Friday, January 27, 2017

எல்லா புகழும் இறைவனுக்கே !!

காலைல ஆறு மணிக்கு எழுந்து பக்கத்து வீட்டு ரூபா அதுக்கு முன்னாடியே எழுந்து அப்படி என்னதான் படிப்பான்னு யோசனை பண்ணிகிட்ட்ட்டே மெதுவா பல்லை தேய்ச்சு, குளிச்சு, கஜானனம் சுலோகம் சொல்லி, நாலு சென்டிமீட்டரே இருந்த ஷாலினி கிராப்பை (உபயம் எங்கப்பா அண்ட் தெருமுனை சலூன்கார்ர்ர்) நூறு தடவை வாரி வாரி ஒரு ஸ்லைடை குத்தி, பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு பேபி ஷாலினி மாதிரி (நினைச்சுகிட்டு தான்) தலை ஆட்டி ஆட்டி சொல்லி, விபூதியை நல்லா வெச்சிக்கிட்டு போய் எழுதினது மூணாங்கிளாஸ் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா..... பர்ஸ்ட் ரேங்க் ஆமா...

காலைல ஆறு மணிக்கு எழுந்து கங்காபாய் மேம் சொல்லித்தந்த மராத்திய நினைச்சு கண்ணீர் விட்டுட்டே, அப்படி மராத்தி லெட்டர்ஸ்லயே தந்தி அடிக்கற நான் போய் மராத்தில கட்டுரையே எழுதணுமேன்னே யோசனை பண்ணிகிட்ட்ட்டே மெதுவா பல்லை தேய்ச்சு, குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, பத்து சென்டிமீட்டர் இருந்த முடியை நூறு தடவை வாரி ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு வளர்ந்த ஷாலினி மாதிரி (நினைச்சுகிட்டு தான்) பின்னலை முன்னாடி பின்னாடின்னு மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு, விபூதியை நல்லா வெச்சிக்கிட்டு போய் எழுதினது அஞ்சாங்கிளாஸ் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா..... ஆனா பர்ஸ்ட் ரேங்க் இல்லை ஆமா... பின்ன மராத்தியே தெரியாதே அப்போ அதுல ஜஸ்ட் பாஸ் தான ஆக முடியும் (அப்போ ஹிந்தி மட்டும் தெரியுமா ... அதுல நூத்துக்கு நூறானெலாம் தயவு செஞ்சி கேட்டுடாதீங்க ... அதுலயும் ததிங்கிணத்தோம் தான் ஸ்டில் பெட்டர் தான் மராத்தி)

காலைல ஆறு மணிக்கு எழுந்து எந்த யோசனையும் இல்லாம ஒழுங்கா பல்லை தேய்ச்சு, ஹார்லிக்ஸ் கப்பை எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்கு புக்ஸோட போய் மலையை பார்த்த மாதிரி உக்காந்து சிவபெருமானை தியானம் பண்ணிகிட்டே ஒரு அரை மணி நேரம் படிச்சிட்டு,  குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, இருபது சென்டிமீட்டர் இருந்த முடியை நாலு தடவை வாரி ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு யாரை மாதிரியும் நினைச்சுக்காம என்னோட ஸ்டைல்லயே பவ்யமா சொல்லிட்டு, டமால்ன்னு அப்பா அம்மா கால்ல விழுந்து அவங்க கைல விபூதி டப்பாவை தந்து வெச்சி விட சொல்லி, போய் எழுதினது டென்த் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா... திஸ் டைம் சிவா ஆல்சோ ஹெல்ப்ட்....  சோ நல்ல மார்க் தான்...

காலைல ஆறு மணிக்கு எழுந்து எந்த யோசனையும் இல்லாம ஒழுங்கா பல்லை தேய்ச்சு, ஹார்லிக்ஸ் கப்பை எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்கு புக்ஸோட போய் வானத்தை பார்த்து  உக்காந்து சூர்ய பகவானை தியானம் பண்ணிகிட்டே ஒரு மணி நேரம் படிச்சிட்டு,  குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, என்னோட நாப்பது கிலோ ஸ்கூல் பாவாடையும் அப்பாவோட பெரிரிரிய ஷர்ட்டையும்  போட்டுக்கிட்டு தெருமுனை பிள்ளையார் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் சுத்து சுத்துன்னு ஒரு முப்பது சுத்து சுத்திட்டு, முப்பது சென்டிமீட்டர் இருந்த முடியை ஒரு தடவை கூட சரியாய் வாராம ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் (இது மட்டும் காலேஜ் ஹாஸ்டல் போற வரைக்கும் மாறலை) சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "யெஸ்ஸ்ஸ்" ன்னு (கான்பிடன்ட்டா இருக்கேனாமாம் ... ) பெரிய்ய மனுஷியா சொல்லிட்டு,  டமால்ன்னு அப்பா அம்மா கால்ல விழுந்து அவங்க கைல விபூதி டப்பாவை தந்து வெச்சி விட சொல்லி, கூடவே கொஞ்சம் குங்குமமும் சேர்த்து வெச்சிக்கிட்டு போய் எழுதினது ப்ளஸ் டூ எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா... கூடவே ஆஞ்சி வேற ... சோ கேட்கணுமா...

நல்லா தான் போயிட்டு இருந்தது இது வரைக்கும்......
அப்பறம் தான் ....
....
மறுநாள் எக்ஸாம்க்கு முதல் நாள் புல்லா ஸ்டடி லீவ் இருந்தாலும் புக்கை பூஜைல வெச்சிட்டு, பகல்ல நல்லா தூங்கிட்டு , சாயங்காலம் இருந்த அரை அடி கூந்தலை (ஹோம் சிக்ல முடி எல்லாம் கொட்டி போச்சு) சும்மா கட்டிக்கிட்டு , அந்த டீ தண்ணிய (பின்ன காபி தண்ணின்னு சொல்லலாம்.... உண்மையாவே தண்ணியா இருக்கற ஹாஸ்டல் டீயை சொல்ல கூடாதா), குடிச்சிட்டு அங்க இருந்த ஆபத்பாந்தவன் பிள்ளையார் கோவிலுக்கு போய் ஒரு நாப்பது சுத்து சுத்திட்டு, திரும்ப ஹாஸ்டல் வந்து, மறக்காம அங்க வந்து பொறி விக்கறவர் கிட்ட கார பொறி வாங்கி சாப்பிட்டு (இந்த ரண களத்துலயும் உனக்கு கார பொறி கேக்குதான்னு மட்டும் தெரியாம கேட்டுடாதீங்க .... அது சென்டிமென்ட .. பொறி சாப்டா அடுத்த நாள் எக்ஸாம் சும்மா பொறி பறக்க வெளுக்கற அளவு ஈஸியா வரும்னு .... it was a proven fact in those 4 years), அப்பறமும் திருந்தாம டின்னரையும் சாப்பிட்டு அலப்பறை விட்டுட்டு காரிடார்ல சுத்திட்டு, ராத்திரி புல்லா காலைல 5 மணி வரைக்கும் படி படின்னு அந்த புக்கை வெச்சி செஞ்சிட்டு,  காலைல ஆறு மணிக்கு இல்ல எட்டு மணிக்கு எழுந்து சுத்தமா படிச்ச மாதிரியே இல்லாம மண்டையெல்லாம் ஒரே பிளாங்க்கா, முழிச்சிகிட்டே பல்லை தேய்ச்சு (ஆனாலும் கூலா கெத்து மெயின்டெயின் பண்ணுவேன் இல்ல ),  குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி ப்ளஸ் ஒரு நாலு a4 ஷீட்ல எழுதி வெச்சிருக்கற எல்லா ஸ்லோகத்தையும் சொல்லி, தலை வாருவது எல்லாம் ஒரு வேலையான்னு அதை குழாயடி சண்டைக்கு போறவ மாதிரியே அள்ளி முடிஞ்சிகிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்க ஹாஸ்டல்ல அப்பா இருப்பாரா என்ன... சோ நானே வரிசையா பிள்ளையார் கோவில் விபூதி, பாபா விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் செந்தூரம் (இதையெல்லாம் கரெக்ட்டா கலெக்ட் பண்ணி வெச்சிருப்பேன்.... பிரெண்ட்ஸ்க்கும் சாமியாடி ரேஞ்சுக்கு நானே மந்திரிச்சு வெச்சு விடுவேன்) எல்லாத்தையும் வெச்சிக்கிட்டு மேல்மருவத்தூர் ச்ச டங் ஸ்லிப் எக்ஸாம் ஹாலுக்கு போய் எழுதினது எஞ்சினீரிங் எக்ஸாம் .... அப்பப்பா இவ்வளவு பேர் இருந்தாங்கல... சோ எப்படியோ காப்பாத்திட்டாங்க...

இப்படியாக ஒரு வழியா எக்ஸாம்ஸ்க்கு ஒரு பெரிய முழுக்கை போட்டு படிப்பை முடிச்சிட்டேன் (வேணும்னா மேல படிக்கலாம்.... பட் இந்த கதையை படிச்ச உங்களுக்கே புரிஞ்சுருக்குமே )...

இப்போ போன மாசம் முதல் ஹிந்தி எக்ஸாம் (ஸ்கூல்ல ஆறாவது வரைக்கும் நோ எக்ஸாம்ஸ்... நல்லா இருக்குல்ல ).... சோ "    I am soooo excited maa… this is my first exam…” அப்படினெல்லாம் சொல்லிட்டு, என்னை மாதிரி இருக்க மாட்டா கொஞ்சம் சீரியஸா தான் இருக்கான்னு நினைக்கற மாதிரி நைட் படிச்சிட்டு தூங்கிட்டு, காலைல ஏழு மணிக்கு எழுந்து , மெதுவ்வ்வ்வா ஏதோ யோசனை பண்ணிகிட்டே (சேம் ப்ளட்) பல்லை தேய்ச்சி, குளிச்சு, டிரஸ் போட்டுக்கிட்டு , நேரா புக் ஷெல்ப் திறந்து தேடிடி ஒரு அமர் சித்ர கதா புக் (மஹாபாரதம்) எடுத்து மெனக்கெட்டு ஏதோ பேஜை திறந்து அதை படிக்க ஆரம்பிச்சா... "ஹே சுலோகம் (because that is the most important part of exams you see) ஏதாவது சொல்லுடி..." ன்னு நான் சொன்னதுக்காக இருந்த இடத்துலயே வேகவேகமா என்ன சொன்னான்னே புரியாம ஏதோ ஒண்ண சொல்லிட்டு "சொல்லிட்டேன்மா..." ன்னு மறுபடியும் மஹாபாரதம் படிக்க ஆரம்பிச்சாளே பாக்கணும் .... நானே ஷாக் ஆய்ட்டேன்னா பாத்துகோங்களேன் ...

பின் குறிப்பு:
இதெல்லாம் கூட பரவால்ல .... ஆனா வீட்ல ஒருத்தர் ஆபீஸ் போயிட்டு வந்து மறுநாள் எக்ஸாம்க்கு நைட், கொட்டாவி விட்டுக்கிட்டே, இந்த கண் இமையெல்லாம் குச்சி வெச்சு ஓபன் பண்ணிக்கிட்டு தெய்வமேங்கற மாதிரியே பாவமா  படிக்க ஆரம்பிக்கறப்போ.... இந்த பக்கம் என் பொண்ணு ஏதோ கதை புக்கும், அந்த பக்கம் நான் "மங்கையர் மலரும்" படிப்போமே... இந்த அக்கிரமத்தை கேக்க யாருமே இல்லையாங்கற மாதிரியே எங்க ரெண்டு பேரையும் பாக்காதீங்க... அவருகிட்ட எல்லா ஸ்லோகமும் இருக்கற a4 ஷீட்டை கொடுத்துட்டேன்.... எல்லா புகழும் இறைவனுக்கே !!

No comments:

Post a Comment