Monday, July 18, 2016

கதை - காதல் எப்போ எப்படி வரும்..

கதை - காதல் எப்போ எப்படி வரும்..

நான் post graduation  பண்ணும் போது ஹாஸ்டல் வாசம் .... நான் , ரம்யா, ரேவதி, கலை , பூமா, தேவி என்று நாங்கள் ஆறு பேர்  ஒரு கேங்க் ... ஒரு ரூமில் மூன்று பேர் என்று நாங்கள் ரெண்டு ரூமில் இருந்தாலும் அது வெறும் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் தான் .... கிளாசில் தூங்கி HODயிடம் பாட்டு வாங்கி , ஹாஸ்டல் சென்டர் ஏரியாவில் படித்து , மெஸ்ஸில் சாப்பிட்டு , துணி துவைத்து, க்ளாஸ் கட் அடித்து மாரிஸ் தியேட்டரில் மேட்னி ஷோ பார்த்து , மலைக்கோட்டை உச்சியில் அமர்ந்து அரட்டை அடித்து, தெப்பக்குளம் சுற்றி உள்ள தெருவில் மாங்காய் இஞ்சி வாசனையை நுகர்ந்தபடி சைனா பஜாரை பராக்கு பார்த்து நடந்து, இவ்வளவு ஏன் தரையில் நீளமாய் பெட்ஷீட்டை விரித்து தூங்கும் எல்லா நேரமும் நாங்கள் இணை பிரியாத பிரெண்ட்ஸ்...
எல்லாமே நல்லா தான் போய்ட்டு இருந்தது இந்த கத்திரிக்காய் அதாங்க காதல் வரும் வரை ... முதலில் கலை தான் அதில் விழுந்தாள் .... எப்படி  எங்கே என்று தெரியவில்லை... ஆனால் கிளாசில் திடீர் என்று ஒரு ரெண்டு டெஸ்க் பின்னால உட்கார ஆரம்பித்தாள்... என்னடா என்று புரியாத போதும் அவள் டெஸ்கில் எப்போதும்  அவளோடு உட்காரும் பூமாவும் தேவியும் அப்படியே ஷிப்ட் ஆனார்கள்... கிளாஸ் டைமில் என்னதான் எழுதுவாளோ பேப்பர் பேப்பராய் எழுதி தள்ளுவாள் கலை... பூமாவும் தேவியும் நமட்டு சிரிப்பு சிரித்தபடி எங்களை பார்ப்பார்கள் ... சாப்பிட வாடி கலை என்றால் பசிக்கவே இல்லை நீங்க போங்க என்று சொல்லி விட்டு கையில் பெரிய சைஸ் நோட் புக்கை பிரித்து வைத்து கனவு கண்டு கொண்டிருப்பாள்...  போஸ்ட் கார்டில்  வீட்டுக்கு லெட்டர் எழுதுபவள் காலேஜ் காம்பஸ் உள்ளே இருக்கும் போஸ்ட் ஆஃபிஸில் என்வலப்ஸ் நிறைய வாங்கினாள்.... ஒரு  ஒரு மாதம் பொறுத்து பார்த்துவிட்டு "என்னடி நடக்குது ... திடீர்னு இவ இப்படி இருக்கா ... நீங்களும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்க... இப்போ எல்லாம் நாம ஒண்ணா ஓரே ரூம்ல அரட்டை அடிக்கறது குறைஞ்சி போச்சு ... இது எல்லாம் சரியா இல்ல " அப்படின்னு   ரம்யா தான் முதலில் கேட்டாள் ... "அது ஒண்ணும் இல்லடீ  கலையும் நம்ம கிளாஸ் வாசுவும் லவ் பண்றாங்க" என்று பூமா சொன்னபோது எங்களால் நம்பவே முடியல.... நம்ம கலையா சான்ஸே இல்லை என்றோம் ... காரணம்  எங்கள் செட்டிலேயே அவள் தான் ரொம்ப அமைதி.... அவள் அப்பா பக்கத்து ஊரில் பெரிய துணிக்கடை வைத்திருப்பவர்.... ஜாதி சங்க தலைவர் வேற ... கலை அவள் அப்பா பேரை கேட்டாலே நடுங்குவாள்... எனக்கு தெரிந்து வாசு அவள் ஜாதி இல்லை.. பின்விளைவுகளை  யோசிக்காமல் முடிவெடுக்கும் ரகமும் இல்லை கலை... பின்ன எப்படி என்று யோசித்து என் தலையே வெடித்து விட்டது... இதில் ரம்யாவும் ரேவதியும் காதலில் சுத்தமாய் நமபிக்கை இல்லாதவர்கள்.... "அது வேலையத்தவங்க செய்யற உருப்படாத வேலை.. ஏன் இவ்வளவு தூரம் பாத்து பாத்து வளத்த அப்பா அம்மாக்கு தெரியாது நமக்கு எப்படி மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணனும்னு" என்று லெக்சர் அடித்தே கொன்று விடுவார்கள்.. இதற்கு பயந்தே கலை எங்கள் ரூமிற்கு வருவதை தவிர்த்து இருந்தாள் என்று எனக்கு புரிந்து விட்டது... வாசு எப்படியோ அவளை காதலிக்க சம்மதிக்க வைத்து விட்டான் என்று தெரிந்தது.. அவன் கலை அளவு வசதி இல்லையென்றாலும் ஒரளவு வசதி உள்ள குடும்பம் தான் ... ஹாஸ்டல் இல்லை டே ஸ்காலர் ... நன்றாக படிப்பவன்...  கிளாசில் அவனுக்கு ஒரு கிரேஸ் உண்டு.... ஆனால் எனக்கு ஓரே ஒரு சந்தேகம் தான் ... கலை எந்த அளவு இதில ஸ்டராங்கா இருப்பா ... அவளை நான் புரிந்து கொண்ட வரை அவள் அப்பாவை மீறி எதுவும் செய்பவள் இல்லை .... பட் காதலுக்கு  இது எல்லாம் தெரியுமா என்ன ....
இதற்கு நடுவில் தேவியும் எங்கள் சீனியர் பாலுவும் லவ் பண்ண ஆரம்பிச்சு இருந்தது தெரிய வந்தது ..... கலை வீட்டில் ஜாதி பிரச்சனை என்றால் தேவி வீட்டில் காதல் என்ற வார்த்தையே பிரச்சனை .... எப்படித்தான் இந்த காதல் கரெக்ட்டா பிரச்சனை இருக்கற இடம் பாத்து வருமோ.... இப்படி இவங்க ரெண்டு பேரும் காதலை வளர்த்த நேரத்தில் ஆறு பேராய் சுற்றியவர்கள் முணு பேர் ஆனோம்... பூமா அவர்கள் ரூம் என்பதால் சில சமயம் எங்களோடு இருப்பாள் பல சமயம் அவர்களோடு இருப்பாள்... ரம்யா தான் "ஒழுங்கா படிப்ப முடிச்சு வேல வெட்டிய பார்க்காம லூசுங்க என்ன பண்ணிட்டு இருக்குங்க பாரு " என்று திட்டி கொண்டு இருப்பாள் .... திடீர் என்று ஒரு நாள் தேவி ஹாஸ்டலில்  இருந்து போய்விட்டாள் ... ஆமா சனி ஞாயிறு ஊருக்கு போவது போல கிளம்பி பாலுவோட போயிட்டாள் ... ஹாஸ்டல்ல ஓரே பிரச்சனை  .... தேவியோட அப்பா, மாமா , சித்தப்பான்னு ஒரு படையே வந்து நாங்க பிரெண்ட்ஸுங்கறதால எங்களை துருவி துருவி ஒரு வழி பண்ணிவிட்டார்கள்.... ஹாஸ்டல் வார்டன் எங்களை பார்த்தாலே பயங்கரமாய் முறைக்க ஆரம்பிச்சாங்க... எங்களுக்கு  மட்டும் எக்ஸ்ட்ரா கெடுபிடி.... நாங்க நொந்து போய்ட்டோம்...  "படுபாவி கூடவே இருந்து அமுக்குணி மாதிரி என்ன வேலை பண்ணிட்டு போய்ட்டா பாத்தியா ... இவ எல்லாம் ஒரு பிரெண்ட் ...இவ காதலும் கத்திரிக்காயும் " ன்னு ரம்யாவும் ரேவதியும் மாத்தி மாத்தி புலம்பி தள்ளினாங்க  ... இப்படியே ஒரு வழியா பைனல் இயர் பைனல் செமஸ்டர் வந்துட்டோம்.. திடீர்ன்னு ஒரு நாள் நடுராத்திரி  கலை விஷத்தை சாப்பிட்டுட்டா.. வலில அலறின சத்தம் கேட்டுட்டு பூமா முழிச்சுகிட்டு ஓரே கத்து .... வார்டன் வந்து கலைய ஹஸ்பிடலுக்கு தூக்கிட்டு ஒடி எப்படியோ காப்பாத்தியாச்சு... அவ அப்பா திடீர்ன்னு மாப்பிள்ளை பார்த்து எக்ஸாம் முடிஞ்ச உடனே கல்யாணம்னு முடிவு பண்ணி ஏற்பாடுகள் செஞ்சிட்டு இருந்தார்ன்னு அப்பத்தான் தெரிஞ்சுது... "ஒண்ணா காதலிச்சவன கல்யாணம் பண்ற தைரியம் வேணும்... இல்லயா அந்த கர்மத்தை பண்ணியே தொலைக்க கூடாது.... அதை விட்டுட்டு இப்படி சாக முடிவு பண்ணிட்டியே " ன்னு ரம்யா தான் ரொம்ப திட்டி  தீத்தா... அவ்ளோதான்  இதுக்கு மேல சொல்லவும் வேணுமா கலைய அவங்க வீட்ல கூட்டிட்டு போய்ட்டாங்க.... அவ என்ன பண்றா எங்க இருக்கான்னு தெரிஞ்சிக்க நாங்க அவ வீட்டிக்கு போன் பண்ணா கூட அவ அண்ணாவோ  அம்மாவோ தான் போன் எடுப்பாங்க... என்னவோ சொல்லி போன கட் பண்ணிடுவாங்க ... பூமா தான் பாவம் ரொம்ப நொந்து போய்ட்டா.... ஒரு பக்கம் வாசு தாடியெல்லாம் வளத்துட்டு பூமாகிட்ட "எப்படியாவது கலை கிட்ட பேசி பாரேன்" னு ஓரே அழுகை... அவனை பார்க்கவே பரிதாபமாக இருந்தது .... இந்த அமர்க்களத்துக்கு நடுவில் பைனல் எக்ஸாம் முடிஞ்சது.... பாறாங்கல் மாதிரி மனச அழுத்தற பாரத்தோட அவங்க அவங்க பிரிஞ்சோம்.... அப்ப எல்லாம் மொபைல் போனே பிரபலமாகாத நாட்கள் ... லெட்டர்ஸ் தான் ஒரே வழி .... கொஞ்ச நாள்ல டெலக்ராம் மாதிரி கன்டென்ட் குறைஞ்சு அப்பறம் அதுவும் போய் காலத்தோட போக்குல அவங்க அவங்க லைஃப்ல மூழ்கிட்டோம்...

இன்னைக்கு ஏதோ வேலையா மந்தவெளி போயிட்டு பஸ்ல திரும்ப வந்துட்டு இருந்தேன் ... காலியான பக்கத்து சீட்டில்  சின்னதும் பெருசுமாக  துறுதுறு  என ரெண்டு பசங்க வந்து உட்கார்ந்தது... அந்த முகங்களை பார்த்தால் எங்கேயோ பார்த்தது போலவே இருந்தது..... ரெண்டும் ஒன்றை ஒன்று சீண்டி கொண்டே வந்தது .... "டேய் கிடைச்ச சீட்ல அமைதியா உட்காந்து வாங்கடான்னா என்ன ரெண்டு பேரும் அடிச்சுக்கறீங்க " என்று அதட்டிய குரல் கேட்டதும் திரும்பி பார்த்தால் அட ரம்யா...
"ஹேய் ரம்யா எப்படி இருக்கடீ .... என்னை தெரியுதா...   இது உன் பசங்களா.. எங்க இருக்க...." என்று உற்சாகமானேன்... ஒரு நிமிடம் முழித்தவள் சட்டென்று முகம் மலர்ந்தாள் ... "ஹேய் வாட் அ சர்ப்ரைஸ் ... எப்படி இருக்கடீ .. மெட்ராஸ்லயா இருக்க ...நான் ஹைதராபாத்ல இருக்கேன் ... இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தேன்" என்றாள் ... "சரி எங்க உன் ஹஸ்பண்ட்... என்ன பண்றார்" என்று கேட்ட உடனே "அவர் வரலை..." ன்னு சொல்லிட்டு உலக அதிசயமாய் வெட்கப்பட்டாள் .... அப்பறம் கைல இருந்த மொபைலை நோண்டி ஒரு போட்டோவை காமிச்சா .... அதுல ஈன்னு சிரிச்சிட்டு இவ நிக்கறா ... பக்கத்தில நிக்கறது இவ ஹஸ்பண்ட் வாசு .....
அட போங்க இந்த காதல் இருக்கே எப்போ வரும் எப்படி வரும்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்துரும் !!!

No comments:

Post a Comment