கும் அப்பா வேறு எங்கும் போய் விட மாட்டார் என்னும் மெத்தனமாயிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்... அப்படி ஓடும் போது அப்பாவின் கண்ணில் தெரிந்த ஒரு அக்கறையின் பரிதவிப்பு என்னவோ நான் ரொம்ப வளர்ந்து பெரிவனானதை போல பெருமை பட வைத்தது ....
வேலை சேர்ந்து  பெரிய மனிதனாய்  உணர்ந்த பின், என் பையன் அவன் சம்பளத்தில் வாங்கி தந்த ஷர்ட் , என் பையன் அவன் பைக்ல என்னை கூட்டிட்டு போனான் என்று அப்பா பெருமையாக சொன்ன போது அதை என் சாதனையாக நினைத்தேன்... அப்பாவை வைத்து முதல் ரைட் போன பைக் பின்னே ஏனோ  ரொம்ப பிசியாகி விட்டது அப்பாவின் மென்மையான புன்னகையை கடந்து கொண்டே .... என்  திருமணம் முடிந்த போது அப்பாவின் கண்ணில் தெரிந்த பெருமிதம் என்னவோ அப்பாவையே காக்கும் தலைவனாய் என்னை  உணர வைத்தது.....
ஆனால் அப்பா இன்றைக்கு என் குழந்தையை பார்க்கும் போது தான் புரிகிறது .... தோளில் சுமக்க வேண்டிய காலத்தில் தோளில் சுமந்தும், கை பிடித்து அழைத்து செல்லும் நேரத்தில் கையை பிடித்தும், அந்த கையை உதறி விட்டு நான் ஓட எத்தனித்த தருணத்தில் மனம் பரிதவித்தாலும் நம்பிக்கையோடு என் கையை விட்டு என்னை பெரியவனாய் உணர செய்ததும் , எனக்கான வாழ்க்கை அமைந்த போது எட்டி நின்று அதை வாழ்த்தி நான் பெருமை அடைய செய்ததும் , என் வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நான் அறியாமலே என்னை அரவணைத்து என்னை தலைவனாக உணர செய்ததும் அப்பா தான்...

இப்பொழுது  தோன்றுகிறது இன்னும் கொஞ்சம் நெருக்கமாக  அப்பா அணைப்புக்குள் இருந்து இருக்கலாமோ !
இந்த அதிர்ஷ்டம் என்பது ஒரு முறை தான் கதவை தட்டும்னு யாரு சொன்னாங்கனு யாருக்காவது தெரியுமா ... ஏன் கேக்கறேன்னு அப்புறம் சொல்றேன்...

இன்றைக்கு காலையில் எழுந்த உடனே என்றைக்கும் இல்லாத வழக்கமாய் டெய்லி ஷீட் காலண்டரை பார்த்தேன் .... "அதிர்ஷ்டம்" என்று இருந்தது .... எனக்கு  உடனே இந்த அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் கதவை தட்டும்னு கேள்விப்பட்டது ஞாபகம் வந்தது... ஓகே என்றைக்குமே காலண்டரை பார்க்காத  நானே பார்த்து இருக்கேனே சோ இதில் ஏதொ மேட்டர் இருக்கு இன்னைக்கு யாரு ஒரு தடவை கதவை தட்டறாங்கன்னு பாக்கலாம்னு முடிவு பண்ணேன் ...

காலையிலேயே  அவசர அவசரமா வேலை செஞ்சிட்டு இருக்கும்  போது யாரோ கதவை தட்டினாங்க.... ஆகா அதுக்குள்ள வந்துடுச்சேன்னு ரொம்ப வேகமா போய் திறந்தா மாசா மாசம் அபார்ட்மெண்டுக்கு  கொசு மருந்து அடிக்கிறவர்... அவருக்கு ஒரு நூறு ரூபாயை கொடுத்துட்டு கதவை சாத்தினேன்  (பின்ன அதிர்ஷடம் வரும்போது அது தட்ட கதவு மூடி இல்ல இருக்கணும் ...)

அப்புறம் ஒரு பதினோரு  மணி இருக்கும் ... திரும்பவும் யாரோ கதவை தட்ட திறந்தா "மேடம்  இது நாங்க ப்ரீயா  கொடுக்கற என்சைக்ளோபீடியா ... இதுல வந்து... " ன்னு ஆரம்பிக்கும்போதே "அம்மா எங்க வீடே ஒரு என்சைக்ளோபீடியா எனக்கு வேண்டாம்மா " என்று கதவை சாத்தினேன் ...

கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் கதவை தட்டும் சத்தம்... சரி ஒரு தடவை தட்டினா தான அதிர்ஷ்டம் ... திரும்ப திரும்ப மூக்கை உடைச்சுக்க வேண்டாம் ஒரு தடவை தானான்னு பாக்கலாம்ன்னு திறக்காமல்  வெயிட் பண்ணேன்.. கொஞ்ச நேரத்துல வேகமா தட்ட, திறந்தா கூரியர் மென் "ஏம்மா வேகாத வெயில்ல வந்த தட்டினா இவ்வளவு நேரமா கதவை திறக்க ... நல்லா படுத்து தூங்கற மூஞ்சிய பாரு " என்ற ரேஞ்சில் நல்ல வசவு...

திரும்பவும் மூன்று மணிக்கு யாரோ தட்ட திறந்தால் "மேடம் பிஸ்கட் வேணுமா"  ...
இது என்னடா என்னைக்கும் இல்லாம இன்னிக்கு இவ்வளவு கதவை தட்டறாங்க என்று யோசித்தால் அப்புறம் தான் ஞாபகம் வந்தது வாட்ச்மென் லீவ் ....

சரி இன்னும் இன்றைய தினம் முடிலையே வெயிட் பண்ணுவோம்னு நினைத்து சாயங்காலம் ஏழு மணி ஆய்டுச்சு ... ஏதோ யோசிச்சிட்டே இருக்கியேன்னு கேட்ட கணவரிடம் விஷயத்தை சொன்னா கூலா "இது கூடவா புரில...நாந்தான ஆபீஸ்ல இருந்து வந்தப்போ ஒரு தடவை தட்டினேன்... நான் தான் உனக்கு வந்த அதிர்ஷ்டம் " என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்தார்...  நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை ....

ராத்திரி ஒன்பது மணிக்கு யாரோ தட்ட "கிண்டல் பண்ணீங்களே இதோ பாருங்க வந்துருக்கு" என்று சொல்லி கொண்டே திறந்தால் "நீங்க வாட்டர் கேன் சொல்லி இருந்தீங்களாக்கா" என்று கேட்டு இல்லை என்ற உடன் "சாரி  அக்கா D5 தான் சொன்னாங்க தப்பா E5 ன்னு நினைச்சு தட்டிட்டேன் " என்றான் ..

ஆக மொத்தம் அதிர்ஷ்டம் கதவை தட்டியதா என்றே தெரியவில்லை...
இந்த அதிர்ஷ்டம் என்பது ஒரு முறை தான் கதவை தட்டும்னு யாரு சொன்னாங்கனு தெரிஞ்சா அவங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு கேட்கணும்...
"அதிர்ஷ்டம் தட்டறது எல்லாம் ஒகே ...ஆனா அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்"

Saturday, June 18, 2016

ஒரு சமையல் டைரி

எப்போ எங்கே சமையல் கலையை தொடங்கினேன் என்று யோசித்து பார்த்தால் சரியாய் நான் எழாங்க்ளாஸ் படிக்கும் போது... எதில் என்றால் அட நம் எல்லாருக்கும் நல்ல பரிச்சயம் ஆன ஆனால் அவ்வளவு ஈசியாக சரியாக செய்ய வராத உப்புமாவில் 

வீட்டில் பெரியப்பா பெரியம்மா அத்தை என்று எல்லாரும் வந்து இருக்க திடீரென அந்த விபரீத ஆசை .... அம்மா நான் உப்புமா செய்யவா என்று கேட்டு விநோதமாக பார்த்த அம்மாவை சம்மதிக்க வைத்து (இதில் கண்டிஷன் வேற அம்மா ரெசிபி சொல்லி விட்டு கிச்செனில் இருந்து வெளிநடப்பு செய்திடணும் என்று), அம்மா சொன்னதை கேட்டு என் கற்பனையை கொஞ்ச நேரம் அடக்கி என் கை மட்டும் வேலை செய்ய ஏதோ ஒரு சுமாரான வஸ்து உருவானது... அதை சாப்பிட்ட பெரியப்பா பரவா இல்லையே நல்லா தான் இருக்கு என்ன இவ வீட்ல கடுகு உளுந்து மட்டும் கிராம் கணக்கில் இல்லாமல் கிலோ கணக்கில் வாங்க வேண்டி இருக்கும் என்றார் ...உப்புமாவில் ரவைக்கு ஈக்குவலாக கடுகு மற்றும் உளுந்து....
அதற்கு பிறகு ஒரு லாங் கேப் (நல்லவேளையா)... டென்த் படிக்கும் போது அம்மா ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு நாள் வெளியூர் போக அடுத்த சான்ஸ் .... இந்த முறை ரசம் அன்ட் பொட்டட்டோ ... காம்பினேஷன் எல்லாம் அசத்தல் தான்... என்ன ஒரு அண்டா ரசத்திற்கு போட வேண்டிய புளியை மூணு பேர்க்கு வைக்கும் ரசத்திற்கு போட்டு விட்டேன்... ரசம் ரசாபாசமாகி விட்டது... என் தங்கை பரவாலடி அதான் உருளைகிழங்கு பொறியல் இருக்கே என்று அதை வாயில் வைக்க ஜோமேட்ரியில் உள்ள எந்த ஷேப்பிலும் அடங்காத ஒரு கோணத்தில் அவள் முகம் மாறியது.. பிறகு தான் தெரிந்தது அது பொன் முறுவலாக மாற காரத்திற்கு என் அப்பா மிளகாய் பொடிக்கு பதில் அதில் ரெண்டு ஸ்பூன் காபி பொடி போட்டது... இதுக்கு தான் கிச்சன் பக்கம் எப்போவாவது வரணும் என்று விஷயம் தெரிந்த உடன் அம்மா கமெண்ட் எனக்கு இல்லை என் அப்பாவிற்கு .... இந்த சம்பவத்தில் மிகவும் பாதிக்க பட்ட என் தங்கை இன்றும் என் அப்பாவை கிச்சன் பக்கம் பார்த்தாலே அலறுகிறாள்.... 
ஓகே இனி கொஞ்ச காலம் ரிஸ்க் வேண்டாம் என்று காலேஜ் ஹோஸ்டேல் பக்கம் ஒதுங்கி விட்டேன்... வேலையில் சேர்ந்த பிறகு நானும் அப்பாவும் தனியே இருந்தோம்...பொறியலில் காபி பொடி சேர்த்த பாவத்திற்காக ஒரு ஒரு வருடம் அப்பா என் கை சமையலில் மாட்டி கொண்டார்.... சும்மா சொல்ல கூடாது அபியும் நானும் பிரகாஷ் ராஜை விட ஒரு படி மேலே போய் டயாபெடீஸ் என்ற பெயரில் தண்டு வேகாத அவசர கீரை கூட்டு, நார் எடுக்க வேண்டும் என்ற அடிப்படை நாலெட்ஜ் கூட இல்லாமல் நான் செய்த நூல்கண்டு சாரி வாழைத்தண்டு இதையெல்லாம் கஷ்ட்ட்ட்டபட்டு விழுங்கி விட்டு என் பொண்ணு எவ்வள்ளவு அக்கறையா சமைக்கறா தெரியுமா என்று எல்லாரிடத்திலும் ஒரே பெருமை.... இப்போது நினைத்தால் கூட கண்ணில் கண்ணீர் வருகிறது .. சிரித்து சிரித்து....
அதன் பிறகு ஒரு ஷார்ட் பிரேக்.... கல்யாணம் முடிந்து முதல் சமையல்... சரி நமக்கு ராசியான உப்புமாவில் தொடங்குவோம் என்று பிளான் செய்து அதற்கு ரொம்ம்ம்ப ஹெல்தியாய் நெல்லிக்காய் சட்னி என்று எல்லாம் ஓகே.... உப்புமாவை வாயில் வைத்தால் பயங்கர ஷாக்.... அது உப்பே இல்லாத மா.... நெல்லிக்காய் சட்னி புளியங்காய் சட்னியாய் மாறி இருந்தது...பின்னே ஒரு நாலு அஞ்சு நெல்லிக்காய்க்கு பதிலாக அரை கிலோ சேர்த்தால்.... பரவாலமா உப்பு குறைஞ்ச (உப்பே மறந்த) உப்புமாக்கு இந்த சட்னி நல்லாதான் இருக்கு என்று அதை சாப்பிட்ட என் மாமியாரின் பெருந்தன்மையை இங்கே கட்டாயம் குறிப்பிட வேண்டும்... ஆனாலும் ஆசையாய் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளை நல்லா வசமா மாட்டிகிட்டானே என்ற பீதி அவர் கண்ணில் தெரிந்ததை கண்டு அன்று தான் 'இனி மேல் ஆரம்பம்' என்று ஒரு சபதம் எடுத்து ஊரில் இருக்கும் எல்லா சமையல் புத்தகங்களையும் வாங்கி பத்தாததற்கு கூகிள் தாத்தாவையும் விடாமல் நோண்டி ஆனால் எதையும் பாலோ பண்ணாமல் என் சொந்த கற்பனையில் ஏதேதோ சமையல் செய்து நானும் சமைக்கிறேன் என்று பேர் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்...எல்லா புகழும் அதையும் ரசித்து (?) சாப்பிடும் என் குடும்பத்திற்கே !

Friday, June 17, 2016

"ஒழுங்கா சாப்பிடு ... இப்படி சரியா சாப்பிடலனா எப்படி எனர்ஜி இருக்கும்... படுத்தாதடீ"
"சாப்ட மாட்டேன் போம்மா "
"ஹே ஐஸ்கிரீம் சாப்பிடலாம் வாடா"
"சூப்பர் ப்பா"

"குளிக்க வாடி... எவ்வளவு நேரமா கூப்டறேன்"
"இன்னும் டூவே டூ மினிட்ஸ்ம்மா"
"ஹே இங்க பாரு டப்ல தண்ணி ரொப்பி இருக்கேன்... ஷவரும் ஓபன்"
"ஹைய்யா சூப்பர் ப்பா "

"ஸ்கூல்க்கு டைம் ஆச்சுடி.... இன்னுமா தூங்கறே... ஏண்டீ இப்படி பண்ற (சுப்ரபாதம் முழுதும்)"
"அம்மா ப்ளீஸ் பைவ் மினிட்ஸ்"
"ஹேய்ய்ய் கிச்சு கிச்சு "
"கீகீகீ மை அப்பா சூப்பர் அப்பா "

"இன்னைக்கு மாத்ஸ் டெஸ்ட்.. ஒழுங்கா பண்ணு...  அப்பறம் டீச்சர்ஸ் மீடிங்க்ல நான் பேச்சு வாங்க முடியாது..."
"டெஸ்ட் ஆஆ அய்யயோ"
"ஹே சூப்பரா பண்ணிட்டு வாடா குட்டி.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரேன்"
"ஹைய்யா சூப்பர் ப்பா"

"மேம் உங்க சைல்ட் கிளாஸ்ல பேசிட்டே இருக்கா... அவளும் கவனிக்காம பக்கத்துல இருக்கற பசங்களையும் பேசியே கவனிக்க விடறது இல்ல"
"பாத்தீங்களா அவங்க டீச்சர் என்ன சொன்னாங்கன்னு.. என்ன சொன்னாலும் கேக்கறது இல்ல... இப்படியே போனா...."
"சரி சரி ஏன் பெருசு படுத்தற ...சின்ன கிளாஸ் தான ... போக போக சரி ஆய்டும்"
"தேங்க்யூ ப்பா"

"இந்த டிரெஸ் தான் வேணுமா .... ரொம்ப காஸ்ட்லி டீ .... இதே மாறி ஏற்கனவே ரெண்டு பீரோல தூங்குது... சும்மா வேஸ்ட் பண்ணாத "
"அம்மா அது ஓல்ட் பாஷன் .... இது லேட்டஸ்ட் மாடல் லெஹன்கா மா "
"வாங்கிகோடா ஆசைப்பட்டு கேட்டுட்டே .. என்ஜாய் "
"தேங்க்யூ பா"

"ஐயோ அவ்வளவு தூரம் இருக்கற ஹாஸ்டல்க்கு அனுப்பணுமா... வேணாமே இங்க இருக்கற காலேஜ்லயே சேக்கலாமே"
"அம்மா அந்த காலேஜ் எவ்வளவு டாப் காலேஜ் தெரியுமா... ப்ளீஸ் மா"
"அவ எல்லாம் நல்லா மானேஜ் பண்ணிப்பா... கஷ்டப்பட்டு படிச்சு சீட் வாங்கி இருக்கா... அங்கேயே படிக்கட்டும்"
"தேங்க்யூ ப்பா.."

"இந்த இடம் ரொம்ப நல்ல இடம்... மிஸ் பண்ண வேண்டாம்.. கல்யாணம் பண்ணிடலாம்"
"அம்மா எனக்கு இப்போத்தான் ஆபீஸ்ல ப்ரோமோஷன்லாம் கிடைச்சு இருக்கு... நான் இன்னும் நிறைய ப்ரூவ் பண்ணனும்மா"
"அவ தான் இப்போ வேண்டாம்கறாளே... ஏன் கம்பெல் பண்ற... அவளுக்கு என்ன எப்போனாலும் நல்ல அலையன்ஸ் கிடைக்கும்.."
"வாவ் மை அப்பா இஸ் தி பெஸ்ட் தேங்க்யூ ப்பா"

"அவ கல்யாணம் பண்ணி போனதுல இருந்து ஒரே வெறிச்சுன்னு இருக்கு இல்ல.....கஷ்டம்மா இருக்கு... எப்படி ஆபீஸ் வீடுன்னு சமாளிக்கறாளோ"
"ஹே அவ நல்லா ஹாப்பியா தான இருக்கா... சும்மா ஏன் புலம்பற..... குழந்தைங்க ன்னா அப்படித்தான்... ஒரு ஸ்டேஜ்க்கு மேல அவங்க லைப் ன்னு நாம ப்ரீயா விட்டுடணும்... அவ எல்லாம் சூப்பரா மானேஜ் பண்ணுவா"
.
.
.
.
.
"சரி அவ இங்க வந்து ஒரு மாசம் இருக்கும் இல்ல... பாக்கணும் போல தான் இருக்கு... அடுத்து எப்போ வராளாம்...என்கிட்டே எதுவும் சொல்லலை... உன்கிட்ட எதாவது சொன்னாளா... அவ வந்தா அவளுக்கு பிடிச்ச ரசகுல்லா பண்ணு... போனா தடவை வந்தப்போவே லேப்டாப் அ நோண்டிட்டு இருந்தா... இந்த தடவை வரும்போது சர்ப்ரைஸா ஒரு டேப்லெட் வாங்கி தரணும்..."
அம்மா: "ஞே...."

அப்பா ன்னா சும்மாவா !!!

ஜூன் 19 தந்தையர் தினம் !!!!

Wednesday, June 15, 2016

எக்கச்சக்க கடன் வாங்கி நாட்டை விட்டே எஸ்கேப் ஆன விஜய் மல்யாவை விட நான் ஒன்றும் குறைந்தவள் இல்லை... அது என்னன்னா நான் கடன் வாங்கின இடம் ரொம்ப பெருசு... என்னை மாதிரியே ஊரெல்லாம் கடன் வாங்கின இடம்... அதனால என்னோட கணக்கு இன்னும் பார்வைக்கு வரலை... வந்தாலும் சி பீ ஐ எல்லாம் வராதுங்கற தைரியம் தான் எனக்கு....
முதல் கடன் நான் தமிழ்நாடு தாண்டி பம்பாய்ல டைரெக்டா நாலாவது படிக்க போனப்போ... பிரச்சனை என்னனா அங்க நான் படிக்க வேண்டி இருந்த மராத்தியும் ஹிந்தியும் ..... இந்த ரெண்டு மொழிலயும் ஆனா ஆவன்னா கூட தெரியாம நாலாவது போனா எப்படி (அந்த அனுபவத்தை பத்தி தனி கதையே எழுதலாம் அதனால இப்போ கடன்காரியானத மட்டும் சொல்றேன்)... உடனே முதல் கடன்... அந்த வருஷம் மராத்தி ஹிந்தில பாஸ் ஆனா உடனே பிள்ளையாரப்பா உனக்கு 108 சுத்து சுத்தறேன்னு ... முடிஞ்சுது சிம்பிள் கடன்... பிள்ளையாரப்பாவும், எனக்கு மராத்தி ட்யுஷன் எடுத்த கங்காபாய் டீச்சர் மூலமா கிராண்ட் பண்ணிட்டார்... பாஸ் பண்ணிட்டு அவர் கோவிலுக்கு போனப்பத்தான் தெரிஞ்சுது 108 ங்கறது எவ்வளவு பெரிய நம்பர்னு ..... அப்போதான் என்னோட ப்ரெண்ட் ஒரு ஐடியா தந்தா... அவ இப்படித்தான் ஏதோ வேண்டிகிட்டு வீட்ல ஒரு சின்ன ஸ்டூல்ல குட்டி பிள்ளையாரை வெச்சு அந்த ஸ்டூலை 108 தடவை சுத்தினாளாம்... முதல் கடனையே வட்டி இல்லாம முதலையும் முழுசா கட்டாம அவ தந்த ஐடியாவை யூஸ் பண்ணி கட்டினேன்... அதுக்கே முழி பிதுங்கிடுச்சு... ஆனாலும் நம்ம பிள்ளையார் ஆச்சே போனா போறதுன்னு விட்டுட்டார்...
அடுத்ததா டென்த் எக்ஸாம் அப்போ இன்னொரு கடன்... இந்த தடவை கடன் பெருசு... பாங்கரும் பெரியவர்.. அதான் நம்ம பிள்ளையாரோட அப்பா.... நாங்க இருந்தது திருவண்ணாமலையில்.... டென்த்ல நல்ல மார்க் வாங்கினா அந்த மலையவே சுத்தறேன்னு... மார்க் எல்லாம் நல்லாத்தான் வந்தது.... ஆனா இந்த முறை அந்த ஸ்டூல் ஐடியா எல்லாம் வொர்க் அவுட் ஆகல... (அப்படியும் விடாம திருவண்ணாமலை மலையோட ஏதாவது மினியேச்சர் கிடைக்குதான்னு பார்த்து கடை வீதி எல்லாம் சுத்தினேன்... கிடைச்சா அதை ஸ்டூல்ல வைக்கலாமே)... ஆனா அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் (பிள்ளையாரோட அப்பாவை தான் சொல்றேன்... எங்க அப்பா ஸ்ட்ரிக்ட்னு ஏற்கனவே எனக்கு தெரியுமே)... சோ எப்படியோ ஒரு ரெண்டு வருஷம் கடனை கட்டாம ஒட்டிட்டேன் ... பிளஸ் 2 எக்ஸாம்க்கு முன்னாடி பயம் வந்துருச்சு .... பழைய கடனை கட்டாம இப்போ எப்படி புது கடன் கேக்கறதுன்னு... சரி வேற பாங்குல கேட்டுக்கலாம்னு முடிவு பண்ணேன்.. வீட்டு பக்கத்துல எல்லா நாளும் தவறாம போய் சாமியவே அடியோட பேத்து எடுக்கறா மாறி விழுந்து விழுந்து கும்பிட்ட நம்ம ஆஞ்சநேயர் இருந்தார்.... சோ இந்த முறை 108 சுத்தறதுன்னு எல்லாம் ஹை வட்டி வேண்டாம்.... சிம்பிளா ஒரு அபிஷேகம் பண்றேன்னு வேண்டிக்கிட்டேன்..... ஆஞ்சநேயர் எப்பவும் போல கேட்டதை விட அள்ளி கொடுத்துட்டார்... ஆனா பாருங்க அதுக்கு அப்பறம் காலேஜ், வேலை, கல்யாணம், குழந்தை னு எல்லா ஸ்டேஜசும் தாண்டிட்டேன்.. இன்னும் அவர் கடனை அடைக்கலை... அப்பப்போ சால்ஜாப்பு சொல்லிப்பேன்... "ஆஞ்சீ என் கையால நானே ஒரு சந்தன மரத்தை நட்டு இருக்கேன்... அது வளர்ந்து அதுல இருந்து சந்தனம் எடுத்து அரைச்சு உனக்கு அபிஷேகம் பண்றேன்" ன்னு...
அப்பறம் காலேஜ் ... எங்க காம்பஸ்க்குனே ஒரு பிள்ளையார் இருப்பார்... எல்லாருக்காகவும் ஒரே டைம்ல ஒரே ஆளா எக்ஸாம் எழுதறவர்.... பைனல் இயர் காம்பஸ் செலக்ஷன் .... உடனே அதே பழைய அமௌண்ட் 108 பார் பிள்ளையார்... எக்ஸ்ட்ராவா என்னோட பிரெண்ட்ஸ்க்காக ஒரு கடன்... எனக்காக இல்லையென்ற தைரியத்தில் செகூரிட்டி தானனு ஏற்கனவே நான் கடனை திருப்பி தராம டபாய்ச்ச ஆஞ்சீ (இந்த முறை பஞ்ச முகம் வேற அவருக்கு ... எந்த திசை போனாலும் பார்த்துட்டு இருப்பார்) கிட்ட வடை மாலை போடறேன்னு கேட்டேன்... ஆனா பாருங்க அவர் ரொம்ப நல்லவர்... கேட்டதை கொடுத்துட்டார்... நான் தான் எப்பவுமே மாறாமல் ஒரே மாறி இருக்கற ஆள் ஆச்சே... இன்னும் அந்த காம்பஸ் பிள்ளையாரப்பாவும் பஞ்சமுக ஆஞ்சீயும் வெய்டிங் பார் ரீபெமென்ட் ....
அப்பறம் என் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு திருப்பதி விசிட்... அங்கே என்னவோ பெருமாளை பார்த்ததும் பக்தி பெருக்கில், எனக்கு நல்லபடியா அவர் கல்யாணம் நடத்தி தரணும்னு வேண்டிக்கறதுக்கு பதிலா, ரொம்ப பிரமாதமாய் நான் அவருக்கு கல்யாணம் பண்ணி வெக்கறேன்னு சொல்லிட்டேன்.... அவர் இப்போ வரைக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்க ஒரு வாய்ப்பு தரலை... எனக்கு ஒரு வேளை அவராத்து மாப்பிள்ளை கிட்ட வாங்கின கடனையே இன்னும் அடைக்கலைன்னு தான் அவர் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கறரோ ஒரு டவுட்ல வேகமா போய் திருவண்ணாமலை கடனை மட்டும் அடைச்சிட்டேன்... பட் ஸ்டில் இவருக்கு கல்யாணம் பண்ணலை... அனேகமா என் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணிடுவேன்னு நினைக்கறேன் (சீரியஸ் ஆகவே பெருமாளே என்னை மன்னிக்கவும் உங்களை இங்கே இழுத்ததிற்கு).....
அப்புறம் வேலையில் இருந்தப்போ ஹைதராபாத் கிட்ட ஒரு பெருமாள் இருக்கார் அவர் என்ன கேட்டாலும் கொடுப்பார்னு கேள்விப்பட்டு போனேன்... நாம தான் ஏற்கனவே எக்கச்சக்க கடன் வாங்கி இருந்தாலும் திருப்தி படாத ஆள் ஆச்சே... ஆனா இவருக்கு 108 பிரதட்சிணம் ஒன்லி திருப்பி அடைக்கணும்...நோ அதர் வே ... சரி ஒகே அந்த கடனும் பாஸ் ஆய்டுச்சு .... ரொம்ப நாள் திருப்பி அடைக்கலை .... அப்போ தான் யாரோ சொன்னாங்க இவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆச்சே... கடனை அடைக்கலேனா கொடுத்த செக் பௌன்ஸ் ஆய்டும்னு... உடனே ஓடி போய் அதை மட்டும் அடைச்சிட்டேன் (அடி உதவற மாதிரி வேற எதுவும் உதவாதுன்னு நல்ல தெரிஞ்சி இருக்கு இவர்க்கு) .....
இப்படியாக இன்னும் எக்கச்சக்கமான சின்ன, பெரிய, வளர்ந்து வளர்ந்து பெரியன்னு பல கடன்கள் பாக்கி இருக்கு... ஆனா பாருங்க இவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க.. அள்ளி கொடுக்க மட்டும் தான் தெரியும்... நாம தான் எப்போவாவது இவங்க எதாவது டாகுமென்ட் பிரச்சனைனால எதாவது சாங்க்ஷன் பண்ணலேன்னா உடனே திட்டி தீர்த்துடறோம் ..... போனது போகட்டும் யாருக்காவது தெரியுமா இந்த கடனை எல்லாம் அடைக்க எதாவது ஈ எம் ஐ ஆப்ஷன் இருக்கான்னு...

Tuesday, June 7, 2016

" ம்ம் ம்ம் ம்ம்"...

"ஏம்மா இப்படி அழற" ...

"ம்ம் எனக்கு இப்போவே தாழம்பூ வெச்சு ஜடை போட்டு விடு ".....

"சொன்னா கேளும்மா இப்போவேனா எப்டி முடியும்... திடிர்னு உனக்கு என்ன ஆச்சு  "...

"ம்ம்ம் பக்கத்து வீட்டு பவித்ரா பின்னி இருக்கா... என்னை பார்த்து வேவேவே னு சொல்றா "...

"சரி டீ அதுக்கு என்ன பண்ண முடியும் ... இப்பொவே னா நான்  எங்க போவேன்"....

"தாழம்பூ அந்த பூக்கடைல இருக்கும் .. வாங்கி வச்சு விடு "...

"ஐயோ சொன்னா கேக்கணும் டீ ... ஆர்பாட்டம் பண்ணாத "....

அதற்குள் குழந்தையின் அழுகையை கேட்டு அந்த அக்ரஹார தெருவில் இருந்த அக்கம் பக்கம் வீட்டார் வந்த விட்டார்கள் ....

"ஏன் மாமி குழந்தைய அழ விடறீங்க ... என்ன கேக்கறதோ அத கொடுங்களேன்... பாவம் இப்படி கதறர்து "

"அய்யோ அவ என்ன கேக்கறான்னு உங்களுக்கு தெரியலை.. அதான் இப்படி  சொல்றீங்க....அவ இப்போவே தலைக்கு தாழம்பூ வச்சு பின்னி விட சொல்றா "...

"ஹா ஹா ஹா சரியா போச்சு... கொழந்தை இப்போ அழாம சமத்தா இருந்தா அம்மா அப்றம் வச்சு விடுவா... சரியா "...

அழுகையின் சுருதி மேலும் கூடியது... இந்த அக்கபோரை இதற்கு மேலும்  பொறுக்க முடியாமல் தாத்தா  வந்தார்..

"எடுடி அந்த குச்சிய... இவ தலைல அதை நட்டு பூவை சுத்துவோம்" ...

"அய்யோ தாத்தா வேணாம் வேணாம் "...

"அப்றம் என்ன பண்றது...  உன் தலைல என்ன இருக்கு "..

தலையை தொட்ட உடன் சட்டென்று பிரக்ஞை வந்த "ஞே " என்று முழித்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தது போன வாரம் தலை மொட்டை  அடிக்கப்பட்ட அந்த குட்டி பேத்தி !

Friday, June 3, 2016

ஹிப்போக்ரஸி அலைஸ் பாசாங்கு

இந்த பாசாங்கு பண்றதுன்னு சொல்றாங்களே அப்படினா கரெக்டா என்ன என்று கேட்பவர்களுக்கு இதோ இப்போ நீங்க பண்றீங்களே அதே தான் என்று சொன்னால் அது தான் பொருத்தமான பதில்.... காரணம் இங்கே யாரும் பாசாங்கு செய்யாதவர்களே இல்லை... வேணும்னா பாசாங்கின் ரகங்கள் மாறலாம் ...
பேரண்டல் பாசாங்குன்னு ஒரு ரகத்துக்கு பேர் வெச்சுக்கலாம்..  இப்போ எல்லாம் பொது இடங்களில் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் தெரியாம கூட குழந்தை கிட்ட இங்க்லீஷ் அல்லாத வேற பாஷைல பேசிற கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்காங்க... அன்னைக்கு ஒரு நாள் பார்க்கில் ஒரு சின்ன குழந்தை ஆசையா ஓடி ஓடி விளையாடிட்டு இருந்தது ... அந்த குழந்தைய எல்லாரும் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க ... திடீர்னு அவங்க அம்மா "ஹே ஹனி ப்ளீஸ் பீ கேர்புல் வென் யு ப்ளே இன் தி ஸ்லைட் ... சே ஹலோ டு அக்கா " என்று சொல்ல அந்த குழந்தை "அம்மா ப்ளீஸ் மா வீட்ல சொல்ற மாறி தமிழ் ல சொல்லு புரியலை" என்றது... அந்த அம்மா பயங்கர கடுப்பாகி விட்டார்... இங்க்லீஷ் பேச வேண்டாம் என்று அர்த்தமில்லை ... இயல்பா வீட்டிலும் அதே போல் பேசினால் செயற்கையாக தெரியாது... இது போல வெளி இடங்களில் மட்டும் பேசினால் அது இயல்பாக இருக்காது... முக்கியமாக நம் குழந்தையை நம் தாய் மொழியில் "புஜ்ஜு செல்லம் கண்ணா அம்மு பொம்மா" என கொஞ்சுவதில் இருக்கும் ஆனந்தம் தனி தான்... இந்த "ஹனி ஸ்வீட்டி" எல்லாம் ஏதோ வட இந்திய நடிகைகள் தமிழ் டீவீ க்கு பேட்டி கொடுப்பது போலவே இருக்கு என்பது என் கருத்து..  எங்கேயோ படித்தது ஞாபகம் வருகிறது "English is just another language not a measure of intelligence" ...
இந்த ஸ்கூல் டீச்சர் பேரண்ட்ஸ் மீட்டிங் என்று ஒன்று வைப்பார்களே ... அங்கே பார்த்தால் வித விதமாக இருப்பார்கள்... ஒரு பேரண்ட் டீச்சரை கேட்டார் "இந்த டேர்ம் ல அவ என்ன எல்லாம் படிச்சு இருக்கா.. வீட்ல எங்ககிட்ட ரொம்ப சொல்றது இல்ல... பட் அவ மியூசிக் டான்ஸ் ஸ்லோக கிளாஸ் எல்லாத்துக்கும் போறா... ஸ்கூல் சிலபஸ் தான் தெரில.. வீ டோன்ட் வான்ட் டு மிஸ் எனிதிங் ரிலேடட் டு ஸ்டடீஸ் " என்று... டீச்சர் சின்ன வயது திருமணம் கூட ஆகவில்லை... ஏதோ ராகிங் இல் மாட்டி கொண்ட கல்லூரி மாணவி போல இருந்தாள்.. என்ன சொல்வது என்று தெரியவில்லை "சார் ஷி இஸ் பெர்பெக்ட் இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ்" என்றாள் ... அந்த குழந்தை படித்து கொண்டு இருந்தது எல் கே ஜி :) ... திரு திரு என்று முழித்து கொண்டு இருந்த அந்த குழந்தையை பார்க்க கொஞ்சம் பாவமாக தான் இருந்தது..... அதே டீச்சர் இன்னொரு பேரண்ட் இடம் பேசும் போது சொன்னாள் "சார் யுவர் சைல்ட் ஹாஸ் ஸ்டில் நாட் செட்டில்ட் இன் புல் டே ஸ்கூல்.. ப்ளீஸ் டேக் கேர் ஆப்  தட்" என்றாள் ... அந்த அப்பா "அது எல்லாம் போக போக சரியாயிடும் சின்ன பையன் தான மாம் " என்று கூல் ஆ எழுந்து போய்ட்டார்... மீட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்து ஸ்கூல் ல கொடுத்த பைலை பீரோவில் வைத்து விட்டேன்... அதில் என்ன இருந்தது என்று கூட சரியாக பார்க்கவில்லை ... ஒரு போன் கால் இன்னொரு பேரண்ட் "உங்க பொண்ணுக்கு எதாவது அச்சீவ்மெண்ட் கார்டு கொடுத்தாங்களா" .. தெரிலையே என்றேன்... "பாருங்க கிரீன் கலர் ல இருக்கும்.. எல்லா குழந்தைகளுக்கும் கொடுக்கலை..என் பையனுக்கு கொடுக்கலை" என்றார்... அந்த பேரண்ட் எப்பொழுதும் "என் பையனை நான் எதுக்கும் போர்ஸ் பண்ண மாட்டேன்.. அவன் ப்ரீயா வளரணும்" என்று லெக்சர் கொடுப்பவர்... ஏதோ அமெரிக்க கிரீன் கார்டு கிடைக்காத மாதிரி ஒரே புலம்பல் போனில் ... ஆஹா என்று இருந்தது..
இன்னொரு ரகம் ராயல் பாசாங்கு .... இவங்க எப்படினா வீட்ல எப்படி இருந்தாலும் வெளிய ரொம்ப ராயலா இருக்கற மாதிரி காட்டிப்பாங்க .... கைல போட்டுக்கற வாட்ச் ல இருந்து கால் ல போட்டுக்கற செருப்பு வரைக்கும்  எல்லாத்துக்கும் ஒரு ப்ராண்ட் வெச்சிருப்பாங்க....இவங்க வளர்ந்ததே இப்படினா பரவால்லை... பட் சின்ன வயசுல அறுந்து போன ரப்பர் செருப்பை பின் குத்தி போட்டவர்களா இருப்பார்கள்.... அப்புறம் இந்த லோக்கல் மொழியில் வரும் பேப்பர் புக்ஸ் இது எல்லாம் ஏதோ வீணா போன மேட்டர் என்று நினைப்பார்கள்... படிக்கிறார்களோ இல்லையோ ட்ரெய்னில் இல்லை பஸ் இல் போகும் போது கையில் ஒரு தடித்த ஆங்கில நாவல் இருக்கும்... சொல்லவே வேணாம் என்ன போன் கால் வந்தாலும் ஒரே ஆங்கிலம் தான்.... இதில் ஆண் பெண் என்ற பேதம் எல்லாம் இல்லை...
இன்னும் ஒரு ரகம் பெர்பெக்ஷன் பாசாங்கு ....சில பேர் மத்தவங்க என்ன செய்யணும் எப்படி இருக்கணும் என்று எதுக்கு எடுத்தாலும் லெக்சர் எடுப்பாங்க... ஆனா தான் அதை இம்மி கூட பாலோ பண்ணமாட்டாங்க..... தன்னுடைய எந்த குறையும் தெரியாதது போலவே கெத்தா  இருப்பாங்க... எதாவது தெரிந்தவர்கள் வீட்டிற்கு போனால் "எனக்கு எதுவுமே வெச்ச இடத்தில் இருக்கணும்" என்பார்கள்.. அவர்கள் வீடுகள்ல காலை நேரத்துல வித விதமா டென்ஷன் வரும்... சாக்ஸ் எங்கே காணோம்... போய் பார்த்தால் முந்தின நாள் போட்டுட்டு போன சாக்ஸ் ஷூ ல இருக்கும்... அதுக்கு முன்னாடி நாள் போட்டுட்டு போனது ஷூ ரேக் ல இருக்கும்... நாம இதுதான் இது இருக்க வேண்டிய இடமான்னு கேட்கவா முடியும்..... அலுவலகத்தில் சாந்த சொருபியாய் உதவும் உள்ளமாய் இருப்பார்கள்.... தலையில் அடித்து கையில் கொடுத்தால் கூட வாங்கி கொள்பவர்கள் போல இருப்பார்கள்.... ஆனால் தன் தலையில் வாங்கிய அத்தனை அடியும் அவர்கள் வீட்டில் இடியாய் இறங்கும்.... 

இவ்வளவு பேசறியே இதை எல்லாம் எழுதற உனக்கு பாசாங்கு இல்லையானு தானே கேட்கிறீர்கள்... பாசாங்கே இல்லாதவள் போல இப்படி எல்லாம் எழுதறதே ஒரு பாசாங்கு தானே  :)

Thursday, June 2, 2016

அந்த தெருவில் மறதி தாத்தா யார் என்று கேட்டால் எல்லாரும் கரெக்ட் ஆக அவர் வீட்டை காட்டி விடுவார்கள் ... அவர் வீட்டில் அவரும் அவர் தம்பி குடும்பமும் இருந்தது... இவருக்கு ஏன் மறதி பெயரோடு ஒட்டி கொண்டது என்று ஆராய்ந்ததில் சின்ன வயதில் எப்போதோ கீழே விழுந்து அடிபட்டதில் இருந்து அவருக்கு திடீர் திடீரென  என எல்லாமே மறந்து விடும்... அதுவரை ரொம்ப நன்றாக படித்து கொண்டு இருந்தவர் அந்த சம்பவத்திற்கு பிறகு அதிகம் படிக்க வில்லை .. ஆனால் அபாரமாக ஓவியம் வரைவார்.. ஊர் கோவில் சுவர் எல்லாம் அவர் ஓவியங்கள் தான் .. இது எல்லாம் அவருடைய தம்பியின் பேரனான என் நண்பன் சொன்னது... எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார்... தம்பியின் குழந்தைகள் பேரக்குழந்தைகள் மேல் மிகவும் பிரியம்... ஆனால் இவர் மறதி பிரச்சனையால் அவர் குடும்பத்திலேயே அவரை யாரும் மதிப்பதில்லை... சின்ன வயதிலேயே தாத்தாவை இழந்த எனக்கு தான் என்னவோ அவரை பார்த்தாலே ஒரு இரக்கம் தோன்றும்... என் நண்பனிடம் கூட சொல்வேன்  ஏன்டா அவர் உங்க கிட்ட எல்லாம் எவ்வளவு அன்பா இருக்கார் அப்புறம் ஏண்டா அவரை கிண்டல் பண்ணிட்டே இருக்கீங்க என்று ... அட போடா நீ வேற அவருக்கு திடீர் திடீர்னு எங்க பேரே மறந்துரும்.... எங்கயாவது வெளிய  போனா ஒண்ணு வீட்டுக்கு வழிய மறந்துருவார்... இல்லேன்னா யார்கிட்டயாவது எதாவது மாத்தி ஒளறி வெச்சிடுவார் ... ஒவ்வொரு தடவையும் இவர தேடி ஓடணும் ... வீட்ல இருந்தா அவரோட ஒரு இரும்பு பெட்டிய தொறந்து வெச்சிகிட்டு நோட் ல ஏதோ கிறுக்கிட்டு இருப்பார் ... அந்த பெட்டிய தொட்டா என்ன கோவம் வரும்கற... பெர்ர்ரிய புதையல் பெட்டி பாரு ... சரியான இம்சை டா என்பான்... அவர்  ஏண்டா தனியா இருக்கார் பாட்டி இல்லையா என்று கேட்டதிற்கு  அவருக்கு கல்யாணமே ஆகலை .. இப்படி மறதி வியாதி இருந்தா யாருடா அவரை கட்டிப்பாங்க ... இந்த லட்சணத்துல அந்த காலத்துல இவரு யாரையோ லவ் வேற பண்ணாறாம் ... அந்த பொண்ணோட அப்பா உனக்கு இருக்கற இந்த மறதிக்கு நீ என் பொண்ணையே அப்பப்போ மறந்துருவனு சொல்லி இவரை திருப்பி அனுப்பிட்டாராம் என்றான்... திடீரென்று ஒரு நாள் மறதி தாத்தா இறந்து விட்டார்... அவர் வீட்டில் யாரும் அதற்கு ரொம்ப பீல் பண்ணவில்லை....எனக்கு தான் என்னவோ போல் இருந்தது .... அந்த வீட்டுக்கு போய் இருந்தேன் .... என்  நண்பன் என்னை பார்த்ததும் "டேய் சரியான டைம்ல தான் வந்து இருக்க .. நாங்க அந்த புதையல் பெட்டிய தொறக்க போறோம் நீயும் வா" என்றான்... பெட்டியை திறந்தால் அத்தனை நோட்டுகள் .... இது என்னடா இதுக்கு தான் இவ்வள்ளவு பில்டப்பா என்று சிரித்த நண்பனை லட்சியம் பண்ணாமல் ஒவ்வொரு நோட்டையும் பிரித்து பார்த்தேன்... எல்லாத்திலும் ஒவ்வொரு பக்கத்திலும் தேதியும் ஒரு அழகான பெண்ணின் படமும் வரையப்பட்டு இருந்தது .... படத்தின் கீழே "துளசி நான் இன்னைக்கும் உன்னை ஒரு நிமிஷம் கூட மறக்கலை தெரியுமா" என்று எழுதி இருந்தது .. அவர் இறந்த தேதிக்கு முந்தைய நாள் வரை இருந்தது ... மறதி என்பது அவரை பொறுத்தவரை எப்போதுமே குரூரமாய் தான் இருந்த இருக்கிறது தேவையில்லாத போது வந்தும் தேவையான போது வராமலும் என்று மனம் கனத்து அழ ஆரம்பித்த என்னை என் நண்பன் விநோதமாக பார்த்தான் !!

Wednesday, June 1, 2016

நாலே நாலு முழம் இருக்கும் இந்த நாக்கு சின்ன வயதில் அடிமை ஆனது ஸ்லேட் இல் எழுதும் பல்பத்திற்கு... ஸ்கூல் என்ற பெயரில் அந்த கால பெரிய முற்றம் வைத்த ஒரு திண்ணை வீட்டுக்கு முதல் முதலாய் போனபோது ஒரு ப்ளூ கலர் துணி பையில் கருப்பு ஸ்லேட்டும் விரல் அளவு நீளமாய் வெள்ளை கலரில் ஒரு குச்சியும்... இது என்னமா என்றதிற்கு இது ச்லேய்டில் எழுதற பல்பம் டா என்ற பதில் கிடைத்தது.... போய் திண்ணையில் சாரி கிளாஸில் உட்கார்ந்தால் முதல் நாளே நல்லா தூக்கம் வருது... சரி அந்த பல்பத்தை எடுத்து நோட்டம் விட்டால் என்னை கடி என்னை கடி என்றது... நறுக்க்... ஆஹா என்ன ஒரு டேஸ்ட் .... லிப் ச்மேகிங் என்று இப்போ எல்லாம் விளம்பரத்தில் சொல்கிறார்களே.... அது எல்லாம் ஒன்றுமே இல்லை அப்ப்ப்படி இருந்தது... வந்த தூக்கம் போயே போச்சு... நல்லா சுவாரஸ்யமா முழு பல்பத்தையும் மென்று தின்றவுடன் எங்கே எல்லாரும் ஆனா ஆவன்னா எழுதுங்க என்ற டீச்சரின் குரல்... திரு திரு என்று முழித்த என்னை பார்த்து ஏன் எழுதலை என்று கேட்க இன்னும் முழித்தேன்... யாராவது இவளுக்கு ஒரு பல்பம் குடுங்க என்றார்... கிடைத்த சின்ன பீஸ் குச்சியை ஏக்கத்துடன் பார்த்தபடியே எழுதினேன்... அடுத்த நாள் பேகை செக் செய்த அம்மா என்ன டீ பெரிய பல்பம் இல்ல வெச்சு இருந்தேன்... அதுக்குள்ள எழுதி தீத்துட்டியா என்றார்... (என் எழுதும் ஆர்வத்தின் மேல அவ்வள்ளவு நம்பிக்கை அப்போவே ?? )... சரி இன்னைக்கு பெரிய பல்பமா வெக்கறேன் என்று வைக்க ஒரே குஷி... இப்படியே பல்பம் என்பது என் ஸ்கூல் ஸ்நாக்ஸ் ஆக மாறியது... தினம் பல்பம் தீருதே அனால் ஸ்லேட்டில் ஆனா ஆவன்னாவையே தாண்டலையே என்று அம்மாக்கு சந்தேகம்... வீட்டில் பல்பம் தின்னும்போது ஒரு நாள் பார்த்துட்டார்... இப்படி பல்பத்தை சாப்டாதடி வயத்தில் புழு வரும் என்று திட்டினார்.. அப்படியும் நான் அடங்கவில்லை... சரி இது சரிப்படாது என்று அடுத்த நாள் சாக்பீஸ் வைத்து விட்டார்... அதையும் விடாது வாயில் வைத்தால் ஒரே புளிப்பு ... பல்பம் தின்ன நாக்கு சாக்பீஸ் ஐ ஏற்றுக்கொள்ளவில்லை.... கொஞ்ச நாள் ரொம்ப கஷ்டமா இருந்தது... ஆண்டவன் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பார்... அந்த கதவு பேப்பர்... ப்ரைமரி ஸ்கூல் சேர்ந்த உடன் போர் லைன் டூ லைன் என ரெண்டு நோட்டுக்கள் ... ஒரு நாள் சுவாரஸ்யமாக கிளாசில் கவனித்து கொண்டு (சத்தியம்மா கவனிப்பேன் தான்) ஒரு பேப்பரை கிழித்து வாயில் போட்டால் ஆரம்பத்தில் நன்றாக இருந்து அப்பறம் டேஸ்ட் மாறியது... ரெண்டு மூணு நாட்கள் தொடர்ந்து ஆராய்ந்ததில் பிரிண்ட் இருக்கும் போர்ஷன் அவ்வளவு டேஸ்ட் இல்லை என்று என் ஆராய்ச்சி முடிவு சொன்னது... அவ்வளவு தானே பேப்பர் ஐ குறுக்கே அந்த டூ லைன் பிரிண்ட்க்கு நடுவே இருக்கும் ப்ளைன் போர்ஷனை மட்டும் கவனமாய் கிழித்து வாயில் போட்டால் ஆஹா...நார் நாராய்
கிழிந்து இருக்கும் நோட் ஐ பார்த்து என்னடி இப்படி படிச்சு கிழிச்சு இருக்க என்று வீட்டில் திட்டு... சரி வேற மெதேட் யூஸ் பண்ணுவோம் என்று தினம் ஒரு பேப்பர் கிழித்து ஒரு வருஷத்திற்கு வாங்கிய நோட் ஒரே மாதத்தில் தீர்ந்து விட்டது (நான் உட்கார்ந்து இருந்த பெஞ்சுக்கு கீழே ஷ்ரெடர் ஔட்புட் போல ஒரே பேப்பர் துண்டுகள்) ... ஒரு நாலு நாள் நோட் இல்லாம ஸ்கூல் போ அப்போதான் பொறுப்பு வரும் என்று பனிஷ்மெண்ட் கிடைத்தது..... ரொம்ப கஷ்டமாய் இருந்தது .. பேப்பர் ஐ சாப்பிடாமல்.... சரி கொஞ்சம் இண்டேய்க் குறைச்சுக்கலாம் என்று முடிவு எடுத்து கொஞ்ச காலம் ஓடியது... இடையே பூக்கை பைண்ட் செய்த அட்டை, கவர் செய்த பிரவுன் ஷீட் எதையும் விடவில்லை... இதனால் ஒரே பயன் கிளாசில் திருத்துவதற்கு டீச்சரின் டேபிள் மேல் இருக்கும் நோட் கட்டுகளில் என்னுடைய நோட் மட்டும் தனியாக தெரியும் காரணம் செவ்வகமாக இருக்க வேண்டிய அட்டை கார்னர் எல்லாம் கிழிக்க பட்டு அறுகோணமாக இருக்கும்... அப்பறம் வளர்ந்த உடன் கிண்டலுக்கு பயந்து இந்த பழக்கத்தையெல்லாம் எப்படியோ மூட்டை கட்டிவிட்டேன்... 
இதில் என்னவென்றால் போன வாரம் எப்பவுமே நோட், பால் பாயிண்ட் பேனா இல்லேன்னா ஒன்றிற்கும் உதவாத எப்போ பாத்தாலும் பிளாஸ்டிக் பிரேம் பிஞ்சி வர இருக்கும் அந்த மேஜிக் ஸ்லேட் அதோட வர ஒரு டேஸ்ட்லஸ் சாரி யுஸ்லெஸ் மேஜிக் பென் என்று இருக்கும் என் பொண்ணு கையில் கருப்பு ஸ்லேட்டும் அதே ச்வீட் ஓல்ட் பல்பமும் .... ஹே இது எங்கடி கிடைச்சுது என்று கேட்டால் அம்மா தாத்தா வீட்ல ஒரு பாக்ஸ் ஏ இருக்குமா என்றாள்.... உடனே லபக்கென்று அந்த பல்பத்தை எடுத்து வாயில் போட்டு ஆஹா ஆஹா என்று பயங்கர எக்ஸ்ப்ரெஷனோடு சாப்பிட்ட என்னை 
ஆச்சர்யமாக பார்த்து "அம்மா இது எல்லாம் நீயும் ??? சாப்பிடுவியா" என்று கேட்டாளே பார்க்கலாம் .... தாயை போல பிள்ளை 
பின்குறிப்பு:
அங்கிருந்து வரும்போது நைசாக ஒரு பத்து பல்பத்தை அள்ளி என் பேகில் போட்டு கொண்டு வந்தது என் பொண்ணுக்கு கூட தெரியாது ... தெரிந்தால் ஷேர் பண்ண வேண்டி இருக்கும்னு தான் சொல்லலை