Tuesday, July 5, 2016

"அப்பா சிவா ... சாயங்காலம் வரும்போது மறக்காம அந்த கண் டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வாப்பா... இந்த வலது கண்ணுல பவர் கூடி இருக்கறா மாறி இருக்கு " என்றார் அப்பா .

ஆஃபீஸ்க்கு லேட் ஆன டென்ஷனில் வெடுக்கென்று "ஏன்பா என்னதான் உங்க பிரச்சனை .... யார் எப்படி போனாலும் உங்களுக்கு உங்களை பத்தி மட்டும் தான் சிந்தனை.. உங்க கண்ணுக்கு அப்படி ஒண்ணும் ஓடி போய் பாக்கற மாறி பிரச்சனை இல்லை ... எனக்கு இருக்கற பவர்ல பாதி கூட உங்களுக்கு இல்ல.. இந்த வயசுலயும் நல்லா தான இருக்கீங்க வேற எந்த ஹெல்த் ப்ராப்ளமும் இல்லாம .... அப்புறம் ஏன்பா இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு  கூட உடனே டாக்டர்கிட்ட ஓடணும்ங்கறீங்க .... எனக்கு இந்த மாசம் இயர் எண்ட் ... சீக்கிரமா வீட்டுக்கு வரது நடக்கவே நடக்காது... " என்று கத்தினேன் ...  உடனே "ஏன்பா இப்படி கோபப்படறீங்க .. தாத்தா ஒண்ணும் தப்பா கேக்கலையே... உங்களுக்கு முடிலனா நான் கூட்டிட்டு போறேன்.." என்றபடியே வந்துவிட்டான் என் அருமை மகன் அரவிந்த்..... "ரெண்டு பேரும் என்னவோ பண்ணுங்க" என்று சொல்லி கிளம்பி விட்டேன் ....

என் அப்பா முன்னலாம் இப்படி இல்லை ... எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அவர் டாக்டரிடம் போய் நான் பார்த்ததே இல்லை ... எதுக்கும் அலட்டிக்க மாட்டார்...  இப்போ கொஞ்ச காலமா தான் இப்படி ... அம்மா போன அப்பறம் தான் னு தோணுது .... தன்னை பத்தின கவனம் ரொம்ப அதிகமாயிடுச்சு அவருக்கு ... காலைல எழுந்திருப்பதில் இருந்து தூங்க போகும் நேரம் வரைக்கும் ஒரே வாக்கிங், டயட்டிங் என்று ஏதோ டைம்டேபிள் போட்டுகொண்டு செய்து கொண்டு இருக்கிறார்....யாரையும்  ஒரு தொந்தரவும் செய்வது இல்லை ... தனக்கு வேண்டிய டயட் கஞ்சி போட்டு கொள்வதில் இருந்து அவருடைய எல்லா  தேவைகளையும் அவரே தான் பார்த்துக்கறார்... இருந்தாலும் அவருடைய எதுவும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்கிற அவர் நடவடிக்கை பல சமயம் எரிச்சலை வரவழைத்து விடுகிறது... என்றைக்காவது ஒரு நாள் வீட்டில் எல்லாருக்கும் ரெஸ்ட்டாக இருக்கட்டுமே  என்று ஒரு சேஞ்சுக்கு  ஹோட்டல் போலாம் என்றால் கூட உடனே "நீங்க எல்லாம் போய்ட்டு வாங்கப்பா நான் எனக்கு ஒரு மிளகு ரசம் வெச்சி சாப்டுக்கறேன் " என்பார்.... உடனே என் மனைவிக்கு மனசு கேக்காது ... அவளே வீட்டில் சமைத்து விடுவாள்.. ஒரு சின்ன தலைவலி இல்லை சரியாக யூரின் போகவில்லை என்றால் கூட உடனே "சிவா டாக்டர் கிட்ட போய்டலாம்ப்பா ... இதை எல்லாம் அலட்சியமே பண்ண கூடாது ... ஒரு வேளை கிட்னி ல ஏதாவது பிரச்சனை வந்துட்டா " என்பார் ... பல சமயம் அவரை பார்க்கும் போது ரொம்ப ஓவர் obsessed ஆக இருக்காருன்னு கூட எனக்கு தோணும் ... அவர் பேரன் மட்டும் எப்போதுமே அவருக்கு சப்போர்ட் ... என்னவோ பண்ணிக்கட்டும் என்று விட்டு விடுவேன்..

ஆனா என்னவோ என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ரொம்ப வெடுக்கென்று பேசிட்டேன்... ஆஃபிஸ் வந்தும் மனசெல்லாம் என்னவோ போல இருந்தது ... "ச்சை ஏன் இப்படி காட்டு மிராண்டித்தனமா பேசிட்டேன் இன்னைக்கு ... பாவம் அவர் மனசு என்ன பாடு படுதோ " என்று நினைத்து வேலையே சரியாக ஓடவில்லை... சட்டென்று கண் டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினேன்.... சாயங்காலம் சீக்கிரம் வீட்டிக்கு போய் அப்பாவை ஐ செக்கப்பிற்கு அழைத்து செல்ல முடிவு செய்த பிறகு மனசு கொஞ்சம் சமாதானம் ஆனது.. வேலையில் மூழ்கினேன்... மத்தியானம்  ஒரு முணு மணிக்கு மொபைல் அழைத்தது.... எடுத்தால் "அய்யோ மாமா நம்மள விட்டு போய்ட்டாருங்க " என்ற என் மனைவியின் அழுகை குரல்... இடி விழுந்தது போல இருந்தது ...

அமைதியாக தூங்குவதை போல இருந்த அப்பாவின் முகத்தை பார்க்கவே  முடியவில்லை.... அழுகை அடைத்து கொண்டு வெளிய வர மறுத்தது .... சலனமே இல்லாமல்  என்னை பார்த்த அரவிந்தின் பார்வை  என்னை கொல்லாமல் கொன்றது.... என்ன செய்வது என்று தெரியாமல் அப்பாவின் அருகே சாய்ந்து விட்டேன் ... எப்போ வந்தார் என்றே தெரியவில்லை என் தோளை  அணைத்தார் அப்பா ரெகுலராக செக்கப்பிற்கு போகும் டாக்டர்... "சிவா உங்க இழப்பு எனக்கு புரியுது... இந்த சமயத்துல இப்படி அவசரப்படுத்தறது எனக்கே ரொம்ப சங்கடமா தான் இருக்கு.... ஆனா உங்கப்பாவோட உயர்ந்த குணத்துக்கு அவரோட ஆசைய நிறைவேத்தணும் .. அதுக்கு இப்பவே அவரை ஹாஸ்பிடல் கொண்டு போகணும்... பிளீஸ் கொஞ்சம் கோவாப்பரெட் பண்ணுங்க " என்றார் .... எனக்கு ஒன்றும் புரியாமல் முழித்தேன்..

 "அப்பாக்கு தெரியாது டாக்டர்.. தாத்தா சொல்லவேண்டாம்னு சொல்லி இருந்தார்... நீங்க ப்ரொசீட் பண்ணுங்க " என்ற அரவிந்த் என்னிடம் திரும்பி "அப்பா.. தாத்தா அவரோட உடல் உறுப்புகள் எல்லாத்தையும் தானம் பண்ணி இருக்கார் ... அதுக்கு எழுதி கொடுத்த அப்பறம் தான் அவர் அவரோட ஹெல்த கவனமா பாத்துக்கிட்டார்... நாம தானம் பண்றது முக்கியம் இல்லடா நாம நல்லத தான் தானம் பண்ணணும் அரவிந்த்  அப்டின்னு சொல்லிட்டே இருப்பார் ... என்னைக்கும் இல்லாம இன்னைக்கு நீங்க ரொம்ப கோபமா பேசினதுல அவர் முகமே வாடி போச்சு .. ஏதோ யோசிச்சிட்டே படுத்து இருந்தவர் அப்புறம் எழுந்துக்கவே இல்ல. நான் தான் டாக்டர் கிட்ட இன்பார்ம் பண்ணேன் " என்றான்....
"அப்ப்ப்ப்ப்பா..." என்ற என் கதறல் அதற்கு மேல் அவனை பேசவிடவில்லை...

No comments:

Post a Comment