Sunday, August 22, 2021

கதை - நிதர்சனம்


“சொல்ல மறந்துட்டேனே... நம்ம சங்கரன் கூட வீட்டை வித்துடலாம்னு முடிவெடுத்து இருக்கான்”


“என்னது??” வாயில் போட்ட சாதம் முழுங்க முடியாமல் தொண்டையிலேயே சிக்க, ஒரு நிமிஷம் அம்மா சொன்னதை கேட்டு அதிர்ந்தேன்...


“ஆமாண்டா.... பத்து நாள் முன்னாடி தான் இந்த பக்கமா ஏதோ வேலையா வந்துட்டு, நம்ம வீட்டுக்கும் வந்தான்... அவன் பையன் அரவிந்த்க்கு அமெரிக்கால, Michiganல யூனிவர்சிட்டி அட்மிஷன் கிடைச்சிருக்காம்.... உன்கிட்ட கூட பேசணும்னு சொன்னான்... நான் நீ இந்த வாரம் இங்க வரன்னு சொன்னேன்... அப்போ நல்லதா போச்சு நேர்லயே பேசிக்கறேன் அப்படின்னு சொல்லிட்டு போனான்..”


“சரிம்மா... வீட்டை எதுக்கு விக்கறானாம்?”

“அதாண்டா... அவன் பையனை படிக்க அனுப்ப ஏதோ லோன் எல்லாம் கூட போட்டுருக்கானாம்.... இருந்தாலும் கஷ்டமா இருக்கு போலருக்கு... அரவிந்த்க்கு கீழ வேற ரெண்டு பொண்ணாச்சே அவனுக்கு.... அதான் சரி வீட்டை வித்துடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் அப்படினான்…”


வீட்டையா?? வெறும் வீடா அது.... காரையும், மணலும், துணி துவைக்கற கல்லும், கிணறும், வேப்பமரமும், பாட்டியோட “சாப்பிட வாடா சந்துரு...”வும், அவ கை வாசனை நிறைஞ்சு இருக்கற முருங்கைக்காய் சாம்பாரும், தாத்தாவோட லைஃபாய்யும் விபூதியும் கலந்த பனியன் மணமும், மாமாவோட “டேய்ய்ய்”யும், வாசல்ல கும்னு மணம் வீசற மல்லிகையும், உள்ளங்கை அளவு பூக்கும் சிவப்பு செம்பருத்தியும், அதை கொண்டையில் வெக்கறதுக்காகவே காத்திட்டு இருக்கும் நான் ‘விக்கி’ன்னு செல்ல பேர் வெச்ச “கேட்” விநாகயரும், அகிலாவோட கல்யாண ரிசப்ஷனுக்கு போயிட்டு வந்து சத்தமில்லாம நான் அழுத வேப்பமர கிளைகள் குடைபிடிச்ச மொட்டைமாடியும் ..... ஐயோ என்னது இதெல்லாத்தையும் விக்க போறானா.... நினைக்கும் போதே என்னவோ செய்தது…


சென்னை… இல்ல தப்பு மெட்றாஸ்… சென்னைன்னு சொல்ல என்னைக்குமே எனக்கு விருப்பம் இருந்தது இல்ல..... அம்மா வழி தாத்தா, பாட்டி, அம்மாவோட அண்ணாவான ஒரே தாய் மாமா, அத்தை, அவங்க பையன் சங்கர் அண்ணா, பொண்ணு விமலா அக்கா இருந்த மெட்ராஸ்.... மேற்கு மாம்பலத்துல மகாதேவன் ஸ்ட்ரீட்ல, அந்த காலத்துல தாத்தா பாத்து பாத்து கட்டின வீடு.... வீட்டை சுத்தி கொய்யா மரம், வேப்ப மரம், மல்லிகை, செம்பருத்தி, ரோஜான்னு செடிகள், பாட்டி வெச்ச கறிவேப்பிலை, கீழாநெல்லி, பின்னாடி கிணறு, வாசல் பக்கம் சிமெண்ட்ல திண்ணை, வீட்டுக்குள்ள ரெட் ஆக்சைட் மெழுகின தரை.....


அம்மாவோட பிறந்த வீடுங்கறதாலயோ என்னமோ, மெட்றாஸ்க்கும் எனக்குமான பந்தம், தொப்புள் கொடி உறவு மாதிரி அவ்ளோ நெருக்கமா இருந்தது... ஒவ்வொரு வருஷமும் தவறாம, எனக்கும் அம்மாவுக்கும், ஏப்ரல், மே மாதங்கள், தாத்தா பாட்டி வீட்ல தான் ….


நான் பிறந்ததுலேர்ந்து எனக்கு ஆறு வயசாகற வரைக்கும், அப்பா பாம்பேல வேலை பார்த்துட்டு இருந்தார்... பாம்பே கல்யாண் ஜங்க்ஷன்ல நாங்க ஏறும் தாதர் எக்ஸ்பிரஸ், ஒண்ணரை நாட்கள் விடாம ஓடி, பேசின் பிரிட்ஜ் ஸ்டேஷன்ல நுழையும் போதே, ஜன்னல் வழியா தெரியும் அந்த மூணு ராக்ஷச சிமெண்ட் டம்ப்ளர்களை (பேசின் பிரிட்ஜ் பவர் ஸ்டேஷனோட ராக்ஷச சிம்னிக்கள்) பார்த்த நொடிலயே, மெட்ராஸ் வந்துட்ட பரவசம், சென்ட்ரல் ஸ்டேஷனோட “டொய்ங்ங்ங்..” அறிவிப்பை கேட்ட நொடியிலே ப்ரவாகமா மாறி, துள்ளிக்கிட்டே நான் கால் பதிக்கற மெட்ராஸ்… பேசின் பிரிட்ஜ்ல இருக்கற அந்த மூணு, அந்த மூணுல ஒண்ணு பாதியா உடைஞ்சது, அப்படிங்கற வரைக்கும் நினைவில் இருக்கற சிம்னிக்கள், என்னை பொறுத்தவரை மெட்ராஸ் வந்துட்ட என் சந்தோஷத்தோட கொண்டாட்டமான துவக்கம்.... பின்னாடி அப்பாக்கு சேலத்துக்கு மாற்றல் ஆகி, லீவ்லயெல்லாம் அம்மா வந்து, என்னை மட்டும் விட்டுட்டு திரும்பி போன காலத்துல, பத்தாவது பரீட்சை எழுதிட்டு லீவ்க்கு வந்தப்போ, சங்கர் அண்ணாவை கெஞ்சி, அதை பார்க்க பேசின் பிரிட்ஜ் வரைக்கும் போயிட்டு வந்து, “இது என்னடாது புதுசா ஊர் சுத்தற பழக்கம்…. அதும் ஸ்கூல் படிக்கற வயசுலயே... அந்த ஏரியாலாம் தனியா போற அளவு சரியே கிடையாது... போலாமா மாமா அப்படின்னு என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா நீ... இல்ல இது சரிப்பட்டு வராது.... உங்கம்மாக்கிட்டயே சொல்றேன்...” அப்படின்னு மாமாக்கிட்ட மண்டகப்படி வாங்கினது வேற கதை… பின்னாடி அந்த மூணு சிம்னிக்களும் காணாம போன அன்னைக்கு யாருக்கும் தெரியாம மொட்டைமாடிக்கு போய் அழுதேன்.... “அய்யே என்னடாது வளர்ந்த பசங்க எங்கயாவது அழுவாங்களா..” அப்படின்னு சங்கர் அண்ணா கிண்டல் பண்ணுவான்...


………………………………….

………………………………….

………………………………….


“டேய் .... என்னடா... அப்படியே மலைச்சு போய் உக்காந்து இருக்க..... தட்டு காயறது பாரு... போய் கையலம்பிட்டு வா....” அம்மாவோட குரல் உலுக்க, சுதாரிச்சேன்...


“அம்மா..... நான் சங்கரன் அண்ணாக்கிட்ட பேசறேன்...”


அவளுக்கு தெரியும்... வீட்டை விக்கறதை பத்தி நான் அதிர்ச்சி அடையலைன்னா தான் அவளுக்கு ஆச்சர்யம்..


“டேய் சந்துரு… நீ வரப்போறன்னு அத்தை சொன்னாடா... எப்படி இருக்க... வாணி, ஸ்ருதி எல்லாம் சௌக்கியம் தானே… வீட்டுக்கு வாடா.... எவ்ளோ நாளாச்சு நாம ஒண்ணா சாப்பிட்டு, பேசி, சிரிச்சு.... நானே உன்கிட்ட பேசணும்னு தான் இருந்தேன்.... நம்ம அரவிந்த்க்கு Michiganல MS அட்மிஷன் கிடைச்சு இருக்கு.... நீ அட்லாண்டால தான இருக்க... உனக்கு தெரிஞ்சவங்க யாராவது Michiganல இருக்காங்களா....”


மூச்சு விடாமல் பேசிய அண்ணாவுக்கு ஒரே வரியில், “அண்ணா.... வீட்டை விக்க போறியா?”… வேற எதுக்குமே பதில் சொல்லாம இதை தான் கேட்டேன்... இதை தான் கேக்க முடிஞ்சது ...


“ஆமாடா... அவனுக்கு ஸ்பான்சர் கிடைச்சாலும் அதுக்கு மேல ஆகற செலவை சமாளிக்க வேற வழி இல்ல.... யோசிச்சேன்... அதான் இந்த முடிவு...”


“ஏண்ணா… அந்த வீடு நமக்கு எவ்ளோ பிரியமானது ..... அதை போய் எப்படி??”


“என்னடா பண்றது.... அப்பா போனப்பறமே நானே ஆபீஸ்க்கு தூரமா இருக்குன்னு, அங்க இல்லாம இங்க அம்பத்தூர் வந்துட்டேன்... அவ்ளோ பெரிய தனி வீட்ல, இதுக்கு அப்பறம்லாம் யாருடா இருக்க போறாங்க ... இப்போ பாரு அரவிந்த் யூ.எஸ்க்கு படிக்க வந்துட்டான்னா அப்பறம் இங்க எங்க வரப்போறான் .... உன்னை மாதிரியே அங்கேயே இருந்துருவான்....”


“ஐயோ திரும்பி வர முடியாததுதாண்ணா ப்ரச்சனையே...” ன்னு சொல்ல வாயெடுத்தேன்.... ஆனா சொல்லாமல் முழுங்கினேன் …


“ஒரு பிளாட் ப்ரமோட்டர் ஜாயிண்ட் வென்ச்சர் போட்டுக்கலாமான்னு ரொம்ப நாளா கேட்டுட்டே இருக்கான்... அதும் இல்லாம நாம இடத்தை கொடுத்தாலும், நமக்கும் பிளாட்க்கு முன்னாடியே அழகா ஒரு தனி வீட்டையும் அவனே கட்டி கொடுக்கறதா சொல்லி இருக்கான்... நல்லதா போச்சு... நமக்கும் புதுசாவே வீடு கிடைச்சுடும்... அதான் இந்த முடிவு...” அப்படினான்.


“அண்ணா, உனக்கு இப்போ பணம் தேவையா இருக்குங்கறதால தான விக்க முடிவு பண்ணிருக்க.... வீட்டை நானே வாங்கிக்கிட்டா எனக்கு கொடுப்பியா ... நான் வாங்கிக்கறேன்...” சட்ன்னு கேட்டுட்டேன் …


கடகடன்னு சிரிச்சிட்டு, “டேய்ய்ய் ... நீ இன்னும் அப்படியே தான் இருக்க.... சரி நாளைக்கு அத்தை, மாமாவையும் கூட்டிட்டு வீட்டுக்கு வர்ற.. நானும் அனுவும் லீவ்தான்.... சாப்பிடற மாதிரி வர்ற.... மத்தத எல்லாம் நேர்ல பேசிக்கலாம் சரியா...” அப்படின்னு சொல்லிட்டு போனை வெச்சிட்டான்...


“என்னடா ... ஏதோ யோசனைலயே இருக்க.... கொஞ்சம் நேரம் கண்ணசறலாம் இல்ல.... இந்தா காஃபியை குடிச்சிட்டு தெம்பா யோசி...” சிரிச்சிக்கிட்டே கிண்டல் அடித்த அம்மாவை, அடிபட்ட பார்வையுடன் பார்த்தேன்....


சட்ன்னு பதறிட்டா... “சந்துரு.... ஏண்டா இப்படி இருக்க.... எனக்கு உன்னோட உணர்ச்சிகள் புரியலைனா நினைக்கற.... எனக்கும் தான் கஷ்டமா இருக்கு.... என்ன பண்றது … சிலதெல்லாம் நடைமுறைல வேறடா.... அந்த வீட்டை எவ்ளோ நாள் இப்படியே வெச்சிருப்பான்.... நீயே யோசிச்சு பாரு இவ்ளோ வருஷமா நீ லீவ்க்கு வரும்போதெல்லாம் அந்த வீட்டை போய் பார்க்கணும்னாவது நினைச்சு இருக்கியா ... இப்போ அதை விக்க போறான்னு தெரிஞ்சதும் உனக்கு வலிக்குது .... இது தான் நிதர்சனம்…. இதையெல்லாம் கடந்து வர்றது தான் வாழ்க்கைடா..... நீயே திரும்பி போனப்பறம் இதை பத்தி யோசிக்க கூட நேரமில்லாம கால்ல சக்கரத்தை கட்டிட்டு ஓட போற.... வா கிளம்பு... திருவல்லிக்கேணி போயிட்டு வரலாம்...” ன்னு சொல்லட்டு போய்ட்டா…


உண்மைதான் … மாமா இறந்தப்பறம், சங்கர் அண்ணா அம்பத்தூர் போய்ட்டான்.... அதுக்கு அப்பறம் நான் லீவ்க்கு வந்தப்போ எல்லாம் வீட்டை போய் பார்க்கணும்னு தோணினது இல்லை.... நம்ம வீடு தானே எங்க போய்ட போகுதுங்கற எண்ணம் காரணமா இருக்கலாம்... அதுக்காக அதை இடிச்சு வேற கட்டணும் அப்படிங்கும்போது வலிக்காம இருக்குமா …


“அப்பா.... நாளைக்கு சங்கர் அண்ணா அவன் வீட்டுக்கு நம்ம எல்லாரையும் வர சொல்லி இருக்கான்...”


“சரிடா.... போலாம்.... நாங்களே போய் ரொம்ப நாள் ஆச்சு ... கூப்டுட்டே இருக்கான்...”


காலைல குளிச்சிட்டு டிபன் சாப்பிட்டவுடனேயே, சட்னு பேண்ட் ஷர்ட்டை மாட்டிக்கிட்டு அப்பா டாண்ணு ரெடியாய்ட்டார் ....


“அம்மா பத்து நிமிஷத்துல ரெடியாய்டுவேன்னு சொல்லிட்டா.... நீயும் ரெடி ஆக இன்னும் எவ்ளோ நேரமாகும்ன்னு சொல்லிட்டா, அதுக்கு தகுந்த மாதிரி ஓலாவோ உபெரோ புக் பண்ணிடுவேன்....” ன்னு சொன்ன அப்பாவை பார்த்து “பத்து நிமிஷத்துல நானும் ரெடியிடுவேன்ப்பா ....” ன்னு சொல்லி சிரிச்சேன்....


அனாயசமா மொபைல் ஆப்ல ஓலா புக் பண்ணிட்டு இருந்த அப்பா... ஸ்கூல் லீவ்ல வரும்போது சென்ட்ரல் ஸ்டேஷன்ல, ஸ்டேஷனை விட்டு வெளிய வரும்போது மொய்க்கும் ஆட்டோ டாக்சிக்களை ஒதுக்கி, பழைய ரூட் 11D பஸ்சுக்காக எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து, பஸ்லயே வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அதே அப்பா...


“என்னடா சிரிக்கற... எனக்கும் மொபைல்ல ஆப்லாம் யூஸ் பண்ண தெரியும்டா...”ன்னு சொன்ன அப்பாவை பார்த்து, “ஒண்ணுமில்லப்பா” ன்னு சொல்லிட்டு கிளம்பினேன்...


அடையார்ல இருந்து அம்பத்தூர் போற வழி எல்லாம் எவ்ளோ மாற்றங்கள்… ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் ஏதோ ஒரு புது மாற்றம்.... மத்ய கைலாஷை தாண்டி, மேம்பாலத்து கீழ ஊர்ந்து, இடது பக்கமா காந்தி மண்டபம் கண்ல பட்டதும், தன்னிச்சையா அண்ணா யூனிவர்சிட்டியை திரும்பி பார்த்தேன்... ப்ளஸ் டூ முடிச்சிட்டு என்ட்ரன்ஸ் எக்ஸாம் கோச்சிங்க்காக மெட்ராஸ் தான் வந்தேன்... சங்கர் அண்ணா தான் அண்ணா யூனிவர்சிட்டிக்கு முதல் முதலா கூட்டிட்டு போனான் ... மெயின் கேட்க்கு முன்னாடி இருந்த ரவுண்டானால, “அண்ணா யூனிவர்சிட்டி” ன்னு எழுதி இருந்த அந்த பெரிய சிவப்பு க்ரானைட் ஒட்டின கான்க்ரீட் ஸ்ட்ரக்ச்சரை பார்த்த உடனே, அங்க தான் சேர்ந்து படிக்கணும்ங்கற ஆசை அதிகமாச்சு.... ப்ளஸ் டூ ல எப்படியும் நல்ல மார்க் எடுப்பேன்னு தெரியும்.. அதனால என்ட்ரன்ஸ் எக்ஸாமையும் பிச்சி உதறிடணும்னு அதுக்காகவே ராப்பகலா படிச்ச ஞாபகமெல்லாம் வர... சட்னு மனசு ஒரு தாவு தாவி அகிலா எங்க இருக்கா? எப்படி இருப்பான்னு யோசிக்க ஆரம்பிச்சது … ச்சே இப்போ என்ன அதை பத்திலாம்... மனதில் ஓடிய கேள்விகளை உதறி வேடிக்கை பார்ப்பதை தொடர்ந்தேன்... 


சங்கர் அண்ணா அப்படியே தான் இருந்தான், பிள்ளைகளின் வாழ்க்கையை பற்றிய கனவுகளை மட்டுமே லட்சியமாக கொண்ட ஒரு நடுத்தர வர்க்க அப்பாவின் வயோதிகத்தின் ஒரு சாயலை தவிர ....


“வாடா வா..... எவ்ளோ காலமாச்சு உன்னை பார்த்து.... அப்படியே தான் இருக்க.... என்ன அங்கலாம் எல்லாரும் ரெகுலரா எக்சர்சைஸ் பண்ணுவாங்களாமே... நீயும் பண்றியோ... அப்பறம் ஸ்ருதி இப்போ ஏழாவதா, எட்டாவதா? ... இந்த வீட்ல மாடி போர்ஷன் கட்டினப்பறம், இப்போதான் முதல் தடவையா வர்றியோ... வா மாடியை காட்டறேன்.... மொட்டை மாடிக்கு போனா காத்து பிச்சிக்கிட்டு போகும்... உனக்கு தான் மொட்டை மாடினா ரொம்ப பிடிக்குமே.... நம்ம மாம்பலத்துல இருந்தப்போ எப்படி இருந்ததோ, அதே மாதிரி இந்த ஏரியா இப்போ இருக்கு பாரு காத்தோட்டமா...” விடாமல் படபடன்னு பேசிக்கிட்டே இருந்தான்...


அவன் எப்பவுமே இப்படித்தான்....


நான் ஹை ஸ்கூல் வந்தப்பறம், என்னதான் சேலத்துல ராஜு, கிருஷ்ணா, செல்வம் ன்னு எனக்கு ஒரு பெரிய பிரெண்ட்ஸ் கேங்கே இருந்தாலும், லீவ் விட்டா ஒரு பத்து நாளாவது மெட்ராஸ் வரலைனா அந்த லீவ் வேஸ்ட் தான்.... அதுக்கு ஒரு முக்கியமான காரணம் சங்கர் அண்ணான்னு சொல்லலாம்..


நான் போய் வீட்ல இறங்கினவுடனே பாட்டிக்கிட்ட சிரிச்சிக்கிட்டே சொல்லுவான் “பாட்டி.... வடாம் போடலாம்னு சொல்லிட்டே இருந்தியே.... வந்துட்டான் பாரு உன் செல்ல சமத்து பேரன்.... நீ தினம் ஒரு வெரைட்டியா, காக்காவை விரட்டறதை பத்தின கவலையே இல்லாம போடலாம்.... மொட்டை மாடி பிரியன் கவனமா பார்த்துப்பான்...”


“போடா... சொன்னாலும் சொல்லாட்டாலும் அவன் சமத்து தான்... பொறுமையா உக்காந்து இருப்பான்... லைப்ரரில இருந்து பத்து புக்ஸ் ஐ எடுத்துட்டு வந்துட்டான்னா போறும்... இடத்தைவிட்டு நகராம அப்படியே உக்காந்து இருப்பான்…” பாட்டி சொல்லிவிட்டு வடாம் மாவை கிளற தயாராயிடுவா...


கரெக்ட்தான் ... அங்க இருந்த நாட்கள்ல பாதி நேரம் நான் மொட்டைமாடிலேயே தான் குடி இருப்பேன்... மாடில வெச்சிருந்த சின்டெக்ஸ் டேங்க்கும், கைப்பிடி சுவருக்கும் நடுவுல வேப்ப மரக்கிளை குடை மாதிரி விரிஞ்சி ஒரு இடம்... ஒரு புக்கை எடுத்துக்கிட்டு போய் உக்காந்தா “சாப்பிட வாடா சந்துரு...” ன்னு பாட்டி குரலை கேக்கற வரைக்கும் உலகமே மறந்து போகும்... ராத்திரி ஐஸ்வண்டி போகும்போது அதை வாங்கிக்கிட்டு மாடில உக்காந்து வானத்தை பார்த்துக்கிட்டே சாப்பிடறதுல ஒரு அலாதி சுகம் இருந்தது .. சங்கர் அண்ணா காலேஜ் போக ஆரம்பிச்சிட்ட டைம்ல மாடில ஒரு சின்ன ரூம் கட்டினார் மாமா.... “வெயில் ஏறுதேடா .... ரூம்ல உக்காந்து தான் படியேன்...” ன்னு பாட்டி சொன்னாலும், எனக்கு அந்த டேங்க்க்கு பக்கத்துல இருந்த இடம் தான் பிடித்தமானது ....


ரங்கநாதன் ஸ்ட்ரீட்க்கு விமலா அக்கா கூட போய், அந்த தெரு முனைல இருக்கற ஜூஸ் கடைல ஜூஸை குடிச்சு, கிருஷ்ணவேணி தியேட்டர்ல எல்லாருமா போய் படம் பார்த்து, பாட்டி வீட்டு பக்கத்துல இருந்த செம்ம பிரில்லியண்ட் சாரதியை பார்த்து பிரமித்து, அவன் அறிமுகப்படுத்திய லைப்ரரில ஒரு நாளைக்கு ரெண்டு புக்ஸ் ன்னு எடுத்து அசுர வேகத்துல படிச்சு, ராத்திரி தாத்தா, மாமா, சங்கர் அண்ணா, விமலா அக்கான்னு எல்லாரோடவும் மொட்டை மாடில சாப்பிட்டு, அந்தாக்ஷரி, படம் பேரெல்லாம் dumb charades ன்னு விளையாடி, அதிகமா பேசாம, நாங்க அடிக்கற கூத்தையெல்லாம் சிரிச்சுக்கிட்டே ரசிக்கிற அத்தை கூட “முத்தான முத்தல்லவோ ..” அப்படினு இனிமையா பாடற பொழுதுகள்…ஒரு தடவை அந்தாக்ஷரில வேணும்னே “அஃக்” ல முடிச்சேன்.... “டேய்ய்ய் அஃக்ல எல்லாம் பாட்டு இல்லை....” அப்படின்னு சங்கர் அண்ணா சொல்ல, “ஏன் இல்ல.... அதான் இப்போ ஏதோ பாட்டு வருதே ‘அஃக் கடான்னு நாங்க..’ன்னு கமலஹாசன் பாடறானே அதாண்டா...” அப்படின்னு தாத்தா சொல்ல எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சது, அப்படின்னு லீவ் ஓடறதே தெரியாது …. வருஷம் 16 படத்துல வர்ற கார்த்திக் மாதிரி என்னை பீல் பண்ண நாட்கள் எல்லாம் கூட உண்டு …. கிளம்பும் நாள் என்னவோ தொண்டையை அடைக்கும் ... இப்போல்லாம் எவ்ளோ தடவை அமெரிக்கால இருந்து வந்தாலும், அந்த அளவு தொண்டையை அடைப்பதில்லையே அப்படின்னு, இப்போ இதையெல்லாம் நினைக்கும்போது தோணுது …


நான் பத்தாவது படிக்கும் போது சங்கர் அண்ணா லயோலால டிகிரி கடைசி வருஷம்.... நான் மெட்ராஸ் வந்த லீவ் நாட்களெல்லாம் அவன் தான் வெளில ஊர் சுத்தி காமிப்பான்.... சொல்லப்போனா மெட்ராஸை அப்போ தான் அதிகமா தெரிஞ்சிக்கிட்டேன்னே சொல்லலாம்... மாம்பலத்துல பாட்டி வீட்டு அதே தெருல அண்ணாவோட க்ளோஸ் பிரெண்ட்ஸ் ஸ்ரீனி அண்ணா, பிரசன்னா அண்ணா, ரஞ்சித் அண்ணா ன்னு ஒரு கும்பலே சேர்ந்து வெளில கூட்டிட்டு போகும்…


“சந்துரு... இதுதான்டா தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்ஷங்கர் வீடு....” ன்னு சொல்லிக்கிட்டே நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட் வழியா, அங்க மரங்கள் சூழ்ந்த ரம்மியமான IFCI குவாட்டர்ஸ்ல இருந்த, அவன் காலேஜ் பிரெண்ட் ஸ்ரீராம் அண்ணா வீட்டுக்கு கூட்டிட்டு போவான்... அப்பறம் அங்க இருந்து காலேஜ் ரோட் வரைக்கும் எதுக்கோ நடந்தே வருவோம்... ஸ்ரீராம் அண்ணாவோட பெரியப்பா பையன் ஐஐடில ரிசர்ச் ஸ்டூடன்ட் ... அவங்க மூலமா ஒரு தடவை ஏதோ பிரெஞ்சு படத்துக்கு பாஸ் கிடைச்சதுன்னு, ஐஐடி காம்பஸ்க்கு உள்ள இருக்கற ஓபன் ஏர் தியேட்டர்க்கு ராத்திரி கூட்டிட்டு போனான் .... குளிர் காத்துல உக்காந்து பார்த்த அனுபவம் இன்னும் மனசுல சில்ன்னு…. “டேய்ய் வாடா.... மெரினா பீச்க்கு போலாம்.... அங்க பீச்க்கு எதிர்க்க ஒரு ஆவின் கடை இருக்கு பாரு..... ஐஸ்க்ரீம் டேஸ்ட் சும்மா அப்ப்படி இருக்கும்...” அப்படின்னு பீச்க்கு கூட்டிட்டு போவான்...


சங்கர் அண்ணாக்கூட இப்படின்னா, விமலா அக்காக்கூட வெளில போறதுன்னா அது ரங்கநாதன் தெருவும், அதை ஒட்டின மாம்பலம் மார்க்கெட்டும் தான்... என்னன்னவோ காதுக்கு, மூக்குக்கு கழுத்துக்குன்னு கலர் கலரா வாங்குவா..... ரங்கநாதன் தெரு முழுக்க கிட்டத்தட்ட எல்லா கடைகள்லயும் கலர் கலரா ஹேண்ட்பேக் தொங்க, சடார்ன்னு அங்க இருக்கற ஒரு சந்துக்குள்ள நுழைஞ்சு, அதுல இருக்கற கடைகள் வழியாவே போய், சடக்ன்னு பேஸ்மெண்ட்ல இறங்கின்னு, ஏகப்பட்ட சர்க்கஸ் பண்ணி, ஒரு பேக் கடைக்கு போய்தான் பேக் வாங்குவா.... கலர் கலரா துப்பட்டா வாங்குவா .... “எதுக்குக்கா இதுக்கெல்லாம் என்னை கூட்டிட்டு சுத்தற....” அப்படின்னு கேட்டா, “டேய்ய்.... மார்க்கெட்க்கும் போணும்டா .... காயெல்லாம் வாங்கணும்... வெயிட்டா இருக்கும்... துணைக்கு வாடா....” ன்னு சொல்லி இழுத்துட்டு போய்டுவா.... முட்டைகோஸுக்கும், சின்ன வெங்காயத்துக்கும், மாங்காய் இஞ்சிக்கும், வாசனைல போட்டி நடக்கும் மார்க்கெட்…. அதைவிட்டா “வீணை வாசிக்க நெயில்ஸ் வாங்கணும் வாடா..” அப்படின்னு சொல்லி துரைசாமி சப்வே கிட்ட இருக்கற முரளி ம்யூஸிக்கல்ஸ்க்கு கூட்டிட்டு போவா.... அங்க இருக்கற வித விதமான ம்யூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அ பராக்கு பார்க்கறதுக்காகவே கூட போவேன்.... காலேஜ் போக பஸ் ஸ்டான்ட்க்கு போகணும்னா “கூட வாடா.... பேசிக்கிட்டே போலாம்..” அப்படிம்பா... நானும் ப்ளஸ் டூ வர்ற வரைக்கும் அவக்கூட இப்படி தி.நகரை சுத்திட்டு இருந்தேன் .... இப்போ டெல்லில இருக்கா ... ரெண்டு வருஷம் முன்னாடி நான் இந்தியா வந்தப்போ, எதேச்சையா ஏதோ கல்யாணத்துக்கு அவ மெட்ராஸ் வந்துருந்தப்போ பார்த்தது ...


எப்பவும் ஆபீஸ்ன்னே இருக்கற மாமா, நான் ப்ளஸ் டூல 96 பெர்சன்டேஜ் வாங்கினதும், அந்த லீவ்ல, “வாடா உன்னை வெளில கூட்டிட்டு போறேன்...” அப்படின்னு சொல்லி, மைலாப்பூர் கோவிலுக்கும், ராமகிருஷ்ணா மட்க்கும் கூட்டிட்டு போய், மைலாப்பூர் குளத்துக்கு எதிர்க்க ஒரு துணி கடைல எனக்கு ஒரு பேண்டும் ஷர்ட்டும் வாங்கித் தந்து, “நல்ல மார்க் வாங்கி இருக்கேடா சந்துரு... இனிமேலும் நல்லா படிக்கணும்.. நல்ல நிலைமைக்கு வரணும்... அது ஒண்ணு தான்டா வாழ்க்கைல முக்கியம்.. அதை மட்டும் பண்ணிட்டேனா அதுக்கப்பறம் மத்ததெல்லாம் தானாவே நல்லா அமைஞ்சிடும்..” அப்படின்னு சொன்னது நெகிழ்ச்சி... வேலைக்கு சேர்ந்தப்பறம் அவருக்கு ஒரு சஃபாரி வாங்கிட்டு போய் கொடுத்து நமஸ்காரம் பண்ணதும் “அவ்ளோ பெரிய மனுஷன் ஆய்டியாடா நீ...” அப்படின்னு சிரிச்சிக்கிட்டே சொன்னாலும் அவர் கண் கலங்கி இருந்தது … எனக்கு நினைவிருக்கற வரைக்கும் அவருக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு, ராத்திரி தூங்கறதுக்கு முன்னாடி வீட்டு வாசல்ல இருக்கற திண்ணைல படுத்துக்கிட்டே ரேடியோல பாட்டு கேக்கறது... அமெரிக்கால இருந்து அவருக்கு வாங்கிட்டு வந்த ஐபாட் அ கொடுக்க தான் அவர் இல்லாம போய்ட்டார் …


ஒன்னொன்னா ஞாபகம் வர, அம்பத்தூர்ல இப்போதைய காற்றோட்டமான சங்கர் அண்ணா வீட்டுல சாப்பிட்டுட்டே, உக்காந்து பழைய கதைகளை பேசி பேசியே மத்தியானம் மூணு மணி...


“சந்துரு.... உனக்கு நாம பீச் போன கதை ஞாபகம் இருக்கா ..” ன்னு சங்கர் அண்ணா சிரிச்சிக்கிட்டே கேட்டான்… பின்ன மறக்க முடியுமா என்ன…. ஒரு தடவை பாட்டி “டேய் சங்கரா.... என்னடாது நீங்க ரெண்டு பேர் மட்டும் பிரெண்ட்ஸோட பீச்க்கு போறீங்க.... எங்களையெல்லாம் கூட்டிட்டு போக கூடாதா...” ன்னு கேட்க, “சரி பாட்டி போலாம்....” ன்னு சொல்லிட்டு சாயங்காலம் பாட்டி, தாத்தா, அத்தை, விமலா அக்கா, நானு, சங்கர் அண்ணான்னு கும்பலா கிளம்பினோம்.... அன்னைக்கு ஒரு நாளாவது பஸ் நெரிசல்ல அவதிப்படாம ஆட்டோல போலாம்னு முடிவு பண்ணி, ஒரு ஆட்டோ பத்தாதுன்னு ரெண்டு ஆட்டோ பேசி, துணைக்காக நான் ஒரு ஆட்டோல, சங்கர் அண்ணா இன்னொரு ஆட்டோலன்னு கிளம்பினோம்.... பீச்ன்னு சொன்ன உடனே ரெண்டு ஆட்டோவும் கிளம்பி, ஒன்னு மெரினாக்கும், இன்னொன்னு சாந்தோம்க்கும் போக, இன்னொரு ஆட்டோல வந்தவங்க எங்கன்னு காத்திருந்து, டென்ஷன் ஆகி, அதுலயே ராத்திரி ஆக, தனித்தனியா வீட்டுக்கு திரும்பி, விஷயம் தெரிஞ்சு விழுந்து விழுந்து சிரிச்சோம்.. “டேய்ய் ... உனக்கு கூட பாத்தா தெரிலயாடா, நீங்க இருந்தது சாந்தோம், மெரினா இல்லைன்னு...” ன்னு சொல்லி சொல்லி கிண்டல் பண்ணான்… மொபைல் இல்லாத ஆனா வரமா இருந்த காலம் …


………………………………….

………………………………….

………………………………….


“அண்ணாஆ ... பீச்க்கு போலாமா....” சட்னு கேட்டேன்


“அய்யயோ.... இங்க இருந்து இப்போ பீச்க்கு கிளம்பினா எப்போ போய் சேர... ட்ராபிக் ஹெவியா இருக்கும்.... போய் சேர்றதுக்குள்ளயே ராத்தரி ஆய்டும்.... முன்னாடியே பிளான் பண்ணி கிளம்பணும்டா....” அப்படினான்


“இல்லண்ணா.... ஒன்னும் லேட் ஆகல.... இப்போதான் மூணரை மணி... உடனே கிளம்பினா போய்டலாம்...”


“சரி ஒண்ணு பண்ணலாம்.... எல்லாருமா கிளம்பி அடையார் போலாம்.... பீச்க்கு போணும்ங்கறவங்களாம் அங்க பெசன்ட் நகர் பீச்க்கு போங்க... ராத்திரி நம்ம வீட்லயே தங்கிட்டு நாளைக்கு திரும்பிடலாம்... நாளைக்கு ஞாயித்து கிழமை தானே...” அம்மா சொல்லவும், “இந்த ஐடியா நல்லா இருக்கே..” அப்படினான் சங்கர் அண்ணா..


“பெசன்ட் நகர் ஆஆ..” ன்னு இழுத்த என்னை பார்த்து, “இன்னுமா நீ அதையெல்லாம் ஞாபகம் வெச்சிருக்க...”ங்கற அர்த்தத்துல சிரிச்சான்...


எனக்கு அவன்கிட்ட பேசணும்.... வீட்டை அவன் விக்கறதை பத்தி பேசணும்.... அதுதான் இப்போ முக்கியம் ... அதனால இத்தனை வருஷமா வீட்டுக்கு பக்கத்துலயே இருந்தும் நான் போக விரும்பாத பெசன்ட் நகர் பீச்சுக்கே போலாம்ன்னு என்னையே சமாதான படுத்திக்கிட்டேன் ..


“நான் வரலை... இன்னைக்கு இங்க காலனில க்ரூப்பா சஹஸ்ரநாமம் சொல்றோம்... நானும் ஒரு ஆர்கனைஸர் .... நீங்க வேணா போயிட்டு வாங்க....”ன்னு அனு மன்னி சொல்ல, கடைசில சங்கர் அண்ணா மட்டும் எங்க கூட வந்தான்...


அப்பா, அம்மா வீட்லயே இருந்துக்கறோம்னு சொல்ல, அவங்களை வீட்ல விட்டுட்டு நானும் அவனும் மட்டும் நடந்தே பெசன்ட் நகர் பீச்க்கு போய் மணல்ல உக்காந்தோம்... பீச் காத்து விடாம அகிலாவையே ஞாபகப்படுத்த, வீட்டை பத்தின பேச்சை ஆரம்பிக்க முடியாம இதென்ன மனசுல இந்த சஞ்சலம்ன்னு அலைகளையே பாத்துட்டு இருந்த என்கிட்ட, “என்னடா... இப்போ வரைக்கும் இந்த பீச்க்கு நீ வர்றதே இல்லையா... சரியான செண்டிமெண்ட் fool டா நீ.... நீயெல்லாம் எப்படி விதேசத்துல காலத்தை ஓட்டறியோ...” அப்படினான்


“அப்டி இல்லண்ணா ... என்னவோ இந்த பீச்னாலே அகிலா ஞாபகம் வருது.... அதான்...”


“அது சரி... டேய்ய்ய் ஏதோ கொஞ்ச நாள் ஒண்ணா என்ட்ரன்ஸ் கோச்சிங் போனீங்க... மாம்பலத்துல அடுத்த தெருலயே அப்படி ஒரு பொண்ணு இருக்காங்கற விஷயமே உனக்கு அப்போதான் தெரியும்... ஏதோ அந்த கோச்சிங் போன ரெண்டு மாசத்துல பிரெண்ட்ஸ் ஆனீங்க.... அப்பறம் அவ பாட்டுக்கு அண்ணா யூனிவர்சிட்டில சேர்ந்துட்டா.... நீ திருச்சில படிக்க போயிட்ட... இதுல எப்படிடா இவ்ளோ வருஷங்கள் கழிச்சும், அவளை நினைக்கற அளவு உனக்கு பீலிங்ஸ் ...”


உண்மை தான்.... மெட்ராஸ்ல கோச்சிங் போன அந்த ரெண்டு மாசத்துல தான் அவ எனக்கு பழக்கமானா.... அப்பறம் தான் தெரிஞ்சுது அவ வீடும் மாம்பலம் தான்னு.... கோச்சிங் முடிஞ்ச கடைசி நாள், அந்த பாட்ச்ல இருந்த எல்லாரும் ஒண்ணா பெசன்ட் நகர் பீச்க்கு தான் வந்தோம்.. எனக்கு அதுதான் முதல் தடவை பெசன்ட் நகர் பீச்... பக்கத்துல இருந்த ‘ஷேக்ஸ் அண்ட் கிரீம்ஸ்’ல சாப்பிட்டோம்...


“சந்துரு, நீ நல்லா எக்ஸாம் எழுதுவன்னு எனக்கு தெரியும்.... ரெண்டு பேருமே அண்ணா யூனிவர்சிட்டில ஒண்ணா சேர்ந்து படிக்கணும்னு எனக்கு ஆசை...” அப்படின்னு அவ சொன்னப்போ எனக்கு எதுவும் தோணலை... அண்ணா யூனிவர்சிட்டில சேர்றதுக்கு போதுமான அளவு மார்க் இருந்தும், திருச்சி REC ல சீட் கிடைச்சதும் அப்பா “நீ அங்கேயே சேந்துக்கோ..” ன்னு சொன்னப்பவும் எனக்கு அது ஒரு பெரிய விஷயமா தோணலை.... மெட்ராஸ்ல படிக்க முடியலைன்னு ஒரு பக்கம் வருத்தமா இருந்தாலும், அப்பா நல்லதுக்கு தான் சொல்வார் அப்படின்னு அங்கேயே சேர்ந்துட்டேன்.... அகிலா வீட்டுக்கு போய் அதை சொன்னப்போ, அவ கொஞ்சம் ஏமாற்றம் அடைஞ்ச மாதிரி தோணினாலும் அப்பவும் எனக்கு ஒன்னும் தோணலை... “சரி உன் அட்ரஸ் கொடு... நான் அப்பப்போ உனக்கு லெட்டர் போடறேன்.. பதில் போடுவ இல்ல..” அப்படின்னு கேட்டு வாங்கிக்கிட்டா... அப்பறம் ஒரு ஒரு வருஷம் சேலம் வீட்டு அட்ரஸ்க்கு லெட்டர் போட்டுட்டும் இருந்தா.... “எப்படி இருக்க... நான் இங்க அண்ணா யூனிவர்சிட்டில கம்ப்யூட்டர் சைன்ஸ் எடுத்திருக்கேன்... சப்ஜெக்ட்ஸ்லாம் கொஞ்சம் tough ஆ இருக்கு ஆனாலும் இன்டெரெஸ்ட்டிங் ஆ இருக்கு.. உனக்கு எப்படி இருக்கு... லீவ்க்கு மெட்ராஸ் வருவியா..” மாதிரி லெட்டர்ஸ் ... நான் ஸ்டடி ஹாலிடேஸ், செமஸ்டர் ஹாலிடேஸ் அப்படின்னு போகும்போது அம்மா அந்த லெட்டர்ஸை எல்லாம் பத்திரமா வெச்சிருந்து கொடுப்பா... நானும் பதில் எழுதி போடுவேன்...


ஒரு ரெண்டு வருஷம் மெட்ராஸ்க்கு லீவ்க்கு வர முடியாம ஹாலிடேஸ்ல இன்டெர்ன்ஷிப்லாம் பண்ணேன்... நானா எதுவும் லெட்டர்ஸ் போடாததாலயா என்னன்னு தெரில, அவ கிட்ட இருந்து லெட்டர்ஸ் வரதும் குறைஞ்சுடுச்சு... அப்பறம் பைனல் இயர் எக்ஸாம் முடிஞ்சி மெட்ராஸ் போனப்போ எதேச்சையா அவளை ரங்கநாதன் ஸ்ட்ரீட்ல பார்த்தேன்....


“ஹேய்ய் சந்துரு.... எப்படி இருக்க... ரொம்ப நாளா லெட்டர் ஒன்னும் போடறதே இல்லையே ... நான் அனுப்பின லெட்டர்ஸ்க்கும் பதிலே இல்லை...” ன்னு அவ சொன்னப்போ தான், அத்தனை நாள் அவகிட்ட இருந்து எந்த லெட்டரும் வராததுக்கான காரணம் உறைச்சுது.... நடுவுல சேலத்துல வீட்டை மாத்தினதும், நான் புது வீட்டு அட்ரஸையோ, என்னோட திருச்சி அட்ரஸையோ, அவளுக்கு கொடுக்கவே இல்லைன்னு…


“என்னை மறந்துட்ட இல்ல....”ன்னு, என் கண்ணையே பார்த்து அவ கேட்ட அந்த ஒரு வரி அத்தனை வருஷமா இல்லாம அன்னைக்கு என்னவோ மனசை ஏதோ பண்ணிச்சு.... “ஸாரி... வீட்டை மாத்திட்டோம்.... உனக்கு சொல்ல மறந்துட்டேன்....” அப்படினேன்... ஒரு மாதிரி அடிப்பட்ட பார்வை பார்த்தா...

“அப்பறம்ம்ம்ம்... எனக்கு காம்பஸ் செலக்ஷன்ல வேலை கிடைச்சிடுச்சு.... ஜூலைல ஹைதராபாத் போறேன்...” அப்படின்னா... நானும் பெங்களூர் போறதை சொன்னேன்...


அப்பறம் வேலைக்கு சேர்ந்து அடுத்த ஆறு மாசத்துல மெட்ராஸ் வந்தப்போ தான் சங்கர் அண்ணா சொன்னான்.... “டேய் உன் பிரெண்ட் அகிலாவை பார்த்தேன்.... அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம்டா... மாப்பிள்ளை யாரு தெரியுமா... என் பிரெண்ட் ஸ்ரீராம் ஞாபகம் இருக்கா... அவனோட பெரியப்பா பையன்.... நாம கூட ஐஐடில படம் எல்லாம் பாத்தோமே.... அவனோட நிச்சயதார்த்தத்துல தான் அகிலாவை பார்த்தேன்... அவதான்டா பொண்ணு... வயசு வித்யாசம் கொஞ்சம் கூடனாலும் ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம்டா... என்னை பார்த்ததும் அவளுக்கும் ஒரே ஆச்சர்யம்.... உன்னை பத்தி கேட்டா... கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணுவேன் கண்டிப்பா வரணும்னு உன்கிட்ட சொல்ல சொன்னாடா..”


அவன் அதை சொன்னவுடனே என்னவோ ஒண்ணு உள்ள உடைஞ்சது.... அவளை பார்த்து பேசணும்னு தோண, அவ வீட்டுக்கு போனேன்.... “எங்கயாவது வெளில போலாமா..” ன்னு கேட்ட என்னை ஆச்சர்யமா பார்த்தா...


சிவா விஷ்ணு கோவிலுக்கு போய் பிரகாரத்துல உக்காந்தோம்... “உனக்கு நிச்சயதார்த்தம் ஆய்டுச்சுன்னு சங்கர் அண்ணா சொன்னான்.... கங்க்ராட்ஸ்..” அப்படினேன்


ஒரு நிமிஷம் அமைதியா தரையை பார்த்துட்டு இருந்தவ “கேக்க வேண்டாம்னு தான் நினைச்சேன்... கேக்காம இருக்க முடில.... கடைசி வரைக்கும் உனக்கு புரியவே இல்லை இல்ல?.... ப்ச்ச்... சரி விடு இப்போ பேசி எதுவும் ஆகப்போறதில்லை... அடுத்த மாசம் கல்யாணம்... கட்டாயம் வரணும்...” ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டா... அவ கல்யாண ரிசெப்ஷன் போயிட்டு திரும்பி வந்து, நேரா மொட்டை மாடிக்கு போய் என்னோட இடமான சின்டெக்ஸ் தொட்டிக்கு பின்னாடி உக்காந்து சத்தமில்லாம அழுதேன்... எதேச்சையா வந்த சங்கர் அண்ணாக்கு ஒரு மாதிரி விஷயம் புரிய “என்ன பண்றது... சிலதெல்லாம் எப்ப தோணனுமோ தோணாம, எப்போ சொல்லணுமோ சொல்லாம , இப்போ அழுது என்ன... விடு அவங்க அவங்களுக்கு என்ன எழுதி இருக்கோ அதான் நடக்கும் கிடைக்கும்..” அப்படின்னு சமாதான படுத்தினான்..


………………………………….

………………………………….

………………………………….


“டேய்ய்ய்.... என்ன இப்படி யோசனை பண்ணிட்டே இருக்க...” சங்கர் அண்ணா குரல் உலுக்க, நடப்புக்கு வந்தேன்.. சரி இப்போ இதையெல்லாம் விட முக்கியமா வீட்டை பத்தி பேசணும்...


“அண்ணா.... நான் நேத்து விளையாட்டுக்கு சொல்லலை... சீரியஸா தான் சொன்னேன்… வீட்டை நானே வாங்கிக்கறேன்.... உனக்கு எவ்ளோ வேணும் சொல்லு...”


“உனக்கு என்னடா பைத்தியமா பிடிச்சிருக்கு... டேய்ய் உன்னை விட அந்த வீட்லயே வளர்ந்த எனக்கு அந்த வீட்டு மேல எவ்ளோ அட்டாச்மென்ட் இருக்கணும்... என்ன பண்றது... சிலதெல்லாம் ப்ராக்டிகலா யோசிக்கணும்... உள்ளூர்ல இருக்கற நானே அந்த வீட்ல இல்லை.... நீ அதை வாங்கி என்ன பண்ண போற... பூட்டி வெச்சிருப்பியா... அது சரி இந்த விஷயத்தை வாணிக்கிட்ட சொன்னியா... அவ கருத்தை கேட்டியா ... சும்மா எப்பவும் போல எமோஷனலா யோசிச்சு பைத்தியக்காரத்தனம் பண்ணாத.... நான் அதை வித்தாலும், அங்கேயே ஒரு புது வீடு கிடைக்கும்.... வேற என்ன வேணும்.... அந்த இடத்துல நமக்கும் ஒரு வீடு இருக்கும் இல்லையா... சும்மா ஏதோ யோசிச்சு மண்டைய குழப்பிக்காத.... உன்னோட வெகேஷனை என்ஜாய் பண்ணு...”


“எப்படிஇஇ??? சின்ன வயசுல அங்க மாம்பலத்துல என்ஜாய் பண்ண மாதிரியா??” ன்னு கேட்ட என்னை முறைத்தான்...


“அண்ணா..... எனக்கு அந்த வீடு வேணும்.... உனக்கு அந்த ப்ரமோட்டர் எவ்ளோ தர்றதா சொல்லி இருக்கானோ அதை நான் உனக்கு தரேன்... ப்ளீஸ் .... நான் நாளைக்கு அங்க போய் வீட்டை பார்க்க போறேன்...” அப்படினேன்


ஒரு நிமிஷம் என்னையே பார்த்தவன் என்ன நினைத்தானோ... “சரி நீ பாரு... இப்போ இதை பத்தி இதுக்கு மேல எதுவும் பேசவேண்டாம்… நல்லா யோசிச்சு அப்பறம் பேசுவோம்... இப்போ வா வீட்டுக்கு கிளம்புவோம்..” அப்படின்னு எழுந்து நடக்க ஆரம்பிச்சான்..


காலைல எழுந்து, குளிச்சு சாப்பிட்ட உடனே கிளம்பினேன்... அந்த நேரத்திலேயே திநகர்ல ஒரே ட்ராபிக், வண்டிகள்... எல்லாரும் என்னன்னவோ வாங்கிக்கிட்டே இருந்தாங்க... கேப் ட்ரைவர் என்னன்னவோ ஒன் வே டூ வே ன்னு சொல்லி, திநகர்க்கே உரிய கூட்ட நெரிசலான ரோட்கள்ல, திறமையா வண்டிய ஓட்டிட்டு போனான்... அயோத்யா மண்டபத்தை பார்த்தவுடனே மனசுக்குள்ள ஒரு பரபரப்பு தொத்திச்சு.... வீடு இருந்த தெருவில் நுழைஞ்சது கூட புரியாம நிறைய மாற்றங்கள்....


“எந்த இடம் சார்?” கேட்ட டிரைவரிடம் “கொஞ்சம் இங்கயே நிறுத்திக்கப்பா..... நான் இறங்கி நடந்து போய்க்கறேன்..”ன்னு சொல்லி இறங்கிக்கிட்டேன்..


நடந்துக்கிட்டே ரெண்டு பக்கமும் வேடிக்கை பார்த்தேன்... புதுசா கொஞ்சம், பழையதை புதுப்பித்து பெயிண்ட் மின்னிய கொஞ்சம், XXX சொல்யூஷன்ஸ் , YYY பவர் டெக் சிஸ்டம்ஸ் அப்படின்னு சில சின்ன நிறுவனங்கள் கொஞ்சம்ன்னு, கட்டிடங்கள், கட்டிடங்கள், கட்டிடங்கள்....


பார்த்துக்கிட்டே நடக்க நடக்க, சடக்ன்னு பிரேக் போட்டு நிறுத்தியது வீடு ...


வீடுன்னா சொன்னேன்... ஒரு நொடி இதயத்துல குத்து பட்டவன் மாதிரி உணர்ந்தேன்....


வாசலில் பாட்டி போட்ட நெளி கோலம் இல்லை.... வராந்தாவில் மாமாவின் மொபெட் இல்லை.... திண்ணைக்கு பக்கத்தில் போடப்பட்டிருக்கும் தாத்தாவின் ஈஸி சேர் இல்லை.... திண்ணைல மாமா படுத்துக்கிட்டே கேக்கும் பாட்டு இல்லை…. வாசல் கதவில் இருந்து பார்த்தாலே புழக்கடை வரைக்கும் தெரியும் அமைப்பில், உள்ளே அடுக்களையில் பாட்டி ரசத்துக்கு தாளிக்கும் நெய் மணம் இல்லை... அவள் வைத்த கறிவேப்பிலை, எனக்கு காமாலை வந்தப்போ அவள் கொடுத்த, அவள் வைத்திருந்த கீழாநெல்லி, இல்லை.... வெளியில் சைடில் கொடிகள் கட்டப்பட்டு, காய வைக்கப்பட்டிருக்கும் வேஷ்டியும், பனியனும், சுங்குடி புடவையும், பேண்டும் சட்டையும் என்னோட அரை ட்ராயரும் எதுவுமே இல்லை... படு எளிதான குறுக்குவாட்டு கம்பிகள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும் பிரவுன் நிற ஜன்னல்களும், காம்பவுண்டில் இருந்து எக்கி நிற்கும் நந்தியாவட்டை பூக்களும், தரையில் கிடைக்கும் அதன் இறந்த காலமும், செம்பருத்தியும், ரோஜாவும் எதுவும் இல்லை ...


மற்ற கட்டிடங்கள், அபார்ட்மெண்ட்களுக்கு நடுவில், உயரமான ரோடில் இருந்து சடக்ன்னு ரெண்டடி கிழே இறங்கி… முன்ன கோபி மஞ்சள் நிறத்தில் இருந்தது என்றே சொல்ல முடியாத, என்ன கலரில் இருந்தது என்றே அனுமானிக்க முடியாத கருமை படிந்த, மேல் பூச்சை இழந்த காம்பவுண்ட் சுவரும்… அடிக்கப்பட்ட பச்சைநிறம் சாயம் போய், கீழே தரையிலிருந்து பாதி உயரத்துக்கும் மேலே அந்த பெயிண்டும் உதிர்ந்து, மேல் பூச்சும் அரிக்கப்பட்டு, காரை பெயர்ந்து அங்கங்கே வெளியில் தெரிந்த இரும்பு கம்பிகளுமாய் நின்ற, வெளி வராந்தாவின் ரெண்டு கான்க்ரீட் தூண்களும்…. அதே போல் கீழே தரையிலிருந்து பாதி உயரத்திற்கும் மேலே சுத்தமாய் சேறும் சகதியும் பதிந்த அடையாளங்களுமாய், காரை உதிர்ந்து நின்ற பழுப்பான வீட்டு சுவரும்… வராந்தாவின் மேலே இருந்த jaali ஓட்டைகள் நிறைந்த சுவரில், அந்த டிசைனே தெரியாத அளவில் அங்கங்கே உடைந்தும்… ஜன்னல்களின் கதவுகள் தூக்கில் தொங்குவது போல தொங்கியும்… காம்பவுண்டின் உள்ளே வீட்டை சுற்றி புதர்களும், கொடிகளுமாய், சுற்றி இருந்த மரங்கள் எல்லாம் காய்ந்து, சாய்ந்து… மாடியின் வெளிச்சுவர் அங்கங்கே உடைந்தும்… சுத்தமாய் இடிந்திருந்த வாசல் திண்ணையுமாய்…. வெயிலிலும், மழையிலும், அபத்தமாய் வந்த வெள்ளத்திலும் சிக்கி சின்னாபின்னமாய்....


தொண்டையை அடைத்து, கண்கள் சட்னு நிரம்பி, வாழ்க்கை எங்கெங்கேயோ தேவையே இல்லாமல் நகர்ந்து, திரும்பி செல்லவே முடியாத, திரும்ப நடக்கவே வாய்ப்பில்லாத தருணங்களுமாய் அலைக்கழித்து, திரும்பி போகமுடியாத, மகா பெரிய அபத்தமாய், என்னது இது ….. மனதில் இருந்த பல பல நினைவுகளும் ஒரு நொடில பாரமாய் மாறியது…. என்னவோ எதையோ இழந்த துக்கமும், ஏக்கமும் மனதை பிசைய, மரண படுக்கையில் இருக்கும் பிரியமானவளை போல இருந்த வீட்டை, கையாலாகாத இடிந்த மனதுடன் பார்த்தேன்....


சங்கர் அண்ணாக்கு போன் பண்ணி “அண்ணாஆ... வீட்டை அந்த ப்ரமோட்டர்க்கே கொடுத்துரு....” ன்னு தொண்டை அடைக்க, குரல் உடைய சொல்லிட்டு, “டேய்ய்ய்.... என்னடா அழறியா.... எங்க இருக்க? என்ன ஆச்சு?” ன்னு கேட்ட அவனுக்கு எதையும் சொல்லாமல் காலை கட் பண்ணிட்டு, திரும்பி பார்க்காம நடக்க ஆரம்பிச்சேன்,


“வராமலேயே, இதை பார்க்காமலேயே, இருந்து இருக்கலாம்” ங்கற நிரந்தரமான வலியோட .


சில நிதர்சனங்கள் தரும் வலியை விட, நினைவுகள் தரும் சுமைகள் தாங்க கூடியதாக தான் இருக்கிறது, நினைவுகளாகவே இருக்கும் வரையில் !!!


- சாரதா