Thursday, June 2, 2016

அந்த தெருவில் மறதி தாத்தா யார் என்று கேட்டால் எல்லாரும் கரெக்ட் ஆக அவர் வீட்டை காட்டி விடுவார்கள் ... அவர் வீட்டில் அவரும் அவர் தம்பி குடும்பமும் இருந்தது... இவருக்கு ஏன் மறதி பெயரோடு ஒட்டி கொண்டது என்று ஆராய்ந்ததில் சின்ன வயதில் எப்போதோ கீழே விழுந்து அடிபட்டதில் இருந்து அவருக்கு திடீர் திடீரென  என எல்லாமே மறந்து விடும்... அதுவரை ரொம்ப நன்றாக படித்து கொண்டு இருந்தவர் அந்த சம்பவத்திற்கு பிறகு அதிகம் படிக்க வில்லை .. ஆனால் அபாரமாக ஓவியம் வரைவார்.. ஊர் கோவில் சுவர் எல்லாம் அவர் ஓவியங்கள் தான் .. இது எல்லாம் அவருடைய தம்பியின் பேரனான என் நண்பன் சொன்னது... எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார்... தம்பியின் குழந்தைகள் பேரக்குழந்தைகள் மேல் மிகவும் பிரியம்... ஆனால் இவர் மறதி பிரச்சனையால் அவர் குடும்பத்திலேயே அவரை யாரும் மதிப்பதில்லை... சின்ன வயதிலேயே தாத்தாவை இழந்த எனக்கு தான் என்னவோ அவரை பார்த்தாலே ஒரு இரக்கம் தோன்றும்... என் நண்பனிடம் கூட சொல்வேன்  ஏன்டா அவர் உங்க கிட்ட எல்லாம் எவ்வளவு அன்பா இருக்கார் அப்புறம் ஏண்டா அவரை கிண்டல் பண்ணிட்டே இருக்கீங்க என்று ... அட போடா நீ வேற அவருக்கு திடீர் திடீர்னு எங்க பேரே மறந்துரும்.... எங்கயாவது வெளிய  போனா ஒண்ணு வீட்டுக்கு வழிய மறந்துருவார்... இல்லேன்னா யார்கிட்டயாவது எதாவது மாத்தி ஒளறி வெச்சிடுவார் ... ஒவ்வொரு தடவையும் இவர தேடி ஓடணும் ... வீட்ல இருந்தா அவரோட ஒரு இரும்பு பெட்டிய தொறந்து வெச்சிகிட்டு நோட் ல ஏதோ கிறுக்கிட்டு இருப்பார் ... அந்த பெட்டிய தொட்டா என்ன கோவம் வரும்கற... பெர்ர்ரிய புதையல் பெட்டி பாரு ... சரியான இம்சை டா என்பான்... அவர்  ஏண்டா தனியா இருக்கார் பாட்டி இல்லையா என்று கேட்டதிற்கு  அவருக்கு கல்யாணமே ஆகலை .. இப்படி மறதி வியாதி இருந்தா யாருடா அவரை கட்டிப்பாங்க ... இந்த லட்சணத்துல அந்த காலத்துல இவரு யாரையோ லவ் வேற பண்ணாறாம் ... அந்த பொண்ணோட அப்பா உனக்கு இருக்கற இந்த மறதிக்கு நீ என் பொண்ணையே அப்பப்போ மறந்துருவனு சொல்லி இவரை திருப்பி அனுப்பிட்டாராம் என்றான்... திடீரென்று ஒரு நாள் மறதி தாத்தா இறந்து விட்டார்... அவர் வீட்டில் யாரும் அதற்கு ரொம்ப பீல் பண்ணவில்லை....எனக்கு தான் என்னவோ போல் இருந்தது .... அந்த வீட்டுக்கு போய் இருந்தேன் .... என்  நண்பன் என்னை பார்த்ததும் "டேய் சரியான டைம்ல தான் வந்து இருக்க .. நாங்க அந்த புதையல் பெட்டிய தொறக்க போறோம் நீயும் வா" என்றான்... பெட்டியை திறந்தால் அத்தனை நோட்டுகள் .... இது என்னடா இதுக்கு தான் இவ்வள்ளவு பில்டப்பா என்று சிரித்த நண்பனை லட்சியம் பண்ணாமல் ஒவ்வொரு நோட்டையும் பிரித்து பார்த்தேன்... எல்லாத்திலும் ஒவ்வொரு பக்கத்திலும் தேதியும் ஒரு அழகான பெண்ணின் படமும் வரையப்பட்டு இருந்தது .... படத்தின் கீழே "துளசி நான் இன்னைக்கும் உன்னை ஒரு நிமிஷம் கூட மறக்கலை தெரியுமா" என்று எழுதி இருந்தது .. அவர் இறந்த தேதிக்கு முந்தைய நாள் வரை இருந்தது ... மறதி என்பது அவரை பொறுத்தவரை எப்போதுமே குரூரமாய் தான் இருந்த இருக்கிறது தேவையில்லாத போது வந்தும் தேவையான போது வராமலும் என்று மனம் கனத்து அழ ஆரம்பித்த என்னை என் நண்பன் விநோதமாக பார்த்தான் !!

No comments:

Post a Comment