Friday, June 3, 2016

ஹிப்போக்ரஸி அலைஸ் பாசாங்கு

இந்த பாசாங்கு பண்றதுன்னு சொல்றாங்களே அப்படினா கரெக்டா என்ன என்று கேட்பவர்களுக்கு இதோ இப்போ நீங்க பண்றீங்களே அதே தான் என்று சொன்னால் அது தான் பொருத்தமான பதில்.... காரணம் இங்கே யாரும் பாசாங்கு செய்யாதவர்களே இல்லை... வேணும்னா பாசாங்கின் ரகங்கள் மாறலாம் ...
பேரண்டல் பாசாங்குன்னு ஒரு ரகத்துக்கு பேர் வெச்சுக்கலாம்..  இப்போ எல்லாம் பொது இடங்களில் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் தெரியாம கூட குழந்தை கிட்ட இங்க்லீஷ் அல்லாத வேற பாஷைல பேசிற கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்காங்க... அன்னைக்கு ஒரு நாள் பார்க்கில் ஒரு சின்ன குழந்தை ஆசையா ஓடி ஓடி விளையாடிட்டு இருந்தது ... அந்த குழந்தைய எல்லாரும் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க ... திடீர்னு அவங்க அம்மா "ஹே ஹனி ப்ளீஸ் பீ கேர்புல் வென் யு ப்ளே இன் தி ஸ்லைட் ... சே ஹலோ டு அக்கா " என்று சொல்ல அந்த குழந்தை "அம்மா ப்ளீஸ் மா வீட்ல சொல்ற மாறி தமிழ் ல சொல்லு புரியலை" என்றது... அந்த அம்மா பயங்கர கடுப்பாகி விட்டார்... இங்க்லீஷ் பேச வேண்டாம் என்று அர்த்தமில்லை ... இயல்பா வீட்டிலும் அதே போல் பேசினால் செயற்கையாக தெரியாது... இது போல வெளி இடங்களில் மட்டும் பேசினால் அது இயல்பாக இருக்காது... முக்கியமாக நம் குழந்தையை நம் தாய் மொழியில் "புஜ்ஜு செல்லம் கண்ணா அம்மு பொம்மா" என கொஞ்சுவதில் இருக்கும் ஆனந்தம் தனி தான்... இந்த "ஹனி ஸ்வீட்டி" எல்லாம் ஏதோ வட இந்திய நடிகைகள் தமிழ் டீவீ க்கு பேட்டி கொடுப்பது போலவே இருக்கு என்பது என் கருத்து..  எங்கேயோ படித்தது ஞாபகம் வருகிறது "English is just another language not a measure of intelligence" ...
இந்த ஸ்கூல் டீச்சர் பேரண்ட்ஸ் மீட்டிங் என்று ஒன்று வைப்பார்களே ... அங்கே பார்த்தால் வித விதமாக இருப்பார்கள்... ஒரு பேரண்ட் டீச்சரை கேட்டார் "இந்த டேர்ம் ல அவ என்ன எல்லாம் படிச்சு இருக்கா.. வீட்ல எங்ககிட்ட ரொம்ப சொல்றது இல்ல... பட் அவ மியூசிக் டான்ஸ் ஸ்லோக கிளாஸ் எல்லாத்துக்கும் போறா... ஸ்கூல் சிலபஸ் தான் தெரில.. வீ டோன்ட் வான்ட் டு மிஸ் எனிதிங் ரிலேடட் டு ஸ்டடீஸ் " என்று... டீச்சர் சின்ன வயது திருமணம் கூட ஆகவில்லை... ஏதோ ராகிங் இல் மாட்டி கொண்ட கல்லூரி மாணவி போல இருந்தாள்.. என்ன சொல்வது என்று தெரியவில்லை "சார் ஷி இஸ் பெர்பெக்ட் இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ்" என்றாள் ... அந்த குழந்தை படித்து கொண்டு இருந்தது எல் கே ஜி :) ... திரு திரு என்று முழித்து கொண்டு இருந்த அந்த குழந்தையை பார்க்க கொஞ்சம் பாவமாக தான் இருந்தது..... அதே டீச்சர் இன்னொரு பேரண்ட் இடம் பேசும் போது சொன்னாள் "சார் யுவர் சைல்ட் ஹாஸ் ஸ்டில் நாட் செட்டில்ட் இன் புல் டே ஸ்கூல்.. ப்ளீஸ் டேக் கேர் ஆப்  தட்" என்றாள் ... அந்த அப்பா "அது எல்லாம் போக போக சரியாயிடும் சின்ன பையன் தான மாம் " என்று கூல் ஆ எழுந்து போய்ட்டார்... மீட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்து ஸ்கூல் ல கொடுத்த பைலை பீரோவில் வைத்து விட்டேன்... அதில் என்ன இருந்தது என்று கூட சரியாக பார்க்கவில்லை ... ஒரு போன் கால் இன்னொரு பேரண்ட் "உங்க பொண்ணுக்கு எதாவது அச்சீவ்மெண்ட் கார்டு கொடுத்தாங்களா" .. தெரிலையே என்றேன்... "பாருங்க கிரீன் கலர் ல இருக்கும்.. எல்லா குழந்தைகளுக்கும் கொடுக்கலை..என் பையனுக்கு கொடுக்கலை" என்றார்... அந்த பேரண்ட் எப்பொழுதும் "என் பையனை நான் எதுக்கும் போர்ஸ் பண்ண மாட்டேன்.. அவன் ப்ரீயா வளரணும்" என்று லெக்சர் கொடுப்பவர்... ஏதோ அமெரிக்க கிரீன் கார்டு கிடைக்காத மாதிரி ஒரே புலம்பல் போனில் ... ஆஹா என்று இருந்தது..
இன்னொரு ரகம் ராயல் பாசாங்கு .... இவங்க எப்படினா வீட்ல எப்படி இருந்தாலும் வெளிய ரொம்ப ராயலா இருக்கற மாதிரி காட்டிப்பாங்க .... கைல போட்டுக்கற வாட்ச் ல இருந்து கால் ல போட்டுக்கற செருப்பு வரைக்கும்  எல்லாத்துக்கும் ஒரு ப்ராண்ட் வெச்சிருப்பாங்க....இவங்க வளர்ந்ததே இப்படினா பரவால்லை... பட் சின்ன வயசுல அறுந்து போன ரப்பர் செருப்பை பின் குத்தி போட்டவர்களா இருப்பார்கள்.... அப்புறம் இந்த லோக்கல் மொழியில் வரும் பேப்பர் புக்ஸ் இது எல்லாம் ஏதோ வீணா போன மேட்டர் என்று நினைப்பார்கள்... படிக்கிறார்களோ இல்லையோ ட்ரெய்னில் இல்லை பஸ் இல் போகும் போது கையில் ஒரு தடித்த ஆங்கில நாவல் இருக்கும்... சொல்லவே வேணாம் என்ன போன் கால் வந்தாலும் ஒரே ஆங்கிலம் தான்.... இதில் ஆண் பெண் என்ற பேதம் எல்லாம் இல்லை...
இன்னும் ஒரு ரகம் பெர்பெக்ஷன் பாசாங்கு ....சில பேர் மத்தவங்க என்ன செய்யணும் எப்படி இருக்கணும் என்று எதுக்கு எடுத்தாலும் லெக்சர் எடுப்பாங்க... ஆனா தான் அதை இம்மி கூட பாலோ பண்ணமாட்டாங்க..... தன்னுடைய எந்த குறையும் தெரியாதது போலவே கெத்தா  இருப்பாங்க... எதாவது தெரிந்தவர்கள் வீட்டிற்கு போனால் "எனக்கு எதுவுமே வெச்ச இடத்தில் இருக்கணும்" என்பார்கள்.. அவர்கள் வீடுகள்ல காலை நேரத்துல வித விதமா டென்ஷன் வரும்... சாக்ஸ் எங்கே காணோம்... போய் பார்த்தால் முந்தின நாள் போட்டுட்டு போன சாக்ஸ் ஷூ ல இருக்கும்... அதுக்கு முன்னாடி நாள் போட்டுட்டு போனது ஷூ ரேக் ல இருக்கும்... நாம இதுதான் இது இருக்க வேண்டிய இடமான்னு கேட்கவா முடியும்..... அலுவலகத்தில் சாந்த சொருபியாய் உதவும் உள்ளமாய் இருப்பார்கள்.... தலையில் அடித்து கையில் கொடுத்தால் கூட வாங்கி கொள்பவர்கள் போல இருப்பார்கள்.... ஆனால் தன் தலையில் வாங்கிய அத்தனை அடியும் அவர்கள் வீட்டில் இடியாய் இறங்கும்.... 

இவ்வளவு பேசறியே இதை எல்லாம் எழுதற உனக்கு பாசாங்கு இல்லையானு தானே கேட்கிறீர்கள்... பாசாங்கே இல்லாதவள் போல இப்படி எல்லாம் எழுதறதே ஒரு பாசாங்கு தானே  :)

No comments:

Post a Comment