Friday, June 24, 2016

இது நான்கு வருடங்களுக்கு முன் நான் எழுதிய முதல் கதை

அவனுக்கு துளி கூட இஷ்டம் இல்லை.... என்ன பெண் இவள்...ஆபீசில் அதிகமாக வேலை இருக்கு.. ஆடிட் டைம்னு சொல்லியும் கூட கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம அவசியம் அந்த மலை மேல இருக்கற கோவிலுக்கு போகணும்னு பிடிவாதம் பிடிக்கிறாளே.. என்னவோ நேரம் சரி இல்லையாம்.. அந்த கோவிலுக்கு போனா தோஷம் நிவர்த்தி ஆய்டுமாம்.... இந்த 21ஆம்  செஞ்சுரியில் இப்படியும் ஒரு நம்பிக்கை.... அவனுக்கு இதில் எல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இல்லை… இந்த வெயிலில் காரை காட் ரோட்டில் விடுவது எரிச்சலாக இருந்தது....

இது என்னடா.... இந்த சின்ன கோவிலுக்கு இவ்வளவு கூட்டமா... சரி என்ன தான் இருக்குனு பாக்கலாமே என்று கோவில் கர்ப்பக்ரஹத்தில் நுழைந்தவன் அப்படியே ஷாக் ஆகி விட்டான்....ஏதோ ஒரு பெரிய பாறையை பெயர்த்து அதுக்கு கடவுள்னு பேர் வெச்ச மாதிரி உருவமே இல்லாத ஒரு கல் தான் கடவுளாக நின்று இருந்தது…. ஏதோ சுயம்புவாம் … இந்த ஊரை பல முறை அழிவில் இருந்து காபாத்தியதாம்.... ஸ்தல புராணம் சொன்னார் அர்ச்சகர்.... அவனால் அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை.... மனைவியை திட்டி தீர்த்து விட்டான்.... "இந்த கோவிலுக்கு தான் போகணும்னு இப்படி அடம் பிடிச்சியா..... வேலை எல்லாம் விட்டுட்டு 100 கிலோமீட்டர் தள்ளி மலை மேல இருக்கற இந்த கோவிலுக்கு தான் கஷ்டப்பட்டு வந்தோமா... சரி இந்த கல்லைத்தான் எல்லாரும் சக்தி வாய்ந்த கடவுள்னு சொல்றாங்களா... நீங்க எல்லாம் வடிகட்டின முட்டாள்கள்.... என்னால இதை ஜீரணிச்சிக்கவே முடில" என்று பொரிந்து தள்ளி விட்டான் ....

பாவம் அவள்... கண்கள் எல்லாம் கலங்கி போய் பார்க்கவே பயந்த மாதிரி இருந்தாள்... பின்னே கணவரோட ஜாதகத்தில் ஏதோ தோஷம்... இந்த வருடம் அவனுக்கு பெரிய கண்டம் இருக்கு... இந்த கோவிலுக்கு போனால் நிவர்த்தி ஆய்டும் என்று பார்க்கும் ஜோசியர்கள் எல்லாம் சொன்னால் அவள் தான் என்ன செய்வாள்.... கஷ்டப்பட்டு கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்தால் அவனோ துளி கூட பக்தியும் பயமும் இல்லாமல் இப்படி இந்த கடவுளை நிந்திக்கிறானே.. அவளுக்கு பயமாக இருந்தது...
கார் வேகமாக கீழே இறங்கி கொண்டு இருந்தது.... அவன் அவனுடைய கடுப்பை எல்லாம் ஸ்டீரிங்கில் காட்டி கொண்டு இருந்தான்... திடீரென எதிரில் வந்த ஒரு லாரியை தவிர்க்க ஸ்டீரிங்கை திருப்ப கார் பாலன்சை இழந்து ரோட்டின் பௌண்டரியை உடைக்க... "ஐயோ நான் பயந்த மாதிரியே நடந்துடுச்சே" என்று அவள் பயத்தில் அலறி மயங்கினாள்...
என்ன இது கீழே உருள போகுதுன்னு நினைச்ச கார் யாரோ பிடிச்சு நிறுத்திய மாதிரி அப்படியே தொங்கிகிட்டு நிற்கிறதே என்று அவன் எட்டி பார்க்க, அங்கே பள்ளத்தில் விழ இருந்த காரை தாங்கி பிடித்து இருந்தது, "இது தான் கடவுளா" என்று அத்தனை நேரம் அவன் ஏளனமாக பேசிய ஒரு கல் !

No comments:

Post a Comment