Wednesday, July 6, 2016

நாய் என்றாலே கொஞ்சம் பயம்.... அதை வளர்ப்பதை நினைத்தாலே நிறைய அருவருப்பு என்று இருந்த நான்...
இப்படி இருக்க ஒரு நாள் ஒரு சின்ன கூடையை ஆஃபிஸில் இருந்து வரும்போது கொண்டு வந்தார் அப்பா.. என்னடா என்று உள்ளே பார்த்தால் வெள்ளை கலரில் புஸு புஸு என்று ஒரு பந்து... ஆசையாய் எடுத்தால் அது துள்ளி ஷெல்ப் அடியில் உருண்டது .... என்னவென்று பார்த்தால் பத்தே நாள் ஆன ஒரு குட்டி பொமரேனியன்.... அவ்ளோதான் இதை எல்லாம் எதுக்கு வீட்டுக்கு எடுத்துட்டு வந்து இருக்கார் என்று இருந்தாலும் அழகா புஸு புஸு என்று அப்பாவி கண்களோடு இருந்த அதை திட்ட மனசு வரலை... உடனே ஒரு சின்ன கூடையில் (ஸ்கூலுக்கு எல்லாம் லன்ச் எடுத்துட்டு போவோமே ஒரு பிளாஸ்டிக் கூடை அது) மெத்தென்று துணியை விரித்து அதுக்கு பெட் ரெடி பண்ணி அதுல படுக்க வெச்சா சமத்தா தூங்குது... இப்படியே ஒரு ஒரு வாரம் போச்சு...
ஒரு நாள் காலைல தூங்கி எழுந்து கட்டில் கீழ காலை வெச்சா மெத்துன்னு இருக்கு .. உடனே கீக்கீன்னு ஒரு சௌண்ட்... பாத்தா அந்த குட்டி எப்படியோ அதோட பெட்ல உருண்டு உருண்டு கூடையை கீழ தள்ளி வெளிய வந்து இருக்கு.... ஓகே வளர ஆரம்பிச்சாச்சு so நாமகரணம் பண்ணிடலாம்னு நானும் என் தங்கையும் பேரெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சோம்.... ஜூலி ன்னு வெச்சா கிளிஞ்சல்கள் படத்துல வர "ஜூலி ஐ லவ் யூ" ன்னு பாடி இவ் டீசிங் பண்ணுவாங்களே பேசாம பப்பி ன்னு வெக்கலாம்னு முடிவு பண்ணோம் (பப்பி ஷேம்னு கிண்டல் பண்ண மாட்டங்களான்னு கேக்க கூடாது ... வேற பேரே யோசனைக்கு வரலை so dog’s puppy is puppy அப்படின்னு புத்திசாலித்தனமா தான் வெச்சோம்)..
அப்பறம் அதை சீராட்டி பாராட்டி வளர்க்கறதையே தன் லட்சியமா வெச்சு இருந்தார் அப்பா... காலைல எழுந்த உடனே அதுக்கு bonnisan டானிக் .... nestle milk .... மத்தியானம் தயிர் சாதம் னு பாத்து பாத்து கவனிக்கப்பட்டது பப்பி… கேட்டா கை குழந்தை மாறியாம்... இதுல அம்மா வேற "அவர் பொண்ணுங்களுக்கு கூட அவர் இப்படி பாத்து பாத்து டானிக் எல்லாம் கொடுத்தது இல்லை" ன்னு பெருமையா சொல்லி வெறுப்பேத்துவாங்க... அதுலயும் அதுக்கு clinic plus ஷாம்பூ போட்டு குளிப்பாட்டி அது நெத்தியில் சிவப்பு சாந்துல அப்டி ஒரு திலகம் வெப்பார் பாருங்க இன்ஸ்டன்ட் ஆ அழகா ஆய்டும்....
அதுக்கு ட்ரைனிங் கொடுக்கறேன்னு அவர் ஒரு ப்ரோக்ராம் சார்ட் போட்டாரே பார்க்கணும் ...  காலைல அதை தூக்கி சோபா மேல வெச்சுடுவார்... அது சோபா விளிம்பு வரைக்கும் வந்து எட்டி கீழ பாத்து கீகீகீகீன்னு கத்தியே எல்லாரையும் எழுப்பி விட்டுடும் .... என்னன்னு கேட்டா அது குரைக்க கத்துக்க ட்ரைனிங்  ப்ளஸ் மேல இருந்து கீழ குதிக்க ட்ரைனிங் ஆம் ... அது இப்படியே கத்தி கத்தி அப்பாவையே கீழ இறக்க வெச்சிடும் (யார்கிட்ட ன்னு ஒரு லுக் வேற விடும்... எல்லாம் அப்பா கொடுத்த செல்லம் ம்க்கும் )... அப்றம் தான் தெரிஞ்சது அது அவர் எங்களை எழுப்ப பண்ண டெக்னிக்ன்னு... அப்றம் அடுத்த ட்ரைனிங் "பப்பி பேப்பரை எடுத்துட்டு வா" .... அது உடனே வேகமா வாசலுக்கு போய் பேப்பரை பரபரன்னு பிராண்டி கசக்கி பேப்பரை கொண்டு கூட வராது அங்க இருந்தே கத்தும்... உடனே நான் போய் எடுத்துட்டு வருவேன்.... அப்றம் இது ரொம்ப வீட்ல எல்லா மூலைக்கும் போய் ஒளிஞ்சுக்குதுன்னு ஒரு பெரிய கூடைய (இந்த காய் எல்லாம் கொண்டு வந்து விப்பாங்களே அந்த மாறி கூடை ) வாங்கி அது மேல கவுத்து போட்டா my dear kuttichathaan  ல வர மாறி கூடை மட்டும் எல்லா ரூம்க்கும் ட்ராவல் பண்ணும்... வீட்டுக்கு வந்த நிறைய பேர் பயந்து ஓடி போய்டுவாங்க... இப்படியே நாளொரு மேனி பொழுதொரு வண்ணமா பப்பி வளர்ந்தது...
இதுக்குள்ள அப்பாக்கு ட்ரான்ஸ்பர் ஆகி வேற ஊருக்கு வந்தோம்... பப்பிய பாத்து அந்த தெருவுக்கே பயம்... காரணம் திருடனை பார்த்து கத்தினா பரவால்ல இது எங்க காம்பௌண்ட் அ தாண்டி யார் நடந்தாலும் விடாம கத்தும்... எல்லாருமே திருடன் மாறி ஓடி தான் போவாங்க எங்க வீட்டை தாண்டும் போது மட்டும்.... இப்போ தான் எனக்கும் பப்பிக்கும் real cold war ஆரம்பிச்சது ... பின்ன என்ன நான் கீழ உட்கார்ந்தாலே என்னை கொஞ்சுறேன் பேர்வழின்னு என் மடில வந்து முட்டும்... அது கூட பரவால்ல என்னவோ என் கூந்தலுக்கு இயற்கை மணம் இருக்கா இல்லையான்னு டெஸ்ட் பண்ற மாறி எப்பவும் என் பின்னலை பிடிச்சு இழுத்து அதுல இருக்கற hair bandஅ முழுங்கிடும்... இது முழுங்கியே நான் ஒரு வாரத்துக்கு 10 band வாங்கற மாறி ஆயிடுச்சு... அப்றம் அதை போய் எங்கயாவது vomit பண்ணி வெக்கும்...house owner க்கு பயங்கர கோபம் வரும்... அதுல இருந்து எங்க இருந்தாலும் ஓடி போய் அவங்க portion ல தான் இது என்னோட bandஐ output பண்ணும்...
இதுல இன்னும் கொடுமை என்னனா ஒரு பாட்டு பாட கூட எனக்கு சுதந்திரம் இல்லாம போய்டுச்சு..... நான் பாட வாய திறந்தாலே அது கத்த ஆரம்பிச்சிடும்... இதுல அக்கம் பக்கத்துல இருந்த பசங்க எல்லாம் "அக்கா... நாங்க சொல்ல முடியாததை உங்க பப்பி பண்ணுதுக்கா " ன்னு நமுட்டு சிரிப்போடு சொல்லிட்டு ஒடுங்க .... ஒரே டென்ஷன் தான் எனக்கு...வள் வள்ன்னு  அதோட போட்டி போட்டு நானும் குரைப்பேன் இல்லல்ல கத்துவேன்...   ஆன அப்பா வீட்டுக்கு வரும்போது மட்டும் அது போடுமே ஒரு படம்... அம்மாடி... பாத்தா இதுவா இப்படி எல்லாம் பண்ணித்துன்னு அப்படி ஒரு பாவமா இருக்கும்... அப்பாவை பார்த்தால் ஓடி போய் கட்டிக்கறது என்ன நக்கறது என்னன்னு ஒரே கொஞ்சல்ஸ்... இதுல அப்பா வேற "எனக்கு மூணு பொண்ணு" ன்னு சொல்லி வெறுப்பேத்துவார்... நான் முறைச்சா "அதுல ஒண்ணு ரொம்ப நன்றி உள்ளது" ன்னு சொல்லி நமுட்டு சிரிப்பு சிரிப்பார்.... இப்படியே போனப்போ ஒரு நாள் கோபத்துல "அப்பா… இந்த வீட்ல ஒண்ணு பப்பி இருக்கணும் இல்ல நான் இருக்கணும் " அப்படின்னு சொன்னா "ஆமாமா ஒரு வீட்ல ரெண்டு நாய் இருந்தா கொஞ்சம் கஷ்டம் தான்" அப்படின்னு ஜோக் அடிக்கிறார்...
மறுபடியும் அப்பாக்கு ட்ரான்ஸ்பர்...இந்த தடவை பப்பிய கூட்டிட்டு போக முடியாது ஏன்னா புது  house owner child specialist doctor…அதனால அப்பாவோட ஒரு பிரெண்ட் அவர் வீட்ல பப்பிய விட்டுட சொன்னார்... விட்டுட்டு வந்தப்போ கண்ணுல ஒரே தண்ணி அதுக்கு... எனக்கே கொஞ்சுண்டு பாவமா இருந்தது ... பாவம் அதை எவ்வளவு திட்டிட்டோம்னு... வேற ஊருக்கு போய் கொஞ்ச நாள்ல பப்பி இல்லாம பழகிடுச்சு ... ஒரு தடவை அந்த மாமா போன் பண்ணப்போ சொன்னார் "நீங்க விட்டுட்டு போய் ஒரு ஒரு வாரம் பப்பி சரியாவே சாப்பிடல... இப்போ பரவா இல்ல.... she is very affectionate... எனக்கு இன்னொரு பொண்ணு தான் அவ" ன்னு...
இப்படியே ஒரு 4 வருஷம் ஓடிடுச்சு... ஒரு தடவை ஏதோ வேலையா அந்த ஊருக்கு போய் இருந்தோம்... சரி அந்த மாமா வீட்டுக்கு போலாம்னு போனா நாங்க வீட்டுக்குள்ள நுழையறோம் அப்பாவோட குரலை கேட்டு எங்க இருந்தோ வேகமா ஓடி வந்து அப்பா மேல தாவி நக்கி முத்தம் கொடுத்துன்னு ஒரே பாச மழை பொழிஞ்சது பப்பி... எங்க எல்லாரையும் பாத்துட்டு யார்கிட்ட வரது யாரை விடறதுன்னு தெரியாம எங்க எல்லாரையும் சுத்தி சுத்தி வந்தா... என்னை பாத்துட்டு அவ்ளோ சந்தோஷமா கத்து கத்துன்னு கத்தறா... அந்த மாமி "ஏம்மா நீ நல்லா(?) பாடுவியாமே எங்கே ஒரு பாட்டு பாடு" ன்னு சொன்னாங்க பாருங்க உடனே நான் பப்பிய ஒரு லுக் விட்டேன்... என்ன அதிசயம் நான் பாட ஆரம்பிச்ச உடனே என்கிட்ட வந்து மடியில தலை வெச்சு அமைதியா கேட்டா பாருங்க அங்க தான் என் மனசை என்னவோ பண்ணிட்டா... அப்றம் கிளம்பறோம் கண்ணுல கண்ணீரோட போகவே விடலை... நாய் நன்றி உள்ளதுன்னு சும்மாவா சொன்னாங்க !!!

பின் குறிப்பு :
அந்த தடவை ஊருக்கு திரும்பி வந்து ரொம்ப நாள் நான் பப்பி  ஞாபகத்தில்  இருந்தேன் ... ஒரு மூணு நாலு மாசம் இருக்கும் அந்த மாமா போன் பண்ணார் "sorry to say ma puppy is no more with us…நேத்து தான் போனா... இப்போதான் அவளுக்கு last rites எல்லாம் பண்ணிட்டு வந்தேன்..." அப்படிங்கறார்.... வாழ்க்கையில் முதன் முதலா அன்னைக்கு தான் பப்பிக்காக என் கண் நிறைந்தது ....

1 comment:

  1. பின்குறிப்பை எழுதாமல் விட்டிருக்கலாமோ?

    ReplyDelete